Published : 23 Dec 2021 07:20 AM
Last Updated : 23 Dec 2021 07:20 AM

சீலேவில் போரிக்கின் வெற்றி: அயெந்தேவின் தியாகம் வீண்போகாது!

டிசம்பர் 19 அன்று சீலே (Chile) நாட்டில் நடைபெற்ற குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் 56% வாக்குகளோடு ‘தன்மானத்துக்கான கூட்டமைப்பு’ என்ற இடதுசாரி முன்னணி அமைப்பின் வேட்பாளர் கேப்ரியேல் போரிக் வெற்றி பெற்றுள்ளார். ‘‘பினோசெத் காலத்தில் லத்தீன் அமெரிக்காவிலேயே முதல் முதலாக சீலேவில்தான் புதிய தாராளவாதம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதை முதலில் ஒழிப்பதும் சீலேவாகத்தான் இருக்கும்’’ என்று வெற்றி பெற்றவுடன் போரிக் கூறினார்.

35 வயதேயான போரிக்தான் சீலே வரலாற்றில் இளைய குடியரசுத் தலைவர். 44% வாக்குகளைப் பெற்ற பழமைவாதியும் பிற்போக்காளருமான ஹூவான் அந்தோனியோ கஸ்தை விட ஏறத்தாழ பன்னிரண்டரை லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று, இவர் வெற்றியடைந்துள்ளார். தேர்தல் அன்று பேருந்து ஓட்டுநர்களுக்கு விடுப்பு அளித்து, உழைக்கும் மக்கள் தேர்தலில் பங்கேற்க முடியாமல் தடுக்க முதலாளிகளும் அரசும் முயன்றபோதும் இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது.

புதிதாகப் பொறுப்பேற்கப்போகும் போரிக், தனது அரசு ‘‘சீலேவின் அனைத்து மக்களுக்கான அரசாக இருக்கும்” என்றார். பெருமுதலாளிகளுக்கு ‘‘நிதிநிலையை உணர்ந்து பொறுப்புடன் செயல்படுவோம்’’ என்று உறுதியளித்தார். அதே வேளை, “எல்லோராலும் வெறுக்கப்படும் தனியார் ஓய்வூதியத் திட்டம் கைவிடப்படும், கல்வியும் மருத்துவமும் இலவசமாக்கப்படும்” என்றார். “பெண்களுக்குச் சம உரிமை வழங்கப்படும், உயிரிப் பன்மைத்துவம் பாதுகாக்கப்படும்” என்று வாக்குறுதி அளித்திருக்கிறார்.

தேர்தலில் தோற்ற ‘‘அந்தோனியோ கஸ்த்துடன் நல்லுறவை ஏற்படுத்திக்கொள்வோம்’’ என்று அவர் கூறியதற்கு மக்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்திருக்கின்றனர். 2019 அக்டோபர் எழுச்சியில் பங்கேற்றுச் சிறை சென்றோருக்கு விடுதலை வேண்டும் என்று மக்கள் கோரியதற்கு போரிக் பதிலளிக்கவில்லை. சீலே கம்யூனிஸ்ட் கட்சியின் ‘தன்மானத்துக்கான கூட்டமைப்பு’ என்ற முன்னணி, இப்போதைய முதலாளித்துவ நெருக்கடிக் காலத்தில் அதிகபட்சமாக ஒரு இடது சீர்திருத்தவாதத் தன்மையைத்தான் கொண்டிருக்கும் என்று கருத வாய்ப்புள்ளது.

பினோசெத்தின் சர்வாதிகாரம் முடிவுற்று, முதல் குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற பத்ரீசியோ அயில்வின், ‘‘இயன்ற வரை நீதி வழங்குவோம்’’ என்று கூறினார். சால்வதோர் அயந்தேவின் சோஷலிச அரசைக் கவிழ்த்ததில் பினோசெத்திற்கு உறுதுணையாக இருந்தவர்தான் இந்த பத்ரீசியோ அயில்வின். 2019 அக்டோபர் எழுச்சியின்போது ‘இயன்றவரை நீதி’க்கு முடிவுகட்டி, அனைவருக்கும் மேம்பட்ட வாழ்க்கைக்கு உத்தரவாதம் வேண்டியே பத்து லட்சம் மக்கள் உயிரைப் பணயம் வைத்துப் போராடினார்கள்.

பினோசெத்தின் சர்வாதிகார ஆட்சிக்குப் பின்பு ஆட்சிசெய்த பிற கட்சிகளைப் புறக்கணிக்கும் வண்ணம் ‘30 பெசோ அல்ல, 30 ஆண்டுகள் என்பதே பிரச்சினை’ என்ற கோஷத்தோடு மக்கள் போராடத் தொடங்கினார்கள். சாந்தியாகோ நகர மெட்ரோ ரயில் கட்டண உயர்வை எதிர்த்துத் தொடங்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டங்கள், பின்னர் சமூகத்தில் நிலவும் கடும் ஏற்றத்தாழ்வுகள் நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையோடு பல பகுதிகளுக்கும் பரவின. ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்த போராட்டங்களின் விளைவாக, இறுதியில் வலதுசாரி அதிபர் செபஸ்தியன் பிஞ்சேரா மக்கள் பலத்துக்குப் பணிந்தார். பெரும்பான்மை மக்கள் - 78% பேர் புதிய அரசமைப்புச் சட்டம் எழுதப்பட வேண்டுமென வாக்களித்தனர். 2021 ஏப்ரலில் 155 உறுப்பினர்கள் கொண்ட சபை தேர்ந்தெடுக்கப்பட்டு, புதிய அரசமைப்புச் சட்டம் எழுதும் பணி தொடங்கியது.

போரிக்கின் வெற்றியால் விரைவில் இப்புதிய அரசியல் சாசனம் நடைமுறைக்கு வரும். லத்தீன் அமெரிக்காவிலேயே பணக்கார நாடான சீலேவின் மக்கள் கௌரவமான குடிமக்களாக வாழ்வார்கள். வடஅமெரிக்க சி.ஐ.ஏ.வின் உதவியோடு 1973 செப்டம்பர் 11-ம் தேதி படுகொலை செய்யப்பட்ட சால்வதோர் அயந்தே ‘‘எனது தியாகம் வீண்போகாது’’ என்று கூறியது இனிமேல் மெய்யாகும். கேப்ரியேல் போரிக் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்கும்போது, அது சீலே நாட்டு மக்களின் வெற்றியாக இருக்கும். புதியதோர் சகாப்தம் தொடங்கும். போரிக்கின் செயல்பாட்டை வலதுசாரிகள் தங்கள் பலத்தால் தடுத்தாலும், சீலே மக்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடத் தயங்க மாட்டார்கள்.

- அமரந்த்தா, ‘வலி’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர். தொடர்புக்கு: amarantha1960@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x