Last Updated : 06 Jan, 2022 06:50 AM

Published : 06 Jan 2022 06:50 AM
Last Updated : 06 Jan 2022 06:50 AM

அடிமையாக்கும் இணைய சூதாட்டங்கள், அழியும் குடும்பங்கள்

சமீபத்தில், வங்கியில் உயர் பதவியில் இருக்கும் ஊழியர் ஒருவர் மனைவியையும், இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலைசெய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. விசாரணையில், ஆன்லைன் சூதாட்டத்தால் பெரும் பணத்தை அவர் இழந்திருப்பதும், அதன் விளைவாக எழுந்த மன உளைச்சலில் அவர் இப்படிச் செய்திருக்கலாம் எனவும் கூறப்பட்டது.

சமீப காலத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலைகள், கொலைகள், கொள்ளைகள் போன்ற சம்பவங்கள் நம்மைச் சுற்றிப் பெருமளவு நடக்கின்றன. குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை எல்லோரும் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். ஆனாலும், இந்த ஆன்லைன் சூதாட்டங்கள் எந்தக் கட்டுப்பாடுகளும் இன்றி, தொடர்ந்து விளம்பரப்படுத்தப்பட்டுதான் வருகின்றன. போதைப் பொருட்களை விளம்பரப்படுத்தக் கூடாது என்று இங்கு சட்டம் இருக்கிறது. ஆனால், இந்த இணைய சூதாட்டங்களை இன்னும் நாம் போதையாகவே கருதவில்லை.

ஏன் இன்னும் தடைசெய்யப்படவில்லை?

நமது சட்டம் பொதுவாகச் சூதாட்டங்கள் போன்ற விளையாட்டுகளை இரண்டாகப் பிரிக்கிறது. ஒன்று, அறிவைக் கொண்டு விளையாடும் விளையாட்டு (Game of skill), மற்றொன்று வாய்ப்பால் விளையாடும் விளையாட்டு (Game of chance). அறிவைக் கொண்டு விளையாடும் விளையாட்டுகளுக்கு எந்தத் தடையும் இல்லை; ஆனால், வாய்ப்பினால் விளையாடும் விளையாட்டுகளுக்குத் தடை உண்டு. இதில் வேடிக்கை என்னவென்றால், எது அறிவால் விளையாடப்படுவது? எது வாய்ப்பால் விளையாடப்படுவது என்பதற்கெல்லாம் தெளிவான விளக்கங்களோ அல்லது நெறிமுறைகளோ இன்னும் உருவாக்கப்படவில்லை. அப்படி நெறிமுறைகள் கொண்டுவருவதற்கு முன்பாகவே இந்தச் சூதாட்டங்கள் சமூகத்தின் ஆழம் வரை ஊடுருவியிருக்கும்.

ஆன்லைன் சூதாட்டங்களின் ஆபத்துகள் என்னென்ன?

நேரடியாக விளையாடுவதைவிட இணையத்தில் விளையாடுவது சுலபமானது, கட்டுப்பாடுகளற்றது. விளையாடும் நேரத்தையோ அல்லது இழக்கும் பணத்தையோ குடும்பத்தைச் சார்ந்த யாரும் கண்காணிக்க முடியாது, விளையாடும் தனிநபர் மட்டுமே அறியக்கூடிய வகையில்தான் அது இருக்கிறது. எனவேதான், இதில் விளையாடுபவர்களை ஆரம்ப நிலையிலேயே நம்மால் தடுக்க முடியாமல் போகிறது.

விளையாடுபவரைத் தொடர்ந்து இதில் ஈடுபடச் செய்யும் உளவியல் உத்திகளைக் கொண்டே இந்த விளையாட்டுகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு கட்டத்தில் இந்தச் சூதாட்டங்கள் அதில் ஈடுபடுபவரை முற்றிலுமாகத் தம்வசப்படுத்திவிடுகின்றன. போதைப் பொருளுக்கு ஒருவர் அடிமையாவதைப் போல இந்த சூதாட்டங்களுக்கு ஒருவர் அடிமையாகிறார். சுயகட்டுப்பாட்டை இழக்கிறார், வெளியே வர முடியாமல் தவிக்கிறார். மற்ற போதைகளிலாவது அடிமைநிலை வெளியே தெரியும், பெரிய பொருளாதார இழப்பிருக்காது. ஆனால், இங்கே வெளியே தெரியாததாலும், மிகப் பெரிய பொருளாதார இழப்பை வீட்டில் சொல்ல முடியாததாலும் பாதிக்கப்படுபவர்கள் தற்கொலை போன்ற விபரீத முடிவுகளை நோக்கித் தள்ளப்படுகிறார்கள்.

“அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில தற்கொலைகள்தானே நடக்கின்றன, இதற்காக இந்த விளையாட்டுகளையே தடை செய்ய வேண்டுமா? இதனால் அரசாங்கத்துக்கு வரும் வருவாய் எவ்வளவு தெரியுமா?” என்றுகூடச் சிலர் கேட்கிறார்கள். இப்போது நாம் கேள்விப்படும் தற்கொலைகள் எல்லாம் மிகப் பெரிய பிரச்சினையின் சிறிய உதாரணங்கள்தான். இந்தப் பிரச்சினையின் மேற்பரப்பில் நாம் வண்ணச் சாயங்களைப் பூசி, இதற்கு வர்த்தக அடையாளங்களைக் கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.

ஆனால், ஒரு பெரும் நோய்மை இதன் அடியில் வேர்விட்டுக்கொண்டிருக்கிறது. இந்த நோய்மையின் பிடியில் மாணவர்களும் இளைஞர்களும் குடும்பங்களும் சிக்கிக்கொண்டிருக்கின்றன. இதிலிருந்து இவர்களைப் பாதுகாப்பது நோக்கமென்றால், இதன் வர்த்தகப் பலன்களைப் புறந்தள்ளிவிட்டு, இதை எப்படி முறைப்படுத்துவது என்று சிந்திக்க வேண்டும். இல்லையென்றால், அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் தற்கொலைகளைத் தாண்டி ஒரு சமூகமே நோயுற்று நொடித்துப்போவதை நாம் காண நேரிடும்.

எப்படி முறைப்படுத்தலாம்?

இணைய உலகம் என்பது மிகப் பிரம்மாண்டமானது. அதன் வாடிக்கையாளர்களாகிய நமது மனநிலையைப் பற்றியோ, பொருளாதார பாதிப்புகளைப் பற்றியோ அங்கு யாருக்கும் கவலை கிடையாது. ஆன்லைன் விளையாட்டுகளும் சூதாட்டங்களும் ஒரு கட்டத்தைத் தாண்டி, நம்மை அதற்குள் இழுத்துக்கொள்ளும் தன்மை கொண்டவை. ஏனென்றால், அவை அப்படித்தான் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன என்பதை உணர்ந்து, தனிநபர்களாகிய நாம்தான் பாதுகாப்புடனும் எச்சரிக்கையுடனும் இணையத்தில் இருக்க வேண்டும்.

திட்டமிட்ட நேரத்தைவிடநேரத்தை அதிக நேரம் ஒன்றில் செலவழிக்கிறோம் என்பது தெரிந்தால், உடனடியாக நாம் அந்தச் செயலின் மீது எச்சரிக்கை கொள்ள வேண்டும் அல்லது வெளியேற வேண்டும். எந்த ஒரு விளையாட்டும் ஆரம்பத்தில் இருந்த பரவசமும் உற்சாகமும் இல்லாமல் ஒருவிதக் கட்டாயத்தின் பேரில் விளையாடுகிறோம் என்பதை உணர்ந்தால் நாம் அதற்கு அடிமையாகிக்கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம். எனவே, உடனடியாக அதிலிருந்து வெளியேற வேண்டும். நம்மால் தனிப்பட்ட முறையில் இதிலிருந்து வெளியே வர முடியவில்லை என்று தெரிந்தால், உடனடியாக வீட்டில் இருப்பவர்களிடம் தெரிவிக்க வேண்டும். நாம் அதில் பணத்தை இழக்கிறோம் என்பதை உணர்ந்தால், உடனடியாக நிதி சார்ந்த பொறுப்புகள் அனைத்தையும் வீட்டில் உள்ளவர்களிடம் ஒப்படைத்துவிட வேண்டும்.

