Published : 05 Apr 2016 09:14 AM
Last Updated : 05 Apr 2016 09:14 AM

கட்சிக்குள் ஸ்டாலின் செய்ய வேண்டியது என்ன?

திமுகவைப் பொறுத்தவரை அதன் கூட்டணிக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தை ஓரளவுக்கு முடிவுக்கு வந்திருக்கிறது. 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளைவிட இந்த முறை அதிக இடங்களில் போட்டியிட அக்கட்சி தீர்மானித்திருக்கிறது. இந்நிலையில், கட்சி அளவில் திமுக தலைமை எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றிப் பேச்சு எழுந்திருக்கிறது. வெற்றியை உறுதிசெய்ய வேண்டும் என்ற வேகத்தில், சில கடுமையான முடிவுகளை நோக்கி திமுக செல்லத் தொடங்கியிருக்கிறது. ’மாவட்டத்துக்கு இரண்டு தொகுதிகளில் கட்சி வெற்றி பெறவில்லை என்றால் பதவி தப்பாது’ - திமுக மாவட்டச் செயலாளர்களை எச்சரித்திருந்தார் ஸ்டாலின். அதேசமயம், ‘இதை மிரட்டலாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; ஆரோக்கியமான போட்டியாக எடுத்துக்கொண்டு களப்பணி ஆற்றுங்கள்’ என்று கட்சியினரைச் சமாதானப்படுத்தும் விதமாகப் பேசுகிறார் கருணாநிதி. உண்மையில், தேர்தலுக்குப் பிறகு நடவடிக்கை எடுப்பதைவிடவும், இப்போதே சில துணிச்சலான நடவடிக்கைகளுக்கு ஸ்டாலின் தயாராக வேண்டும் என்று கட்சிக்குள் குரல்கள் எழுந்திருக்கின்றன.

குறுநில மன்னர்கள்

மாவட்ட அளவில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக குறுநில மன்னர்களின் குடும்ப அரசியலுக்குள் சிக்கிச் சின்னாபின்னமாகிக் கிடக்கிறது திமுக. அதிமுகவைப் போல தேர்தல் தோல்விகளுக்காகத் திமுகவில் யார் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டதில்லை. சொல்லப்போனால், உள்ளாட்சித் தேர்தல்களில் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர்களை எதிர்த்து சுயேச்சையாக நிற்பவர்கள்கூட கட்சியை விட்டு நீக்கப்பட்டதில்லை.

திமுக மாவட்டச் செயலாளர்களில் பெரும்பாலானவர்கள், தங்கள் மாவட்டத்தில் தாங்கள் வெற்றிபெறுவதற்கு மட்டும், அதிக முக்கியத்துவம் தருவதாக ஒரு புகார் நீண்டகாலமாக உண்டு. தனது மாவட்டத்தில் தானும் ஜெயித்து, திமுகவைச் சேர்ந்த இன்னொருவரும் ஜெயித்து, அவர் அமைச்சராகவும் ஆகிவிட்டால் அது தன்னுடைய செல்வாக்கையே அசைத்துவிடும் என்றே பல மாவட்டத் தலைவர்கள் கருதுகிறார்கள். மாவட்டச் செயலாளர்களாக இல்லாதவர்களுக்கு அமைச்சர் பதவி தரப்படும்போது அவர்கள் பல சவால்களையும், புறக்கணிப்புகளையும் எதிர்கொள்ள நேர்ந்திருக்கிறது. 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் மதுரை மாவட்டம் சமயநல்லூர் தனித் தொகுதியில் வென்று, ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சரான தமிழரசி ஓர் உதாரணம்.

முடக்கப்படும் எதிர் அணிகள்

முன்பெல்லாம் கட்சியின் அடிமட்டத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்காக, மாவட்டச் செயலாளர்களுக்கு நிகராக இன்னொரு அணியையும் கட்சித் தலைமை வைத்திருந்தது. இப்போது, மாவட்டச் செயலாளர்களை எதிர்ப்பவர்கள் முளையிலேயே முடக்கப்படுகிறார்கள். இதற்கு முன்பு, கட்சி அமைப்பு 35 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆட்சியில் இதில் 11 மாவட்டச் செயலாளர்கள் அமைச்சர்கள் ஆனார்கள். அவர்களில் 9 பேர் இப்போதும் மாவட்டச் செயலாளர்களாகவே நீடிக்கிறார்கள். எஞ்சிய இரண்டு பேர், தங்களின் வாரிசுகளுக்கு மாவட்டச் செயலாளர் பதவியை வாங்கிக் கொடுத்துவிட்டு, மாநிலப் பொறுப்புக்கு வந்துவிட்டார்கள்.

