Last Updated : 12 Jan, 2022 06:27 AM

 

Published : 12 Jan 2022 06:27 AM
Last Updated : 12 Jan 2022 06:27 AM

தாய்வீடு திரும்பும் தமிழ்க் கல்வெட்டுகள்

மைசூரில் இருக்கும் தமிழ்க் கல்வெட்டுகள் சென்னைக்கு வர உள்ளதாக இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் (ஏஎஸ்ஐ) அறிவிப்பு, தமிழக மக்களையும் உலகமெங்கும் உள்ள தமிழ் ஆர்வலர்களையும் பெருத்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

1984-ல் சென்னை பல்கலைக்கழகத் தொல்லியல் துறையில் நான் எம்.ஃபில்., பயின்ற காலம். பதிக்கப்பட்ட கல்வெட்டுகள் கிடைக்காமல், அவற்றின் படிகளைத் தேடி மைசூரில் உள்ள ஏஎஸ்ஐயின் கல்வெட்டுப் பிரிவின் அலுவலகம் எனக்கு முதலில் அறிமுகமானது. 60 ஆண்டுகளுக்கு முன் படி எடுக்கப்பட்ட கல்வெட்டுகள் இன்னமும் பதிப்பிக்கப்படவில்லை என நான் உணர்ந்த முதல் புள்ளி அது. கால தாமதம், இடையூறுகள் போன்றவற்றைக் கடந்து மைசூரில் தங்கி, கல்வெட்டுகளைப் படித்து எழுதி எடுத்து வந்தேன்.

தமிழில் உள்ள கல்வெட்டுகள் ஏன் தமிழ்நாட்டில் கிடைக்கவில்லை, எல்லா மாணவர்களாலும் மைசூருக்கு வருவது எப்படி முடியும் போன்ற கேள்விகள் என் மனதில் எழுந்தன. எனது முனைவர் பட்ட ஆய்வுக் காலத்திலும் இந்த நிலையே நீடித்தது. எனது முனைவர் பட்ட ஆய்வேட்டை 2005-ல் நூலாக வெளியிடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அதே கல்வெட்டுகள் 80 ஆண்டுகளைக் கடந்தும் பதிப்பிக்கப்படாததை அறிந்துகொண்டேன்.

எடுத்துக்காட்டாக, தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி எண் 26, 1976-78-ல் வெளியானது. இதன் அடுத்த தொகுதி எண் 27, 2001-ல்தான் வெளியானது. இடையில் 23 ஆண்டுகள் தமிழ்க் கல்வெட்டுப் படிகள் படிக்கப்படவில்லையா? பதிப்பிக்கப்படவில்லையா? தெரியவில்லை. இதுதான், ஜூன் 6, 2006-ல் ஜூனியர் விகடன் எடுத்த ஒரு முன்னெடுப்பு. ‘காவிரியும் போச்சு... கல்வெட்டும் போச்சு!’ என்ற செய்திக் கட்டுரையாக முதல் வடிவம் கொண்டது. பொதுவெளியில் இத்தகவல் முதன்முறையாகப் பரவியது. எனக்கு ஒரு ஆசுவாசம்.

இந்த விஷயம் அப்போதைய முதல்வரான கருணாநிதி கவனத்துக்குச் செல்ல, நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். மைசூர் அலுவலகத் தமிழ்க் கல்வெட்டுகளைத் தமிழகம் கொண்டுவரும் முயற்சியாகத் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கி, பிறகு ரூ.25 லட்சமாகவும் உயர்த்தப்பட்டது. நிதி, முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் அரசிடமே திரும்பியது. அப்போது மற்றொரு தகவலும் பரவியிருந்தது. திமுக இடம்பெற்ற ஐ.மு. கூட்டணி ஆட்சியின் மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் அம்பிகா சோனிக்கு ஒரு கடிதம் எழுதப்பட்டதாகவும், முதல்வர் கருணாநிதி மைசூரின் கல்வெட்டுப் பிரிவை மீண்டும் தமிழ்நாட்டுக்கு மாற்றக் கோரியது ஏற்கப்படவில்லை என்றும் தெரிந்தது.

ஜனவரி 2013-ல் இப்பிரச்சினை ஜூனியர் விகடனில் மீண்டும் ஒரு கட்டுரையானது. இதே காலகட்டத்தில் தனிநபர்களுக்கும் மாணவர்களுக்கும் ஓய்வுபெற்ற கல்வெட்டியல் வரலாற்று ஆர்வலர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஒரு அலைபோல் தமிழ்நாட்டைப் பற்றிய வரலாற்று ஆர்வம் மேலோங்கியது. இக்காலத்தில் மரபு நடைப் பயணங்கள், வரலாற்றுச் சுற்றுலாக்கள் உருக்கொண்டன. பல உள்ளூர் வரலாற்று அமைப்புகள் தோன்றி, தினந்தோறும் தங்களது கண்டுபிடிப்புகளைச் சமூக வலைதளங்களில் பதிவிட்டன.

