Published : 14 Jan 2022 05:45 AM
Last Updated : 14 Jan 2022 05:45 AM

கொள்முதல் முன்பதிவு: விவசாயிகளை ஏன் அலைக்கழிக்கிறீர்கள்?

தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் சம்பா நேரடி நெல் கொள்முதலைப் பொங்கல் பண்டிகைக்கு முன்னரே ஜனவரி முதல் வாரத்தில் தொடங்குவதை வழக்கமாகப் பின்பற்றிவருகிறது. நடப்பாண்டும் அதேபோல் அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பா அறுவடைப் பணிகள் தொடங்கிவிட்ட நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, பல இடங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்தும்கூட நெல்லைச் சேமித்து வைக்க முடியாமல் விவசாயிகள் அறுவடையை நிறுத்தி வைத்துள்ளனர்.

காவிரிப் படுகையின் ஒருசில கிராமங்களில் விவசாயிகள் அறுவடை செய்யப்பட்ட நெல்லைக் கொள்முதல் நிலைய வாசல்களில் கொட்டி வைத்துத் தூக்கமின்றிப் பாதுகாத்துவருகின்றனர். திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் இதுவரையிலும் எந்த ஒரு கிராமத்திலும் கொள்முதல் செய்யப்படவில்லை. தஞ்சாவூர் மாவட்டத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கொள்முதல்கள் நடந்தாலும் அமலுக்கு வந்துள்ள புதிய நடைமுறைகள் விவசாயிகளுக்கு எளிதானவையாக இல்லை. குறிப்பாக, விவசாயிகள் தங்கள் நெல்லை நேரடிக் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதற்கு இணையதளம் மூலமாகப் பதிவுசெய்துகொள்ள வேண்டும் என்கிற புதிய அறிவிப்பைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டு அதனைக் கண்டிப்புடன் நடைமுறைப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

இணையவழி முன்பதிவு

இந்தத் திட்டத்தின் மூலமாக, விவசாயிகள் எந்தத் தேதியில் அறுவடை செய்யப்போகிறோம் என்பதை முன்கூட்டியே பதிவிட வேண்டும். எந்தத் தேதியில் விற்பனை செய்யப்போகிறோம், எந்தக் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்கிறோம் என்கிற விவரங்களோடு தங்கள் நிலத்துக்கான அடங்கல் பதிவை கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்று அதனை இணையதள சேவை நிறுவனங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவுசெய்துள்ள விவரங்களும், அடங்கல் பதிவுச் சான்றிதழும் உண்மைதானா என்பதைச் சரிபார்த்து கிராம நிர்வாக அலுவலர் இணையதளம் மூலமே அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன் பிறகு கொள்முதல் நிலையத்தில் வரிசைப் பட்டியலில் விவசாயியின் பெயர் இடம்பெறும். இதெல்லாம் சொல்வதற்கு இலகுவாக இருக்கலாம். ஆனால், நடைமுறையில் பல்வேறு சிக்கல்களையும் நெருக்கடிகளையும் விவசாயிகள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இந்தப் புதிய நடைமுறையானது, வெளிமாநில நெல்லை உள்ளூர் விவசாயிகள் துணையோடு விற்பனை செய்வதைத் தடுப்பதாகக் கூறி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் காரணம் அடிப்படையிலேயே தவறானது. வெளிமாநில நெல் கொள்முதலுக்கு வருகிறது என்றால் அதனை அந்தந்தக் கிராமங்களின் விவசாயிகள்தான் முன்னின்று தடுக்கிறார்கள். இயற்கைச் சீற்றத்தால் மகசூல் இழப்பைச் சந்திக்கும் வருவாய்க் கிராமங்களில் வெளிமாநில நெல் மூலம் அதிகக் கொள்முதல் கணக்கு காட்டப்பட்டால் தங்களுக்குக் காப்பீடு கிடைக்காது என்று அங்குள்ள விவசாயிகள் அஞ்சுகிறார்கள். எனவே, வெளிமாநில நெல்லைக் கொள்முதல் நிலையங்களில் தமிழ்நாட்டு விவசாயிகள் அனுமதிப்பதில்லை.

அதையும் தாண்டி முறைகேடுகள் நடக்கிறது என்றால், அது அதிகார வர்க்கத்தின் துணையோடு நடக்கிறது என்று அர்த்தம். விவசாயிகள் போடும் நெல்லுக்குக் கட்டாய வசூல் மூலம் ரூ.40 கிடைக்கிறது என்றால் வெளிமாநில நெல்லுக்குச் சிப்பம் 1-க்கு ரூ.100 முதல் 150 வரையிலும் கமிஷனாகக் கிடைப்பதால் அதிகாரிகள் அந்த முறைகேட்டை அனுமதிக்கிறார்கள். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு வெளிமாநில நெல் கொள்முதல் செய்வதை முற்றிலும் தடுப்பதற்கான முயற்சியில் நேரடியாக ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, கொள்முதலுக்கான விவரங்களையும் ஆவணங்களையும் இணைய வழியாகப் பதிவேற்ற வேண்டும் என்பதைத் தீர்வாக முன்வைக்கிறது. ஆனால், அந்தத் தீர்வு விவசாயத்தின் அடிப்படைகளையே அறியாமல் முன்மொழியப்பட்டிருக்கிறது.

