Published : 10 Dec 2021 03:06 AM
Last Updated : 10 Dec 2021 03:06 AM

தமிழ் தெரிந்தவர்களுக்கே தமிழ்நாட்டில் அரசுப் பணி: எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

மாநில அரசுப் பணிகளுக்கான அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழித் தாளைக் கட்டாயமாக்கிப் பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணை, வெளிமாநிலத்தவர்கள் தமிழ்நாடு அரசுப் பணிகளில் பெரும் எண்ணிக்கையில் சேர்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்குத் தீர்வாக அமைந்துள்ளது.

10-ம் வகுப்புத் தரத்தில் அமைந்த தமிழ் மொழித் தாளில் 40% மதிப்பெண்களைப் பெற்றிருந்தால் மட்டுமே போட்டித் தேர்வர்களின் மற்ற விடைத் தாள்கள் மதிப்பீட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படும். தமிழ் மொழித் தாளைக் கட்டாயமாக்கி, அரசாணை பிறப்பிக்கப்பட்ட அடுத்த சில நாட்களிலேயே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) 2022-ல் நடத்தவிருக்கும் தேர்வுகளுக்கான உத்தேசப் பட்டியலை வெளியிட்டிருப்பதோடு, இந்த அரசாணைக்கு இணங்கத் தனது தேர்வுகளிலும் மாற்றங்களைச் செய்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 1, 2 மற்றும் 2(ஏ) தேர்வுகளில் தமிழ் மொழித் தாளானது விரிவாக விடையெழுதும் வகையில் இருக்கும் என்றும், குரூப் 3 மற்றும் 4 பணிகளுக்குச் சரியான விடைகளைத் தேர்ந்தெடுக்கும் வகையில் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. வெளிமாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் வசிப்பிடச் சான்றிதழைப் பெற்று, அதன் அடிப்படையில் இங்கு அரசுப் பணிகளில் சேர்ந்துவிடுவது ஒரு குறுக்குவழியாகப் பின்பற்றப்பட்டுவந்தது. இந்நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலுமேகூட தமிழில் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் அரசுப் பணியில் சேர முடியாத நிலை தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளைப் பொறுத்தவரை குரூப் 2 முதன்மைத் தேர்வு தமிழ் மொழித் திறனைப் பரிசோதிக்கும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது. தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் மொழிபெயர்க்கும் திறனைச் சோதிப்பதும் முதன்மைத் தேர்வில் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மொழிபெயர்ப்பு வினாக்கள் கிராமப்புற மாணவர்களுக்குச் சவாலாக இருக்கும் என்று எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அவ்வினாக்கள் தகுதித் தாளாக மட்டுமே கணக்கில் கொள்ளப்படும் என்றும் அது தகுதி வரிசையைத் தீர்மானிக்காது என்றும் உறுதியளிக்கப்பட்டது. குரூப் 2 முதன்மைத் தேர்வின் பாடத்திட்டமும் தேர்வு முறையும் மாற்றப்பட்டாலும் கரோனா காரணமாக அத்தேர்வு நடத்தப்படவில்லை. இந்நிலையில், தமிழ் மொழித் தாளைத் தகுதித் தாளாகக் கொண்டு குரூப் 2 தேர்வுகளுக்கான அறிவிப்பானது வருகின்ற பிப்ரவரியில் வெளியாகவுள்ளது. குரூப் 2 முதன்மைத் தேர்வின் ஒரு பகுதியான தமிழ் மொழித் தாள் தற்போது குரூப் 1 முதன்மைத் தேர்விலும் இடம்பெறவுள்ளது.

தமிழ்நாட்டில் அரசுப் பணியில் சேரும் ஒவ்வொருவரும் தமிழில் அடிப்படையான அறிவைப் பெற்றிருக்க வேண்டும் என்பது புதிய அரசாணையால் நடைமுறைக்கு வந்துள்ளது. டிஎன்பிஎஸ்சி போலவே ஆசிரியர் தேர்வு வாரியம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம், மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் ஆகியவையும் இந்த அரசாணையின்படி தேர்வுகளை நடத்தவிருக்கின்றன. அதே போல, தேர்வுகள் எதுவுமின்றி நேர்காணல் அடிப்படையிலான துறைசார் நியமனங்களிலும் இந்த அரசாணை பின்பற்றப்பட்டால் மட்டுமே சொந்த மாநிலத்தவர்க்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்ற எதிர்பார்ப்புகள் முழுமையாக நிறைவேறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x