அரசாங்கம் ஒரு தெளிவான வரையறையைக் கொண்டுவர வேண்டும். ஒரு விளையாட்டு, அடிப்படையில் என்னவாக இருக்கிறது என்பதைவிட, அது சமூகத்தில் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைக் கணித்து அதனை முறைப்படுத்த வேண்டும். ஏராளமான இளைஞர்களின் நேரத்தையும் சிந்தனைத் திறனையும் மனிதவளத்தையும் ஒரு விளையாட்டு விரயம் செய்யுமானால், அது நாட்டின் வளர்ச்சிக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து, அது போன்ற விளையாட்டுகளைத் தடைசெய்ய வேண்டும் அல்லது குறைந்தபட்சம் முறைப்படுத்த வேண்டும்.

இது போன்ற விளையாட்டுகளை உருவாக்கும் நிறுவனங்களும் சமூகப் பொறுப்புடன் இருப்பதும் அவசியமாகிறது. இணைய உலகில் பல்வேறு செயலிகளை உருவாக்குவதும் அவற்றை நடைமுறைப்படுத்துவதும் சவாலானதுதான். ஆனால், அப்படி உருவாக்கும் செயலிகளை யாருக்காக உருவாக்குகிறோம், யாரையெல்லாம் அவற்றின் பயனாளர்களாகக் கருதுகிறோம் என்பதை வரையறை செய்வதும் முக்கியமானது. அதே போல இந்தச் சூதாட்டங்கள் இணைய உலகில் வந்ததற்குப் பிறகு அவற்றின் தாக்கத்தைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்க வேண்டும். அவற்றால் ஏற்படும் பாதிப்புகளைத் திறந்த மனதுடன் அணுகி, அதை எப்படிக் குறைப்பது, அது உருவாக்கும் சீர்கேடுகளை எப்படிச் சரிசெய்வது என்பதையெல்லாம் பல்வேறு சமூக ஆர்வலர்களுடன் உரையாடி முறைப்படுத்த வேண்டும்.

இணைய உலகில் வெறும் பொருளாதார நோக்கங்களுடன் மட்டுமே இயங்க முடியாது. குழந்தைகள் முதல் அனைத்துத் தரப்பினரும் உலவும் இடம் என்பதால், சமூகப் பொறுப்புடனும் மனித நேயத்துடனும் இருக்க வேண்டியது அவசியம்.

செயலிகளை உருவாக்கும் அனைத்து மென்பொருள் நிறுவனங்களுக்கும் இருக்கும் முதன்மையான நோக்கம் ‘பயனாளர்களை எவ்வளவு நேரம் தங்களுடைய இணைப்பில் நீடித்திருக்க வைப்பது’ என்பது மட்டும்தான். அதற்காக ஏராளமான உளவியல் நிபுணர்களைக் கொண்டு, பல செயலிகளை வடிவமைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு மக்களைப் பற்றி, குழந்தைகளைப் பற்றி, இளைஞர்களைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை; அவர்களின் எதிர்காலம் தொடர்பான எந்தக் கரிசனங்களும் இல்லை. அவர்களைப் பொறுத்தவரை அனைவரும் அவர்களின் வாடிக்கையாளர்கள்தான்.

இந்த இணைய உலகில் நம்மை அனைவரும் கண்காணித்துக்கொண்டிருக்கிறார்கள். நமது விருப்பங்கள், தேவைகள், எண்ணங்கள், லட்சியங்கள், கனவுகள், பலங்கள், பலவீனங்கள் என அத்தனையும் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படுகின்றன. இந்த மிகப் பெரிய வலைப்பின்னலிலிருந்து நாம் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென்றால், நம்மை நாம் கண்காணிக்க வேண்டும், எந்த வித மறுப்பும் இல்லாமல், சமாதானமும் இல்லாமல் நமது அடிமை நிலையை அல்லது அதனை நோக்கிய நிலையை நாம் உணர்ந்தால் மட்டுமே நாம் நம்மைக் காப்பாற்றிக்கொள்ள முடியும். இல்லையென்றால், பெரும் சமுத்திரத்தில் தொலையும் சிறு காகிதம்போல நாமும் இந்த இணையத்தில் காணாமல் போய்விடுவோம்.

- சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர், எழுத்தாளர். தொடர்புக்கு: sivabalanela@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x