Published : 04 Jan 2022 08:33 AM
Last Updated : 04 Jan 2022 08:33 AM

மறுபிறவி எடுத்த கோதவாடி குளம்!

சே. ஜனனி

இந்தியாவில் விவசாயம் மற்றும் பல பயன்பாடுகளுக்காக நீர் ஆதாரமாக முக்கியப் பங்காற்றிவருபவை குளங்களே. இந்நிலையில், கடந்த 30 ஆண்டுகளில் குளங்கள் சரியான பராமரிப்பு இல்லாததால், அவற்றின் கொள்ளளவு குறைந்ததுடன், அவற்றின் வரத்து வாய்க்கால்களும் வடிகால்களும் மறைந்துவிட்டன. தமிழ்நாட்டில் மொத்த நீர்ப்பாசனப் பரப்பளவில் குளத்தின் பங்களிப்பு 38%-லிருந்து பாதிக்கு மேல் குறைந்துவிட்டது.

நிலத்தடி நீரை மேம்படுத்துவதற்கும், சுற்றுச்சூழலில் நீர்ப் பாதுகாப்பை அதிகரிக்க ஆதாரமாக உள்ள சதுப்புநிலங்கள், இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 40% மேல் அழிந்து வறண்டுவரும் நிலையில், இந்நிலங்களை நம்பியே வாழ்ந்துவரும் நீர்ப்பறவைகளின் இழப்பு சுற்றுச்சூழலுக்கு முக்கிய அச்சுறுத்தலாகும். இந்நிலையில்தான், பல ஆண்டுகளாக மீட்க முடியாமல் அழிந்த குளத்தை, மீண்டும் நீர்நிலை ஆதாரமாக மாற்றிய இளைஞர்களின், தன்னார்வலர்களின் செயல்பாடு, பல கிராமங்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக மாறியுள்ளது.

கோவையின் கிணத்துக்கடவு வட்டத்தில் அமைந்துள்ள கோதவாடி கிராமம் இஸ்ரோவின் முன்னாள் அறிவியலர் மயில்சாமி அண்ணாதுரையின் சொந்த ஊர். இங்கே சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் ஒரு குளம் அமைந்துள்ளது. 1980-ல் நீர் நிரம்பி, விவசாயம் செழித்துக் காணப்பட்டு, சுற்றியிருக்கும் 40 கிராமங்களின் விவசாயிகளுக்கும் பயனளித்துக்கொண்டிருந்தது இக்குளம். கடந்த 35 ஆண்டுகளாகக் கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் வற்றிப்போய், வரத்து வாய்க்கால்களும் வடிகால்களும் அழிந்துபோய்விட்டன. சுமார் 11.7 மில்லியன் கனஅடி தண்ணீரைத் தேக்கி வைக்கும், அதிகக் கொள்ளளவு கொண்ட குளம் அதன் இயல்பு நிலையையே இழந்துவிட்டது. பல ஆண்டுகளாக மக்கள் மனு கொடுத்தும் அதைச் சீர்செய்வார் இல்லை. மழையை நம்பியும் பலனில்லை. இங்குள்ள விவசாயிகள் வேறு வேலையை நோக்கி நகர்ந்தும், புதர் மண்டிய குளத்தில் ஆடு மாடுகளை மேய்த்தும் வந்தனர்.

இந்நிலையில், தற்போது ‘கௌசிகா நதிநீர்க் கரங்கள்’ என்ற தன்னார்வலர்களின் அமைப்பு, முறையாகக் கள ஆய்வுகள் மேற்கொண்டு, பி.ஏ.பி நீரைக் கால்வாய்கள் வழியாகக் கொண்டுவர முயற்சிகளை முன்னெடுத்தது. இவர்களுக்கு ஆதரவாக இளைஞர்கள், பொதுமக்கள், சில நிறுவனங்கள், அரசியல் தலைவர்கள் சில தன்னார்வ அமைப்புகள் என அனைவரும் உதவிகளைச் செய்தனர். சீரமைக்கப்பட்டவுடன் இவர்களின் வேண்டுகோளை ஏற்றுக் குளத்துக்குத் தண்ணீரைக் கொண்டுவரப் பொதுப்பணித் துறையும், தமிழ்நாடு அரசும் நடவடிக்கை எடுத்தன. தண்ணீர், மெட்டுவாவி மற்றும் வடசித்தூர் அணையில் நிரம்பி, செட்டிக்காபாளையம் கிளை வழியாகச் சென்று கோதவாடிக் குளத்தை நிரப்பியது.