இதை ஊக்குவிக்கும் வகையில், கீழடியில் ஏஎஸ்ஐயின் அகழாய்வு தொடங்கியது. அங்கே ஒரு வரமாக வந்த அமர்நாத் ராமகிருஷ்ணன், வைகை நதிக்கரையில் அகழாய்வுக்கு உரிய இடங்களாக 200-க்கும் மேற்பட்ட இடங்களைக் கண்டறிந்தார். இந்த அகழாய்வுக்கும் தடை ஏற்பட்டதால், நீதிமன்றம் வாயிலாகத் தடை நீக்கப்பட்டு, தமிழ்நாடு அரசே கீழடி அகழாய்வை மேற்கொள்ள வழி ஏற்பட்டது.

இதனிடையே, ஜனவரி 7, 2015-ல் ‘இந்து தமிழ்’ நாளேட்டில் கல்வெட்டுகளைப் பற்றி நான் அளித்த செய்தி வெளியானது. மேலும், கல்வெட்டுகளைத் தமிழகத்துக்குக் கொண்டுவர நீதிமன்றத்தின் வாசல் தட்டப்பட்டது. வழக்கறிஞர் மணிமாறன் தாக்கல்செய்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், எம்.துரைசாமி ஆகியோர் விசாரித்தனர். இவ்வழக்கில் திமுகவின் மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ வாதிட்டார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 19-ல் மதுரையில் உள்ள சென்னை உயர் நீதிமன்றக் கிளையின் அமர்வு அளித்த தீர்ப்பு, மத்திய அரசின் கீழ் செயல்படும் ஏஎஸ்ஐயின் கல்வெட்டியல் பிரிவின் மைசூர் அலுவலக இயக்குநருக்கு இட்ட கட்டளையாக அமைந்தது.

இனிதான் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். ஏஎஸ்ஐ தனது உத்தரவில் சொல்லியிருக்கும் இரண்டு செய்தியும் ஆழ்ந்து படிக்க வேண்டியவை. ஒன்று, ஏற்கெனவே சென்னையில் இயங்கிவரும் கிளை அலுவலகத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இரண்டாவதாக, மைசூர் அலுவலகத்தில் இருக்கும் இயக்குநர் தமிழ்க் கல்வெட்டு மைப் படிவங்களையும் அதைச் சார்ந்த ஆவணங்களையும் சென்னை ஏஎஸ்ஐ கிளைக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்பதாகும்.

கல்வெட்டியல் பிரிவு முதன்முதலாக பெங்களூரூவில் 1886-ல் தொடங்கப்பட்டது. பிறகு, கல்வெட்டுப் படிகளின் பாதுகாப்பு கருதி 1903-ல் ஊட்டிக்கு மாற்றப்பட்டது. பிறகு, 1966-ல் மீண்டும் மைசூருக்கு இப்பிரிவு சென்றது. இதற்கு இரண்டு கிளைகள் 1990-ல் உத்தர பிரதேசம் ஜான்சியிலும் சென்னையிலும் அமைக்கப்பட்டன. இதில், ஜான்சியின் கிளை தற்போது உபியின் தலைநகரான லக்னோவில் செயல்படுகிறது. கடந்த 2008-ல் மைசூரிலேயே புதிய கட்டிடத்துக்குக் கல்வெட்டுப் பிரிவு மாற்றப்பட்டது. அப்போது தமிழ்க் கல்வெட்டுகளின் பல படிகள் சேதமாகித் தூக்கி எறியப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. எனவே, தற்போது மைசூரிலிருந்து சென்னைக்கு வரும் படிகளைப் பத்திரமாக சென்னைக்குக் கொண்டுவருவதை உறுதிப்படுத்துவது அவசியம்.

சென்னையில் இயங்கும் தொல்லியல் துறை கிளை நிறுவனத்துக்கும் தமிழ்நாடு அரசிற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. மைசூரில் இருந்தாலும் சென்னையில் இருந்தாலும் மத்திய அரசின் கீழ் இயங்கும் அதே ஏஎஸ்ஐயின் கைவசம்தான் இருக்கும். இந்தச் செய்தியை நாம் ஆழமாக மனதில் பதித்து வைத்துக்கொள்ள வேண்டும். உயர் நீதிமன்றத் தீர்ப்பால் நிச்சயிக்கப்பட்ட பலன் என்னவென்றால், கல்வெட்டுகளைத் தேடி மைசூர் செல்லத் தேவையில்லை, சென்னைக்குச் சென்றால் போதும் என்பதே.

ஆகவே, இதில் நாம் பெரிதும் மகிழ்வதற்குப் போதுமான வெற்றி இருப்பதாக எனது பார்வையில் தெரியவில்லை. வெற்று இடமாற்றம் மட்டுமே இதில் குறிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி, தமிழ்க் கல்வெட்டுகளைப் படிக்கக் கல்வெட்டியலர்களை அமர்த்துதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளையும் மேற்கொள்வது அவசியம். அப்படி நடவடிக்கைகள் மேற்கொண்டு அனைத்துத் தமிழ்க் கல்வெட்டுகளும் பதிப்பிக்கப்பட்டால், அதன் பின் செய்யப்படும் ஆய்வுகளால் சர்வதேச அளவில் தமிழர்களின் வரலாறு அதிக முக்கியத்துவம் பெறுவது நமக்குப் பெருமை அல்லவா?

- எஸ்.சாந்தினிபீ, அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியர், ‘கல்வெட்டுகளில் தேவதாசி’ நூலாசிரியர். தொடர்புக்கு: chandnibi@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x