Published : 20 Mar 2016 10:43 AM
Last Updated : 20 Mar 2016 10:43 AM

தேசியவாதம் என்றால் என்ன?

இந்தக் கேள்வியை நாம் கேட்டே ஆக வேண்டும். தேசிய வாதம் என்பதன் பொருள்தான் என்ன? இதற்கான விடை, பலர் நினைத்துக்கொண்டிருப்பதுபோல் அத்தனை எளிதானதல்ல. ‘தேசியம்’, ‘தேசியவாதம்’, ‘தேசம்-நாடு’ போன்ற பதங்கள், 17-ம் நூற்றாண்டில் வெஸ்ட்பேலியா அமைதி ஒப்பந்தத்துக்குப் பின் ஐரோப்பாவில் புழக்கத்துக்கு வந்தன.

ஐரோப்பிய தேசியவாதம்

ஐரோப்பாவின் தேசியவாதம் மூன்று முக்கிய இயல்புகளைக் கொண்டிருந்தது.

முதலாவதாக, ஐரோப்பிய தேசியவாதம், ஒட்டுமொத்த மக்களை உள்ளடக்கியதாக ஒருபோதும் இருந்ததில்லை; ‘தேச’த்தின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில்கூட. அது எப்போதுமே ‘உள்ளுக்குள் எதிரி’ (உதாரணத்துக்கு யூதர்கள்) என்ற கருத்தாக்கத்தை எழுப்பிக்கொண்டேயிருந்தது.

இரண்டாவதாக, அது ஏகாதிபத்தியத் தன்மை கொண்டதாகவே இருந்தது. வெஸ்ட்பேலியா ஒப்பந்தம் கையெழுத்தாகி சில மாதங்களிலேயே அயர்லாந்து மீது தாக்குதல் நடத்திய ஆலிவர் க்ரோம்வெல், அதன் மொத்த நிலப்பரப்பையும் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார். அதற்கு அடுத்து வந்த ஆண்டுகளில், ஐரோப்பாவின் சக்தி மிக்க நாடுகள், சொல்லப்போனால் ஐரோப்பாவுக்குள் அமைதியாக இருந்த நாடுகள், தங்களுக்கென ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்க, இந்தியா போன்ற தொலைதூர நாடுகளில் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக்கொண்டன.

மூன்றாவதாக, தேசம் என்பது தன்னளவில் உச்ச வடிவத்தை அடைந்தது. தேசத்தை வலுவாக்குவது பரவலான கருத்தாக இருந்தது. பொருளாதாரத்தை அரசு கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற வணிகமயம் தொடர்பான பொதுக்கருத்தாக மட்டுமல்ல, செவ்வியல் அரசியல் பொருளாதாரத்தைத் தீர்மானிப்பதாகவும் தேசம் எனும் கருத்தாக்கம் இருந்தது.

ஏனைய நாடுகளை ஒப்பிட, மிகப் பிற்காலத்தில், 19-ம் நூற்றாண்டில் உருவான தேசமான ஜெர்மனி தனது செல்வாக்கை உயர்த்திக்கொள்ளும் நடவடிக்கைகளில் இறங்கியது. தேசியவாதம் என்ற கருத்தாக்கத்தில் மற்ற நாடுகளைவிட உறுதியானதாக இருந்ததுடன் தனது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ளவும் அதைப் பயன்படுத்துக்கொண்டது. இவை அனைத்தும் பாசிஸக் கோட்பாட்டின் கீழ் வளர்ந்து உச்சமடைந்தன. இரண்டு உலகப் போர்களில் கிடைத்த கசப்பான அனுபவங்களுக்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தை அமைத்ததன் மூலம் தேசியவாதத்தைவிட, முற்போக்கான, ஜனநாயகமான மரபு சமீப ஆண்டுகளாக ஐரோப்பாவில் வளர்ந்துவந்திருக்கிறது.

இந்திய தேசியவாதம்

காலனிய ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டக் காலங்களில் இந்தியா போன்ற நாடுகளில் உருவான தேசியவாதக் கொள்கை முற்றிலும் வேறு மாதிரியானது. மிகவும் சக்தி வாய்ந்த எதிரியாக இருந்த காலனி ஆதிக்க நாடுகளை எதிரான போராட்டம் என்பதால், அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியதாக அப்போராட்டம் இருக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இயன்றவரை சமூகத்தின் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் மக்களைத் திரட்டிப் போராட வேண்டியிருந்தது. அதேபோல், இதே மாதிரியான போராட்டங்களுடன் ஒன்றிணைந்தும் செயல்பட வேண்டியிருந்தது. அதன் காரணமாக, மற்ற மூன்றாவது உலக நாடுகளுடன் நட்பார்ந்த உறவைக் கொள்ள நேர்ந்தது. இறுதியாக, தேசத்தின் பெருமையைவிடவும் மக்களின் நலனையே முக்கிய நோக்கமாகக் கொண்டதாக இந்திய விடுதலைப் போராட்டம் அமைந்தது. “ஒவ்வொரு இந்தியனின் கண்ணீரையும் துடைத்தகற்றுவதுதான் சுதந்திரத்தின் நோக்கம்” என்று காந்தி குறிப்பிட்டது அதைத் தெளிவாக வெளிப்படுத்தியது.

