Published : 09 Dec 2021 03:06 AM
Last Updated : 09 Dec 2021 03:06 AM

லண்டன் மாநகரில் தமிழ்ப் பாரம்பரிய மாதம்: தமிழர்களுக்கு மரியாதை!

பன்மைத்துவக் கலாச்சாரத்தைக் கொண்ட பெருநகரங்களில் ஒன்றான லண்டன், அதை வெளிப்படுத்தும் விதமாக ஜனவரி மாதத்தைத் தமிழ்ப் பாரம்பரிய மாதமாக ஏற்று, ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தமிழர் திருநாளான தை முதல் நாளை அடிப்படையாகக் கொண்டு, ஜனவரி மாதத்தைத் தமிழ்ப் பாரம்பரிய மாதமாக உலகெங்கும் உள்ள தமிழர்கள் கொண்டாடிவருகின்றனர்.

கனடாவில் 2010-லிருந்து தமிழ்ப் பாரம்பரிய மாதம் கொண்டாடப்படுகிறது. கனடாவில் வாழும் தமிழர்கள் அந்நாட்டின் சமூக, பண்பாட்டு, அரசியல் மற்றும் பொருளாதாரத்துக்கு அளித்துள்ள பங்களிப்புகளை நினைவுகூரும் வகையில், அந்நாட்டு நாடாளுமன்றம் தமிழ்ப் பாரம்பரிய மாதத்தை 2016-ல் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டது. வருகின்ற 2021 ஜனவரியில், ஐரோப்பிய நாடுகளின் காலனியாதிக்கத்துக்குப் பிறகான கடந்த 75 ஆண்டு கால ஈழத் தமிழர்களின் வரலாற்றைப் பேசுவதாகக் கனடாவில் இக்கொண்டாட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.

50-களிலிருந்தே தமிழர்கள் கனடாவுக்குப் புலம்பெயரத் தொடங்கிவிட்டனர் என்றபோதும் 80-களில் தீவிரம் பெற்ற இலங்கை யுத்தத்தின் காரணமாகவே ஈழத் தமிழர்கள் பெருமளவில் அங்கு குடியேறத் தொடங்கினர். லண்டனில் தமிழர்கள் பெருமளவில் குடியேறியதற்குப் பின்னணியிலும் இந்தத் துயரம் உண்டு.

கனடா நாடாளுமன்றத்தை அடுத்து லண்டன் மாநகர சபையும் தற்போது தமிழ்ப் பாரம்பரிய மாதத்தை அனுசரிக்க முடிவெடுத்துள்ளது. லண்டன் வளர்ச்சியில் தமிழர்களின் பங்களிப்புகளைப் பாராட்டியுள்ள மாநகர சபை அங்கத்தினர்கள், தமிழின் மொழி வளத்தையும் பண்பாட்டு வளத்தையும் குறித்துத் தங்களது உரையில் குறிப்பிட்டுள்ளனர்.

தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய நிக்கோலஸ் ரோஜர்ஸ், ‘இங்கிலாந்தின் தேசிய நல்வாழ்வுச் சேவைத் துறையில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 15,000-க்கும் மேற்பட்ட தமிழர்கள் மருத்துவர்களாகவும் செவிலியர்களாகவும் முன்கள மருத்துவப் பணியாளர்களாகவும் பணிபுரிந்துவருகின்றனர். ஆயிரக்கணக்கான தமிழர்கள் லண்டனில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றுகின்றனர். தவிர, வயதுவந்தோருக்கான நூற்றுக்கும் மேற்பட்ட பாதுகாப்பகங்கள் தமிழர்களால் நடத்தப்பட்டுவருகின்றன. ஆஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசியை உருவாக்கியதிலும் தமிழ் விஞ்ஞானிகளின் பங்கேற்பு உண்டு’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தீர்மானத்தை ஆதரித்துப் பேசிய உமேஷ் தேசாய், ‘1984-ல் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெரும்பாலான தமிழ்க் குடும்பங்கள் தங்கள் வீட்டில் ஒருவரையேனும் இழந்தார்கள்’ என்பதை நினைவுகூர்ந்துள்ளார். உள்நாட்டில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் உயிர் பிழைத்து, கையறு நிலையில் ஏதிலிகளாக லண்டனில் தஞ்சம் புகுந்த ஈழத் தமிழர்கள், இன்று அங்கு வாழும் அனைத்து மக்களிடமும் நன்மதிப்பைப் பெற்று, தமிழரின் பெருமையை நிலைநாட்டியுள்ளனர். தமிழ் பேசும் நிலப் பகுதிகளில் கொண்டாடப்பட்டுவந்த அறுவடைத் திருநாளாம் பொங்கல், இன்று தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் கொண்டாடப்படுவது தமிழருக்கு அளிக்கப்பட்டிருக்கும் தனி மரியாதை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x