Published : 02 Jan 2022 06:00 AM
Last Updated : 02 Jan 2022 06:00 AM

அம்பை: தனித்த பெண்ணியக் குரல்

அம்பை எழுதிய ‘சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை’ சிறுகதைத் தொகுப்புக்காக 2021-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழில் இந்த விருதைப் பெறும் நான்காவது பெண் இவர். பொதுவாக அங்கீகாரம் குறித்தோ பேட்டிகள், விருதுகள் குறித்தோ கவலைப்படாதவர் அம்பை.

அம்பைக்கு முன்னும் பின்னும் பெண்கள் பலர் எழுதாமல் இல்லை. ஆனால், அம்பை எல்லாவற்றிலுமிருந்து விலகித் தனித்துவப் பாதையைத் தேர்ந்துகொண்டவர். பெண்களைப் பற்றியும் குடும்பத்துக்குள் பெண்களின் இருப்புப் பற்றியும் சிலர் எழுதிக் கடந்த நிலையில் அம்பையும் அதைத்தான் கைகொண்டார். ஆனால், பார்வை வேறு; கோணம் வேறு. சமூகக் கருத்துகள் நிறைந்த எழுத்து என்கிற முத்திரை எதையும் அவர் எழுத்துகள் அடிக்கோடிட்டுக் காட்டவோ கோரவோ இல்லை. ஆனால், கதைக்குள்ளும் அதைக் கட்டமைக்கும் சொற்களுக்குள்ளும் அந்த வித்தையை நேர்த்தியாகச் செயல்படுத்தினார்.

அறுபதுகளின் பின்பகுதியில் பெண்களுக்குப் பளீரென்ற விடியல் வாய்த்துவிடவில்லை. சமையல் குறிப்புகளை எழுதுவதும் குடும்பச் சித்திரங்களை வாசிப்பதும் பெரும் சாதனையாகக் கருதப்பட வேண்டிய சூழலில்தான் சி.எஸ். லஷ்மி, அம்பையாக மாறிய வெளிப்பாடு நிகழ்ந்தது. குடும்பச் சித்திரங்களுக்குள் புதைந்திருந்த பிற்போக்குத்தனத்தைச் சுட்டிக்காட்டியவர்களும் அதில் மீறலை நிகழ்த்தியவர்களும் உண்டுதான் என்கிறபோதும் நவீன இலக்கியத்தில் அம்பை நிகழ்த்திய உடைப்பு முக்கியமானது.

சிறகுகளுக்கு என்ன வேலை?

பெண்ணின் அறிவை, தெளிவை, அவை புறக்கணிக்கப்படும் பேதமையை எளிமையாகவும் எள்ளலோடும் சொன்னார் அம்பை. தன்னைப் பற்றிப் பெண் வரைகிற சித்திரம் அனைத்தும் பெண்ணியப் படைப்பு ஆகிவிடாது. நுண்ணுணர்வும் அரசியல் தெளிவும் கைகூடிவருபவையே காலத்தைத் தாண்டி நிற்கும். அந்த வகையில் பீறிட்டுப் பாய்ந்த பெண்ணிய எழுத்துக்கு அம்பையே முன்னோடி.

