Published : 02 Apr 2016 09:04 am

Updated : 02 Apr 2016 09:18 am

 

Published : 02 Apr 2016 09:04 AM
Last Updated : 02 Apr 2016 09:18 AM

ஆட்டிஸம் என்னும் பளிங்கு அறை

| ஆட்டிஸ நிலையாளர்களை இந்த உலகம் அணுகும்முறை பெரும்துயரம்

| இன்று - ஏப்ரல் 2 - உலக ஆட்டிஸம் விழிப்புணர்வு நாள்

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று மணிமேகலை. அதில் ஒரு காட்சி.. மணிமேகலையை அடையும் எண்ணத்துடன் சோழ இளவரசன் துரத்தி வருகிறான். அவனிடமிருந்து தப்ப பூஞ்சோலையில் இருந்த ஒரு பளிங்கு மண்டபத்தில் ஒளிந்துகொள்கிறாள் மணிமேகலை. அந்தப் பளிங்கு அறை தனக்குள்ளே இருப்பவர்களை மறைத்து, அவர்களை வெவ்வேறுவிதமான ஓவியங்களாக வெளியே காட்டுமாம். அந்த ஓவியங்களைப் பார்த்து மனம் மாறி இளவரசன் பூஞ்சோலையைவிட்டு வெளியேறுகிறான் என்று செல்கிறது அந்தக் காட்சி.


இதில் வரும் பளிங்கு அறை எனும் படிமம் ஆழமானது. உள்ளே இருப்பவர்கள் வெளியே இருப்பவர்களைப் பார்க்க முடியும். ஆனால், தொடர்புகொள்ள முடியாது. வெளியே இருப்பவர்களோ உள்ளிருப்போரின் உண்மைத் தோற்றத்தைப் பார்க்க முடியாது. அவர்களின் மாறுபட்ட ஓவியங்களையே பார்க்க முடியும். ஆட்டிஸத்துக்குப் பொருத்தமானதானதாக இந்த உவமை இருக்கிறது.

ஆட்டிஸம் ஒரு நிலை

ஆம். ஆட்டிஸம் என்பதும் ஒரு பளிங்கு அறையே! அதற்குள் நிற்கும் மனிதர்களால் வெளி உலகத்தோடு சரியானபடி தொடர்புகொள்ளவோ, தங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தவோ முடிவதில்லை. ஆனால், வெளியிலிருக்கும் நாமோ அந்த பளிங்கு அறை காட்டும் ஓவியங்கள் போன்ற அவர்களது வேறுபட்ட நடத்தைகளைக் கொண்டு அவர்களை எடைபோடுகிறோம். இன்னும் சொல்லப்போனால், அவர்களைத் தவறாகவே எண்ணுகிறோம். நாம் பார்ப்பது உண்மையல்ல என்பதை உணராமலே அவர்களை நோக்கி சொல் அம்புகளை வீசுகிறோம்.

ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு என்பதைத்தான் சுருக்கமாக ஆட்டிஸம் என்று அழைக்கிறார்கள். இந்தக் குறைபாட்டில் ஐந்துக்கும் மேற்பட்ட உட்பிரிவுகள் உள்ளன. இது ஒரு நரம்பியல் குறைபாடு என்கிறார்கள். ஆனாலும் இந்தக் குறைபாடு எதனால் ஏற்படுகிறது என்பதை இன்னும் கண்டுபிடிக்கமுடியவில்லை. அதன்காரணமாக இதனை வராமல் தடுக்கவோ, சரிசெய்யவோ மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை.

ஆட்டிஸம் நோய் அல்ல, குறைபாடுதான் என்று சொல்கிறார்கள். இன்னும் எளிமையாகச் சொல்வ தானால் ஆட்டிஸம் என்பது ஒரு நிலை என்கிறார்கள். அதோடு ஆட்டிஸத்தின் நிலைக்குள் வரும் குழந்தைகள் எல்லோருக்கும் முற்றிலும் அதிலிருந்து வெளிவருவதற்கான வாய்ப்புகள் இன்றுவரை ஏதுமில்லை. சில விதிவிலக்குகள் இருக்கலாம்.