சாத்தியமில்லாத தீர்வு

ஒரு விவசாயி தனது நிலத்தில் பயிர் முதிர்ந்து குறித்த நாளில் அறுவடை செய்யலாம் என்று எதிர்பார்த்திருக்கும் நிலையில், சிறு மழை பெய்தாலும்கூட ஒரு வாரம் காலம் அறுவடை பிந்திவிடும். தற்போது ஏற்பட்டிருக்கிற ஆள் பற்றாக்குறை, இயந்திரப் பற்றாக்குறை ஆகியவற்றாலும் திட்டமிட்டபடி அறுவடையை செய்யமுடியாமல் போகலாம். விளைவித்த நெல் இப்படி வாரக்கணக்கில் வயல்வெளியில் அழிவதைப் பார்த்து விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்ற நிலையில், அவர்களை முன்கூட்டியே அறுவடையைத் திட்டமிட்டு பதிவுசெய்யச் சொல்வதும், அறுவடை செய்த நெல்லைக் குறிப்பிட்ட தேதியில் விற்பனைசெய்ய முடியும் என்பதும் நடைமுறைக்கு ஒருபோதும் சாத்தியமில்லாதவை. இது இயற்கைக்கே புறம்பானது என்பதைத் தமிழ்நாடு அரசு உணர வேண்டும். அறுவடை நேரத்தில், பல்வேறு இயற்கைச் சீற்றங்களால் மகசூல் இழப்பை சந்தித்துவரும் விவசாயிகள், இணையதளம் வழியாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற புதிய நடைமுறையால் மேலும் பாதிப்புகளுக்கும் இன்னல்களுக்கும் ஆளாகும் நிலையே ஏற்படும்.

குறிப்பாக, இணையதளங்கள் மூலமாகக் கொள்முதலுக்கான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்வதற்கான சேவை மையங்கள், பல கிராமங்களில் 15 கிமீ சுற்றளவில் அமைந்துள்ளன. எனவே, இப்பதிவுகளை விவசாயிகள் தங்கள் தேவைக்கேற்பத் தேவையான நேரத்தில் பதிவுசெய்வதும் இயலாத ஒன்று. முன்கூட்டியே பதிவுசெய்தபடி குறித்த நாளில் கொள்முதலுக்கு நெல்லைக் கொண்டுசெல்வதென்றால், ஏற்கெனவே வெளிமாநில நெல்லைப் பதுக்கிவைத்திருப்பவர்களுக்கே அது எளிதாக இருக்கும். இணையதளப் பதிவேற்றத்தால் முறைகேடுகளைத் தவிர்த்துவிட முடியாது என்பதற்கு பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் நடந்த குளறுபடிகள் உதாரணமாக நம் முன்னால் இருக்கின்றன.

என்ன செய்யலாம்?

முறைகேடுகள் இல்லாமல் நெல் கொள்முதல் செய்ய வேண்டுமென்றால், கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டுவரப்படும் நெல் மூட்டைகளை முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையில் இணையதளம் மூலமாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும். அந்தப் பணியை நேரடியாகக் கொள்முதல் நிலையப் பணியாளர்களே மேற்கொள்ள வேண்டும். அதற்கான தொழில்நுட்பங்களையும் இயந்திரங்களையும் தமிழ்நாடு அரசே கொள்முதல் பணியாளர்களுக்கு வழங்க வேண்டும். வெளிமாநில நெல் கொள்முதலைத் தடுக்க உள்ளூர் விவசாயிகளைக் கொண்ட கண்காணிப்புக் குழுக்களையும்கூட நியமிக்கலாம்.

கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஜனவரி முதல் பாதியில் தஞ்சாவூரில், காவிரிப் படுகை மாவட்டங்களை உள்ளடக்கி அமைச்சர் தலைமையில் கொள்முதல் அலுவலர்கள், வேளாண் அலுவலர்கள், விவசாயிகளைக் கொண்ட முத்தரப்புக் கூட்டம் நடத்தப்பட்டுவந்தது. அக்கூட்டத்தில் கொள்முதல் குறித்து புதிய நடைமுறைகள் இருப்பின் விவசாயிகளிடம் தெரிவித்து அது குறித்து அவர்களின் கருத்தறிந்தும் அதன் சாதகபாதகங்களை உணர்ந்தும் அரசு மேற்கொண்டு முடிவுகளைத் தொடர்வது வழக்கமாக இருந்துவந்தது. முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி தன் வாழ்நாள் அளவும் இந்த முறையைக் கடைப்பிடித்தார். அதிமுக முதல்வர்களும் அதையே பின்பற்றினார்கள். தற்போதைய முதல்வரும் விவசாயிகளை உள்ளடக்கிய முத்தரப்புக் கூட்டங்களை நடத்தி அதன் அடிப்படையில் முடிவுகளை எடுக்க வேண்டும். கொள்முதல் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையிலான சிறப்புக் கூட்டங்களும்கூட இப்போது நடத்தப்படுவதில்லை.

நேரடி நெல் கொள்முதலில் புதிய நடைமுறைகளைப் புகுத்தியது தொடர்பில் இதுவரை விவசாயிகளின் கருத்து கேட்கப்படவே இல்லை. இணைய வசதிகள் இன்னும் பெரும்பாலான விவசாயிகளுக்கு எட்டாக்கனியாக இருக்கும் சூழலில், அவர்கள் அலைக்கழிக்கப்படுவது நியாயமா?

- பி.ஆர் பாண்டியன், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x