கணவன், மனைவி உறவுக்குள் மனைவி என்பவள் கணவன் கையாளக் கிடைத்த பொருளாகவே இருப்பதை 1972-ல் வெளியான இவரது ‘சிறகுகள் முறியும்...’ சிறுகதை உணர்த்தியது. தோற்றப் பொருத்தம் இல்லை என்கிற அம்மாவின் கருத்தைப் புறந்தள்ளி உடல் பருத்த பாஸ்கரனை மணந்துகொண்டாள் சாயா. தமிழ்த் திரைப்படக் கதாநாயகனாக அவனை வரித்துக்கொண்டு கனவுகள் கண்டவளை, திருமணம் வேறொரு உலகத்துக்கு அழைத்துச் சென்றது. அவள் கனவில் கண்ட பாஸ்கரன் அல்ல அவன். இப்போது தமிழ்ப் படக் கதாநாயகன் செத்துத் தொலையட்டும் பாவி, வாழ்ந்து என்ன ஆகப்போகிறது என்கிற மனநிலைக்கு வந்துவிட்டாள். ‘ஆண்கள் உடம்பெல்லாம் வயிறாக, மார்புச் சதை தொங்க ஊதக் கூடாது, மென்மையே இல்லாத ஆண்களுக்குக் குழந்தையே பிறக்கக் கூடாது என்று கட்டாய வாஸக்டமி செய்துவிட வேண்டும்’ என்று மனத்துக்குள் ஆயிரமாயிரம் சட்டங்களை இயற்றுகிறாள். கட்டுகள் ஏதுமின்றி நிச்சலமான அமைதியில் சிறகுகள் அசைய வேண்டும் என நினைக்கிறாள் சாயா.

இந்தியாவின் பெரும்பான்மையான இந்துப் பெண்களின் நிலை என்னவோ அதுதான் சாயாவின் நிலையும். அம்பை இந்தக் கதையை எழுதி நாற்பது ஆண்டுகள் ஆன பின்னும் பெரிதாக எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடவில்லை. வாழ்க்கை நவீனப்பட்டிருக்கிறதே தவிர குடும்ப அமைப்புக்குள் பெண்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் புதுப்புது வடிவம் எடுத்திருக்கின்றன.

கற்களும் முட்களும் சூழ்ந்த பாதை

தமிழகம் தாண்டி வெவ்வேறு நிலத்தின் வாழ்க்கையை, மனிதர்களை, அங்கே நிலவும் அரசியலைக் கதைகளின் வழியாகப் பதிவுசெய்தவர் அம்பை. மனிதர்களும் சூழலும் மாறுகின்றனவே ஒழிய பெண்ணின் மீது திணிக்கப்படும் நிர்ப்பந்தங்களிலும் கற்பிதங்களிலும் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை என்பதையும் அவரது கதைகளில் நாம் உணரலாம். ஆய்வுப் படிப்புக்குத் தயாராகிற பெண்கள் பேராசிரியர்களால் நடத்தப்படுகிற விதத்துக்கு ‘த்ரிசங்கு’ அஞ்சனாவும் சாட்சி. இப்போது வாசிக்கும்போது ‘#மீடூ’ நினைவுக்கு வருகிறது.

அப்பாவின் செயலால் ஏற்பட்ட அவமானம் உடலெங்கும் புழுக்களாக நெளிய, கல்வியின் மூலம் அனைத்தையும் கடக்க நினைக்கிறாள் அஞ்சனா. அச்சமும் தாழ்வுமனப்பான்மையும் வதைத்தெடுக்க, பக்கத்தில் இருக்கும் மாணவனிடம் சிகரெட்டைப் பற்றவைத்துப் புகையை ஊதுகிற பெண்களின் தன்னம்பிக்கையில் அதிர்ந்துபோகிற அஞ்சனா, இன்றைக்கும் உயர் கல்வி என்பது கனவாக நிலைத்துவிடுகிற பெண்களை நினைவூட்டுகிறாள். ஹிதாவும் ஆராய்ச்சி மாணவிதான். கௌதமனோடு சேர்ந்து வாழ்கிறாள். ஹிதாவுக்குப் புரட்சி மேல், அதனுள் ஒளிந்திருக்கும் போலித்தன்மையின் மேல் விமர்சனம் உண்டு (சக்கர நாற்காலி). பெண்ணின் அறிவை அவ்வளவு எளிதாக இந்தச் சமூகம் அறிவென்று ஏற்றுக்கொள்ளாது. அசட்டுக் களை என்றே பட்டம்சூட்டும் என்றாலும் ஹிதாவைப் போன்ற விதிவிலக்குகள் ஜெயிக்கிறார்கள் என்று முடிக்கிறார் அம்பை. ஆனால், அந்த நிலையைக் கடந்துவர அவர்கள் எவ்வளவு கற்களை அகற்றி, முட்களை விலக்க வேண்டியுள்ளது என்பதையும் சேர்த்துதான் அம்பை எழுதுகிறார்.

