Published : 09 Jan 2022 06:33 AM
Last Updated : 09 Jan 2022 06:33 AM

மனித குலம் காக்க ஓர் அருமருந்து!

‘நவீன கால டார்வின்’, ‘டார்வினின் வாரிசு’ என்றெல்லாம் புகழப்படும் இ.ஓ.வில்சன் (எட்வர்ட் ஆஸ்போர்ன் வில்சன்) ஒரு பரிணாமவியலர், உயிரி-புவியியலர், சமூக உயிரியலர், எறும்பியலர் (myrmecologist). கடந்த நூற்றாண்டின் சிறந்த அறிவியல் எழுத்தாளர்களில் ஒருவரும்கூட. அமெரிக்காவின் மாசசூசிட்ஸ் மாகாணத்தில் 2021 கிறிஸ்துமஸுக்கு அடுத்த நாள் 92 வயதில் காலமான அவர், உயிரியலின் வழியாக உலகைப் புரிந்துகொள்ள முயன்றவர். அறிவியல் ஆராய்ச்சிகளின் மூலம் தான் பெற்ற வெளிச்சத்தை வாழ்நாள் முழுவதும் உலகுக்குக் கடத்திக்கொண்டிருந்த அவர், உலகம் இன்றைக்கு எதிர்கொண்டுள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வாக ‘பூவுலகில் பாதி’யை (Half-Earth) இயற்கைக்கு அர்ப்பணித்தல் என்கிற கருத்தாக்கத்தை முன்வைத்தார். அந்தக் கருத்தாக்கத்தைத் தெளிவுபடுத்தி அவர் வலியுறுத்திய விதத்துக்குப் பின்னால், நீண்டதொரு ஆராய்ச்சிப் பயணம் இருக்கிறது.

சிற்றுயிர் உலகம்

‘ஒவ்வொரு குழந்தைக்கும் பூச்சிகளைப் பின்தொடர்ந்த பால்ய காலம் ஒன்றிருக்கும். அந்தப் பால்ய கால ஆர்வத்தைத் தாண்டி நான் வெளியே வரவில்லை. சூழலியலை ஆராய்ந்து பார்ப்பதிலும் குழந்தைகளுக்குப் பெருவிருப்பம் இருக்கும். பூச்சியியலை நான் தேர்ந்தெடுத்ததற்கு இப்படிக் குழந்தை மனத்துடன் இருந்தது ஒரு காரணம் என்றால், மற்றொரு காரணம், என்னால் ஒரு கண்ணால் மட்டுமே பார்க்க முடியும் என்பது. அதனால்தான் சிறிய விஷயங்களை உற்றுநோக்குவதில் கவனம் செலுத்தினேன்’ என்று சுயசரிதையில் வில்சன் குறிப்பிட்டுள்ளார். அவருடைய ஏழு வயதில் தூண்டிலிட்டு மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, வலுவாக இரையைக் கடித்த ஒரு முள்மீனை நீரிலிருந்து வேகமாகப் பிடித்து இழுத்தபோது, மீனின் துடுப்பிலிருந்த கூர்மையான முள் அவருடைய வலது கண் பாவையை வெட்டிவிட்டது. அதனால் வாழ்நாள் முழுக்க ஒரு கண்ணால் மட்டுமே தெளிவாகப் பார்க்கக்கூடிய நிலை அவருக்கு உண்டானது.

பால்ய காலத்தில் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் பகுதியில் உள்ள ராக் கிரீக் பூங்கா பகுதிக்கு வில்சன் அடிக்கடி சென்று திரும்பினார். ‘ஒரு நாள் மக்கிக்கொண்டிருந்த ஒரு மரக்கிளையை வெளியே எடுத்தேன். அதன் அடியில் சிட்ரோனெல்லா எறும்புகள் இருந்தன. அந்தக் கூட்டத்திலிருந்த உழைப்பாளி எறும்புகள் சிறிதாக, பருத்து, மஞ்சள் நிறத்தில் புத்திசாலிகளாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தன. அந்த எறும்புகளிலிருந்து எலுமிச்சைவாசம் வந்தது. அன்று எறும்புகள் குறித்து மனத்தில் பதிந்த அந்த பிம்பம் என் வாழ்நாள் முழுக்கத் திரும்பத் திரும்ப ஒரு நீங்காத காட்சியாக மனத்தில் பளிச்சிட்டுக்கொண்டே இருந்தது’ என்கிறார்.

