Last Updated : 04 Apr, 2016 09:08 AM

 

Published : 04 Apr 2016 09:08 AM
Last Updated : 04 Apr 2016 09:08 AM

ஒரே தேர்தலில் ஊழலை ஒழிப்பது எப்படி?!

நம்ம ‘தமிழ்நாடு அரசாங்கம்’ கன்னியாகுமரி மாவட்டத்துல ஓடுற டவுன் பஸ் மாதிரி. வண்டி போகுதோ இல்லியோ, சத்தம் மட்டும் காது கிழியுற அளவுக்குப் பலமா கேக்கும். இந்தத் தேர்தல, அந்த டவுன் பஸ்ஸுக்கு ‘டிரைவர்’ வேலைக்கு ஆள் எடுக்கிற நேர்காணல்னு சொல்லலாம். இந்த வாட்டி அதிமுகவுல ஜெயலலிதா, திமுக அணியில கருணாநிதி, தேமுதிக அணியில விஜயகாந்த், ‘பாமக’அன்புமணி, ‘நாம் தமிழர்’ சீமான்னு 5 பேரு இண்டர்வியூக்கு வந்திருக்காங்க.

கருணாநிதி 19 வருஷம் ‘டிரைவரா’இருந்தவரு. நல்ல அனுபவசாலி. ஃபுட் போர்டு ஃபுல்லா ஆள் நின்னா லும், ஒவ்வொரு ஸ்டாப்லயும் நின்னு ஆளு ஏத்துற அளவுக்குப் பொறுமைசாலி. ஆளே இல்லாத ரோட்டுலயும் நிதானமா வண்டி ஓட்டுவாருன்னா பாத்துக்கோங் களேன். இவர் பஸ் ஓட்டிச் சம்பாதிச்ச காசை எல்லாம் எப்பிடிப் பத்திரப்படுத்தினார்னு இவர் குடும்பத்தோட வசதிவாய்ப்பைப் பார்த்தாலே புரிஞ்சிரும்.

கில்லாடி டிரைவர்கள்

ஜெயலலிதா 14 வருஷம் டிரைவரா இருந்தவங்க. கண்டக்டர்கள் இஷ்டத்துக்கு வசூல் பண்ணுனதுக்கு உடந்தையா இருந்தார்ங்கிற வழக்குல 2 தடவை சஸ்பெண்ட் ஆனவங்க. நடு ஊருக்குள்ளயே தடாலடியா வண்டி ஓட்டுறதுலயும், சடன் பிரேக் போட்டுத் தூக்கியடிக்கிறதுலயும் கில்லாடி. நிறுத்தாமப் போறதுன்னு ஒருவாட்டி முடிவெடுத்துட்டா, ஸ்டாப்ல பயணிங்க என்ன… டிராஃபிக் போலீஸே நின்னாலும் நிப்பாட்டாமப் போயிக்கிட்டே இருப்பாங்க. எனக்குன்னு குடும்பம் இல்லைன்னு சொல்லிச் சொல்லியே செல்வாக்க பூராம் சம்பாரிச்சாங்க. அந்த செல்வாக்க பூராம் கட்சிக்கே அதிகம் செலவழிச்சிருக்கார்ங்கிறத அதிமுகவோட பிரம்மாண்ட வளர்ச்சியைப் பார்த்தே புரிஞ்சிக்கலாம்.

போன தடவை கருணாநிதிக்குப் பதிலா ஜெயலலிதாவ நாம செலெக்ட் பண்ணுனோமே. அந்தம்மா என்ன பண்ணுனாங்க? பஸ்ஸோட கலர மாத்துனாங்க. புது பஸ் ஸ்டாண்டு நல்ல வசதியா இருந்தாலும், கெட்னது கருணாநிதியாச்சேன்னு பழைய பஸ் ஸ்டாண்ட்லதாம் பஸ்ஸை நிறுத்துவேன்னு ஒரேயடியா சாதிச்சிட்டாங்க. ‘வசூல் பண்ற’ கண்டக்டரையோ, காண்ட்ராக்டரையோ மாத்தல. ‘டிக்கெட் விலை’யை மட்டும் ஏத்துனாங்க. மத்தபடி கருணாநிதி ஓட்டுன அதே ரூட்லதாம் பஸ் போச்சுது. கருணாநிதியும் இப்படித்தாம். முந்தி அந்தம்மா ஓட்டின பஸ்ஸை இவரு வேற கலரு அடிச்சு ஓட்டினாரு.