தன்னார்வலர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கூறும்போது, “எங்களின் முக்கியக் குறிக்கோள், வாரா வாரம் களப்பணிக்காக மக்களை ஒன்றுதிரட்டுவது என்று ஆரம்பித்து, நிதி கேட்பதுவரை சென்றுகொண்டிருந்தது. அதற்கு ஏற்றவாறு இயற்கையும் மழையை நன்றாகக் கொடுத்து, மக்களையும் ஒன்றுசேர வைத்தது. பல ஆண்டுகள் கோரிக்கைக்கு, இம்முறை வெற்றி கிடைத்தது. ஒரு நிறுவனம் உதவித்தொகையாக ரூ.84 லட்சம் எங்களை நம்பித் தர அனுமதி கொடுத்தது. முதல் கூட்டத்திலேயே சுமார் நூறு மக்கள் வந்தனர்.

நாளடைவில் களப்பணியாளர்கள் அதிகமாகி, இரவுபகல் பாராமல் உழைக்க ஆரம்பித்தனர். சீமைக் கருவேல மரங்களை வெட்டுவதில் ஆரம்பித்து, நீர் வழித்தடங்களைச் சரிசெய்வது, குளத்தில் மண் நிரப்புவது, ஒரு மடங்கான கரையை, மூன்று மடங்கு கொண்டுவருவது என உழைத்தனர். ஒன்றரை ஆண்டுகளில் இவ்வளவு துரிதமாக வேலையை முடித்துத் தண்ணீர் நிரம்பி வழிந்து சென்ற அக்கணம் நள்ளிரவு 2 மணி இருக்கும். பார்த்து அனைவரும் அழுதுவிட்டோம்” என்றார்.

மேலும், தன்னார்வலர்களுக்கு ஆதரவு அளித்துவந்த மயில்சாமி அண்ணாதுரை சென்னையிலிருந்து வந்து நேரில் குளத்தைப் பார்வையிட்டு ‘‘அனைவரின் கூட்டு முயற்சியால் பல ஆண்டுகளுக்குப் பிறகு எங்கள் கிராமத்தில் தண்ணீரைப் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. நிலவில் நீரைக் கண்டுபிடித்ததைவிட, எங்கள் கிராமத்துக் குளத்தில் நீரைப் பார்ப்பது பெருமகிழ்ச்சியாக உள்ளது’’ என்று நெகிழ்ந்துவிட்டார்.

இக்குளத்தை நேற்று நாசா அறிவியலர் நா. கணேசன் பார்வையிட்டு ‘குளத்தைச் சீரமைத்து ஆழத்தை அதிகப்படுத்தியதால் நீரின் கொள்ளளவு அதிகரித்துள்ளது’ என்று பாராட்டியதோடு, ‘நீரின் அளவைக் கணக்கீடு செய்ய நீருக்கடியில் ஒலி சமிக்ஞைகளை ஏற்படுத்தும் சோனோபோய் என்னும் நவீன கருவியைப் பயன்படுத்தி ஆய்வு மேற்கொண்டு துல்லியமாகக் கணக்கிட முயற்சி செய்யலாம்’ என்றார்.

இந்தக் குளத்தால், கிட்டத்தட்ட 30-லிருந்து 50 அடி வரை நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதனால் நான்கு ஆண்டுகளுக்கும் மேல் விவசாயம் செழிப்புடன் இருக்கும். குளத்தைச் சுற்றிப் பல மரக்கன்றுகளை நட்டுவருவதுடன், குளக்கரைக் கோயிலையும் சரிசெய்து, பூங்கா அமைத்து அழகான சுற்றுலாத் தலமாக மாற்றவும் முன்னெடுப்புகள் நடந்துவருகின்றன. குளத்துக்குப் பல ஆண்டுகளாக வராத பறவைகள், தினமும் வட்டமிட்டு மகிழ்ச்சியைக் கொண்டாடிவரும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது. கோதவாடிக் குளத்துக்கான புத்துயிர்ப்பு மற்ற ஊர்களில் வறண்டு கிடக்கும் குளங்களுக்கு அந்தந்தப் பகுதியினரும் அரசும் தனியார் நிறுவனங்களும் இணைந்து உயிர்கொடுப்பதற்கு உத்வேகத்தைக் கொடுக்கட்டும்.

- சே.ஜனனி, வேளாண் உயிரிதகவலியல் ஆராய்ச்சியாளர். தொடர்புக்கு: sreejanani31@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x