Published : 14 Dec 2021 03:07 AM
Last Updated : 14 Dec 2021 03:07 AM

இந்தியாவில் இந்தியர்கள் ஏன் பிரகாசிப்பதில்லை?

ஜி.ஆர்.கோபிநாத்

உலகம் முழுவதும் உள்ள மக்களின் அபிப்பிராயங்கள், அரசியல், வாழ்க்கையை வடிவமைக்கும் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக, இந்தியாவின் ஐஐடியில் படித்த இந்தியரான பராக் அகர்வால் பொறுப்பேற்ற செய்தியைப் பார்த்தபோது, வாவ் என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன். இது சந்தோஷப்படுவதற்கான விஷயமா? இந்தியர்களின் இதயம் பெருமிதத்தில் விரிந்ததா? ஆமாம். உண்மையாகவே.

ஆனாலும் தொந்தரவூட்டக்கூடிய, வெளிப்படையாகத் தெரியாத ஒரு நிம்மதியின்மை இந்த வெற்றியில் இருக்கிறது. இங்கிருந்து சென்றவர்கள், ஒரு அந்நிய நிலத்தில் தங்கள் தொழிலில் உச்சநிலையை அடையும்போது, உண்மையிலேயே அவர்கள் அடைந்த பெருமையின் பிரதிபலிப்பில் இந்தியா குளிர்காய்வதற்கு உண்மையிலேயே நமக்குத் தகுதி உள்ளதா? அது அமெரிக்காவின் வெற்றி இல்லையா? ஒருவரது திறனைக் கண்டறிந்து, அவர்களை இந்த உயரம் வரை அனுமதிப்பதற்கு அமெரிக்காவில் நிலவும் செழிப்பான சூழ்நிலை காரணம் இல்லையா? அமெரிக்காவுக்கு அதற்கே உரிய கரும்புள்ளிகள் உண்டு.

ஆனால், லட்சக்கணக்கான பேருக்கு, ஒரு பைசாகூட இல்லாமல் வரும் குடியேறிகளுக்கு, அவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைந்துவிட்டால் போதும், அவர்களது அசாத்தியமான கனவுகள்கூட ஈடேறும் என்ற நம்பிக்கையைத் தருகிறது. இப்படியான வாய்ப்புகளின் தேசமான அமெரிக்காதான், கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக லட்சக்கணக்கான குடியேறி மக்களை வரவேற்றுள்ளது - அவர்கள் இந்தியர்கள் மட்டுமல்ல; உலகின் எல்லா மூலைகளிலிருந்தும் வந்தவர்கள்.

அகர்வாலின் பயணம், அவருக்கு முந்தி நாம் கொண்டாடிய எத்தனையோ இந்தியர்களின் பயணத்தைப் போன்றது. ஐஐடிகளிலிருந்தும் பிற புகழ்பெற்ற பொறியியல் கல்லூரிகளிலிருந்தும் நிறைய சிஇஓக்கள் வந்துள்ளனர். பட்டப் படிப்பை முடித்த பின்னர் அமெரிக்காவுக்குச் சென்று, ஹார்வர்ட், எம்ஐடி, ஸ்டான்போர்ட், கார்னெல் போன்ற சிறந்த பல்கலைக்கழகங்களில் பட்டம்பெறுகின்றனர்.

இந்திரா நூயி (பெப்சிகோ), சுந்தர் பிச்சை (ஆல்ஃபபெட் அண்ட் கூகுள்), சத்யா நாதெள்ளா (மைக்ரோசாப்ட்), அரவிந்த் கிருஷ்ணா (ஐபிஎம்), இவான் மெனசெஸ் (டியாகியோ), வசந்த் நரசிம்மன் (நோவார்டிஸ்), புனித் ரஞ்சன் (டெலாய்ட்), அஜய் பங்கா (மாஸ்டர் கார்ட்) ஆகியோர் தத்தமது நிறுவனங்களில் உச்சத்தை அடைந்தவர்கள். சிறிய நிறுவனங்களைச் சேர்ந்த வெற்றிகரமான ஆயிரக்கணக்கான தொழில்நுட்பர்களும் பொலிவான வாழ்க்கையை வாழ்வதற்காக இங்கிருந்து இடம்பெயர்ந்தவர்கள்தான்.

தொழில்நுட்பம் நமது வர்த்தகத்தையும் வாழ்வையும் ஆதிக்கம் செலுத்துகிறது. தொழில்நுட்ப நிறுவனங்களை நிர்வகிக்கப்பவர்கள்தான் நவீன உலகின் ராக் நட்சத்திரங்களும் சிறுதெய்வங்களும். எஃகு, எண்ணெய், வாகனத் தொழில்சார்ந்த பழைய வர்த்தகப் பெரும்புள்ளிகளான பால் கெட்டி, ஆன்ட்ரூ கார்னெகி, ஹென்றி ஃபோர்டு போன்றோரை இடம்பெயர்த்துவிட்டவர்கள் அவர்கள். நிர்வாகக் கல்வி, அறிவியல், மருத்துவம், பொருளாதாரத் துறைகளிலும் அமெரிக்காவில் சிறந்து விளங்குபவர்களாக இந்தியாவிலிருந்து குடியேறியவர்களில் பலர் உள்ளனர்.