சமையலறை என்னும் சிறை

நாற்பது வருடங்களாகத் தோசை சுட்டுக்கொண்டிருக்கும் அண்ணிக்கு (வெளிப்பாடு), தான் அதுவரை சுட்ட தோசைகளின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தைத் தாண்டும் என்று தெரியாது. அது தெரிந்திருந்தால் எந்நேரமும் இட்லி, வடை, அப்பம், பொரியல், குழம்பு என்று அடுக்களைக்குள்தான் தன் ராஜ்ஜியம் என்று கோலோச்சி மகிழ்ந்திருக்க மாட்டாள். “பொம்பளைக பத்தி எளுத என்ன இருக்கு?” என்று வெள்ளந்தியாகக் கேட்டிருக்க மாட்டாள். “புள்ள பெறுதோம். ஆக்கிப் போடுதோம். இதுக்கு நடுவுல ரோசிச்சோம் போங்க” என்று சொல்லிவிட்டு மௌனமாகச் சாப்பிட்டிருக்க மாட்டாள். சமையலறை தாண்டி வெளியுலகம் அறியாத இருபது வயது சந்திராவுக்குத் திருமணம் ஆனதும், ‘தெருல நடக்குணும், தெனம் ஓட்டல்ல பலகாரம் சாப்பிடணும், கடைக்குப் போய் நானே பொடவை எடுக்கணும், சினிமா போகணும், நெறைய ஊர் பாக்கணும்’ என்று சின்ன சின்ன ஆசைகள். ஆனால், கைநீட்டாத கணவன் வாய்க்க வேண்டுமே என்கிற பதற்றத்தை நமக்குக் கடத்திவிடுகிறார் அம்பை.

டெல்லியிலிருந்து திருநெல்வேலிக்குத் தனியாக பயணம் செய்கிறவளுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு, அடக்குமுறைதானே. ‘என் கரிசனத்தைப் பார். எவ்வளவு அக்கறை பார் எனக்கு’ என்கிற கவனிப்பு இம்சைதானே. பெண்ணால் முடியாது என்று திரும்ப திரும்ப நிரூபிக்கிற எத்தனம்தானே. பெரும் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் பெண்கள் அமர்ந்துவிட்டார்கள் என்பதற்காகப் பெண்ணுக்கு விடிந்துவிட்டது என்று பொருள் இல்லை. சமையலறை இல்லாத வீடு ஏது? அதைத்தான் அம்பை தன் கதைகளின் மூலமாக நுட்பமாகப் பதிவுசெய்கிறார்.

உடல் மீது ஏற்றப்படும் சுமை

ஆணுக்கு உடல் என்பது உடல் மட்டுமே. பெண்ணுக்கு அது பெரும்சுமை என நினைக்க வைக்கிறது இந்தச் சமூகம். அம்பையின் ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ எக்காலத்துக்குமான கதை. எப்போதும் தண்ணீர் ஊறியிருக்கும் சமையலறையிலிருந்து சற்றே ஆசுவாசம் பெறும் எண்ணத்தில் மலையைப் பார்க்க நினைத்தால் துணி மறைக்கிறது என்கிறாள் மருமகள். உடனே ஒன்றுக்கு இரண்டு கொடிகளில் துணி உலர்த்தப்படுகிறது. குடும்பத்துடன் ஏரிக்குப் போவதற்காக மருமகள்கள் அதிகாலையில் எழுந்து சமைத்து, வியர்வை மழையில் ரவிக்கை ஒட்டிக்கொண்டு எண்ணெய்ப் புகை கண்ணில் படிய, முழுத் தூக்கம் இல்லாமல் கனம் ஏறிய இமைகளோடு இருக்க, மாமனாரோ, “ஏரிக்குப் போகலாம் என்றதுமே உற்சாகம் பொத்துக்கொண்டுவிடுமே உங்களுக்கு?” என்கிறார். ஆண், பெண்ணைப் புரிந்துகொள்வது இந்த லட்சணத்தில்தான். ஆண்கள் ஏரியை ரசிக்க, பெண்களோ பக்கோடாவும் பஜ்ஜியும் பொரித்துத் தள்ளினார்கள். எவ்வளவு பெரும்பேறு என்று அம்பை எழுதுகையில் அவமானமும் குற்றவுணர்வும் ஏற்படாத மனங்களில் ஆணாதிக்கம் குடிகொண்டிருக்கிறது எனப் பொருள்.

