Published : 09 Dec 2021 03:06 AM
Last Updated : 09 Dec 2021 03:06 AM

தமிழ் இலக்கியங்கள் பறைசாற்றும் பாரம்பரிய நெல் ரகங்கள்

மு.வ.கருணை ஜெபா மேரி, பவேணுதேவன்

உலகத்தின் எந்த நாகரிகத்தையும் எந்த இலக்கியத்தையும் ஆராய்ந்து பார்த்தால், அவற்றில் மக்களின் வாழ்க்கையுடன் வேளாண்மை இணைந்தே இருப்பதைக் காண முடிகிறது. நம் தமிழ் இலக்கியங்களிலும் வேளாண்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டுள்ளது.

பழந்தமிழகத்தில் மக்களின் தலையாய வாழ்க்கை முறையாக உழவுத் தொழில் இருந்திருக்கிறது. உழவும் உழவு சார்ந்த தொழில்களும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை நிர்ணயித்தன. தமிழ் இலக்கியங்களில் நெல் சாகுபடி பற்றியும் அவற்றின் ரகங்களைப் பற்றியும் அதிகமாக எழுதப்பட்டுள்ளது. இதிலிருந்து நெல் ஒரு முதன்மைப் பயிராகப் பழங்காலத்திலிருந்தே விளங்கியிருக்கிறது என்பது தெரிகிறது.

நெல் ரகங்கள்

எட்டுத்தொகை நூல்களான குறுந்தொகை, பதிற்றுப்பத்து, நற்றிணை மற்றும் பத்துப்பாட்டு நூல்களான மதுரைக்காஞ்சி, பொருநராற்றுப்படை, மேலும் சிற்றிலக்கியங்களில் முக்கூடற்பள்ளு போன்ற பல தமிழ் இலக்கியங்கள் நெல் ரகங்களைப் பற்றிப் பறைசாற்றியிருக்கின்றன. குறுந்தொகையில் ‘செந்நெல் அமலை வெண்மை வெள்இழுது’ என்ற வரியில் ‘செந்நெல்’ என்ற நெல் ரகம் சிவந்த நிறத்தில் காணப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ‘அருவி பரப்பின் ஐவனம் வித்தி’ என்ற வரியில் அருவியைக் கொண்டிருக்கும் இடத்தில் வளரக்கூடிய மலை நெல்லான ‘ஐவனம்’ என்ற நெல்லின் சிறப்புகளை அறிந்துகொள்ளலாம்.

பதிற்றுப்பத்துப் பாடலில் ‘முடந்தை நெல்லின் கழையமல் கழனிப் பிழையா விளையு ணாடகப் படுத்து’ என்ற வரிகளின் மூலம், வளைந்த கதிர்களைக் கொண்டதும் மூங்கிலைப் போல தாள்களுடையதும் தவறாமல் விளைச்சல் தருவதும் மருதநிலத்தில் விளைவதுமான ‘முடந்தை’ என்ற நெல் ரகத்தைப் பற்றி அறிந்துகொள்ளலாம். மேலும் ‘மையூன் பெய்த வெண்ணெல் வெண்சோறு’ என்ற பாடலின் அடிகளின் மூலம் ‘வெண்ணெல்’ என்ற நெல்லைக் கொண்டு வெண்சோற்றை சமைத்ததாகப் பதிற்றுப்பத்துப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பத்துப்பாட்டில் இரண்டாவதான பொருநராற்றுப்படையில் ‘சாலி நெல்லின் சிறை கொள் வேலி’ என்ற வரியில் ‘சாலி’ என்னும் நெல்லை அறுவடை செய்து, சிறை வைக்கப்பட்டுக் கிடக்கும் பாதுகாப்பு மிக்க வேலிதான் காவிரி பிறக்கும் நாடு என்று போற்றப்பட்டுள்ளது. வேலி என்றால் நில அளவை என்பதைக் குறிக்கிறது. கரிகாலன் காலத்தில் ஒரு வேலி நிலத்தில் ஆயிரம் மூட்டைகள் ‘சாலி’ என்னும் நெல் விளைந்ததாகக் கூறப்படுகிறது. மதுரைக்காஞ்சியில் ‘வித்திய குறுங்கதிர் தோரை’ என்ற வரிகளில் மேட்டு நிலத்தில் குறுகிய கதிர்களையுடைய ‘தோரை’ என்னும் நெல் விளைந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

‘முக்கூடற்பள்ளு’ சிற்றிலக்கியத்தில் உழவர்கள் பயன்படுத்திய உழவுத் தொழிலுக்கு அடிப்படையான நெல் விதைகளைப் பற்றியும் அவற்றின் வகைகளான மணல்வாரி, பூம்பாளை, திருமங்கையாழ், மச்சுமுறித்தான், சொரிகுரும்பை, பெருவெள்ளச்சம்பா, சித்திரைக்காலி, வாலான், செஞ்சம்பா, கருஞ்சூரை, சீரகச்சம்பா, முத்து விளங்கி, மலைமுண்டன், பொற்பாளை, நெடுமூக்கன், அரிக்கிராவி, மூங்கிற்சம்பா, கத்தூரிவாணன், காடைக்கழுத்தன், இரங்கல் மீட்டான், கல்லுண்டை, பாற்கடுக்கன், வெள்ளைச்சம்பா, கருங்குறுவை, புனுகுச்சம்பா போன்ற நெல் ரகங்களைப் பற்றிப் ‘பல வெள்ளாமையிட்டேன் மணல் வாரியை…’ என்று தொடங்கும் முக்கூடற்பள்ளு பாடலிலிருந்து அறிந்துகொள்ளலாம்.

