Last Updated : 18 Jan, 2022 06:26 AM

 

Published : 18 Jan 2022 06:26 AM
Last Updated : 18 Jan 2022 06:26 AM

பன்றியின் இதயம் மனிதருக்குப் பொருந்தியது எப்படி?

கடந்த ஜனவரி 7-ல் நவீன மருத்துவம் உலகிலேயே முதல் முறையாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயத்தை மனிதருக்குப் பொருத்தி சாதனை செய்துள்ளது. உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்குத் தேவையான மனித உறுப்புகள் கிடைக்காமல், உலகெங்கும் இந்த அறுவை சிகிச்சைகளுக்குப் பின்னடைவு ஏற்பட்டிருந்த நிலையில், விலங்குகளின் உறுப்புகளையும் மனிதருக்குப் பயன்படுத்த முடியும் எனும் நம்பிக்கையை இது விதைத்துள்ளது.

அமெரிக்காவின் மேரிலேண்ட் நகரைச் சேர்ந்த 57 வயதான டேவிட் பென்னட் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு காரணமாக மேரிலேண்ட் மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செயற்கை சுவாசக் கருவிகளுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பென்னட்டுக்குப் பன்றியின் இதயத்தை மருத்துவர் கிரிஃபித் பொருத்தினார். இன்றுவரை அந்த இதயம் சீராக இயங்குவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தச் செயல்முறையைச் சொல்வது எளிது. நடைமுறையில் கடினம்.

உதவும் பன்றி உறுப்புகள்

மற்ற விலங்குகளைவிடப் பன்றியின் உறுப்புகள் கிட்டத்தட்ட மனிதர்களின் உறுப்புகளை ஒத்திருப்பதால், உறுப்பு மாற்று சிகிச்சைக்குப் பொருத்தமானவையாக இவை தேர்வு செய்யப்படுகின்றன. முதன்முதலில் 1838-ல் பன்றியின் ஒளிப்படலம் (Cornea) மனிதக் கண்ணில் பொருத்தப்பட்டது. 1964-ல் சிம்பன்சி குரங்கின் இதயம் மனிதருக்குப் பொருத்திப் பார்க்கப்பட்டது. அது தோல்வியில் முடிந்தது. 1984-ல் ஆப்பிரிக்க/அரேபியக் குரங்கின் (Baboon) இதயம் ஃபாயி (Fae) எனும் குழந்தைக்குப் பொருத்தப்பட்டது. அது 21 நாட்களுக்கு உயிரோடு இருந்தது.

பொதுவாக, ‘மாற்றின உறுப்பு மாற்றுச் சிகிச்சை’யில் (Xenotransplantation) பொருத்தப்படும் உறுப்புகளை மனித உடல் நிராகரித்துவிடும். அப்படியே ஏற்றுக்கொண்டாலும் எதிர்கால நிராகரிப்பைத் தடுக்கத் தடுப்பாற்றல் எதிர்வினையை மட்டுப்படுத்தும் வீரியமான மருந்துகளைப் பயனாளி வாழ்நாள் முழுவதும் சாப்பிட வேண்டும். அதனால்தான் இம்மாதிரியான அறுவைச் சிகிச்சைகள் வேகம் பெறவில்லை. ஆனாலும், சோதனை முயற்சியாகச் சென்ற அக்டோபரில் நியூயார்க் மருத்துவமனை ஒன்றில் மூளை இறப்பு ஏற்பட்ட ஒருவருக்குப் பன்றியின் சிறுநீரகம் உடலுக்கு வெளியில் பொருத்தப்பட்ட அதிசயம் நடந்தது.

பன்றியின் சிறுநீரகச் செல்களில் சர்க்கரை வடிவில் ‘ஆல்பா-1’ நொதி இருக்கிறது. மனித உடலில் இது இல்லை. பன்றியிடமிருந்து பெறப்படும் சிறுநீரகத்தில், இந்த நொதியைக் கண்டுகொள்ளும் மனித உடல், இதை அந்நியனாகக் கருதி, மேற்படி உறுப்பை நிராகரித்துவிடுகிறது. கலிபோர்னியாவில் இருக்கும் ‘சிந்தெடிக்ஸ் ஜீனாமிக்ஸ்’ நிறுவனம், மரபணு மாற்று உறுப்புகளை வளர்ப்பதில் புகழ்பெற்றது. இந்த நிறுவனம் ‘ஆல்பா-1’ நொதி இல்லாத பன்றியை மரபணு மாற்று முறையில் வளர்த்துக் கொடுத்தது. அதன் சிறுநீரகத்தை மூளை இறப்பு நோயாளிக்கு நியூயார்க் மருத்துவர்கள் பொருத்தினார்கள். அதனால், அதில் பிரச்சினை எழவில்லை. இதை ஒரு மைல்கல் நிகழ்வாக மருத்துவ உலகம் பார்த்தது. இப்போது பன்றியின் இதயத்தை மனிதருக்குப் பொருத்தி வியப்பில் ஆழ்த்தியுள்ளனர் மேரிலேண்ட் மருத்துவமனை மருத்துவர்கள்.

சாத்தியமானது எப்படி?