இந்தியாவின் இந்த தேசியவாதம் ஒப்புமை இல்லாததாகவும், இதற்கு முன்னர் உலகம் பார்த்திராத நிகழ்வாகவும் இருந்தது. மிகைப்படுத்தப்பட்ட ஐரோப்பிய தேசியவாதத்தை ஒப்பிட, அது ஜனநாயகத்தன்மை கொண்டதாகவும் சமத்துவமானதுமாகவும் இருந்தது. முன்பு குறிப்பிட்ட மூன்று விஷயங்களிலும், ஐரோப்பிய தேசியவாதத்திலிருந்து வேறுபட்டு நின்றது, இந்திய தேசியவாதம்.

கிரேக்கப் புராணங்களில் வருவதுபோல் ஜியூஸின் தலையிலிருந்து வெளிவந்த அதீனா போல் முழுமையாக உருவான அற்புத விளைவாக இந்திய தேசியவாதத்தைச் சொல்ல வரவில்லை. அதிலும் செல்வாக்கை உயர்த்திக் கொள்ளும் போக்கும் கலந்தே இருந்தது. ஆனால், அதை முன்னிறுத்தியபோதெல்லாம் அதற்கான விளைவுகளை எதிர்கொள்ள நேர்ந்தது. தனது நோக்கத்தில் வெற்றியடைய வேண்டும் என்றால் அனைவரையும் உள்ளடக்கியதான ஜனநாயகபூர்வமான தேசியவாதமாகவே அது இருக்க வேண்டியிருந்தது.

தேசப் பிரிவினையின்போது பாகிஸ்தானுக்கான நிலுவைத் தொகையை இந்தியா கட்டாயம் கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்களிடம் காந்தி தனது இறுதி நாட்களில் வலியுறுத்தியபோது அவர் தேச விரோதியாகக் கருதப்படவில்லை. காலனிய ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டப் பின்னணியிலான ஜனநாயகபூர்வமான தேசியவாதத்தில் ஒரு இணக்கமான நிலைப்பாட்டைத்தான் அவர் எடுத்தார். சகிப்புத்தன்மை, ஒற்றுமை, வேறுபாடுகள் ஏற்படும்போது பேச்சுவார்த்தை, அமைதியை ஏற்படுத்தவோ, மேலாதிக்கத்தை நிலைநாட்டவோ வன்முறையைப் பிரயோகிக்காமை ஆகியவைதான் இந்த தேசியவாதத்தின் மையம்.

தேசியவாதத்தின் மையம்

இந்த தேசியவாதத்தின் அடிப்படையில், நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் இந்திய அரசுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டால், அதிலும் பயங்கரவாதச் சம்பவங்களோ வன்முறையோ இல்லாதபோது, வன்முறையைத் தூண்டும் சம்பவங்கள் நிகழாதபோது, அது சுயபரிசோதனைக்கான, ஆய்வுக்கான தருணமாக ஆக வேண்டும். மாறாக, காலனியாதிக்க யுகத்தைச் சேர்ந்த தேச விரோதச் சட்டங்களைப் பயன்படுத்தி அடக்குமுறையில் ஈடுபடக்கூடாது.

ஐரோப்பாவின் மிகைப்படுத்தப்பட்ட தேசியவாதத்துக்கும், நமது சூழலில் உருவான தேசியவாதத்துக்கும் இடையி லான மிகப் பெரிய வித்தியாசம் இதுதான்: ஐரோப்பாவின் தேசியவாதத்தின்படி, உள்ளுக்குள் எதிரி எனும் கருத்தாக் கத்தின் கீழ், குறைவான எண்ணிக்கையில் இருந்தவர்களே எதிரிகளாக்கப்பட்டனர். ஜெர்மனியின் மக்கள் தொகையில் யூதர்களின் எண்ணிக்கை 0.7%தான் என்று நாஜிக்களே கூறியிருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் மிகைப்படுத்தப் பட்ட தேசியவாதம் எதிர்கொள்ளவிருக்கும் ‘உள்ளுக்குள் இருக்கும் எதிரிகள்’ எண்ணிக்கை மிகப் பெரியது. இந்த தேசியவாதம் கொண்டுவரும் சமூகப் பிளவின் அபாயமும் மிகப் பெரியது. தோல்வியடைந்த நாடாக இந்தியா மாறும் சூழலைத் தவிர்க்க வேண்டும் என்றால், இதுபோன்ற ‘தேசியவாத’த்தைத் தடுத்து நிறுத்தியாக வேண்டும்!

‘தி இந்து’ (ஆங்கிலம்), © தமிழில் சுருக்கமாக: வெ. சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x