பதின்ம வயதின் இறுதியில் பூச்சியியலர் ஆகும் ஆர்வத்துடன் ஈக்களைச் சேகரிக்கத் தொடங்கினார். அப்போது இரண்டாம் உலகப் போர் நடந்துகொண்டிருந்ததன் காரணமாகப் பூச்சி மாதிரிகளைக் குத்திவைக்கும் குண்டூசிகள் கிடைப்பது சிக்கலாக இருந்தது. இதன் காரணமாகச் சிறு குப்பிகளில் சேகரித்து ஆராயக்கூடிய எறும்புகளின் மீது அவருடைய கவனம் திரும்பியது.

உயிரினச் சமநிலை

புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் 1956-ல் பயிற்றுவிக்கும் பணியில் சேர்ந்தார். எறும்பு வகைப்பாட்டியலராகவும் அவற்றின் பரிணாமவியல் வளர்ச்சி குறித்தும் ஆராயத் தொடங்கினார். சக எறும்புகளுடன் தொடர்புகொள்வதற்காக பெரமோன் எனும் வேதிப்பொருளை எறும்புகள் பயன்படுத்துகின்றன என்பதை முதலில் கண்டறிந்தவர் அவர்தான். 1960-களில் பிரபலக் கணிதவியலரும் சூழலியலருமான ராபர்ட் மெக்ஆர்தருடன் இணைந்து வில்சன் பணியாற்றினார். ஃபுளோரிடா கீஸ் என்கிற சிறு தீவில் ‘உயிரின வகைகள் சமநிலைக் கோட்பாடு’ குறித்து அவர்கள் ஆராயத் தொடங்கினார்கள்.

இதற்காக அங்கிருந்த அலையாத்தித் தீவுகளில் பரிசோதனை மேற்கொண்டார்கள். முதலில் அந்தத் தீவுகளில் இருந்த பூச்சி வகைகளைக் கணக்கெடுத்தார்கள். பிறகு, அங்கிருந்த சிற்றுயிர்கள் அனைத்தையும் புகையூட்டி அழித்தார்கள். பிறகு புதிய உயிரின வகைகள் அந்தத் தீவுக்கு எப்படி வந்து, பெருகத் தொடங்குகின்றன என்பதை ஆராய்வதற்காக அவர்கள் காத்திருந்தார்கள். ஒரே ஆண்டில் அந்தச் சிறு தீவுகளில் இருந்த பல்லுயிர் வகைகள் ஒரு யுகத்துக்கு முந்தைய நிலைக்குத் திரும்பின. பிறகு, உயிரினப் பன்மை சமநிலையை எட்டி, அந்த இடத்தில் அவை நிலைத்திருக்கத் தொடங்கின.

இந்த நேரடிக் கள ஆய்வு முடிவுகள் அடிப்படையில், உயிரின வகைகள்-அவை வாழும் நிலப்பரப்பு இடையிலான சமன்பாடு எனும் கோட்பாடு முன்வைக்கப்பட்டது. இந்த ஆய்வு முடிவின்படி, ஒரு தீவில் வாழும் உயிரின வகைகளில் சமநிலை நிலவுகிறது என்பதுடன், அந்தத் தீவு சுருங்கினால், சில உயிரின வகைகளுக்கு இடமில்லாமல் போகும் என்பதும் உண்மையானது. அதாவது, ஓர் அளவுக்கு மேல் தீவுகளால் கூடுதல் உயிரின வகைகளைத் தாங்க முடிவதில்லை, அப்படித் தாக்குப்பிடிக்க முடியாத உயிரினங்கள் அழிந்துபோகின்றன. இந்த ஆய்வு அடிப்படையிலான ‘தீவு உயிரி-புவியியல் குறித்த கோட்பாடு’ என்கிற புத்தகம், சூழலியலர்களுக்கு நிரந்தரப் பாடமாக மாறியது.

