Published : 05 Jan 2022 07:46 AM
Last Updated : 05 Jan 2022 07:46 AM

சிறுதானியங்களுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?

ப. வேணுதேவன், மு.வ.கருணா ஜெபா மேரி

நம் முன்னோர்களால் ஆதி காலத்திலிருந்தே உண்ணப்பட்டுவந்த ஆரோக்கியமான உணவில் முதல் இடத்தைப் பிடிப்பவை சிறுதானிய வகைகளான குதிரைவாலி, கேழ்வரகு, தினை, வரகு, சாமை, கம்பு, பனிவரகு, சோளம் போன்றவைதான். அதிக சத்துக்களுடன் நிறைய மருத்துவ குணங்களையும் உள்ளடக்கிய சிறுதானியங்கள் ஏழைகளின் உணவாக மட்டுமே பார்க்கப்பட்ட நிலை மாறி, சிறுதானிய உணவுப் பழக்கம் வீடுகளில் தொடங்கி உணவகங்கள் வரை பரவத் தொடங்கியுள்ளது.

எனவே, இந்தியாவின் பாரம்பரியமிக்க சிறுதானிய வகைகளை உலக மக்களிடையே பிரபலப்படுத்தும் விதமாக இந்தியாவுடன் வங்கதேசம், கென்யா, நேபாளம், நைஜீரியா, ரஷ்யா, செனகல் ஆகிய நாடுகள் இணைந்து எடுத்த முன்னெடுப்பை 70 நாடுகள் வழிமொழிய 193 ஐ.நா. சபையின் உறுப்பு நாடுகள் இந்தத் தீர்மானத்தை ஒருமனதாக ஆதரித்ததால், வருகிற 2023-ம் ஆண்டை சிறுதானியங்களுக்கான சர்வதேச ஆண்டாக ஐ.நா. அறிவித்திருக்கிறது.

மருந்தாகும் சிறுதானிய உணவுகள்

உடலுக்கு நல்லது என்று பல உணவு வகைகளைப் பயன்படுத்தும் நாம், சிறுதானிய உணவுகளை உண்பதைக் காலப்போக்கில் மறந்துவிட்டோம். ஆரோக்கியத்தைப் பேணுவதற்குத் தேவையான அனைத்துச் சத்துக்களும் சிறுதானியங்களில் உள்ளன. சிறுதானியங்களில் நார்ச் சத்து, கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்கள் அதிகமாகக் காணப்படுவதால் நாம் உண்ணும்போது நம் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது. சிறுதானியங்களில் சத்துக்களுடன் பல மருத்துவக் குணம் கொண்ட நுண்ணுயிர் எதிர்ப்பு வேதிப்பொருட்களும் ஆக்சிஜனேற்ற எதிர்ப்பொருட்களும் உள்ளன. சிறுதானியங்களில் உள்ள கிளைசிமிக் இன்டெக்ஸ் சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறந்தது.

இதிலுள்ள மாவுச்சத்து மெதுவாகச் செரிமானமாவதால் சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறந்த உணவு ஆகும். சிறுதானியங்களில் உள்ள லிக்னின் என்ற பொருள் மருத்துவக் குணம் உடையது. இது குடல் சுத்தமாவதற்கு மிகவும் உதவுகிறது. மாதவிடாய் பிரச்சினை, இதய நோய், ரத்த அழுத்தம் போன்றவற்றைச் சீராக்கும் வல்லமை சிறுதானிய உணவுக்கு உண்டு. குழந்தைகளுக்கு ஆஸ்துமா, தும்மல் போன்ற பிரச்சினைகள் வராமல் சிறுதானியங்கள் தடுக்கின்றன. சிறுதானியங்களில் உள்ள பாஸ்பரஸ், மக்னீசியம் போன்ற தாதுப்பொருட்கள் உடல் செல்களை உறுதிப்படுத்தி எலும்புகளுக்கு உறுதி அளிக்கின்றன.

சாகுபடிக்கேற்ற சிறப்பியல்புகள்

சிறுதானிய சாகுபடியால் ஏற்படும் நன்மைகள் பற்றியும், அவை நம்முடைய சூழலுக்கு எவ்வாறு ஏற்றதாக உள்ளன என்பது பற்றியும் பெரும் பகுதியினருக்குத் தெரிவதில்லை. சிறுதானியங்கள் எளிதாக அனைவரும் சாகுபடி செய்ய ஏதுவான பல சிறப்பியல்புகளைக் கொண்டவை. நெல் விளைவதற்கு 120-180 நாட்கள் மற்றும் அதிக அளவு தண்ணீர் (1,000 – 4,500 மி.மீ) தேவைப்படும். ஆனால், சிறுதானியங்களுக்கு குறைவான அளவு தண்ணீர் (250-400 மி.மீ) இருந்தாலே போதுமானது.

பெரும்பாலான சிறுதானியங்கள் பயிரிடப்பட்டு மிகக் குறுகிய காலத்தில் அதாவது 65-90 நாட்களுக்குள் அறுவடைக்கு வந்துவிடும். மிதமான தட்பவெப்ப நிலையிலும் நன்றாக வளரக்கூடியவை, மண்வளம் குறைந்த இடங்களிலும் சாகுபடி செய்யலாம், மானாவாரிச் சாகுபடிக்கு ஏற்றவை, வறட்சியைத் தாங்கி வளரக்கூடியவை, சிறுதானியங்கள் சாகுபடியில் பூச்சி, நோய்த் தாக்குதல் மிகக் குறைவு. மற்ற பயிர்களுக்குக் கொடுப்பதைப் போல அதிகமான ஊட்டத்தை சிறுதானியப் பயிர்களுக்குக் கொடுக்கத் தேவையில்லை.

