Last Updated : 07 Dec, 2021 03:06 AM

 

Published : 07 Dec 2021 03:06 AM
Last Updated : 07 Dec 2021 03:06 AM

டெங்குவை ஒழிக்கும் பாக்டீரியா தொழில்நுட்பம்!

மழைக்காலம் தொடங்கிவிட்டால் கொசுக்களால் ஏற்படும் நோய்கள் உற்சாகமாகிவிடும். மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா, ஜிகா என வரிசைகட்டி வரத் தொடங்கிவிடும். இவற்றில் டெங்குவின் பாய்ச்சல்தான் இப்போது அதிகம்.

‘டெங்கு’ (Dengue) எனும் வைரஸால் டெங்கு காய்ச்சல் வருகிறது. ‘ஏடீஸ் எஜிப்டை’ (Aedes Aegypti) எனும் கொசுக்கள் இதைப் பரப்புகின்றன. டெங்குவால் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கடிக்கும் ஏடீஸ் வகைப் பெண் கொசுக்கள், அந்தக் கிருமியை அடுத்தவரின் உடலுக்குள் செலுத்துகின்றன. அதன் மூலம் அடுத்தவருக்கும் டெங்கு பரவுகிறது. உலக அளவில் ஆண்டுதோறும் 5 கோடிப் பேரை இது பாதிக்கிறது.

டெங்குவுக்கு எதிரான போரில் கொசுக்களை ஒழிப்பதுதான் முக்கிய நோக்கம். இந்தப் போர் தொடங்கி ஒரு நூற்றாண்டு கடந்துவிட்டது. கொசுக்களைக் கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவது, மலட்டு ஆண் கொசுக்களை வளிமண்டலத்தில் விடுவிப்பது, நீர்நிலைகளில் ‘கம்பூசியா அஃபினிஸ்’ (Gambusia affinis) எனும் மீன்களை வளர்ப்பது போன்றவை இந்தப் போரின் முக்கிய உத்திகள். ஆனால், இவற்றைத் தொடர்ந்து செய்ய வேண்டிய கட்டாயம் ஒரு பெருங்குறை.

டெங்குவுக்குத் தடுப்பூசி

அடுத்த உத்தி, தடுப்பூசி. டெங்கு வைரஸில் DEN-1, DEN-2, DEN-3, DEN-4 என 4 விதமான ரத்த இனங்கள் (Serotypes) உள்ளன. இந்த நான்கையும் தடுக்கும் ஒற்றைத் தடுப்பூசியைக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல. அந்தச் சிரமத்திலும், சனோஃபி பாஸ்ட்டர் நிறுவனம் (Sanofi Pasteur) தயாரித்த ‘டெங்வாக்சியா’ (Dengvaxia) தடுப்பூசி 2015-ல் செயலுக்கு வந்தது. இது டெங்குவுக்கு 78% பாதுகாப்பு தருவதாக ஆய்வுகளில் அறியப்பட்டன.

ஆனால், ஏற்கெனவே டெங்கு ஏற்பட்டவர்களுக்கு மட்டுமே இந்தப் பாதுகாப்பு கிடைக்கும். டெங்கு ஏற்படாதவர்களுக்கு இதைப் பயன்படுத்தினால் டெங்கு காய்ச்சல் தீவிரமடைகிறது. 2017-ல் இப்படி வந்த களப்பதிவுகள் கலவரப்படுத்தின. இதனால், அனைவருக்கும் இதைப் பயன்படுத்துவது சிரமமாயிற்று. அண்மையில், இந்தியாவில் ஜைடஸ் கெடிலா நிறுவனம் ‘டிஎன்ஏ தடுப்பூசி’யைத் தயாரித்துள்ளது. இதன் பலன்கள் இனிமேல்தான் தெரியவரும்.

நவீன யுத்தம்

பருவநிலை மாற்றம் காரணமாக டெங்கு கொசுக்களின் எண்ணிக்கை அண்மைக் காலமாக அதிகரித்துவருகிறது. டெங்கு கொசு பகலில் மட்டுமே கடிக்கும் என்று இதுவரை நம்பப்பட்டது. தற்போது இரவிலும் கடிக்கும் அளவுக்கு இது பரிணமித்துவிட்டது. மேலும், கொசுக்களின் ஆயுட்காலம் 20-லிருந்து 40 நாட்களாக அதிகரித்துள்ளது. இவற்றின் மொத்த விளைவாக, உலகில் டெங்கு பாதிப்பு ஏறுமுகத்தில் உள்ளது.

இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண, 1924-ல் கண்டுபிடிக்கப்பட்ட ‘வோல்பாச்சியா’ (Wolbachia) எனும் பாக்டீரியா பயன்பட்டுள்ளது. இது பழ ஈக்கள், வண்ணத்துப்பூச்சிகள், தட்டான்கள், அந்திப்பூச்சிகள் உள்ளிட்ட 60% பூச்சி இனங்களில் இயற்கையாகவே காணப்படுகிறது. இந்த பாக்டீரியா மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பாதுகாப்பானது எனவும், சூழலுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் ஏற்கெனவே அறியப்பட்டது. 1991-ல் ஆஸ்திரேலியாவில் குவின்ஸ்லாந்து பல்கலைக்கழகப் பேராசிரியர் ஸ்காட் ஓநெய்ல்தான் (Scott O’Neill) முதன்முதலில் டெங்குவுக்கும் இந்த பாக்டீரியாவுக்கும் உள்ள தொடர்பைத் தெரிவித்தவர்.

