Published : 08 Dec 2021 04:07 AM
Last Updated : 08 Dec 2021 04:07 AM

கிறித்தவப் புதிரை வண்ணார்கள் புறக்கணிக்கப்படுவது ஏன்?

அ.இருதயராஜ்

“இந்த நாட்டில் மரணத்திற்குப் பிறகும்கூட சாதி மனிதனை விடவில்லை” என்ற கவலையை சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். பொது மயானம் அல்லது பொதுக் கல்லறை என்று அறிவிக்கப்பட்ட இடத்தில், அனைத்துத் தரப்பினரையும் புதைப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் பொதுக் கல்லறையில் விளிம்புநிலை மக்களைப் புதைப்பதற்கு சாதி அடிப்படையில் அனுமதி மறுக்கப்பட்டால், அது தண்டனைக்குரிய குற்றம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவர் சொன்னதுபோலவே கத்தோலிக்கத் திருஅவையில் விளிம்புநிலை மக்கள் என்று அறியப்படுகின்ற கிறித்தவ புதிரை வண்ணார்கள், இறந்த பின்பு பொதுக் கல்லறையில் அடக்கம் செய்யப்படுவதற்கு இடம் மறுக்கப்படுகிறது.

வடதமிழகத்தில் கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி போன்ற மாவட்டங்களில் கிறித்தவப் புதிரை வண்ணார்கள் கணிசமானோர் இருக்கிறார்கள். 16-ம் நூற்றாண்டிலிருந்து கிறிஸ்தவர்களாக மாறிய இவர்கள் சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டு, சமயத் தளங்களில் பன்முனை ஒடுக்குதலுக்கும் புறக்கணிப்புக்கும் ஆளாகிறார்கள். சிதைக்கப்பட்ட தங்களின் மாண்பை எந்த விதத்திலும் தூக்கிப் பிடிக்க முடியாமல் கூனிக் குறுகி வாழ்கிறார்கள். துரும்பர், ஏகாலி, இரவாளி என்றும் இவர்கள் அழைக்கப்படுகின்றனர்.

பொதுச் சமூகத்தின் பார்வையிலும், தலித்துகளின் அணுகுமுறையிலும் இவர்கள் கடைசாதியாக நடத்தப்படுகிறார்கள். பெரும்பாலும் இவர்கள் ஒரு கிராமத்துக்கு ஒரு குடும்பம் அல்லது இரண்டு குடும்பங்கள் என்று வாழ்கிறார்கள். எண்ணிக்கை பலம் இவர்களிடம் இல்லை. அதுதான் இவர்களின் மிகப் பெரிய பலவீனம். அதனால், இவர்களின் குரல் எங்கேயும் எடுபடுவதில்லை. ஊரார் விட்ட வீடு, ஊரார் போட்ட சோறு, ஊரார் கொடுத்த துணி, ஊரார் தந்த வேலை, ஊரார் விதித்த கூலி, கடைசியில் ஊரார் காட்டிய கல்லறை என்று எல்லா அடிப்படை உரிமைகளுக்கும் பிறரைச் சார்ந்தே வாழ வேண்டிய அவல நிலை.

அரசியல் தளத்தில் எந்த செல்வாக்கும் அற்றவர்களாக இவர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்காகப் பேசவும் இவர்களை ஓரணியில் திரட்டவும் தலைவர்கள் யாரும் இல்லை. அம்பேத்கர், பெரியார், ரெட்டமலை சீனிவாசன், இமானுவேல் சேகரன் போன்ற தலைவர்கள் இவர்களுக்கு இல்லை. அதனால், எந்தத் தலைவரின் வழிகாட்டுதலில் ஒன்றிணைய வேண்டும் என்ற அடையாளச் சிக்கல் இருக்கின்றது. தமிழ்நாடு அரசு கொண்டுவந்த புதிரை வண்ணார் நல வாரியத்தில் இவர்கள் உறுப்பினர்களாகச் சேர முடியவில்லை.

ஏனென்றால், கிறித்தவப் புதிரை வண்ணார்கள் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் கீழ் வருகின்றனர். எனவே, இந்து புதிரை வண்ணார்களுக்கு அரசு வழங்கும் எந்தச் சலுகைகளும் இவர்களுக்குக் கிடைப்பதில்லை. மேலும், சாதிச் சான்றிதழும் இவர்களுக்குக் கிடைப்பதில்லை. எனவே, இவர்களின் பிள்ளைகள் உயர் கல்விக்குச் செல்ல முடியாமல் தவிக்கிறார்கள். பொருளாதாரத் தளத்தில் இவர்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் செய்துவந்த சலவைத் தொழிலை இப்போது யாரும் செய்ய முன்வருவதில்லை.

எனவே, மாற்றுத் தொழிலைத் தேடிப் பக்கத்து ஊர்களுக்கும் நகரங்களுக்கும் குடிபெயர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இளைஞர்கள் புதிரை வண்ணார் என்ற அடையாளத்தை மாற்றிக்கொள்வதற்காக வெளியூர் சென்று மாற்று வேலைகளில் ஈடுபடுகின்றனர். முன்னொரு காலத்தில் விவசாயம் செய்வதற்காக இலவசமாகக் கொடுக்கப்பட்ட நிலங்களும் இவர்களிடமிருந்து அபகரிக்கப்பட்டுவிட்டன.