மருத்துவக் கல்லூரிகளிலும் மருத்துவமனைகளிலும் முன்னணி மருத்துவர்களாய், முதலீட்டு வங்கியாளர்களாய், பேராசிரியர்களாக எண்ணற்ற பேர் ஜொலிக்கின்றனர். அவர்களில் உச்ச நட்சத்திரங்களாக இருப்பவர்கள் இயற்பியல், வேதியியல், மருத்துவம், பொருளாதாரம் ஆகியவற்றில் மேற்படிப்பு படித்து அமெரிக்காவிலேயே குடியேறிவிட்டவர்கள்; இவர்களில் பலரும் நோபல் பரிசு பெற்ற இந்தியர்களின் வம்சாவளியினர்.

இதில் நமக்குச் சங்கடம் ஏற்படுத்தும் கேள்வி என்னவெனில், ஒளிபடைத்த நமது அறிவாளிகள் ஏன் பட்டப் படிப்பை முடித்தவுடன் மேலை நாடுகளுக்குப் பறக்க வேண்டும்? தனியார் நிறுவனங்கள் குறைவாக இருந்த நிலையில், சில நல்ல வேலைகளே அரசுத் துறை நிறுவனங்களில் இருந்த நிலையில், இந்தியாவின் சிறந்த உயர்கல்வி நிலையங்களிலிருந்து இந்தப் பெருந்திரள் இடம்பெயர்வு 1960-களில் தொடங்கியது. இந்திய அயலுறவு சேவை, இந்திய ஆட்சிப் பணி சேவை, இந்திய காவல் சேவை போன்றவற்றுக்குச் சில நூறு இடங்களே அரசிடம் நிரப்புவதற்கு இருந்தன. பிறரோ வருவாய் மற்றும் அதுசார்ந்த சேவைகளிலும், பாதுகாப்பும் சாவகாசமும் தருவதும் படிநிலையில் கீழே உள்ளதுமான பணிகளிலும் சேர முடிந்தது.

அமெரிக்காவில் இந்திய சமூகத்தினர் அடைந்துவந்த கொழிப்பில் சக இந்தியர்களாகிய நாங்கள் பெருமையும் பட்டோம். அதே நேரத்தில், சிறிதளவு சங்கடம் இல்லாமலும் இல்லை. மிகவும் அனுகூலம் அடைந்த நம்மவர்கள் மேற்கு நாடுகளுக்குப் போய்க்கொண்டிருந்த நிலையில், விடுதலை பெற்று 70 ஆண்டுகளுக்குப் பிறகும் வறுமை, சமத்துவமின்மையால் இந்தியா தொடர்ந்து அவதிப்பட்டபடியேதான் உள்ளது.

அயல்நாடுவாழ் இந்தியர்கள் - சாதனை படைத்த பொருளாதார வல்லுநர்கள், அறிவியலர்கள், தலைமைச் செயல் அதிகாரிகள் போன்றோர் இந்தியா வளர்ச்சியடைந்த பொருளாதாரமாக மாறுவதற்கு என்ன செய்யவேண்டுமென்றோ, வறுமையை ஒழிக்க எவ்வாறு சம வளர்ச்சியை அடைய வேண்டுமென்றோ அறிவுரை கூறும்போது, அது நல்ல எண்ணத்துடனேயே சொல்லப்பட்டாலும், அவர்கள் இங்கே வசிக்காத நிலையில், அவர்களுக்கு அந்த அறிவுரை கூறுவதற்குத் தகுதியில்லை என்றே பெரும்பான்மையான உணர்வு நிலவுகிறது.

இங்கே வாழும் நாம்தான் அநீதிக்கு எதிரான நமது போர்களை நடத்தி இந்தியாவை வாழ்வதற்கு உகந்த இடமாக மாற்ற வேண்டும். வேறு திரளைச் சேர்ந்த இந்தியர்களும், லட்சக்கணக்கான சாதாரணர்களாக, அமெரிக்காவில் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் கலாச்சாரம், பூர்வீகத்திலிருந்து துண்டிக்கப்பட்டு, உள்வயமாகத் திரும்பி கோயில்களைக் கட்டியபடி, பிராந்திய அடிப்படையிலான சமயரீதியான அமைப்புகளுக்குள் அடைக்கலம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் மேற்கத்திய சமூகத்துக்குள் முழுவதும் பொருந்திப்போக முடியாமல் இருக்கும் பாதுகாப்புணர்வற்ற வெளிநாட்டுவாழ் இந்தியர்கள். அத்துடன் அவர்கள் தங்களது இந்திய வேர்களிலிருந்தும் அந்நியப்பட்டிருப்பவர்கள்.