மாவட்டச் செயலாளர்களின் வானளாவிய அதிகாரங்களைக் குறைத்து, துடிப்பான மற்றவர்களுக்கும் அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்பதற்காகவே கட்சி அமைப்பு 65 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. அப்படிப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களின் செயலாளர் பதவிகள் தங்கள் ஆதரவாளர்களுக்குக் கிடைக்குமாறு பார்த்துக்கொண்டார்கள் ஒன்றுபட்ட மாவட்டங்களின் செயலாளர்கள்.

சில இடங்களில் பழைய மாவட்டச் செயலாளர்களே புதிய மாவட்டங்களின் பொறுப்புகளையும் ஆக்கிரமித்துக் கொண்டதால், உண்மையிலேயே அந்த மாவட்டங்களில் செல்வாக்கான நபர்கள் ஓரங்கட்டப்பட்டார்கள். அவர்களுக்குக் கட்சியின் துணை அமைப்புகளில் மாநிலப் பொறுப்புகளை அளிக்கலாம் என்ற தலைமையின் முடிவும் மாவட்டச் செயலாளர்களால் முடக்கப்படுவது இப்பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்தும்.

யாருக்கு வாய்ப்பு?

இந்தத் தேர்தலில் அதிமுகவைத் தவிர, தேமுதிக - மக்கள் நலக்கூட்டணியும் களத்தில் நிற்கும் நிலையில், கட்சியை பெரும் போராட்டம் நடத்தியாவது வெற்றிபெற வைக்க வேண்டிய கட்டாயம் திமுக தலைமைக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், இந்த இக்கட்டான சூழலையும் திமுக மாவட்டச் செயலாளர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. தேர்தலில் யாருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்பதுகுறித்து மாவட்டச் செயலாளர்களிடமும் பரிந்துரைக் கடிதங்களைக் கேட்டது தலைமை. இதில் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள், தொகுதியில் மக்களிடம் செல்வாக்கான நபர்களை மறைத்துவிட்டுத் தங்கள் ஆதரவாளர்களின் பெயர்களைத் தலைமைக்குச் சிபாரிசு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இப்படியெல்லாம் நடக்கும் எனக் கணித்திருந்ததாலோ என்னவோ, ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று பேரைப் பட்டிய லிட்டு அவர்களின் செல்வாக்கு தொடர்பாகத் தனியாகக் கணக்கெடுப்பு நடத்தினார் ஸ்டாலின். இப்படிக் கணக்கெடுக்க வந்தவர்களின் கண்களையும் மாவட்டச் செயலாளர்கள் சிலர் கட்டிவிட்டதாகப் புகார்கள் எழுந்திருக்கின்றன.

தேர்தலில் புதியவர்களுக்கும் இளைஞர்களுக்கும் வாய்ப்பு என்று சொல்லும் ஸ்டாலின், யாருக்கு வாய்ப்பு தர வேண்டும் என்பதைவிட யாருக்குத் தரக் கூடாது என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும் என்பதே திமுகவினரின் விருப்பமாக இருக்கிறது. காலம் காலமாய் ஆதிக்கம் செலுத்தி, கட்சியினரின் அதிருப்திக்கு உள்ளாகி இருப்பவர்களுக்கும் அவர்களது வாரிசுகளுக்கும் இந்தத் தேர்தலில் வாய்ப்பு தருவதில்லை என்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்கிறார்கள் கட்சியினர். தேர்தலுக்கு முன்பாக இத்தகைய துணிச்சலான நடவடிக்கைக்குத் தயாரானால், தேர்தலுக்குப் பிறகு யார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஸ்டாலினுக்கு ஏற்படாது!

- தொடர்புக்கு: shanmugasundaram.kl@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x