சமூக நடத்தைகள் மரபணுக்களால் தீர்மானிக்கப்படுகின்றன என்கிற கருதுகோள் அடிப்படையில், 1975-ல் அவர் எழுதிய ‘Sociobiology: The New Synthesis’ (சமூக உயிரியல்) என்கிற நூல் பெரும் சர்ச்சைக்குள்ளானது. சுயநலமற்றுப் பிறருக்கு உதவும் குணம் மரபணு வழியாகவும் இயற்கைத் தேர்வு மூலமாகவும் வந்திருக்கலாம் என்று விலங்கு சமூகங்களை முன்வைத்து வில்சன் கூறினார். குறிப்பாக, அந்த நூலின் கடைசி அத்தியாயத்தில் மனித சமூகத்தில் அதிகாரப் படிநிலை நிலவுவதற்கு மரபணுரீதியிலான காரணங்கள் இருக்கலாம் என்கிற கருதுகோளை அவர் முன்வைத்திருந்தார். மனித சமூக நடத்தைகளுக்கும் மரபணுக்கள் காரணமாக இருக்கலாம் என்று அவர் கூறியதே சர்ச்சைக்குள்ளானது.

சமூக உயிரியல் அடிப்படையில் அவர் எழுதிய ‘On Human Nature’ (1978) புலிட்சர் பரிசைப் பெற்றது. பிறகு, பெர்ட் ஹால்டாப்ளருடன் இணைந்து அவர் எழுதிய ‘The Ants’ (1990) நூலும் புலிட்சர் பரிசைப் பெற்றது. சர்ச்சைக்குரிய சமூக-உயிரியல் கருதுகோளுக்கு மாறாக, உயிரி-புவியியல் சார்ந்த வில்சனின் பங்களிப்பே பரவலான கவனத்தைப் பெற்றது, குறிப்பிடத்தக்க ஒன்றாகவும் மாறியது.

பெரும் கொடை

புத்தாயிரத்துக்குப் பிந்தைய ஆண்டுகளில் மட்டும் 14 புத்தகங்களை அவர் எழுதியிருக்கிறார். ‘பூவுலகில் பாதி’யை இயற்கைக்கு அர்ப்பணித்தல் என்கிற கருத்தாக்கத்தை முன்வைத்து ‘Half-Earth: Our Planet’s Fight for Life’ (2016) என்கிற நூலை எழுதியபோது அவருடைய வயது 87. பருவநிலை மாற்றத்தைத் தீவிரமடைய வைக்கும் உயிரினங்கள் திரளாக அற்றுப்போதலையும், சூழலியல் உருக்குலைவையும் தடுத்து நிறுத்த முடியும் என்று வில்சன் நம்பினார். அவரது கடைசி ஆசை, நிறைவேறாக் கனவு என்று இந்தக் கருத்தாக்கத்தை கூறலாம் என்கிறார் அமெரிக்க சூழலியல் எழுத்தாளர் ஜெரிமி ஹான்ஸ்.

மக்களின் நன்மைக்காகவும் இயற்கையின் நன்மைக்காகவும் பூவுலகில் பாதியை இயற்கைக்கு அர்ப்பணித்துப் பாதுகாக்க வேண்டும். அந்தப் பகுதியில் மனிதர்களைத் தவிர்த்த மற்ற உயிரினங்கள் செழித்து வாழ்வதற்கு இடமளிக்க வேண்டும். இதன் மூலம் இயற்கை தனக்குத் தானே புத்துயிர் ஊட்டிக்கொள்ளும். தன் வாழ்நாளின் பெரும் பகுதியைப் பரிணாமவியல் ஆராய்ச்சிக்காகச் செலவிட்ட ஒருவர், பூவுலகுக்கும் மனித குலத்துக்கும் அளித்த மிகப் பெரிய கொடை இந்தக் கருத்தாக்கம் என்று ஜெரிமி குறிப்பிடுகிறார்.

