Last Updated : 16 Mar, 2016 08:54 AM

 

Published : 16 Mar 2016 08:54 AM
Last Updated : 16 Mar 2016 08:54 AM

அமெரிக்க இந்திய நீதிபதி: உண்மை என்ன?

அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி நியமனம் பற்றிய செய்தியில் தெளிவில்லை

கடந்த சில ஆண்டுகளில் கிடுகிடுவென வளர்ந்து நிற்கும் சமூக ஊடகம், இன்றைக்குப் பிரதானமான விஷயமாக நம் வாழ்வில் இடம் பெற்றுவிட்டது. நாணயத்தைப் போலவே சமூக ஊடகத்துக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. உலகளாவிய செய்திகள் பரவலாக, படு விரைவாக சென்று சேர்வது நாணயத்தின் ஒருபுறம் எனில், தவறான புரிந்து கொள்ளல்களும் அது சார்ந்த நேர விரய விவாதங்களும் மற்றொரு புறம் எனலாம். சமீபத்திய உதாரணம் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகளில் ஒருவரான அண்டோனின் ஸ்காலியாவின் அகால மரணத்தைத் தொடர்ந்து, இந்திய அமெரிக்கரான  னிவாசன் அந்த இடத்தில் நியமிக்கப்பட்டுவிட்டதாக சமூக ஊடங்களில் பகிர்ந்துகொள்ளப்பட்ட பரவலான புரிதல்.

அமெரிக்க அரசியலமைப்பு

அதற்குள் செல்லும் முன்னால், இது சார்ந்த அமெரிக்க அரசியலமைப்பை விரைவாக ஒரு மேற்பார்வை பார்த்து விடலாம். காங்கிரஸ், அதிபர், உச்ச நீதிமன்றம் என மூன்று பிரிவுகள். ஒன்றை மற்றது கண்காணிக்க இயலும். இதுதான் அடிப்படை அமைப்பு. காங்கிரஸ் நமது நாடாளுமன்றத்துக்கு நிகரானது. இதில் ஹவுஸ், செனட் என இரண்டு உட்பிரிவுகள்.

ஹவுஸ் பிரதிநிதிகள் தத்தம் தொகுதிகளில் இருந்து 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். 50 மாநிலங்களில் மொத்தம் 435 தொகுதிகள். ஒரு மாநிலத்தில் எத்தனை தொகுதிகள் இருக்கும் என்பது அந்த மாநிலத்தின் மக்கள் தொகையைச் சார்ந்தது. இதனால், கலிபோர்னியா போன்ற மக்கள்தொகை அதிகம் கொண்ட மாநிலங்களில் அதிகத் தொகுதிகளும், வெர்மாண்ட் போன்ற குட்டி மாநிலங்களில் சில தொகுதிகளும் இருக்கின்றன. இப்படி இருப்பதால் மாநிலங்களுக்குச் சமமான அளவில் பிரநிதித்துவம் கிடைப்பதில்லை.

இதை நிவர்த்தி செய்கிறது காங்கிரஸின் மறுபிரிவான செனட். அளவு, மக்கள்தொகை என்பதையெல்லாம் பொருட்படுத்தாமல், மாநிலத்திற்கு இரண்டு பிரதிநிதிகள் என மொத்தம் 100 செனட்டர்கள். செனட்டரின் பதவி காலம் 6 ஆண்டுகள். மீண்டும், மீண்டும் போட்டியிட்டு எத்தனை முறை வேண்டுமானாலும் ஹவுஸ் பிரதிநிதியும், செனட்டரும் பதவியில் இருந்து கொள்ளலாம்.

சட்டங்கள் உருவாக்கப்படுவது இப்படி கோவையாக நடக்கும்: ஹவுஸ் பிரதிநிதிகள் அல்லது செனட்டர்கள் ஒருவரோ அல்லது பலரோ இணைந்து மசோதா கொண்டு வர, அது வாக்கெடுப்பில் ஹவுஸ், செனட் இரண்டிலும் வெற்றி பெற்றால், அது அதிபரின் கையெழுத்துக்கு அனுப்பப்படும். அவர் கையொப்பமிட்டதும் உருவாகிய சட்டத்தை வலியுறுத்த வேண்டியது உச்ச நீதிமன்றத்தின் கடமை.

அதிபர் தேர்ந் தெடுக்கப்படுவது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை. அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் இதற்காக கொடுத்திருக்கும் வழிமுறைகளின் ஒழுங்கு நூறாண்டுகளுக்கும் மேலாக தொடர்கிறது.

அதிபரின் அதிகார எல்லை

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நவம்பரில் வரும் முதல் திங்கள் கிழமை தாண்டிய செவ்வாய் அன்று தேர்தல். வெற்றி பெற்ற புதிய அதிபர் ஜனவரி 20 மதியம் 12 மணிக்கு பொறுப்பேற்றுக்கொள்வார். ஒருவேளை 20-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை எனில் அந்த ஆண்டுகளில் மட்டும் 21-ம் தேதி பொறுப்பேற்பு நடக்கும்.

அமெரிக்க அதிபர் என்றால் வானாளாவிய அதிகாரம் இருப்பதான பிம்பம் உண்டு. ஒருவிதத்தில் அது உண்மையும் கூட. காங்கிரஸ் நிறைவேற்றி தன்னிடம் கொண்டு வரும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுக்கும் உரிமை அதிபருக்கு உண்டு. முப்படைகளின் தலைமைப் பொறுப்பு இருந்தாலும், தான் நினைத்தபடி போர் தொடங்கும் அதிகாரம் அதிபருக்குக் கிடையாது. காங்கிரஸிடம் முதலில் அனுமதி வாங்கியாக வேண்டும். இப்படி ஒருவரை மற்றொருவர் கண்காணிக்கும் பொறுப்பில் வைத்திருப்பது திட்டமிட்டு செய்யப்படும் பணிகளுக்குப் பொருந்தலாம். ஆனால், அவசர நிர்வாகங்களுக்கு இது போன்ற நடைமுறை சரிப்பட்டு வராது என்பதால், அரசியலமைப்புத்திட்டம் அதிபருக்கு சிறப்பான அதிகாரத்தை வழங்கியிருக்கிறது. செயலாக்க ஆணை ஒன்றை சமர்ப்பித்துவிட்டு அதிபர் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும்.