இந்த பாக்டீரியா தொற்றியுள்ள கொசுக்கள் டெங்கு கிருமியைப் பரப்பும் தன்மையை இழப்பது ஆஸ்திரேலியாவில் 2009-ல் நடத்தப்பட்ட ஆய்வுகளில் உறுதியானது. ஆனால், இந்த பாக்டீரியா டெங்கு கொசுக்களில் இயற்கையாகக் காணப்படவில்லை. எனவே, இதை ஆய்வகங்களில் வளர்த்து, நவீனத் தொழில்நுட்பத்தில் கொசு முட்டைகளுக்குள் செலுத்த முடிவு செய்யப்பட்டது. இந்த ஆய்வுகளில், 2014-ல் இந்தோனேசியாவில் யோக்யகர்த்தா நகரில் நிகழ்ந்த ஆய்வு முக்கியமானது.

ஆய்வு செயல்படுவது எப்படி?

‘உலகக் கொசுத் திட்டம்’ (World Mosquito Program) எனும் பெயரிடப்பட்ட இந்த ஆய்வுத் திட்டம், பொதுச் சமூகத்தின் முழுமையான ஒத்துழைப்புடன் செயல்படுகிறது. ஆய்வாளர்கள் முதலில் 50 லட்சம் கொசு முட்டைகளுக்கு வோல்பாச்சியா தொற்றை ஏற்படுத்தினர். யோக்யகர்த்தா நகரம் 24 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, அவற்றில் பாதியில் மட்டும் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை, 50 மீட்டர் இடைவெளியில் இந்தக் கொசு முட்டைகளை வாளித் தண்ணீரில் கலந்து வைத்தனர். அவற்றில் கொசுக்கள் வளர்ந்ததும் வளிமண்டலத்தில் விடுவித்தனர்.

பின்னர், கொசுக்கள் விடுவிக்கப்படாத மற்ற மண்டலங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தனர். கொசுக்கள் விடுவிக்கப்பட்ட மண்டலங்களில் டெங்கு பாதிப்பு 77% கட்டுப்படுவதும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 86% குறைந்திருப்பதும் தெரியவந்தன. அண்மையில் வெளிவந்துள்ள ‘நியூ இங்கிலாந்து ஜெர்னல் ஆஃப் மெடிசின்’ இதழில், இந்த ஆய்வின் தரவுகள் தரப்பட்டுள்ளன. இந்த வெற்றியைத் தொடர்ந்து, டெங்கு பாதிப்பு அதிகமுள்ள கொலம்பியா, பிரேசில், மெக்சிகோ, வியட்நாம், ஃபிஜி, இலங்கை உள்ளிட்ட 12 நாடுகளில் ‘உலகக் கொசுத் திட்டம்’ விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த வெற்றி எப்படிக் கிடைத்தது?

வோல்பாச்சியா பாக்டீரியாக்கள் தொற்றியுள்ள கொசுக்களின் உடலில் டெங்கு வைரஸ்களால் வழக்கம்போல் நகலெடுத்து வளர முடிவதில்லை. இது டெங்குவுக்குக் கொடுக்கப்படும் முதல் அடி. அடுத்து, பாக்டீரியா உள்ள ஆண் கொசுவோடு பாக்டீரியா இல்லாத பெண் கொசு கலவி செய்யுமானால் அந்தப் பெண் கொசு முட்டையிடாது. பாக்டீரியா இல்லாத ஆண் கொசுவும், பாக்டீரியா உள்ள பெண் கொசுவும் கலவி செய்யுமானால், முட்டை இடும். ஆனால், அந்த முட்டைகளில் பிறக்கிற கொசுக்களுக்குள்ளும் வோல்பாச்சியா காணப்படும்.

அது அடுத்த தலைமுறை கொசுக்களின் கருத்தரிப்புக்குத் தடைபோடும். இன்னொன்று, வோல்பாச்சியா பாப்கார்ன் (Wolbachia popcorn) எனும் தனியின பாக்டீரியா கொசுக்களின் ஆயுளையும் குறைக்கிறது. ‘இப்படி, அடுத்தடுத்துக் கொடுக்கப்படும் அதிரடியான அடிகள் டெங்கு கொசுக்களின் உற்பத்தியைக் கணிசமாகக் குறைத்துவிடுவதால், வைரஸ் வாழ இடமில்லாமல் போகிறது. அப்போது டெங்கு மட்டுமல்லாமல், சிக்குன்குனியா, ஜிகா, மஞ்சள் காய்ச்சல் போன்றவை பரவுவதும் குறைகிறது’ என்கின்றனர் ஆய்வாளர்கள்.

பொதுச் சுகாதாரம் குறைவாக உள்ள இந்தியாவில் டெங்குவின் வீரியம் அதிகரித்துவருவது கண்கூடு. உயிரிழப்புகளும் கூடுதல். இவற்றைக் கையாளும் அரசுக்கும் மக்களுக்கும் ஏற்படுகிற செலவினங்களால் பொருளாதாரச் சுமையும் தொடர்ந்து அதிகரிக்கிறது. கரோனாவைச் சமாளிப்பதோடு டெங்குவுக்கு எதிராகவும் போராட வேண்டிய இன்றைய சூழலில், 12 நாடுகளில் டெங்குவுக்கு மூடுவிழா நடத்திவரும் ‘பாக்டீரியா தொழில்நுட்பம்’ இந்தியாவுக்கும் பயன்படலாம். அரசுகள் பரிசீலிக்க வேண்டும்.

- கு.கணேசன், பொதுநல மருத்துவர், தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x