பூவுலகில் பாதியை இயற்கைக்கு அர்ப்பணித்தால் 80% உயிரினங்களைக் காப்பாற்ற முடியும். குறிப்பாக, உயிரினப் பன்மை மிகுந்த கடல் பவளத் திட்டுகள், வெப்பமண்டல மழைக்காடுகள் உள்ளிட்டவற்றைக் காப்பது அவசியம். இது சாத்தியமானால் உயிரினங்கள் திரளாக அற்றுப்போதலையும் ஒட்டுமொத்த சூழலியல் சீர்குலைவையும் தவிர்க்க முடியும். மனித நாகரிகமும் பேரழிவிலிருந்து தப்பும்.

சாத்தியமற்றதா?

மனிதத் தூண்டுதலால் உலகில் பேரழிவு (Anthropocene) நடைபெற்றுவரும் காலம் என்று நாம் வாழும் காலம் அடையாளப்படுத்தப்படுகிறது. இந்தப் பின்னணியில் பூவுலகில் பாதியை இயற்கைக்கு அர்ப்பணிப்பது என்பது நடைமுறை சாத்தியமற்ற அறிவியல் புனைவைப் போல் தோற்றமளிக்கலாம். இன்றைய தேதிக்குப் பூவுலகின் நிலப்பரப்பில் 17% காடுகளும் 7% பெருங்கடல்களும் ஏதோ ஒரு வகையில் பாதுகாப்பைப் பெற்றுள்ளன. அப்படியென்றால், பூவுலகில் பாதியைக் காப்பதற்கான இடைவெளி பெரிது. அதேநேரம் இது சாத்தியமற்றதல்ல. உலக சராசரி வெப்பநிலை மேலும் 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்காமல் தடுத்து நிறுத்த, ‘30-க்கு 30’ என்கிற திட்டத்தை மார்ஷல் தீவுகள் 2016-ல் முன்மொழிந்தன. அதன்படி பூவுலகின் 30% நிலப் பகுதியையும் 30% கடல் பகுதியையும் பாதுகாக்க 50 நாடுகள் முன்வந்துள்ளன.

இப்படிச் செய்வதன்மூலம் புவியை வெப்பப்படுத்திவரும் கரியமிலவாயு கூடுதலாகக் கிரகிக்கப்படும், தூய தண்ணீர் கிடைக்கும், மண் வளம் பெறும், உயிரினங்கள் செழிக்கும், இன்னும் என்னென்ன வகைகளிலெல்லாம் இயற்கை மீள வழியுண்டோ அத்தனை வழிகளிலும் இயற்கை மீண்டெழும். அதன் பலனாக மனித குலம் உட்பட அனைத்து உயிரிகளும் காக்கப்படும், உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருக்கும் பூவுலகு இழந்த ஆரோக்கியத்தைத் திரும்பப்பெறும். பூவுலகுக்குப் புத்துயிர் ஊட்டுவதற்கு இ.ஓ.வில்சன் முன்வைத்த இந்த அருமருந்து, உத்தரவாதமாகப் பலன் கொடுக்கும். ஆனால், அந்தத் தீர்வைச் செயல்படுத்துவது யாரோ சிலருடைய கைகளில் இல்லை. நம் ஒவ்வொருவர் கைகளிலுமே உள்ளது என்பதைத் தன் பணி, எழுத்து வழியாக உணர்த்தி வில்சன் நம்மிடமிருந்து விடைபெற்றிருக்கிறார்.

- ஆதி வள்ளியப்பன், தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x