ஆட்டிஸ நிலைக்குள் இவர்கள் இருந்தாலும், சுயமாகச் சிந்திக்கவும், பிறரின் உணர்வுகளை உணர்ந்து கொள்ளவும் முடியும் என்பதை நம்மில் பலரும் புரிந்துகொள்ளாமல் இருக்கிறோம்.

கட்டாயம் ஒன்றுமில்லை

கிருஷ்ண நாராயணன் எனும் ஆட்டிஸ நிலையாளர் நான்கு நூல்களை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். தனது ஒவ்வொரு செய்கைக்குப் பின் இருக்கும் காரணங்களை அவரது முதல் நூலான, Wasted Talent என்ற புத்தகத்தில் தெளிவாக எழுதியுள்ளார். தத்துவம், உளவியல், அறிவியல் என அவரது வாசிப்பும் பரந்துபட்டு இருப்பதை நாம் அதில் அறியலாம்.

ஐஸ்வர்யா ஸ்ரீராம் 30 வயதைக் கடந்துவிட்ட ஆட்டிஸ நிலையாளர். ‘பஸில் க்யீன்’ என்று இவரை உலகுக்குத் தெரியும். பஸில் எனப்படும் புதிர் அட்டைகளை ஒன்று சேர்ப்பதில் அவரது திறமை அபாரம். பலரும் திணறும் 1,000 துண்டுகளுடைய பஸிலையும் அநாயாசமாகச் சேர்த்துவிடும் வல்லமை மிக்கவர்.

கடந்த வாரம் இவரது டைரிக் குறிப்புகள் நூலாக வெளியானது. அதில் தனது அன்றாட நிகழ்வுகளைச் சங்கேத மொழியில் எழுதுவதுபோலச் சுருக்கமாக எழுதி வைத்திருக்கிறார். பொதுவாகவே ஆட்டிஸ நிலையாளர்களுக்கு உணர்வுகளை வெளிக்காட்டத் தெரியாது என்பார்கள். ஆனால், ஐஸ்வர்யாவின் டைரிக் குறிப்புகள் நூலைப் படித்தால் அந்த எண்ணம் உடைந்துபோகும். தனது துக்கம், மகிழ்ச்சி, கோபம் போன்ற உணர்வுகளை அழகாக அவர் குறிப்பிடுகிறார்.

அரவிந்த். பேச இயலாத இளைஞர். ஆனால் அற்புதமான கவிதைகளை ஆங்கிலத்தில் எழுதுவார். அவரது கவிதைகளில் பெற்றோர் மீதான அன்பையும், உலகம் குறித்த தத்துவப் பார்வையையும் பார்க்கலாம்.

முகுந்த்துக்கு 15 வயதிருக்கும். 12-வது வயதிலேயே ஒரு இசை ஆல்பத்தை வெளியிட்டு அசத்திய ஆட்டிஸ நிலையாளர். அதுபோல, தொலைக்காட்சியில் இசை நிகழ்ச்சியைப் பார்ப்பவர்களுக்கு சுகேஷ்குட்டனையும், செந்தில்நாதனையும் நன்றாக நினைவிருக்கும். பல பாடல்களைப் பாடி இணையவெளியில் பெரும் ரசிகர் கூட்டத்தைக் கொண்டிருக்கும் இவர்கள் இருவரும் ஆட்டிஸ நிலையாளர்கள்தான்.

திறமைகளைத் தன்னுள்ளே வைத்துக்கொண்டு, அதை வெளிப்படுத்தத் தெரியாமல் இருக்கும் ஆட்டிஸ நிலையாளர்களை இந்த உலகம் அணுகும்முறை பெரும்துயரம். இப்படிப் பல ஆட்டிஸ நிலையாளர்கள் அதீத திறமைசாலிகளாக இருப்பதென்னவோ நிஜம்தான். ஆனால், அதே நேரத்தில் அனைத்து ஆட்டிஸ நிலையாளர்களும் இப்படி ஏதேனும் ஒரு துறையில் வல்லுநர்களாக இருந்தாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.”

