Published : 05 Mar 2016 09:38 AM
Last Updated : 05 Mar 2016 09:38 AM

தமிழகத்தில் பழங்குடியினர் நலன்?

தமிழகத்தின் வளர்ச்சியில் பழங்குடிகளைப் பங்கேற்க வைப்பதும் முக்கியமான சமூக நீதிதான்



தமிழ்நாட்டில் 36 வகை பழங்குடிகள் உள்ளனர். அவர்களில் மலையாளியர், தோடர், கோத்தர், காணிக்காரர் போன்றவர்கள் காலங்காலமாக நிலவுடைமை யாளராக இருந்துவருகின்றனர். திருவண்ணாமலை,வேலூர், தருமபுரி, கன்னியாகுமரி வரை உள்ள பல மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான நிலங்கள் பரம்பரை பரம்பரையாகப் பழங்குடியினரின் பயன்பாட்டில் இருந்துவருகின்றன. எனினும் அவற்றுக்கு நில உரிமை மட்டும் வழங்கப்படவில்லை.

சொந்த மண்ணின் அந்நியர்

இவை தவிர, களக்காடு, பொதிகை, கோடை, வால்பாறை, ஆசனூர், கடம்பூர், சிறுவாணி, ஊட்டி போன்ற பல்வேறு ஒதுக்கக் காடுகளில் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் 100 ஆண்டுகளுக்கு முன்னரே பழங்குடியினர் வசித்து வந்த பகுதிகளில், அவர்களுக்கான குடியிருப்புகள் ‘செட்டில்மென்ட்கள்’ என்ற பெயரில் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்டன. குடும்பத்துக்கு 5 ஏக்கர் வீதம்; 50,000 ஏக்கர் வரை இதற்காக ஒதுக்கப்பட்டது. அதில்தான் அவர்கள் குடியிருந்தார்கள். வேளாண்மை செய்தார்கள். இந்த நிலங்களை இவர்கள் அனுபவித்துக்கொள்ள மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். சுதந்திர இந்தியாவிலும் அவர்களுக்கான நில உரிமை வழங்கப்படவில்லை.

இதனால், நிலம் இருந்தும் அதில் உழைப்பதற்கான அரசுத் திட்டங்களைப் பெறவும் பயிர்க் கடன்களைப் பெறவும் அவர்களால் முடியவில்லை. தமது மண்ணிலேயே அந்நியர்களாகப் பழங்குடிகள் வைக்கப்பட்டுள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தின் ஆணை

தமிழ்நாட்டில் ஏறக்குறைய 8 லட்சம் பழங்குடி மக்கள் உள்ளனர். அவர்களில் குறைந்தது 4 லட்சம் பேருக்கு (80,000 குடும்பங்கள்) 10 ஆண்டுகளுக்கு முன்னரே தலா 3 ஏக்கர் நிலமாவது கிடைத்திருக்க வேண்டும். பழங்குடிகள் வன உரிமைச் சட்டம் 2006 - கடந்த 10 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் மட்டும் நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கிறது. பழங்குடியினரை வசதி படைத்தவர்களாக மாற்றியிருக்கக் கூடிய வாய்ப்பு 10 ஆண்டுகள் தள்ளிப் போய்விட்டது. இந்தச் சட்டத்தை எதிர்த்துப் போடப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்துவிட்டது. இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு தமிழக அரசுக்கு ஆணையும் பிறப்பித்துள்ளது.

2011 வரை ஏறத்தாழ 4,200 நில உரிமை விண்ணப்பங்கள் ஆய்விடப்பட்டு, அவை ஏற்கப் பட்டு, நில உரிமை வழங்கும் நிலையில் உள்ளன. மேலும், 20,000 விண்ணப்பங்கள் கோட்ட மற்றும் மாவட்ட உரிமைக் குழுக்களால் ஆய்வு செய்து முடியும் நிலையில் உள்ளன. இவற்றை விரைந்து முடிக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர் செயல்பட வேண்டும். பழங்குடியினர் வன உரிமைச் சட்டத்தின் கீழ், நில உரிமை ஆணைகளை உடனடியாக வழங்க வேண்டும்.

