Last Updated : 04 Jan, 2022 08:09 AM

 

Published : 04 Jan 2022 08:09 AM
Last Updated : 04 Jan 2022 08:09 AM

இந்தியத் தடுப்பூசிகள்: ஒரு மீள் பார்வை

கரோனா வைரஸ் ஒமைக்ரான் வேடமிட்டு மூன்றாம் ஆண்டில் தடம்பதிக்கிறது. உலகளவில் இதை எதிர்கொள்ளத் தடுப்பூசிதான் ஒரே வழி என்று ஆரம்பம் முதலே பேசப்பட்டது. கரோனாவுக்கு எதிராக பைசர்-பயோஎன்டெக் நிறுவனத்தின் எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசி முதன்முதலில் 2020 டிசம்பர் 8-ல் பிரிட்டனில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் தடுப்பூசியைத் தயாரித்து இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தது. இதுவரை 10 நிறுவனங்களின் தடுப்பூசிகளுக்கு உலக சுகாதார நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. கரோனா தொற்றாளருக்கு உயிரிழப்பைத் தவிர்ப்பதில் தடுப்பூசியின் பங்கு மகத்தானது.

இந்தியாவில் இலவச கரோனா தடுப்பூசித் திட்டம் 2021 ஜனவரி 16-ல் தொடங்கப்பட்டது. கோவிஷீல்டு, கோவேக்சின் முன்களப் பணியாளர்களுக்கு முதலில் செலுத்தப்பட்டது. மார்ச்-1 தொடங்கி 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதுக்கு மேல் இணைநோயுள்ளவர்களுக்கும் செலுத்தப்பட்டது. மே-1 தொடங்கி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அனுமதியளிக்கப்பட்டது. மே-14ல் ஸ்புட்னிக்-வி இணைந்துகொண்டது. இவற்றில் கோவிஷீல்டு 88.89%, கோவேக்சின் 10.79% பயன்படுத்தப்பட்டது. ஸ்புட்னிக்-வி 1%-க்கும் குறைவு.

நவம்பர் 3-ம் தேதி ‘வீடு தேடித் தடுப்பூசி'த் திட்டம் தொடங்கப்பட்டது. தடுப்பூசிக்கு எதிரான பரப்புரைகளால் பொதுச் சமூகத்துக்கு ஏற்பட்ட தயக்கத்தாலும், நாட்டில் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு உண்டானதாலும் இத்திட்டம் ஆரம்பத்தில் சுணக்கம் கண்டது. பின்னர், வேகமெடுத்தது. இதுவரை 145 கோடித் தவணைகள் இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ளன. முழுமையாகச் செலுத்திக்கொண்டவர்கள் 64.2% பேர். 3 மாநிலங்களில் 100% இரண்டு தவணைகளும் போடப்பட்டுள்ளன. இதன் மூலம், இந்திய மருத்துவத் துறையில், குழந்தைகளுக்கு மட்டுமே தடுப்பூசித் திட்டம் என்றிருந்த வரலாறு மாறிப்போனது. இதுவரை செய்யாத சாதனையாக ஒன்றிய அரசு இத்திட்டத்தை முன்வைத்தது. ஆனாலும், 2021 டிசம்பருக்குள் தகுதியானவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திட வேண்டும் என்ற இலக்கை எட்ட முடியவில்லை. எனவே, இந்தியா செல்ல வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது.

முன்னெச்சரிக்கைத் தடுப்பூசி

இத்திட்டத்தின் தொடக்கத்தில் மூன்று வகைத் தடுப்பூசிகளுக்குமே இரண்டு தவணைகள் போதும் என்றது அரசு. ஆனால், களநிலவரத்தில், இரண்டு தவணை செலுத்திக்கொண்டவர்களுக்குத் தடுப்பாற்றல் 6-9 மாதங்களே தாக்குப்பிடிப்பதாலும், டெல்டா மற்றும் ஒமைக்ரான் வேற்றுருவங்கள் இந்தத் தடுப்பூசிகளையும் தாண்டி மறுதொற்றை ஏற்படுத்துவதாலும், மூன்றாம் தவணையும் தேவை என்ற எதிர்பார்ப்பு உலகளவில் அதிகரித்தது. அதைத் தொடர்ந்து 60-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் மூன்றாம் தவணையைச் செலுத்தத் தொடங்கின. இஸ்ரேல் நான்காவது தவணையைச் செலுத்தத் தொடங்கிவிட்டது. இந்தியாவிலும் ‘முன்னெச்சரிக்கைத் தடுப்பூசி’ எனும் பெயரில் ஜனவரி 10-ம் தேதி தொடங்கி, மூன்றாவது தவணையைச் செலுத்த உள்ளனர். ஆரம்பத்தில் முன்களப் பணியாளர்களுக்கும் இணைநோயுள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

மேற்கத்திய நாடுகளில் மூன்றாம் தவணைக்கு, முதல் இரண்டு தவணைகள் செலுத்திக்கொண்ட தடுப்பூசிகளுக்குப் பதிலாக மாற்றுத் தடுப்பூசியைச் செலுத்திக்கொள்வது மிகுந்த பாதுகாப்பைத் தருவதாகக் கருதுகின்றனர். குறிப்பாக, எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசியை அவர்கள் பரிந்துரை செய்கின்றனர். இந்தியாவில் மூன்றாம் தவணை தொடர்பான ஆராய்ச்சி வேலூரில் கிறித்துவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆய்வின் முடிவு வெளிவந்ததும் இந்தியாவில் எதை முன்னெச்சரிக்கைத் தடுப்பூசியாகச் செலுத்திக்கொள்வது என்பது தெளிவாகிவிடும். அண்மையில், கோவோவேக்ஸ், கோர்பிவேக்ஸ் ஆகிய புரத வகைத் தடுப்பூசிகளும் அரசின் அனுமதி பெற்றுள்ளன. எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசி, ஸ்புட்னிக் லைட், ஜைக்கோவ்-டி, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய தடுப்பூசிகள் ஏற்கெனவே அனுமதி பெற்றிருந்தும் இன்னும் செயலுக்கு வரவில்லை.