வரலாற்று ஆவணம்

வன்முறை என்பது அடித்து நொறுக்குவது மட்டுமே என்று ஒற்றைத் தன்மையுடன் புரிந்துகொண்டிருந்த மனங்களில், நுட்பமான வன்முறையின் வடிவங்களைத் தெளிவுபடுத்தினார் அம்பை. காலந்தோறும் பெண்கள் அடைந்திருக்கும் மாற்றங்களைச் சொல்லிக்கொண்டு அவர்கள் மீதான வன்முறைகளையும் அடக்குமுறைகளையும் பதிவுசெய்தார். வன்முறையை ஆண்தான் நிகழ்த்த வேண்டும் என்பதில்லை; பெண்ணின் வழியாகச் செயல்படுத்தப்படும் வன்முறையையும் அவர் சுட்டிக்காட்டினார். குடும்ப அமைப்புக்குள் குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறையைக் கவனப்படுத்தும்விதத்தில் அம்பை எழுதிய ‘மைமல் பொழுது’ (அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு) குடும்ப கௌரவத்தின் பெயரால் நாம் இழைக்கிற அநீதியைக் கவனப்படுத்தியது. மூப்பின் காரணமாக ஒருவரைப் புறக்கணிப்பதும் கைவிடுவதும் வன்முறைதான் என்பதையும் சுட்டிக்காட்ட அம்பை தவறவில்லை. பெண்ணின் உடல் மீது ஏற்றிவைக்கப்பட்டிருக்கும் சுமைகளைப் புனைவாக மட்டுமல்லாமல், கட்டுரைகளாகவும் பதிவுசெய்திருக்கிறார் (உடலெனும் வெளி).

பெண்களின் வரலாற்றைப் பதிவுசெய்யும் நோக்கில் ‘ஸ்பாரோ’ (SPARROW-Sound and Pictures Archives for Research on Women) என்கிற பெண்கள் ஆவணக் காப்பகத்தை நிறுவி, அதன் இயக்குநராகவும் செயல்பட்டு வருகிறார் அம்பை. குரல் நெரிக்கப்பட்டு, ஒதுக்கிவைக்கப்பட்ட பெண்களின் அனுபவங்களுக்கு குரலும் மொழியும் அளித்து அவர்களின் வரலாற்றை ஆவணப்படுத்துவது இந்த அமைப்பின் முக்கியப் பணி. இந்த அமைப்பின் சார்பில் படைப்பாளிகளுக்கு விருதும் வழங்கப்படுகிறது.

அம்பையை வாசித்தல் என்பதும் பெண்ணை இன்னும் அணுக்கமாக, நெருக்கமாக உணர்ந்து பாலினச் சமத்துவத்தை நோக்கி நம்மை நாமே அழைத்துச் செல்வதற்கான செயல்பாடு. அவை கதைகள் மட்டுமே அல்ல; காலத்தைத் தாங்கி நிற்கும் வரலாற்றுப் பதிவுகளும்தாம்!

-பிருந்தா சீனிவாசன்,
தொடர்புக்கு: brindha.s@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x