Published : 31 Dec 2021 08:15 AM
Last Updated : 31 Dec 2021 08:15 AM

உலகம் 2021 எப்படி இருந்தது?

தம்பி

கரோனா பெருந்தொற்று அன்றாட நடவடிக்கைகளில் நீக்கமற இடம்பிடித்துவிட்டது. 2021-ன் மிக முக்கியமான நிகழ்வுகளுள் ஒன்று அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் தோற்று ஜோ பைடன் அதிபரானது. பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து விலகல், ஐநாவின் உலக சுகாதார நிறுவனத்துக்கு அமெரிக்க நிதியை விலக்கிக்கொள்ளுதல், ஈரான் அணு ஒப்பந்தத்திலிருந்து விலகல், வடகொரியாவுடன் மோதல் போக்கு என்று உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக ட்ரம்ப் கருதப்பட்டார். அவரது தோல்வி பலரையும் பெருமூச்சுவிட வைத்தது. ஆப்பிரிக்க-இந்திய வம்சாவளியினரான கமலா ஹாரிஸ் துணை அதிபரானது அமெரிக்க வரலாற்றில் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்பட்டது. இந்த நிகழ்வு ஆப்பிரிக்கர்களாலும் இந்தியர்களாலும் தமிழர்களாலும் கொண்டாடப்பட்டது. கரோனா பெருந்தொற்று இல்லையென்றால் ஜோ பைடன்தான் 2021-ன் முகமாக இருந்திருப்பார்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் விலகிக்கொண்டதும் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்ததும் அடுத்தடுத்து நிகழ்ந்தன. அதையடுத்து ஆப்கானியர்கள் பலரும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஆப்கனிலிருந்து தப்பியோட முயன்ற காட்சிகள் புதிய நூற்றாண்டின் அவலங்களுள் ஒன்று. ஆப்கன் பல பத்தாண்டுகள் பின்னோக்கிக் கொண்டுசெல்லப்படும் என்பது பலரின் அச்சம்.

உலக ஜனநாயகத்துக்குப் பெரிதும் மோசமான ஆண்டாகவே 2021 இருந்தது. மியான்மர், சூடான், மாலி, கினியாவில் ஜனநாயக அரசுகள் கவிழ்க்கப்பட்டன. இந்தியா, ரஷ்யா, பிரேசில், சீனா, பெலாரஸ், கியூபா என்று வலது-இடது வேறுபாடில்லாமல் இந்த ஆண்டில் கருத்துரிமைக்கு எதிரான போக்கு காணப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. நீண்ட காலத்துக்குப் பிறகு சீலேயில் இடதுசாரி அரசு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. அதன் இளம் தலைவர் போரிக் உலகின் கவனத்தை ஈர்த்தார்

கரோனா பெருந்தொற்றுக்கிடையே பருவநிலை மாற்றத்தின் அபாய மணியும் பேரோலமாகக் கேட்டது. ஐநாவின் பருவநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக் குழுவின் (ஐபிசிசி) மதிப்பீட்டு அறிக்கையின் ஒரு பகுதியாக ‘பருவநிலை மாற்றம் 2021: இயற்பியல் அறிவியல் ஆதாரங்கள்’ ஆகஸ்ட் 9 அன்று வெளியானது. புவிவெப்பமாதலுக்கும் பருவநிலை மாற்றத்துக்கும் மனிதர்கள்தான் முழுமுதல் காரணம் என்பதை இந்த அறிக்கை தெள்ளத்தெளிவாக ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியது. இந்த அறிக்கையை ‘மனித குலத்துக்கான சிவப்பு சமிக்ஞை’ என்று ஐநாவின் பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரஸ் எச்சரித்தார். தொழிற்புரட்சிக்கு முன்பு இருந்ததைவிட உலக சராசரி வெப்பநிலை 1.1 டிகிரி செல்சியஸ் ஏற்கெனவே அதிகரித்துவிட்டது. இதை 1.5 டிகிரி செல்சியஸுக்குள் கட்டுப்படுத்துவதே ‘பாரிஸ் ஒப்பந்த’த்தின் (2016) அடிப்படை. இன்னும் இருபதே ஆண்டுகளில் 1.5 டிகிரி செல்சியஸைக் கடந்துவிடுவோம். அப்படிக் கடந்துவிட்டால் பேரழிவுகளைத் தடுக்கவே முடியாது என்று இந்த அறிக்கை எச்சரித்தது. அக்டோபர் 31-ல் தொடங்கி நவம்பர் 13-ம் தேதிவரை ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ‘ஐ.நா. பருவநிலை மாற்றம் பற்றிய பணித்திட்டப் பேரவை’யின் (UNFCCC) 26-வது மாநாடு (CoP26) நடைபெற்றது. இந்த மாநாட்டின் விளைவாகச் செய்துகொள்ளப்பட்ட ‘கிளாஸ்கோ பருவநிலை ஒப்பந்தம்’ அனைத்து நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

2020-ன் கொடுங்கனவாக இருந்த கரோனா பெருந்தொற்று 2021-லும் அப்படியே நீடித்து இப்போது தனது தலையை 2022-லும் நீட்டியுள்ளது. டிசம்பர் 2021 வரை உலக அளவில் 5,438,657 உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. உலகப் பொருளாதாரத்துக்கு சுமார் 2.96 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு (இந்திய மதிப்பில் ரூ. 2,20,23,584,00,00,000) இழப்பு ஏற்பட்டது. வறுமை-பட்டினி ஒழிப்பில் உலகம் கடந்த 50 ஆண்டுகளில் அடைந்த வளர்ச்சியெல்லாம் பின்னுக்கு அடித்துச்செல்லப்பட்டன. எனினும், 2021 நம்பிக்கைக்குரிய ஆண்டாக மாறக் காரணம் கரோனாவுக்கான தடுப்பூசிகளும் அவற்றைக் கண்டுபிடித்த அறிவியலர்களும் முன்களப் பணியாளர்களும்தான். தடுப்பூசிகளால் கரோனாவை முழுக்கவும் கட்டுப்படுத்த இயலவில்லை என்றாலும் அவை இல்லாவிட்டால் உலகம் பேரழிவைச் சந்திருக்கும். கரோனா தடுப்பூசிகளுக்கும் முன்களப் பணியாளர்களுக்கும் ஒரு ராயல் சல்யூட் அடித்துவிட்டு நம்பிக்கையுடன் 2022-ல் கால்வைப்போம்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x