புதுசா ஒரு டிரைவர்

இந்தத் தேர்தல்ல “இவங்க ரெண்டு பேரும் ஓட்டுனது போதும், புதுசா ஒரு டிரைவரை எடுக்கணும்யா”ன்னு ஒரு பேச்சு வந்திருக்கு. விஜயகாந்த் டிரைவர் ஆனா “ஏபுள்ள... கியர் எங்க இருக்கு? பிரேக் எங்கயிருக்கு?”ன்னு திகைச்சுப் போக வாய்ப்பிருக்குன்னு பயணிகள் கூட்டம் பயப்படுது. ஏன்னா, எதிர்க்கட்சித் தலைவரா டிரெய்னிங் பீரியடுலயே ‘சஸ்பெண்ட்’ஆனவரு அவரு. இத சாக்கா வெச்சிக்கிட்டு, “டிரைவர் இவர்தான், ஆனா வண்டிய நாங்கதாம் ஓட்டுவோம்”னு நாலஞ்சி பேரு ஒரே நேரத்துல ஸ்டியரிங்குல கை வைக்கிறதுக்கு வாய்ப்பிருக்கு. “எங்க மச்சான் டிரைவரானா வைகோதான் கண்டக்டரு, திருமா தான் டிராஃபிக் போலீஸ், கம்யூனிஸ்ட்காரங்கதாம் செக்கிங் இன்ஸ்பெக்டர்”னு இப்பவே சொல்ல ஆரம்பிச்சிட்டாரு சுதீஷ்.

அன்புமணி டிரைவரானா ஊர் பூராம் போக வேண்டிய டவுன் பஸ்ஸை பாட்டாளி சொந்தங்கள் வாழ்ற தெருவுக்குள்ள மட்டுமே ஓட்டுவாரோன்னு சந்தேகம் வருது. சீமான் கையில சாவியைக் குடுத்தா, வண்டிய ஓட்டாம ஸ்டாப்களுக்குப் பேரை மாத்துறதுலயே பிஸியா இருப்பார்ங்கிறாங்க. அதாவது, திருச்சியோட பேரு சென்னையாகிடும். குமரியோட பேரு திருச்சியாகிடும்.

“யோவ்! என்னய்யா கேனத்தனமா பேசிக்கிட்டு இருக்க. ஊழல் ஒழியுமாங்கிறது தாம் தலைப்பு அதைப் பத்திப் பேசுய்யா”ன்னு யாரோ வையுறது (திட்றது) காதுல விழுது. பொறும... பொறும!

இன்ஜின்ல கோளாறு

கண்ணாடியைத் திருப்புனா எப்பிடி ஜீவா ஆட்டோ ஓடும்? இன்ஜின்லயே கோளாறு இருக்கும்போது, டிரைவரை மட்டும் மாத்தி என்ன பிரயோஜனம் சொல்லுங்க. ஆட்சி மாறுனா, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிங்கள வேணுமின்னா கூண்டோட மாத்துவாங்க. ஆத்து மணல், கனிம மணல், கிரானைட் கொள்ளை, தனியார் கல்வி நிறுவனங்களின் அழிச்சாட்டியம் எல்லாம் தேர்தல் இடைவேளைக்குப் பிறகும் தொடரும்... தடங்கல் இல்லாம. இவங்க கப்பம் கட்ட வேண்டிய ‘மேலிடம்’ மட்டும்தாம் மாறும். துணைவேந்தர், பேராசிரியர் பணி நியமனத்துக்கான ரேட் வேணுமின்னா அஞ்சோ, பத்தோ குறையலாம். மிச்சப்படி ஊழல்தான் கோலோச்சும்!