பன்றிகளில் மரபணு வரிசையைத் துல்லியமாக மாற்றியமைக்கும் ஆராய்ச்சியில் முன்னேறிக்கொண்டிருக்கும் மற்றொரு அமெரிக்க நிறுவனம் ‘ரெவிவிகார்’ (Revivicor). இந்த நிறுவனத்தினர், பன்றி செல்களில் உறுப்பு நிராகரிப்புக்குக் காரணமாக இருக்கும் 4 வகை மரபணுக்களை ‘கிரிஸ்பர்’ (CRISPR/Cas9) எனும் மரபணுச் செதுக்கியால் செதுக்கி, அவற்றைச் செயலிழக்கச் செய்கின்றனர். அடுத்து, பன்றி செல்லின் மரபணு வரிசையில் புதிதாக 6 மரபணுக்களைப் புகுத்திவிடுகின்றனர்.

பிறகு, பன்றியின் கருமுட்டையிலிருந்து மரபணுவை நீக்கிவிட்டு, அதனுள் மேற்சொன்ன மாற்றியமைக்கப்பட்ட மரபணு உள்ள பன்றி செல்லைக் கலந்துவிடுகின்றனர். இப்போது இது கருக்கோளமாகிறது (Zygote). அதை ‘வாடகைத் தாய்’ பன்றியின் கருப்பையில் பதித்துவிடுகின்றனர். அதில் வளர்கருவாக (Embryo) வளர்ந்து சிசுவாகி 114 நாட்களில் மரபணு மாற்றமுள்ள பன்றிக்குட்டி பிறக்கிறது. படியாக்கம் (Cloning) மூலம் டோலி ஆடு பிறந்ததுபோல்தான் இது. இதன் பலனாக, மனித உடல் இந்த உறுப்புகளை அந்நியனாகக் கருதும் வாய்ப்பு குறைந்துவிட, உறுப்பு நிராகரிப்பு தவிர்க்கப்படுகிறது.

சாதாரணமாகவே பன்றிகளின் மரபணுக்களில் ரீட்ரோ வைரஸ்கள் வசிப்பதுண்டு. இவை உறுப்பு மாற்றத்துக்குப் பிறகு பயனாளிக்குத் தொற்றை உண்டாக்கி, உறுப்பு நிராகரிப்பைப் பூதாகரமாக்கும். பன்றியின் மரபணுக்களிலிருந்து 12 வகையான ரீட்ரோ வைரஸ்களை நீக்கியதன் மூலம் இது சரிசெய்யப்படுகிறது. இப்படி, ‘ரெவிவிகார்’ நிறுவனம் தயாரித்தளித்த மரபணு மாற்றுப் பன்றியின் இதயத்தையே பென்னட்டுக்கு மேரிலேண்ட் மருத்துவர்கள் பொருத்தியுள்ளனர்.

உறுப்பு நிராகரிப்பைத் தடுக்கும் புதிய மருந்து ஒன்றை பென்னட் இப்போது பயன்படுத்துகிறார். இதுவரை அந்த இதயத்தை அவரது உடல் நிராகரிக்கவில்லை. அவருக்குப் பொருத்தப்பட்டுள்ள பன்றியின் இதயம் மனித உடலுக்கு அந்நியமாகத் தெரியாத அளவுக்கு மரபணு மாற்றமுறையில் வளர்க்கப்பட்டது என்பதால், இந்த மருந்து இனியும் அவருக்குத் தேவைப்படுமா என்பது போகப்போகவே தெரியும்.

இந்திய மருத்துவரின் சாதனையும் வேதனையும்

பன்றியின் இதயத்தை மனிதருக்குப் பயன்படுத்த முடியும் என்பதை 25 ஆண்டுகளுக்கு முன்பே அசாம் மாநில மருத்துவர் ராம் பருவா நிரூபித்திருக்கிறார். 1997, ஜனவரி 1-ல் 32 வயதான ஒருவருக்குப் பன்றியின் இதயத்தை அவர் பொருத்தினார். அந்த நோயாளி 7 நாட்களுக்கு உயிருடன் இருந்தார். அவருக்குப் பல தொற்றுகள் இருந்ததால், அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. அரசிடம் இந்த சிகிச்சைக்கு முறையாக அனுமதி பெறவில்லை என்ற காரணத்துக்காக உறுப்பு மாற்றுச் சட்டம், 1994-ன் கீழ் பருவா கைதுசெய்யப்பட்டார்.

வரலாறு படைக்குமா?

இன்றைக்கு அமெரிக்காவில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் மாற்று உறுப்புகளுக்காகக் காத்திருக்கின்றனர். இந்தியாவில் இதயச் செயலிழப்பால் 50 ஆயிரம் பேர் அவதிப்படுகின்றனர். இவர்களில் அதிகபட்சம் 15 பேருக்குத்தான் இதய மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. ஆண்டுதோறும் 1.8 லட்சம் பேருக்குச் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை தேவைப்படும் நிலையில், 6 ஆயிரம் பேருக்குத்தான் மாற்றுச் சிறுநீரகம் கிடைக்கிறது. வருடத்துக்கு 30 ஆயிரம் பேருக்குக் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை தேவைப்படுகிறது. ஆனால், 1,500 பேருக்கு மட்டுமே இது சாத்தியப்படுகிறது. இந்த நிலையில் மரபணு மாற்றுப் பன்றிகளின் உள் உறுப்புகளை மனிதருக்கும் பயன்படுத்துவது சாத்தியமானால், அனுதினமும் உயிருக்குப் போராடிவரும் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்கள் காக்கப்படும். நவீன மருத்துவத்தில் புதிய வரலாறு படைக்கப்படும்.

- கு.கணேசன், பொதுநல மருத்துவர், தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x