Published : 05 Jan 2022 08:04 AM
Last Updated : 05 Jan 2022 08:04 AM

அரசு சாரா நிறுவனங்களைக் கட்டுப்படுத்துகிறதா மத்திய அரசு?

அரசு சாரா நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து நிதியுதவிகளைப் பெறுவதற்கு அயல்நாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம், 2010-ன் கீழ் தங்களைப் பதிவுசெய்துகொள்ள வேண்டியது அவசியமாகும். இச்சட்டத்தின் கீழ் பதிவுசெய்துகொண்டுள்ள 5,933 அரசு சாரா நிறுவனங்கள் தங்களது கணக்கைப் புதுப்பித்துக்கொள்ள உள்துறை அமைச்சகம் மறுத்திருப்பது அல்லது அந்த நிறுவனங்களே தங்களது கணக்கைப் புதுப்பித்துக்கொள்ள முன்வராதது ஒரு சர்வதேச விவாதமாக மாறியுள்ளது.

புதுப்பிப்புக்கான காலக்கெடு டிசம்பர் 31 வரையில் நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், உள்துறை அமைச்சகம் 179 அரசு சாரா நிறுவனங்களுக்கு அனுமதி மறுக்க 5,789 நிறுவனங்கள் தங்களது கணக்கைப் புதுப்பித்துக்கொள்ள விண்ணப்பிக்கவே இல்லை. இச்சட்டத்தின் கீழ் பதிவுசெய்துகொண்ட 22,762 நிறுவனங்களில் டிசம்பர் 31 நிலவரப்படி 16,829 மட்டுமே தங்களது பதிவைப் புதுப்பித்துக்கொண்டுள்ளன.

வெளிநாடுகளிலிருந்து நிதியுதவிகளைப் பெறும் அரசு சாரா நிறுவனங்கள், அந்நிதியை உள்நாட்டில் இயங்கிவரும் அரசு சாரா நிறுவனங்களுக்குப் பகிர்ந்து அளிக்கக் கூடாது என்று 2020 செப்டம்பரில் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தமே புதுப்பிப்புகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணம். அனுமதி மறுக்கப்பட்ட நிறுவனங்கள் தவிர, மற்ற நிறுவனங்கள் பதிவைப் புதுப்பித்துக்கொள்ள மார்ச் வரையிலும் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ‘ஆக்ஸ்பாம் இந்தியா’, அன்னை தெரசா தொடங்கிய ‘மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி’ போன்ற பிரபல அரசு சாரா நிறுவனங்களும் இச்சட்டத்தின் கீழ் தங்களது பதிவைப் புதுப்பித்துக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை.

‘ஆக்ஸ்பாம் இந்தியா’ நிறுவனம் 16 மாநிலங்களில் தாங்கள் மேற்கொண்டுவரும் மனிதநேயப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்திய அரசமைப்புக்கு உட்பட்டு, நலிந்த நிலையிலுள்ள மக்களுக்குப் பெருந்தொற்றுக் காலத்தில் தாங்கள் மேற்கொண்டுவரும் உதவித்திட்டங்கள் அயல்நாட்டுப் பங்களிப்புகள் இல்லாமல் தொடர முடியாத நிலையையும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ‘மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி’ வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டிய நிலையில், இடைப்பட்ட காலத்தில் தவறுகள் ஏதேனும் நடந்துவிடாமல் இருக்க, தங்கள் வங்கிக்கணக்கைத் தற்காலிகமாக முடக்கிவைக்கும்படி தாமேதான் கேட்டுக்கொண்டதாக அந்தச் சேவை அமைப்பின் நிர்வாகி தெரிவித்தார்.

அதோடு, அமைச்சகத்தின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு குறிப்பிட்ட நிறுவனம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபரிசீலனை விண்ணப்பங்களின் மீது முடிவெடுக்கும்போது, சமூக அக்கறையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இயங்கும் அரசு சாரா நிறுவனங்களின் பணிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதையும் உள்துறை அமைச்சகம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வளரும் பொருளாதாரமான இந்தியாவில், விளிம்புநிலையில் வாழும் மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் போதுமானதாக இருப்பதில்லை; அவர்களுக்கு மேலும் கூடுதலான ஆதரவு தேவைப்படுகிறது. அப்பணியில் ஈடுபடும் அரசு சாரா நிறுவனங்களின் ஆதரவு அதில் குறிப்பிடத்தக்கது. அதே வேளையில், இந்தியா போன்ற வளரும் நாடுகளின் அமைதியைக் குலைக்கும் முயற்சிகளில் வெளிநாட்டுச் சக்திகள் வெற்றிபெற்றுவிடாமல் தடுக்கும் கடமையும் மத்திய அரசுக்கு இருக்கிறது.

எனவேதான், அந்த நிறுவனங்கள் தங்களது நிதியாதாரங்களுக்கு வெளிநாடுகளை எதிர்பார்த்திருக்கும்போது, அந்தப் பரிவர்த்தனைகள் சந்தேகங்களுக்கு இடமின்றி வெளிப்படைத்தன்மையோடு இருக்க வேண்டும் என்பதும் அவசியமாகிறது. அயல்நாட்டுப் பங்களிப்புகள் அனைத்தும் டெல்லியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மைக் கிளையின் வழியாகவே பெறப்பட வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் நிபந்தனை விதிப்பதில் என்ன தவறு இருக்க முடியும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x