இதுதாம் ‘மாற்றம்’னா டிரைவரை மட்டும் மாத்துனாப் போதும். உண்மையிலயே ஊழலை ஒழிக்கணும்னா, அரசாங்கத்தோட கொள்கை, கோட்பாடு, செயல்பாடு எல்லாத்தையும் மாத்தியாவணும். தேர்தல் ஆணையத்தோட விதிகளையும் சேத்துத்தாம். என்னது.. தேர்தல் ஆணையத்தையுமா?ன்னு அதிர்ச்சியாகாதீங்க. ஊரறிஞ்ச திருடனாயிருந்தாலும், ‘நீதிமன்றத்தால் குறைஞ்சது ரெண்டு வருஷம் தண்டனை வாங்கியிருந்தா தேர்தல்ல போட்டியிட முடியாது’ன்னு நம்ம சட்டம் சொல்லுது. அப்பிடிப் பாத்தா, தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்ல மொத்தமே ரெண்டு, மூணு பேருதாம் தப்பானவங்க. மிச்சப் பேரு பூராம் அக்மார்க் யோக்கியர்கதான்.

ஒரே ஒரு விக்கெட் கீப்பர்

ஓட்டுக்குக் காசு வாங்குனா தண்டனைன்னு சொல்ற தேர்தல் ஆணையம், பணம் குடுத்த எத்தனை பேரைப் போட்டியில இருந்து விலக்கியிருக்கு? திருமங்கலம் இடைத்தேர்தல், ஆண்டிபட்டி இடைத்தேர்தல்ல எவ்வளவு பணம் புரண்டுச்சுன்னு தேர்தல் ஆணையத்துக்குத் தெரியும். கெயிலும், கோலியும் வெரட்டி வெரட்டி ரன் அடிக்க.. ஒரே ஒரு விக்கெட் கீப்பர் மட்டும் ஃபுல் கிரவுண்டுக்கும் ஃபீல்டிங் பண்ணுன மாதிரி இருந்துச்சி தேர்தல் ஆணையத்தோட தடுப்பாட்டம். அந்தத் தேர்தல் செல்லாதுன்னோ, ரெண்டாவது இடம் பிடிச்சவர்தாம் வெற்றி வேட்பாளர்னோ அறிவிக்க முடிஞ்சுதா?! ரொம்ப வேணாம். கடைசியா நடந்த மக்களவைத் தேர்தல்ல ஓட்டுக்கு ரூவா போச்சுன்னாங்களே என்ன செய்ய முடிஞ்சுது தேர்தல் ஆணையத்தால? வாக்காளர்களுக்குக் காசு குடுத்தா நடவடிக்கைன்னு மிரட்டுற தேர்தல் ஆணையம், சீட்டுக்குப் பணம் வாங்குற, கூட்டணிக்குப் பேரம் பேசுற அரசியல்வாதிங்க மேல ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?

இப்படி வரிசையா கேள்வி வர்றப்ப.. ஆதி கேள்வி நம்மகிட்ட வந்து முடியுது. “லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அரசு ஊழியர், அமைச்சர் மறுநாளே டிஸ்மிஸ்”னு சட்டமே கொண்டாந்தாலும், பொதுமக்கள் நாம ஒத்துழைக்கலேன்னா எல்லாம் அம்பேல்தானே! நம்ம தலைவர் தப்பே செஞ்சாலும் நீதிமன்றம் தண்டனை குடுக்கக் கூடாது, அப்பிடிக் குடுத்தா பஸ்ஸைக் கொளுத்துற, விடுதலையாகக் கோரி பால்காவடி எடுக்கிற கூட்டம்தான நாம? ஓட்டுக்குக் காசு கொடுக்குற கதையைப் பேசுறோம். காசு வாங்குறவன்கிட்டதானே காசு கொடுக்குதான். அப்பம் நாம சோரம் போறவன்னு அவனுக்கே தெரிஞ்சு கெடக்குல்ல? அதை உறுதிசெய்யிற மாரித்தானே காசைக் கேட்டு வாங்குறோம்!

நம்மளை மாத்திக்காம, “ச்சே! இந்த நாட்ல லஞ்சமும் ஊழலும் எப்ப ஒழியும்?”னு டயலாக் பேசி என்ன பிரயோஜனப்படப்போவுது? அதனால, முதல்ல நாம மாறணும். இல்லன்னா.. நெஜத்துல ஊழலை ஒழிக்க முடியாதுப்பா. போய் ‘இந்தியன்’, ‘அந்நியன்’மாதிரியான படங்களப் பாத்து கனவுலயே ஊழலை ஒழிச்சிக்க வேண்டியதுதாம்.

- கே.கே.மகேஷ்

தொடர்புக்கு: magesh.kk@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x