தமிழ்நாட்டின் நிலவரம்

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தடுப்பூசித் திட்டம் வெற்றியடைய பல அடுக்கு நடவடிக்கைகளைத் தற்போதைய அரசு தொடர்ந்து முன்னெடுத்துவருகிறது. அவற்றில் மெகா தடுப்பூசி முகாம்கள் முக்கியமானவை. சென்ற வாரம் வரை 17 மெகா முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆனாலும், சிம்லா மற்றும் இமாசலப் பிரதேசத்தைப் போல 100% இலக்கை உடனடியாக அதனால் எட்ட முடியவில்லை. புள்ளிவிவரப்படி பார்த்தால், தடுப்பூசிக்குத் தகுதியான 5.78 கோடிப் பேரில் 86% பேர் முதல் தவணைத் தடுப்பூசியையும் 59% பேர் இரண்டாவது தவணையையும் செலுத்திக்கொண்டுள்ளனர். 80 லட்சம் பேர் முதல் தவணையையும், 96 லட்சம் பேர் இரண்டாம் தவணையையும் இன்னமும் செலுத்திக்கொள்ளவில்லை. இவர்களில் மூத்த குடிமக்கள்தான் அதிகம். அரசின் கணக்குப்படி, தடுப்பூசி செலுத்தப்பட வேண்டிய மூத்த குடிமக்களில் இதுவரை 61% பேர் ஒரு தவணை மட்டும் செலுத்திக்கொண்டுள்ளனர். 44% பேர் இரண்டு தவணைகளைச் செலுத்திக்கொண்டு முழுப் பாதுகாப்பு பெற்றுள்ளனர்.

தயக்கம் வேண்டாம்!

இந்தச் சூழலில், ஒன்றிய அரசு இணைநோயுள்ள மூத்த குடிமக்களுக்கு மூன்றாம் தவணையாக முன்னெச்சரிக்கைத் தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ள அனுமதித்துள்ளது. இங்கே கவனிக்கப்பட வேண்டிய விஷயம், ஒமைக்ரான் தீவிரமாகப் பரவும் என்பதால், அதன் தாக்குதலுக்கு உள்ளாகிற அதிக வாய்ப்பு மூத்த குடிமக்களுக்கே இருக்கிறது. இவர்கள்தான் முன்னெச்சரிக்கைத் தடுப்பூசிக்கு முன்நிற்க வேண்டும்.

இவர்களோ இணைநோய்களின் அச்சம் காரணமாகத் தடுப்பூசிக்குத் தயங்குகின்றனர். இரண்டு தவணைகளையும் செலுத்திக்கொண்டால்தான் நாட்பட்ட பாதுகாப்பு உறுதிப்படும் என்பதையும், தடுப்பூசியால்தான் கரோனா மரணங்களை உலகளவில் குறைக்க முடிந்தது என்பதையும் உணர்ந்து, இவர்கள் இரண்டு தவணைத் தடுப்பூசிகளைக் கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டும். இணைநோயுள்ளவர்களும் மூன்றாம் தவணையைச் செலுத்திக்கொள்ளலாம். வீட்டில் பெரியவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதைப் பிள்ளைகள் உறுதிப்படுத்த வேண்டும்.

இந்த வாரத்திலிருந்து 15 – 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்பட இருக்கிறது. இது, இந்தியக் குழந்தைகளிடம் பரிசோதிக்கப்பட்டு முடிவுகள் திருப்தியாக இருந்ததால், குழந்தைகள் பயன்பாட்டுக்கு அரசின் அனுமதி பெற்றுள்ளது. ஆகவே, பெற்றோர் எவ்விதத் தயக்கமுமின்றித் தங்கள் குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும். கோவிஷீல்டு தடுப்பூசியை வடிவமைத்த ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசித் துறைப் பெண் பேராசிரியை சாரா கில்பர்ட் கூறியுள்ளதை இங்கு நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும்.

“கரோனா இன்னும் ஓய்ந்துவிடவில்லை. இந்தப் பெருந்தொற்றின் மூலம் நமக்குக் கிடைத்துள்ள தடுப்பூசி அறிவைத் தொலைத்துவிடக் கூடாது. தடுப்பூசித் தவணைகள் விஷயத்திலும் கரோனா பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றுவதிலும் அலட்சியம் ஆகாது. மீறினால், அடுத்த பெருந்தொற்று இதைவிட மோசமானதாகக்கூட இருக்கும்”. டெல்டாவும் ஒமைக்ரானும் சேர்ந்து தமிழ்நாட்டில் மூன்றாம் அலையைத் தொடங்கிவிட்டது என்ற எச்சரிக்கை வந்திருக்கும் இன்றைய சூழலில் எல்லோருக்குமான அறிவுறுத்தல் இது.

- கு.கணேசன், பொதுநல மருத்துவர்,
தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x