தயாராக உள்ள பட்டாக்கள்

1880 வனச் சட்டத்துக்குப் பிறகு, காட்டில் உருவாக்கப்பட்ட அனைத்து ‘செட்டில்மெண்ட்கள்’ பற்றிய முழு விவரத்தையும் வனத் துறை வெளியிட்டு இணையதளத்திலும் ஏற்ற வேண்டும். ஜனவரி 2012 நிலவரப்படி தமிழகத்தின் 16 மாவட்டங்களில் வாழும் பழங்குடி மக்கள் நில உரிமை கோரி, அரசிடம் வழங்கிய மனுக்கள் 21,781. அவற்றில் நிராகரிக்கப்பட்டவை 630. விசாரணையில் உள்ளவை 17,435. பட்டா வழங்கத் தயார் நிலையில் இருப்பவற்றுள் தனிநபர் பட்டாக்கள் 2,448. கூட்டுப் பட்டாக்கள் 1,275. பழங்குடி மக்களுக்கு வழங்குவதற்காக மொத்தம் 3,723 பட்டாக்கள் தயாராக உள்ளன.

வனக் குழுக்களின் ஆதிக்கம்

பழங்குடியினர் வன உரிமைச் சட்டம் - 2006 பழங்குடியினருக்கே அனைத்து சிறு வனப் பொருட்களையும் உடைமை ஆக்குகிறது. சிறு வனப் பொருட்களை வனத்தினுள் சென்று எடுக்கவும், அகற்றவும், வாணிபம் செய்யவும், மதிப்புக் கூட்டுப் பண்டமாக மாற்றவும் பூரண உரிமையையும் இச்சட்டம் பழங்குடியினருக்கு வழங்குகிறது. ஆனால் ‘வனக் குழு’ என்ற பெயரில் பழங்குடியினரைக் கொண்ட குழுக்களை வனச்சரகர் தலைமையில் இன்னும் வைத்துக்கொண்டு, வனத் துறை சிறு வனப் பொருட்கள்மீது ஆதிக்கமும் கட்டுப்பாடும் செலுத்திவருகிறது.

வனத் துறையால் உருவாக்கப்பட்ட இந்த வனக் குழுக்கள், 2006 சட்டத்தின் கீழ் ஒழிக்கப்பட்டன. தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுத்து ‘வனக் குழுக்க’ளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். 2006 சட்டத்தின் கீழான ‘பழங்குடி கிராம சபைகளையும்’, ‘வன உரிமைக் குழுக்க’ளையும் நிலைப்படுத்த வேண்டும். சிறு வனப் பொருட்கள் பழங்குடியினருக்கே சொந்தமாவதை உறுதிப்படுத்த வேண்டும். இந்த சிறு வனப் பொருட்களில் மூங்கிலும் அடங்கும் என்பது 2006 சட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. வன உரிமைக் குழுக்களில் எந்தவொரு அரசு அதிகாரிக்கும் இடமில்லை; பழங்குடியினர் மட்டுமே இந்த வன உரிமைக் குழுக்களில் உறுப்பினராக இருக்கலாம்.

தமிழகத்துக்கே காய்கறி

தமிழ்நாட்டிலுள்ள சிறு வனப் பொருட்களின் சந்தை மதிப்பு ஆண்டுக்கு சுமார் ரூ.1,000 கோடியைத் தாண்டும் எனத் தெரிகிறது. முறையாகக் கையாண்டால், சிறு வனப் பொருட்கள் மட்டுமே ஆண்டுக்கு பழங்குடிக் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் ரூ. 1 லட்சம் வரை வருமானத்தை ஈட்டித்தரும். இது மட்டுமல்லாமல், இயற்கைப் பயிர் முறையிலான தோட்டப் பயிர் வளர்ப்பை பழங்குடியினர் மேற்கொள்வதற்கு, தமிழக அரசு உதவ வேண்டும். பழங்குடியினர் நிலங்களில் தோட்டப் பயிர்கள் வளர்க்கப்படுமானால், தமிழ்நாட்டுக்குத் தேவையான காய்கறி மற்றும் மூலிகை மருந்து தேவைகளுக்கான இறக்குமதியை முழுவதும் நிறுத்திவிடலாம். இயற்கை உணவுவே மருந்தாகவும் அமையும்.

பழங்குடியினருக்கு வழங்க வேண்டிய நிலங்களின் இன்றைய சந்தை மதிப்பு ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டும். பயிர்க் கடன் பெறக்கூடிய சொத்து மதிப்புள்ளவராகப் பழங்குடியினர் மாறுவார்கள். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் பழங்குடிகளைப் பங்கேற்க வைப்பதும் முக்கியமான சமூக நீதிதான். இடையில், அதைத் தவறவிட்ட தமிழகம் வேகமாகச் செயல்பட்டால்தான் பழங்குடி நலனில் அக்கறையுள்ள மாநிலமாக உயர முடியும்.

கட்டுரையாளர் தமிழக அரசின் முன்னாள் கூடுதல் தலைமைச் செயலர், தொடர்புக்கு: rcg1952@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x