Published : 11 Jan 2022 05:53 AM
Last Updated : 11 Jan 2022 05:53 AM

கரோனாவை எதிர்க்கத் தடுப்பூசியுடன் தரவும் ஏன் முக்கியம் ஆகிறது

கரோனா வைரஸை நாம் குறைத்து மதிப்பிட்டுவிட்டோம். சுவாசத்தில் தொற்றும் வைரஸ்கள் எளிதில் கடத்தப்படக்கூடியவை, அறிகுறிகளற்ற தொற்றை ஏற்படுத்தக்கூடியவை, ஆர்.என்.ஏ. மரபணு வரிசையைக் கொண்டவை, புதிய மக்கள் கூட்டத்திடையே தொற்றக்கூடிவை என்பதை வரலாறு நமக்குக் கற்றுக்கொடுத்துள்ளது. அது ஏற்படுத்தும் ஆபத்து நிதர்சனமானது, அதேநேரம் முன்கணிக்கக்கூடியதுகூட. இப்படிப்பட்ட வைரஸ், பரவலான பல்வேறு நிலப்பரப்புகளில் பரவக்கூடியது, தொற்று அதிகரிக்கும், குறையும், குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு புதிய வேற்றுருவங்கள் உருவாகும் என்பது போன்றவையும் அதற்கு இணையாக எதிர்பார்க்கக்கூடியவையே.

இருந்தபோதும் 2020, 2021-ம் ஆண்டுகளில் இந்தியாவைவிட சிறந்த சுகாதாரக் கட்டமைப்பைக் கொண்ட நாடுகளே திணறியதைப் பார்த்தோம். அடுத்து வரும் ஆண்டுகளில் இந்தப் பெருந்தொற்று ஏற்படுத்தும் தாக்கத்தின் அளவு இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் எப்படி இருக்கும் என்பது குறித்த திட்டவட்டமாக மதிப்பீடு செய்வது சாத்தியம் என்று கூற முடியாது. அதே நேரம், நமது ஒட்டுமொத்தத் தயாரிப்பு தேவையான அளவுக்கு இல்லை என்பதே உண்மை. தயாரிப்புநிலை என்பது காப்பீட்டுப் பத்திரம் போன்றது.

அதற்கு பொது சுகாதாரம், மருத்துவம், நெறிமுறைகள், அறிவியல் தொழில்நுட்பம் ஆகியவை சார்ந்து கட்டமைப்பு, செயல்முறை, அமைப்பு, துறைசார்ந்தவர்கள், திட்டங்கள் போன்றவை வலுவான அளவில் தேவை. அத்துடன் தொழில் துறையுடன் ஆழமான தொடர்புகள், அரசின் ஆதரவு, வசதிகள் போன்றவையும் அவசியம். தயாரிப்புநிலை இருந்தால் மட்டுமே நாம் உடனடியாக எதிர்வினையாற்ற முடியும். ஆனால், தயாரிப்புநிலை இல்லாதபோது தரவு, கொள்கை, ஆதாரங்கள் அடிப்படையில் தொற்றுப் பரவலையும் அதன் தாக்கத்தையும், கணிப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் நாடுகள் முயல்கின்றன.

தடுப்பூசி சமத்துவமின்மை

2021-ம் ஆண்டின் மிகப் பெரிய வெற்றியாகக் குறிப்பிடப்பட வேண்டியது தடுப்பூசிகளையே. புதிய வேற்றுருவங்கள் உருவாகிப் பரவியபோதும்கூட, தீவிர நோய் நிலையையும் இறப்பையும் தடுப்பூசிகள் தடுத்தன என்பது தெளிவாகத் தெரிந்தது. இருந்தபோதும் எதிர்பார்த்தபடியே தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு என்பது பெருமளவில் சரிந்தது. பணக்கார நாடுகள் கூடுதல் தவணை தடுப்பூசி செலுத்துதல், 18 வயதுக்குக் குறைந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்துதல், ஆபத்து குறைந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்துதல் போன்றவற்றைத் தொடங்கியபோது, தடுப்பூசி சமத்துவமின்மை மிக மோசமான நிலைக்குச் சென்றது.

ஏனென்றால், சில ஏழை நாடுகள் தங்கள் நாட்டில் எளிதில் பாதிக்கப்பட சாத்தியமுள்ளவர்களுக்குக்கூட தடுப்பூசி செலுத்த முடியாத நிலையில் இருந்தன. தென்னாப்பிரிக்காவில் தடுப்பூசி செலுத்துதல் போதுமான அளவு இல்லாததற்கும் ஒமைக்ரான் வேற்றுருவம் பரவியதற்கும் நேரடித் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து உறுதியாகத் தெரியவில்லை. அதேநேரம் உலகின் பெருமளவு மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தாமல் இருப்பதென்பது, தொற்றுப் பரவலுக்கான ஆபத்தையும், வைரஸ் புதிய வேற்றுருவம் எடுப்பதற்கான ஆபத்தையும் சேர்த்தே அதிகரிக்கிறது.