குறைவான அளவுக்குக் கொடுத்தாலே போதுமானது. நெல் மாதிரியான பகலில் ‘பூக்கும்’ பயிர்களில் மகரந்தச் சேர்க்கை நடைபெறும்போது, அதிகமான வெப்பம் இருந்தால் சரியான முறையில் விதைகள் உற்பத்தியாகாது. ஆனால், சிறுதானியப் பயிர்கள் அனைத்தும் இரவு 12 மணி முதல் அதிகாலை 4.30 மணிக்குள் மகரந்தச் சேர்க்கையை முடித்துக்கொள்வதால், வெப்பநிலைப் பிரச்சினைகள் இல்லாமல் முழுமையான அளவில் மகரந்தச் சேர்க்கை நடைபெற்று அதிக மகசூல் கிடைக்கும். புவி வெப்பமாதலால் ஏற்படும் இழப்புகள் சிறுதானியத்தில் மிகவும் குறைவு. சிறுதானியச் சாகுபடியில் குறைந்த அளவு வேலையில், குறைந்த செலவில் அதிக வருமானம் கிடைக்கும். சிறு, குறு விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சியில் சிறுதானியங்கள் சாகுபடி பெரும் பங்கு வகிக்கிறது.

சிறுதானியப் பயிர்களில் ஒன்றான சாமையில் மல்லியச்சாமை, பெருஞ்சாமை, வெள்ளச்சாமை, கட்டவெட்டிச்சாமை, திருகுலாச்சாமை, சடஞ்சாமை, கருஞ்சாமை, செஞ்சாமை, சிட்டஞ்சாமை, பில்லுசாமை போன்ற நாட்டு ரகங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. தினையில் கெண்டித்தினை, செந்தினை, மரத்தினை, பாலாந்தினை, வெள்ளைதினை, பைந்தினை, சிறுதினை, நாட்டுத்தினை, மாப்புத்தினை போன்ற நாட்டு ரகங்களும். வரகுப் பயிரில் திரிவரகு, புறவரகு, பெருவரகு, உடும்புக்காலி வரகு, செங்காலி வரகு, சிட்டுக்கீச்சான் வரகு போன்ற நாட்டு ரகங்களும்... கேழ்வரகுப் பயிரில் சாட்டைக் கேழ்வரகு, காரக் கேழ்வரகு, கண்டாங்கிக் கேழ்வரகு, பெருங்கேழ்வரகு, பிச்சாகாடிக் கேழ்வரகு போன்ற ரகங்களும் பரவலாகக் காணப்படுகின்றன.

சோளத்தில் செஞ்சோளம், கருஞ்சோளம், உப்பஞ்சோளம், கருப்பு ரட்டு சோளம், சிகப்பு ரட்டு சோளம், கோவில்பட்டி மொட்ட வெள்ளைச் சோளம், அரியலூர் நெட்ட மஞ்ச சோளம் போன்ற நாட்டு ரகங்கள் காணப்படுகின்றன. சிறுதானியத்தில் நாட்டு ரகங்களுடன், மகசூல் அதிகம் தரக்கூடிய பல பல்கலைக்கழக ரகங்களும் வெளியிடப்பட்டுள்ளன. கேழ்வரகில் பையூர் 2, கோ 14, கோ 15 போன்ற ரகங்கள், தினையில் கோ 7 என்பவற்றில் அதிகக் கிளைப்பு வரும், கதிரும் நீளமாக இருக்கும். பனிவரகு என்பது அற்புதமான ஒரு சிறுதானியம், பனிக்காலத்தில் எந்தப் பாசனமும் இல்லாமலேயே பனிப்பொழிவினால் கிடைக்கும் நீரிலேயே வளர்ந்துவிடக் கூடியது.

சிறுதானியப் பயிர்களில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவும் பல புதிய ரகங்கள் வெளியிடவும் திருவண்ணாமலை மாவட்டம் அத்தியந்தலில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 2013 முதல் சிறுதானிய மகத்துவ மையத்தைத் தொடங்கி கேழ்வரகு, தினை, சாமை, பனிவரகு போன்ற சிறுதானியப் பயிர்களில் ATL 1 என்ற ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இன்னும் பல ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

கரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கியதிலிருந்து மக்களின் உணவு முறையில் ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்புத் திறன் நிறைந்த உணவு வகைகள் இடம்பெறத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், இவ்வளவு சிறப்பு மிக்க நம் நிலத்தின் பயிர்களான சிறுதானியச் சாகுபடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, கவனம் செலுத்துவதன் மூலம் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி, விவசாய நிலங்களின் சூழலியல் சமநிலையையும் பாதுகாத்து சிறுதானியங்களின் உற்பத்தியில் தன்னிறைவு அடைய முடியும்.

- ப.வேணுதேவன், உதவிப்பேராசிரியர் (விதை அறிவியல்)

வேளாண்மை அறிவியல் நிலையம், அருப்புக்கோட்டை. தொடர்புக்கு: venudevan.b@tnau.ac.in;

மு.வ.கருணா ஜெபா மேரி,

ஆராய்ச்சியாளர் (வேளாண் விரிவாக்கம்).

தொடர்புக்கு: jebamarymv@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x