Last Updated : 24 Dec, 2021 07:07 AM

 

Published : 24 Dec 2021 07:07 AM
Last Updated : 24 Dec 2021 07:07 AM

மூன்றாம் தவணை தடுப்பூசியைப் புரிந்துகொள்வது எப்படி?

இந்தியாவில் மீண்டும் விவாதப் பொருளாகியிருக்கிறது மூன்றாம் தவணை கரோனா தடுப்பூசி. பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உட்பட்ட ஐரோப்பிய நாடுகளில் நிறையப் பேருக்கு இரண்டு தவணைத் தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகும் டெல்டா வைரஸ் தொற்றுப் பரவல் அதிகரித்தது. அதனால், அந்த நாடுகள் மட்டுமில்லாமல் அமெரிக்கா, ஆஸ்திரியா, கனடா, இஸ்ரேல் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட நாடுகள் ‘ஊக்குவிப்பு ஊசி’ (Booster dose) எனும் மூன்றாம் தவணைத் தடுப்பூசியைச் செலுத்தத் தொடங்கின.

‘இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் உடலில் நோய்த் தடுப்பாற்றல் 6-9 மாதங்களில் குறைந்துவிடுகிறது. மூன்றாம் தவணைத் தடுப்பூசி அந்தத் தடுப்பாற்றலை அதிகரிக்கிறது’ என்பது அந்த நாடுகளின் வாதம். இதைத் தொடர்ந்து சென்ற செப்டம்பரில் இந்தியாவிலும் மூன்றாம் தவணைத் தடுப்பூசி குறித்த விவாதம் ஆரம்பித்தது.

‘எத்தனை முறை தடுப்பூசி செலுத்துகிறோம் என்பதைவிட யாருக்குச் செலுத்துகிறோம் என்பது முக்கியம். உலகின் மிக ஏழ்மையான நாடுகளில் இன்னும் 40% பேருக்குக்கூட முதல் தவணைத் தடுப்பூசி செலுத்தி முடிக்கவில்லை. இவர்களுக்குத் தேவைப்படும் தடுப்பூசித் தவணைகளைவிட 6 மடங்கு அதிகமாக மூன்றாம் தவணைத் தடுப்பூசியைப் பணக்கார நாடுகள் செலுத்துகின்றன.

ஏழை நாடுகளில் கரோனா தொற்று நீடிக்கும்போது, புதுப் புது வேற்றுருவ வைரஸ்கள் உருவாகி, மற்ற நாடுகளுக்கும் பரவ வாய்ப்பிருக்கிறது. பணக்கார நாடுகள் தேவைக்கு அதிகமாகத் தடுப்பூசிகளை வாங்கிக் குவிக்காமல், ஏழை நாடுகளுக்கு அவற்றை வழங்க வேண்டும்’ என்று உலக சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டது. அதனால், இந்தியாவில் இந்த விவாதம் தற்காலிகமாக நின்றுபோனது.

நவம்பரில் தென்னாப்பிரிக்காவில் தொடங்கிய ஒமைக்ரான் தொற்றுப் பரவல் அதிவேகமெடுத்து, இன்றுவரை இந்தியா உட்பட 104 உலக நாடுகளில் தீவிரமடைந்துள்ளதை அடுத்து, இந்தியாவில் மூன்றாம் அலையைத் தடுக்க வேண்டுமானால் மூன்றாம் தவணைத் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்ற வாதம் வலுப்பெற ஆரம்பித்துள்ளது.

இன்னும் சொல்லப்போனால், கேரளம், மஹாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் கரோனா குறித்து அதீத எச்சரிக்கை உள்ளவர்கள் பலரும் தாங்களாகவே முன்வந்து மூன்றாம் தவணைத் தடுப்பூசியைச் செலுத்திக்கொள்கின்றனர். இதற்கு அவர்கள் ஆதாரமாகக் காட்டுவது, இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு. ‘இரண்டு தவணை ஆக்ஸ்போர்டு - அஸ்ட்ரா ஜெனிக்கா தடுப்பூசி (கோவிஷீல்டு) செலுத்திக்கொண்டவர்களுக்கு ‘மட்டுப்படுத்தும் எதிரணுக்கள்’ (Neutralising Antibodies) 40% குறைந்துவிட்டன. அவர்களுக்கு ‘எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசி’யை மூன்றாம் தவணையாகச் செலுத்திய பிறகு, அந்த அணுக்கள் 71% அதிகரித்துவிட்டன’ என்கிறது அந்த ஆய்வு.

அண்மையில், இந்தியாவுக்கு மூன்றாம் தவணை தேவையா, இல்லையா என்பதைத் தடுப்பூசி வல்லுநர் குழுதான் முடிவு செய்யும் என்று ஒன்றிய அரசு அறிவித்தது. இந்தச் சூழலில், வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரி நுண்ணுயிரியியல் துறைப் பேராசிரியர் ககன்தீப் காங்கின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

தடுப்பாற்றலை மறக்காத நினைவு செல்கள்

‘செலுத்தப்பட்டது எந்தத் தடுப்பூசியானாலும், இரண்டு தவணை செலுத்திக்கொண்டவர்களுக்கு ‘டி’ நினைவு செல்கள் நாட்பட்ட நோய்த் தடுப்பாற்றலைக் கொடுப்பதால், ஒமைக்ரான் தொற்றினாலும் நோய் தீவிரம் காட்டாது. இந்தியாவில் 67% பேருக்கு ஏற்கெனவே கரோனா தொற்றிவிட்டது.