ரகங்களின் சிறப்பியல்புகள்

தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பாரம்பரிய நெல் ரகங்களின் சிறப்பியல்புகளை நாம் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்வது அவசியம். காடைக்கழுத்தன் என்ற நெல் ரகம் சம்பா சாகுபடிக்கு ஏற்றது. 120 நாட்கள் வளரும் பயிர் இது. கருடனுடைய கழுத்துப் பகுதியைப் போன்ற தோற்றத்தை நெல்மணிகள் பெற்றிருப்பதால் ‘காடைக்கழுத்தன்’ என்று பெயர் பெற்றது. இந்த ரகத்தில் சாம்பல் சத்து, புரதச் சத்து, பொட்டாசியம், இரும்பு, மக்னீசியம், துத்தநாகம், பாஸ்பரஸ், கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

ஏக்கருக்கு 1,350 கிலோ வரை மகசூல் கிடைக்கும். ‘கருங்குறுவை’ என்ற நெல் ரகம் நவரை மற்றும் குறுவைப் பட்டத்துக்கு ஏற்றது, சித்த மருத்துவத்தில் யானைக்கால் நோயையும் நீரிழிவு நோயையும் கட்டுப்படுத்த ஏற்ற ரகமாக இது அறியப்படுகிறது. ‘பூம்பாளை’ என்ற நெல் ரகம் சம்பா சாகுபடிக்கு ஏற்றது, சிவப்பு நிற மோட்டா அரிசித்தன்மை கொண்டது, ஏக்கருக்கு 1,100 கிலோ வரை மகசூல் கிடைக்கும். இட்லி, தோசைக்கு ஏற்றது. இது நான்கு முதல் ஐந்து மாதம் வரை வளரக்கூடிய பயிராகும். ‘சீரகச்சம்பா’ என்ற நெல் ரகம் நவரை மற்றும் சம்பா பட்டத்துக்கு ஏற்றது.

மிகவும் சன்னமாகவும் வாசனை கொண்டதாகவும் இருப்பதால் பிரியாணி செய்வதற்குச் சிறந்தது, ஏக்கருக்கு 1,500 கிலோ வரை சீரகச்சம்பா மகசூல் கிடைக்கும். ‘கல்லுண்டை’ என்ற நெல் 110 நாள் பயிர், ஏக்கருக்கு 1,110 கிலோ வரை மகசூல் கிடைக்கும். ‘வாலான்’ நெல் 160 நாள் பயிர், ஏக்கருக்கு 800 கிலோ வரை மகசூல் கிடைக்கும். ‘சொரிகுரும்பை’ என்ற நெல் 210 முதல் 240 நாட்கள் வரை வளரக்கூடிய பயிர். ‘பெருவெள்ளச்சம்பா’ என்ற நெல் ரகம், சம்பா பருவத்துக்கு ஏற்ற ரகம். ‘குலவாழை’ என்ற நெல் 210 முதல் 240 நாட்கள் வரை வளரக்கூடிய பயிர், சம்பா பருவத்துக்கு ஏற்ற ரகம்.

இயற்கை வழியில் விவசாயம் செய்யும் விவசாயிகளும் இயற்கை ஆர்வலர்களும் இன்றும் பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாத்துப் பயிரிட்டுப் பரவலாக்கும் பணியைச் செய்துவருகிறார்கள். பாரம்பரிய நெல் ரகங்களில் பல சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. மேலும், பூச்சிகளுடனும் நோய்களுடனும் திறம்படப் போராடும் எதிர்ப்புச் சக்தி கொண்டதாகவும் உள்ளன. இவ்வளவு சிறப்புமிக்கதும், தமிழ் இலக்கியங்கள் பறைசாற்றுவதுமான பாரம்பரிய ரகங்களைப் பாதுகாத்துவரும் விவசாயிகளோடு சேர்ந்து, நாம் ஒவ்வொருவரும் அடுத்த தலைமுறைக்கு அந்த நெல் ரகங்களின் சிறப்புகளை எடுத்துக்கூறுவது நமது கடமையாகும்.

- மு.வ.கருணை ஜெபா மேரி, ஆராய்ச்சியாளர் (வேளாண் விரிவாக்கம்), தொடர்புக்கு: jebamarymv@gmail.com;

ப.வேணுதேவன், உதவிப் பேராசிரியர் (விதை அறிவியல்), வேளாண்மை அறிவியல் நிலையம், அருப்புக்கோட்டை, தொடர்புக்கு: venudevan.b@tnau.ac.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x