சரி, 2022-ல் தடுப்பூசி செலுத்துதலைத் தாண்டி வேறென்னவெல்லாம் முக்கியத்துவம் பெற வேண்டும்? அனைத்து நாடுகளும் தடுப்பூசிகளைப் பகிர்ந்துகொள்வது மட்டுமில்லை, தொற்றுநோய் குறித்த தரவு, திறன்கள், ஆதாரங்கள், கொள்கைகள் போன்றவற்றையும் பெருமளவு பகிர்ந்துகொண்டாக வேண்டிய அவசியம் உள்ளது. அப்போதுதான் கரோனா பெருந்தொற்றுக்கு எதிராக ஒருங்கிணைந்து செயலாற்ற முடியும். ஒமைக்ரான் பரவத் தொடங்குவது குறித்து உலகத்துக்குத் தென்னாப்பிரிக்கா முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தது. கண்காணிப்பு அமைப்புகள், தரவுகளைப் பகிர்ந்துகொள்வதற்கான விருப்பம் போன்றவை தென்னாப்பிரிக்காவிடம் இல்லாமல் இருந்திருந்தால், முக்கியமான தொடக்க வாரங்களில் ஒமைக்ரான் பரவல் குறித்து உலகம் எச்சரிக்கை அடைவதில் தாமதம் ஏற்பட்டிருக்கும்.

பாடங்களை மறக்கக் கூடாது

பெருந்தொற்றுகளைப் பொறுத்தவரை கண்காணிப்பு, தரவுகள் போன்றவை மிகமிக முக்கியமானவை. இல்லையென்றால் கடந்த காலத்தில் செய்த தவறுகளையே திரும்பத் திரும்பச் செய்துகொண்டிருப்போம் அல்லது மற்ற பகுதிகளிலிருந்து கிடைக்கும் எச்சரிக்கை சமிக்ஞைகளை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருப்போம் அல்லது வெளிப்படையாகப் பரிசோதனைகளை-தரவுகளைச் சேகரிக்கும் அமைப்புகளைப் பராமரிக்கவும் பகிர்ந்துகொள்ளவும் தயாராக நாம் இருந்தாக வேண்டும். மத்திய அரசு அமைத்துள்ள INSACOG, CoWIN போன்றவை இது போன்ற தரவு சேகரிப்புச் செயல்பாடுகள் சாத்தியம்தான் என்பதற்கான உதாரணமாக உள்ளன. ஆனால், அதே நேரம் INSACOG, CoWIN தளங்களில் உள்ள தரவுகளும் மற்ற தரவுகளும் ஒன்றிணைக்கப்பட்டிருக்கவில்லை. பொதுச் சுகாதார அமைப்பைத் தயாரிப்பு நிலையில் வைத்திருக்கவும், விரைந்து எதிர்வினையாற்றவும் இந்த ஒன்றிணைப்பு மிக முக்கியம்.

சரி தடுப்பூசிகளும் ஊக்கத் தடுப்பூசியும் காலாகாலத்துக்கும் தேவைப்படுமா? இன்றைய நிலையில், கரோனா பெருந்தொற்று முடிவுறாத ஒரு சுழற்சி போலவே தோற்றமளிக்கிறது. அதேநேரம், முதலில் நடைமுறைக்கு வந்த தடுப்பூசிகள், பின்னால் வந்த இரண்டு தடுப்பூசிகளைவிடச் சிறந்தவையா; இரண்டு தடுப்பூசித் தவணைகளுக்கு இடையிலான இடைவெளி; சிறந்த பலனைப் பெறுவதற்கு வெவ்வேறு தடுப்பூசிகளைக் கலந்து பயன்படுத்தலாமா என்பது போன்றவை குறித்து எந்த ஆராய்ச்சியும் நம்மிடையே நடைபெறவேயில்லை என்பதை மறந்துவிடக் கூடாது. சற்று நிதானமடைந்து கரோனா பரவலுக்கு எதிரான நீண்ட கால மேலாண்மைத் திட்டங்களை வகுக்கத் தொடங்கும்போது, மேற்கண்டது போன்ற கேள்விகள் சார்ந்து ஆய்வுகள் நடைபெற்று விடை கிடைத்தால்தான், தடுப்பூசிகளைத் தொடர்வது பற்றி மட்டுமில்லாமல் நடைமுறையில் உள்ள மருந்துகள், எதிர்கால மருந்துகள், நோய் கண்டறிதல் குறித்த அணுகுமுறைகள் சார்ந்தும் தீர்க்கமான முடிவுகளை எடுக்க முடியும்.

கரோனா பெருந்தொற்றுப் புயலைச் சமாளிப்பதற்கான தீர்வுகளை அறிவியல் நமக்குத் தந்துவிட்டது. அதேநேரம் அந்தத் தீர்வு உடனடியாக உலகம் முழுவதும் பரவலாவதை நாடுகளின் தேசிய ஆர்வங்கள் தடுத்துவிட்டன. 2022-ல் கரோனா பெருந்தொற்று நிலைமை மேம்படும். அதேநேரம் மக்களைப் பாதுகாப்பது, உரிய தகவல்/அறிவுரைகளைப் பரவலாக்கி சமூக நம்பத்தன்மையை மேம்படுத்துவது, இக்கட்டான காலத்தில் மக்கள் வாழ்வதற்குத் தேவையான ஆதாரங்களை உருவாக்குவது, அறிவியல்-தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வது, உலகக் கூட்டுணர்வை மேம்படுத்துவது என கரோனா பெருந்தொற்று கற்றுக்கொடுத்த வலிமிகுந்த பாடங்களை நாம் மறந்துவிடவே கூடாது.

- ககன்தீப் காங்,

வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர், நோய்த்தொற்றுப் பரவலியல் நிபுணர்,

தொடர்புக்கு: gkang@cmcvellore.ac.in;

தமிழில்: ஆதி வள்ளியப்பன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x