தடுப்பூசிக்குத் தகுதியான 94 கோடிப் பேரில் 38 கோடிப் பேர் இரண்டு தவணையைச் செலுத்திக்கொண்டுள்ளனர். ஒருமுறை கரோனா தொற்றிய பின் இரண்டு தவணைத் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு ஏற்படுகிற நோய்த் தடுப்பாற்றலானது மூன்று தவணைத் தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்குச் சமம். எனவே, மூன்றாம் தவணை தடுப்பூசி அனைவருக்கும் இப்போதே அவசியமில்லை.

அடுத்து, இந்தியாவுக்கு மூன்றாம் தவணை தேவையா என்பதை வெளிநாட்டு ஆய்வுகளை வைத்து முடிவுசெய்ய முடியாது. எந்தத் தடுப்பூசிக்கு எந்த அளவுக்குத் தடுப்பாற்றல் குறைந்துள்ளது என்பதை இந்தியாவில் ஆய்வுசெய்ய வேண்டும். அதுதான் சரியாக இருக்கும். இந்தியாவில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் தடுப்பாற்றல் மற்றும் மூன்றாம் தவணை குறித்த ஆய்வை வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரி தொடங்கியுள்ளது. அதன் முடிவுகள் புத்தாண்டில் தெரிந்துவிடும். கரோனா தொற்றின் தீவிரத்தை இவை தொடர்ந்து கட்டுப்படுத்துவது உறுதியானால், மூன்றாம் தவணைக்கு அவசியமில்லாமல் போகும்.

யாருக்கு முன்னுரிமை?

அப்படியே மூன்றாம் தவணை தேவைப்பட்டாலும் முன்னுரிமை யாருக்கு என்பதையும் அறிவியல்ரீதியில் பார்க்க வேண்டும். உலகளவில் எடுத்துக்கொண்டால், இன்னும் தடுப்பூசியே செலுத்தப்படாமல் இருப்பவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டியது முக்கியம். அடுத்து, இரண்டாம் தவணை செலுத்தப்படாமல் இருப்பவர்களுக்குச் செலுத்தப்பட வேண்டும்.

இவர்களைத் தொடர்ந்து, தொற்றும் வாய்ப்பு அதிகமுள்ள மருத்துவத் துறையினர் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், இரண்டு தவணைத் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகும் இணை நோய்கள் காரணமாகத் தடுப்பாற்றல் குறைந்தவர்களுக்கும், அதிக பாதிப்பை எதிர்கொள்ளும் புற்றுநோயாளிகள் உள்ளிட்டோருக்கும் மூன்றாம் தவணைக்கு முன்னுரிமை தர வேண்டும். அதேபோல் உடலில் தடுப்பாற்றல் குறைவாக உள்ள, இணை நோயுள்ள குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்’ என்கிறார் காங்.

எந்தத் தடுப்பூசி சிறந்தது?

இந்தியாவில் மூன்றாம் தவணைக்கு எந்தத் தடுப்பூசி சிறந்தது எனும் கேள்வியும் எழுந்துள்ளது. ‘எல்லா வகை கரோனா தடுப்பூசிகளும் நோயின் தீவிரத்தைத் தடுக்கும்; உயிராபத்தை விலக்கும் என்பது உண்மை. ஆனாலும், மூன்றாம் தவணையாக கோவிஷீல்டு, கோவேக்சினுக்குப் பதிலாக மாற்றுத் தடுப்பூசியைச் செலுத்துவதே சிறந்தது. உலகளாவிய தரவுகளைப் பார்க்கும்போது பைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்களின் ‘எம்.ஆர்.என்.ஏ’ தடுப்பூசியை மூன்றாம் தவணையாகச் செலுத்திக்கொண்டவர்களுக்கு மிகச் சிறந்த பாதுகாப்பு கிடைப்பது உறுதியாகியுள்ளது. இதை இந்தியாவிலும் பயன்படுத்த ஒன்றிய அரசு பரிசீலிக்க வேண்டும். அல்லது இந்தியாவில் ஜென்னோவா நிறுவனத்தின் ‘எம்.ஆர்.என்.ஏ’ தடுப்பூசி, பயாலஜிக்கல்–இ தயாரிக்கும் ‘கோர்பிவேக்ஸ்’, சீரம் இன்ஸ்டிடியூட் தயாரிக்கும் ‘கோவோவேக்ஸ்’, ஜைடஸ் கெடிலாவின் ‘ஜைக்கோவ்-டி’ ஆகிய தடுப்பூசிகளுக்காகக் காத்திருக்க வேண்டும்’ என்கின்றனர் இந்திய வைரஸ் வல்லுநர்கள்.

இந்தியாவிடம் இருக்கும் தடுப்பூசிக் கையிருப்பையும் உற்பத்தித் திறனையும் கருத்தில் கொண்டு, இந்தியச் சூழலுக்கு ஏற்ப மூன்றாம் தவணைக்கு எந்தத் தடுப்பூசியை, எப்போது, யாருக்குச் செலுத்துவது என்பதை ஒன்றிய அரசு விரைந்து முடிவெடுத்து, இலவசமாகவே செலுத்த முன்வந்தால் மூன்றாம் தவணை குறித்த விவாதம் முற்றுப்பெறும்.

- கு.கணேசன், பொதுநல மருத்துவர்,

தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x