சரி. சர்வாதிகார எண்ணம் கொண்ட ஒருவர் பசுந்தோல் போர்த்திய புலியாக அதிபராகிவிட்டு அதன் பின்னர் காங்கிரஸைக் கண்டுகொள்ளாமல் தன் விருப்பப்படி சட்டங்களை இயக்கி சட்டாம்பிள்ளை விளையாட்டு விளையாடினால்? அதற்கு தெளிவான தீர்வைக் கொடுக்கிறது அமெரிக்க அரசியலமைப்பு. அதிபரை பதவியில் இருந்து இறக்கும் அதிகாரம் காங்கிரஸுக்கு உண்டு.

அதிபர் சார்ந்திருக்கும் கட்சி காங்கிரஸில் பெரும்பான்மையாக இருந்தால் அவர் நினைக்கும் திட்டங்களை எளிதில் நிறைவேற்றிக் கொள்ள முடியும். இல்லையெனில், சட்டங்களை நிறைவேற்ற படாதபாடுபட வேண்டிவரும். அதிபர் பதவி காலம் 4 ஆண்டுகள் என அதிகபட்சம் இரண்டு முறை பதவி வகிக்கலாம்.

நீதிபதியின் பதவிக் காலம்

ஒன்பது நீதிபதிகளைக் கொண்டது உச்ச நீதிமன்றம். ஒருவர் நீதிபதி ஆக வேண்டுமெனில், அவரை அதிபர் நியமிக்க வேண்டும்; காங்கிரஸின் செனட் பிரிவு நியமனத்தை உறுதிப்படுத்த வேண்டும். காங்கிரஸில் இருக்கும் ஹவுஸ் பிரதிநிதிகளுக்கோ, செனட்டர்களுக்கோ, அதிபருக்கோ இருப்பதைப் போன்ற கால எல்லை என்பது நீதிபதிகளுக்குக் கிடையாது. உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றுவிட்டால், அவர் தானாக ஓய்வெடுப்பதாக அறிவித்தால் மட்டுமே அந்த பதவியில் இருந்து விலக முடியும்.

இன்றைய நிலவரம் என்ன?

அதிபராக தனது கடைசி எட்டாவது ஆண்டில் இருக்கிறார் ஒபாமா.

காங்கிரஸில், குறிப்பாக செனட்டில், சிறுபான்மை இடத்தில் இருக்கிறது. நீதிபதி ஸ்காலியா அவரது ஜனநாயகக் கட்சி விடுமுறைக்காக சென்ற மாதம் சென்றிருந்தபோது அகால மரணமடைந்தார். அரசியலமைப்புச் சட்டத்தின் படி ஒபாமா ஸ்காலியாவின் இடத்தில் புதிய நீதிபதியை நியமிக்க வேண்டும்.

இது அதிபரின் கடைசி ஆண்டு என்பதால் அது கூடாது; புதிய அதிபர் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும் என்கிறார்கள் குடியரசுக் கட்சியைச் சார்ந்தவர்கள். இது அரசியலமைப்புச் சட்டத்தில் எனக்கு அளிக்கப்பட்டிருக்கும் கடமை. அதைச் செய்யவிடுங்கள் என்கிறார் ஒபாமா.

சமீபத்தில் வெள்ளைமாளிகைக்கான பேஸ்புக் பக்கத்தில் உங்களது செனட்டரைக் தொலைபேசியில் அழைத்து அழுத்தம் கொடுங்கள் என்ற பதிவு வெளியாகியிருக்கிறது. தனது கட்சிக்குப் பெரும்பான்மை இல்லை என்பதால், மக்கள் மூலமாக செனட்டர்களை வழிக்குக் கொண்டுவரலாம் என ஒபாமாவின் நிர்வாகம் நினைப்பது தெரிகிறது.

தவறான புரிதல்

இது இப்படியிருக்க, னிவாசன் நியமிக்கப்பட்டுவிட்டார் என்று பரவலாக புரிந்து கொள்ளப்பட்டது எப்படி? 2013-ல் ஸ்ரீனிவாசன் ‘டிஸ்ட்ரிக்ட் ஆஃப் கொலம்பியா’வின் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதை அப்போதைய செனட் முழுமையான ஆதரவுடன் உறுதிப்படுத்தவும் செய்தது. பகவத் கீதையில் மேல் கை வைத்தபடி, அவர் அடபபோது பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டபோது எடுத்த புகைப்படங்கள் அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றுக்கொண்டதாகச் சமூக ஊடகங்களில் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

ஒபாமாவின் லிஸ்டில் னிவாசன் இருக்கும் சாத்தியக்கூறுகள் அதிகம். ஆனால், ஒபாமாவுக்கு அவரை நியமிக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்பது இப்போதைய கேள்விக்குறி. தடைகளை மீறி, னிவாசன் உச்ச நீதிமன்றத்தின் இடத்தை அலங்கரித்தால் அது இந்தியாவுக்குப் பெருமை; அமெரிக்காவுக்கு அதைவிட இன்னும் பெருமை.

- ஆண்டன் பிரகாஷ், எழுத்தாளர்,

தொடர்புக்கு: anton.prakash@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x