இந்த வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் அதீத தேசபக்திக்குப் படிப்படியாக ஆட்பட்டவர்களாகவும், பாரம்பரிய இந்துப் புராணிகம் தொடர்பில் பொய்யான செய்திகளைப் பரப்புபவர்களாகவும், இந்தியாவில் உள்ள இந்தியர்கள் தங்கள் பாரம்பரியம், மதம் சார்ந்து பெருமையுடன் இருத்தல் வேண்டுமென்றும், சொந்த தேசத்தில் சிறுபான்மையினராக ஆகிவிடக் கூடாதென்றும் வலியுறுத்துகிறார்கள். ஆனால், அப்படிப் பரப்பும்போது தாங்கள் ஒரு அந்நிய நிலத்தில் சிறுபான்மையினராக வாழ்பவர்கள் என்பதையே மறந்துவிடுகின்றனர்.

மும்பை ஐஐடியைச் சேர்ந்த பட்டதாரியும் அமெரிக்காவில் எம்.டெக். மற்றும் ஆராய்ச்சிப் படிப்பை முடித்த சேஷாத்ரி குமார் இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு, சமீபத்தில் ‘தி வயர்’ இணையப் பத்திரிகையில் எழுதிய கட்டுரையில், உலகின் மக்கள்தொகையில் 18% பங்கை வகிக்கும் நாட்டிலிருந்து ஒரு டஜன் சி.இ.ஓ.க்கள் வருவது ஆச்சரியம் அல்லவென்று எழுதினார். ‘‘அதனால், இந்தக் கொண்டாட்டத்தில் நான் சேரவில்லை. யார் உண்மையில் பெருமைப்பட வேண்டும் தெரியுமா? சீனர்கள்தான். ஏனெனில், சீன மக்கள் அமெரிக்காவுக்கு வந்து உயரத்தை அடைய வேண்டிய தேவையில்லை.

சீனாவில் அமர்ந்துகொண்டே அவர்களால் சாதனைக் கதைகளை உருவாக்க முடிகிறது. கூகுள், மைக்ரோசாஃப்ட், ட்விட்டர் போன்ற நிறுவனங்களின் சி.இ.ஓ.க்களாக இருக்கும் இந்தியர்களைப் போலன்றி, சீனத் தொழிலதிபர்கள் சீனாவிலேயே உலகத்தரம் வாய்ந்த அலிபாபா, டென்சென்ட், டிடி, சியோமி, க்ரேட் வால் மோட்டார்ஸ், ஹவேய், இசட்டிஇ, பாக்ஸ்கான் மற்றும் பல நிறுவனங்களை உருவாக்கியுள்ளனர். அதேபோல இந்தியர்கள் நிறுவனங்களை உருவாக்கும்போது நான் அந்தக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்கிறேன்” என்று எழுதியிருக்கிறார்.

இந்த விஷயம்தான் கொள்கை வகுப்பவர்களை உலுக்கி எழுப்ப வேண்டும். அமெரிக்காவில் சி.இ.ஓ.க்களாக ஆவதற்குப் பொறியாளர்களுக்குப் பயிற்சி கொடுப்பது பெருமை அல்ல. இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்களை உருவாக்குவதற்கான சாதகமான சூழலை உருவாக்குவதோடு நோபல் பரிசுக்குத் தகுதியானவர்களை உருவாக்கும் கல்வி நிலையங்களையும் உருவாக்குதல் அவசியம். இந்தியாவின் சிறந்த மூளைகள் வெளிநாடுகளுக்குப் போகாமல் எப்படித் தடுத்து வசதியான சூழ்நிலையை இந்தியா உருவாக்க முடியும்?

குடியேறிகளின் நாடான அமெரிக்காவோ முதலாளித்துவ, சந்தை சார்ந்த ஜனநாயகம் ஆகும். சீனாவோ கம்யூனிச நாடாக, சர்வாதிகாரத்தோடும் சுதந்திரத்தை ஒடுக்கியும் முதலாளித்துவத்தை அரவணைத்த நாடாகும். இரண்டு நாடுகளுமே பெரும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி, வறுமையையும் ஒழித்துள்ளன. இதில் எதை இந்தியா பின்பற்றுவது? தனது பன்மைத்தன்மையையும் உயிரூட்டமுள்ள ஜனநாயகத்தையும் பாதுகாத்துக்கொண்டே அது எப்படி முன்னேற முடியும்? நமது இளைஞர்கள் இங்கே எதிர்காலத்தைக் காண முடியாமல் மேற்படிப்புக்காக அமெரிக்காவுக்குக் கிளம்புவது குறித்து நாம் சங்கடம் கொள்ளாமல் இருக்க முடியுமா? நம் நாட்டிலுள்ள குடியேறிகள் மற்றும் சிறுபான்மையினரையும் அவர்களுக்கு நமது சமூகத்தில் இருக்கும் அந்தஸ்தையும் எண்ணிப் பிரதிபலிக்க வேண்டாமா? ஒருவேளை இந்தியா ஏழ்மையாக இருப்பதற்கு வளங்களின் இன்மையோ திறமைப் பற்றாக்குறையோ அல்லாமல் அதன் கொள்கைகள், அரசியல், ஆட்சி நிர்வாகம் போன்றவையும் காரணமாக இருக்கலாம்.

- ஜி.ஆர்.கோபிநாத், விவசாயி, ராணுவ வீரர் (ஓய்வு).

‘தி இந்து’. தமிழில்: ஷங்கர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x