Published : 29 Dec 2021 05:38 AM
Last Updated : 29 Dec 2021 05:38 AM

கட்டித்தந்த வீடுகளைக் கண்காணிக்கவும் செய்யுமா குடிசை மாற்று வாரியம்?

சென்னை திருவொற்றியூரில் உள்ள குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் 24 வீடுகள் கொண்ட அடுக்குமாடிக் கட்டிடம் இடிந்துவிழுந்திருப்பது, சென்னையின் பிற பகுதிகளில் உள்ள வாரியக் குடியிருப்புகளில் வசிப்போரையும் கடும் அச்சத்துக்கு ஆளாக்கியுள்ளது. கட்டிடத்தில் ஏற்பட்ட விரிசலையடுத்து அங்கு குடியிருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளதால், உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. வீடுகளை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு விரைவில் மாற்றுக் குடியிருப்பு ஒதுக்கப்படும் என்றும் ரூ.1 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலைத் தரலாம். ஆனால், பழுதடைந்த நிலையில் உள்ள கட்டிடங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் மற்றவர்கள், அரசு இது தொடர்பில் என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கப்போகிறது என்பதையும் எதிர்பார்த்துள்ளனர்.

திருவொற்றியூரில் இடிந்துவிழுந்த கட்டிடம் 1993-ல் கட்டப்பட்டு 1998-ல் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது. அந்த வளாகத்தில் 24 வீடுகள் கொண்ட 14 அடுக்குமாடிக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. மீதமுள்ள கட்டிடங்களின் உறுதித்தன்மையும் உடனடியாக ஆராயப்பட வேண்டும். குடியிருப்புக்கான ஒரு கட்டிடம் 30 ஆண்டுகளுக்கு முன்பே இடிந்துவிழுந்திருப்பது, ஒப்பந்ததாரர் தொடங்கி அந்தப் பணியை மேற்பார்வையிட்ட பொறியாளர்கள் வரையில் அனைவரையும் கேள்விக்குள்ளாக்குகிறது. நெல்லையில் தனியார் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து குழந்தைகள் பலியானதையடுத்து அப்பள்ளியின் தலைமையாசிரியர், தாளாளர், ஒப்பந்ததாரர் ஆகியோரைக் கைதுசெய்ததுபோல், குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு விவகாரத்திலும் நடவடிக்கை எடுக்கப்படுமா?

சென்னை மாநகரத்தின் மையப் பகுதிகளில் தற்காலிகக் குடியிருப்புகளில் வசித்துவரும் உடலுழைப்புத் தொழிலாளர்களை ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில், அவர்களை மறுகுடியமர்த்துவதில் அரசு தீவிரம்காட்டிவருகிறது. நீர்நிலைகள் பாதுகாப்புக்காக, கரையோரங்களில் வசிப்பவர்களை வெளியேற்றவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில், மறுகுடியமர்வுக்காக அவர்களுக்கு ஒதுக்கப்படும் குடியிருப்புகள் தரமான முறையில் கட்டப்பட்டவையாக இருக்க வேண்டும் என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது.

சென்னை பெருநகரப் பகுதியில் 45 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட குடியிருப்புகளில் 23,000 வீடுகள் வாழத் தகுதியில்லாதவையாக மாறிவிட்டன என்று அரசின் தரப்பிலேயே கூறப்படுகிறது. எனினும், இந்த நிதியாண்டில் 7,500 வீடுகள் கட்டுவதற்கு மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாற்றுக் குடியிருப்புகளைப் படிப்படியாகத்தான் உருவாக்க முடியும் என்ற எதார்த்தம் புரிந்துகொள்ளத்தக்கது. ஆனால், சிதிலமடைந்துவரும் கட்டிடங்களை உடனடியாகப் பழுதுபார்க்கவும், கட்டிடங்களின் உறுதித்தன்மை கேள்விக்குரிய நிலையில் இருந்தால் அங்கு வசிப்பவர்களை உடனடியாகப் பாதுகாப்பான குடியிருப்புகளுக்கு மாற்றவும் வேண்டும். திருவொற்றியூர் குடியிருப்புவாசிகளில் சிலர் தங்களது புகாருக்குப் பிறகும்கூட பெயரளவுக்குத்தான் ஆய்வுகள் நடத்தப்பட்டன என்று அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர். இப்படியொரு சூழலுக்கு மீண்டும் இடமளித்துவிடக் கூடாது. இனிவரும் காலத்திலாவது, குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளின் மீதான தொடர் கண்காணிப்பைத் தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x