இவர்களைப் பகலில் பார்த்தால் தீட்டு என்ற மோசமான சம்பிரதாயத்தால் இரவில் மட்டுமே இவர்கள் நடமாடுவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் ஏரி, குளம், குட்டை, ஓடை, சாலையோரம், குப்பைகள் கொட்டுகின்ற இடம், கழிவுநீர்த் தேக்கம், சுடுகாடு, கல்லறையின் பக்கம் என்று புறம்போக்கு நிலங்களில் வாழ்கிறார்கள்.

பெரும்பாலும் ஊர் மக்கள் பார்த்து எந்த வேலை கொடுத்தாலும் செய்யத் தயாரான மனநிலையில்தான் இவர்கள் வாழ்கிறார்கள். இந்த மக்களுக்கென்று தனிப்பட்ட விழாக்களும் கொண்டாட்டங்களும் இல்லை. ஊரார் நடத்தும் விழாக்களிலும் பங்கேற்க முடிவதில்லை. எட்ட நின்று வேடிக்கை பார்ப்பவர்களாகத்தான் இவர்கள் இருக்கிறார்கள். ஆதிக்க சாதி ஆண்களால், இளம் பெண்கள் மீது எந்த நேரத்திலும் பாலியல் வன்முறை நிகழ்த்தப்படலாம் என்ற அச்சம் வேறு.

அடிப்படையில் சமத்துவத்தைப் போதிக்கும் கிறித்தவ மதத்தைப் பின்பற்றினாலும், சாதியப் படிக்கட்டுகளில் இவர்கள் கடைசி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால், நிறுவனப்படுத்தப்பட்ட கிறித்தவ அமைப்புகள் இவர்களின் மீது கவனம் செலுத்துவதில்லை. ஆதிக்க சாதியினர் வீட்டில் இறப்பு நிகழும்போது சாவுச் சடங்குகளான நடைப்பாவாடை விரித்தல், அரிச்சந்திரக் கோடு, நடுக்கட்டான் சடங்கு அனைத்தையும் இவர்கள்தான் செய்கிறார்கள். அவற்றைச் சரியாகச் செய்யவில்லை என்று அவர்களை உதைத்தும் அடித்தும் துன்புறுத்தியது உண்டு. ஆனால், இவர்களுடைய வீட்டில் இறப்பு நிகழும்போது, அந்தப் பிணத்தை எங்கு புதைப்பது என்ற கவலையில் தவிக்கிறார்கள். எனவே, அந்த நேரத்தில் புறம்போக்கு இடத்தில் ஊரார் பார்த்து எங்கு புதைக்கச் சொல்கிறார்களோ அங்கே புதைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

ஒவ்வொரு மனிதரும் இந்த மண்ணில் பிறப்பதற்கு உரிமை இருப்பதுபோல, இறக்கும்போது மாண்புடன் புதைக்கப்படுவதற்கும் உரிமை இருக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டம் (சட்டக் கூறுகள் 15,16,17) இவற்றை அடிப்படை உரிமைகளாகக் கோடிட்டுக் காட்டியுள்ளது. தமிழ்நாட்டுக் கத்தோலிக்க ஆயர் பேரவையும் தமிழ்நாடு-புதுச்சேரி துறவியர் பேரவையும் 1990-ல் வெளியிட்ட 10 செயல்திட்டங்களில் வழிபாட்டுத் தலங்களில் அட்டவணை சாதி கிறித்தவர்கள் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதையும் பொதுக் கல்லறையில் சமமாகப் புதைக்கப்பட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறது.

இறந்துபோன கிறித்தவர்கள் எப்படி மாண்புடன் புதைக்கப்பட வேண்டும் என்கின்ற வழிகாட்டு நெறிமுறைகளை வாடிகன் வகுத்துக் கொடுத்துள்ளது. அதாவது, இறந்த பின்பு ஒரு நாள் உயிர்ப்போம் என்ற நம்பிக்கையை கிறித்தவம் போதிக்கிறது. இறந்த பின்பு ஒருவர் சவமாக மாறினாலும், அந்த உடல் அவருடைய அடையாளமாக இருக்கிறது. எனவே, இறந்த உடலை மதிப்புடனும் மாண்புடனும் அர்ச்சிக்கப்பட்ட இடத்தில் புதைக்கப்பட வேண்டும் என்று வாடிகன் வலியுறுத்தியுள்ளது. இந்த மண்ணில் வாழும்போது சாதியின் இழிவையும் தீண்டாமைக் கொடுமையையும் புதைக்க முடியவில்லை. இறந்த பின்பு பொதுக் கல்லறையில் பிணங்களைப் புதைக்கவும் முடியாமல் தவிக்கும் கிறித்தவப் புதிரை வண்ணார்களின் மீது தமிழ்நாட்டு அரசும், கத்தோலிக்க நிறுவனத் திருஅவையும் கவனத்தைத் திருப்ப வேண்டும்.

- அ.இருதயராஜ் சே.ச., துறைத் தலைவர், காட்சித் தகவலியல், லயோலா கல்லூரி.

தொடர்புக்கு: iruraj2020@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x