அதிகரிக்கும் ஆட்டிஸம்

பொது இடங்களுக்கு வரும் ஆட்டிஸ நிலையாளர்களில் சிலருக்கு அந்த இடம் புதிதாக இருந்தால், ஒருவிதப் பதற்றம் ஏற்படும். இதன் காரணமாக, விநோதமாக ஓசை எழுப்புவது, கைகளைப் பலமாகத் தட்டுவது, குதிப்பது போன்று இவர்களின் நடத்தைகளில் சில மாறுதல்கள் ஏற்படலாம். கொஞ்ச நேரத்தில் அந்தப் புதிய இடம் பழகியதும் இயல்புநிலைக்கு வந்துவிடுவார்கள்.

அமெரிக்காவில் பள்ளி செல்லும் 12 வயதுடைய ஈஸ்னா சுப்ரமணியன் என்ற சிறுமி, தனது நண்பர்களுடன் சேர்ந்து, ஆட்டிஸ நிலைக் குழந்தைகளுக்கு உதவும் ஒரு மொபைல் ஆப்ஸை சமீபத்தில் வடிவமைத்துள்ளார். சிறந்த கண்டுபிடிப்பு. இந்த ஆப்ஸை மேம்படுத்துவதற்கு இந்திய மதிப்பில் ரூ. 13 லட்சம் பரிசு கிடைத்திருக்கிறது. ஈஸ்னாவின் இளைய சகோதரி ஆட்டிஸ நிலையாளர்.

அமெரிக்காவில் வசிக்கும் 12 வயதுடைய குழந்தை களுக்கு ஆட்டிஸ நிலையாளர்களின் சங்கடங்களும், அவஸ்தைகளும் புரிகிறது. அவர்களுக்கு உதவுவதற்கு முனைகிறார்கள். நம்மூரில் பெரியவர்களுக்குக்கூட இந்தப் புரிதல் இங்கே இன்னும் வரவில்லை. வர எத்தனை ஆண்டுகள் ஆகுமோ தெரியவில்லை.

அமெரிக்காவில் இயங்கும் நோய்கள் கட்டுப்பாடு தடுப்பு மையம், உலக அளவில் 68 பேரில் ஒருவருக்கு ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு இருக்கலாம் என்கிறது. இதன்படி, இந்தியாவில் சுமார் 1.8 கோடிப் பேர் ஆட்டிஸம் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இங்கே சரியான புள்ளிவிவரங்கள் இல்லை. இந்தக் கணக்கு தோராயமானதுதான். அதே சமயம் உலக அளவில் ஆட்டிஸக் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது. இந்தியாவிலும், தமிழகத் திலும்கூட ஆட்டிஸக் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

பெற்றோர் சம்பாத்தியத்தில் 60%க்கும் அதிகமான அளவு ஆட்டிஸக் குழந்தைகளின் பயிற்சி வகுப்புகளுக்கே செலவிட வேண்டியுள்ளது. இவர்களின் மருத்துவ / பயிற்சி செலவுகளைக் குறைக்க, ஆட்டிஸ நிலைக் குழந்தைகளுக்குத் தேவையான பயிற்சி வகுப்புகளை எல்லா அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக வழங்க வேண்டும். தினம் தினம் வாழ்க்கையோடு போராடிக்கொண்டிருக்கும் இவர்களைப் பாராட்டாவிட்டாலும்கூடப் பரவாயில்லை. வசவுச் சொற்களின் மூலம் காயப்படுத்துவதிலிருந்து சமூகமும் உறவுகளும் வெளியே வர வேண்டும். இக்குழந்தைகளையும், இவர்தம் பெற்றோரையும் கனிவுடன் அணுக வேண்டியது சமூகத்தின் கடமை.

யெஸ்.பாலபாரதி -கட்டுரையாளர் ‘ஆட்டிசம் சில புரிதல்கள்’ என்ற நூலின் ஆசிரியர். தொடர்ந்து ஆட்டிஸம் விழிப்புணர்வுக்காகச் செயலாற்றி வருகிறார். > தொடர்புக்கு : yesbalabharathi@gmail.com 


ஆட்டிஸம்ஆட்டிஸ நிலையாளர்கள்உலக ஆட்டிஸம் விழிப்புணர்வு நாள்வழிகாட்டுதல்ஆட்டிஸ குழந்தைகள்குழந்தைகள் நலன்ஆட்சிசம் புரிதல்கள்ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author