Published : 06 Jan 2022 06:59 AM
Last Updated : 06 Jan 2022 06:59 AM

கோயிற்கலைச் சிறப்புகளை ஆய்வுக் கண்ணோட்டத்துடன் ஆவணப்படுத்த வேண்டும்

தமிழ்நாடு முழுவதும் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 50 கோயில்களைப் பற்றிய ஆவணப்படங்கள் தயாரிக்கப்பட்டுவருவதாகத் தெரிவித்துள்ளார், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு. கோயில்களின் வரலாறு அடங்கிய தொகுப்பு நூல் ஒன்றும் தயாராகிவருவதாக அவர் கூறியுள்ளார்.

தயாரிக்கப்படும் ஆவணப்படங்கள் ஒவ்வொன்றும் 3 நிமிடங்களாக அமையும் எனத் தெரிகிறது. பழமைவாய்ந்த கோயில்களின் சிறப்புகளை 3 நிமிடக் காணொளிக்குள் அடக்கிவிட முடியுமா என்ற கேள்வியும் கூடவே எழுகிறது. கோயில்களின் தலபுராணங்கள், நாயன்மார்கள் அல்லது ஆழ்வார்களால் இயற்றப்பட்ட பாடல்கள், திருவிழாக்கள் என்று சமயம் சார்ந்த தகவல்கள் ஒருபுறமிருக்க கட்டிடக் கலை, சிற்பக் கலை, ஓவியக் கலை என்று காட்சிபூர்வமாக ஆவணப்படுத்தப்பட வேண்டிய கலைச் சிறப்புகள் ஏராளம் இருக்கின்றன.

தமிழ்நாட்டுக் கோயில்களைப் பற்றி அறநிலையத் துறை சார்பில் ஆவணப்படங்களைத் தயாரிக்கிற நேரத்தில், ஏற்கெனவே ஃபிலிம் டிவிஷன், தூர்தர்ஷன் போன்ற அரசு சார்ந்த நிறுவனங்களின் வாயிலாக எடுக்கப்பட்ட ஆவணப்படங்களையும் திரட்டி, அவற்றையும் உள்ளடக்கிக்கொள்வதற்கு முயல வேண்டும். அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கிய ‘தி சோழா ஹெரிட்டேஜ்’, பி.டி.கர்கா இயக்கிய ‘மாமல்லபுரம்’ என்று இவ்வகையில் மிக நீண்ட பட்டியல் உள்ளது. இது போன்ற படங்களை உருவாக்குவதற்குக் கலையுணர்வு, தொழில்நுட்ப அறிவு ஆகியவற்றுடன் ஆராய்ச்சிப் பின்னணியும் அவசியம் தேவை.

ஆவணப்படுத்துதல் என்பது புகைப்படங்களையும் உள்ளடக்கியது. புதுச்சேரியிலிருந்து செயல்பட்டுவரும் பிரெஞ்சு நிறுவனம், 1956-ல் தொடங்கி இதுவரையில் இந்தியா முழுவதும் உள்ள கோயில்களின் கட்டிடங்கள், சிலைகள், அணிகலன்கள் தொடர்பாக ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட புகைப்படங்களை ஆவணப்படுத்தி ஆய்வுசெய்துவருகிறது.

அவற்றில் பெரும்பாலானவை, தென்னகக் கோயில்களைப் பற்றியவை. தமிழ்நாட்டின் பாரம்பரியக் கோயில் கட்டிடங்களில் பழுது ஏற்பட்டாலும், காணாமல் போன சிலைகளைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தாலும் இதுபோன்ற நிறுவனங்களின் உதவிகள் தவிர்க்கவியலாதவை. எனவே, கோயில்கள் சார்ந்த ஆவணப்படுத்தும் பணிகள் வழக்கமான அரசு பொது ஏல ஒப்பந்தங்களைப் போல அல்லாமல், ஆய்வு அனுபவங்களைக் கொண்ட, லாப நோக்கமற்ற நிறுவனங்களின் வழி மேற்கொள்ளப்பட வேண்டியதும் அவசியம்.

அறநிலையத் துறை சார்பில் வெளியிடப்படவிருக்கும் கோயில் வரலாறுகளிலும் தனிக்கவனம் செலுத்த வேண்டிய தேவை உண்டு. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் மாவட்டவாரியாக வெளியிடப்பட்ட கோயில் விவரத் தொகுப்புகள் பயண வழிகாட்டிகளாக மட்டுமே அமைந்துள்ளன. அவற்றிலிருந்து கோயில்களின் தனிச்சிறப்பான கட்டிடக் கலையைப் பற்றியோ சிற்பங்கள், ஓவியங்களின் கலைச் சிறப்புகள் பற்றியோ சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டுகளைப் பற்றியோ முழுமையாக அறிந்துகொள்ள முடியவில்லை.

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி என்.ரமேசன் எழுதி, திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள திருப்பதி கோயிலின் வரலாறுபோல தமிழ்நாட்டுக் கோயில்களுக்கும் விரிவான வரலாறுகள் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட வேண்டும். குடவாயில் பாலசுப்ரமணியன், அ.கா.பெருமாள் போன்ற வரலாற்று ஆய்வறிஞர்களின் பங்களிப்புகளை அந்நூல்களுக்கு முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x