Published : 07 Dec 2021 03:06 am

Updated : 07 Dec 2021 06:51 am

 

Published : 07 Dec 2021 03:06 AM
Last Updated : 07 Dec 2021 06:51 AM

ஒயில் கும்மி ஆடலாமா?

oyil-kummi-dance

சா.கவியரசன்

ஜி.வி.பிரகாஷின் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘பேச்சுலர்’ என்ற திரைப்படத்தின் ‘கவன்’ என்ற பாடல் இணையத்தில் பிரபலமாகியுள்ளது. மிகவும் நெருக்கமானதாகவும், அதே சமயத்தில் புதிதாகவும் இருக்கிறதே என்ற ஆர்வத்தில் பலரும் அந்தப் பாடல் என்ன வகை என்று தேடிப்பார்த்தபோதுதான் தெரிந்தது, அது கொங்கு மண்டலத்தில் பிரபலமான பாரம்பரிய ஒயில் கும்மி வகை என்று.

கலைகளில் எவ்வளவுக்கு எவ்வளவு மண் சார்ந்த தன்மையை முன்னெடுக்கிறோமோ, அந்த அளவுக்கு அவை உலகளாவிய தன்மையை அடைகின்றன. இதற்கு, டால்ஸ்டாய், தஸ்தயேவ்ஸ்கி போன்றோரின் படைப்புகள், ஈரானியத் திரைப்படங்கள் போன்றவற்றை எடுத்துக்காட்டுகளாகச் சொல்லலாம். இப்படி உலக ரசிகர்களால் கொண்டாடப்படும் பல கலைப் படைப்புகள் அவர்களின் மண் சார்ந்த தன்மையின் அடையாளத்தை முன்வைக்கின்றன. ஆஸ்கருக்கு இந்த வருடம் இந்தியா சார்பாகப் பரிந்துரைக்கப்பட்ட திரைப்படமான ‘கூழாங்கல்’ நம் மண் சார்ந்த பிரச்சினையை உண்மைக்கு நெருக்கமாகச் சித்தரித்திருப்பதையும் கவனிக்கலாம். கேரளத் திரைப்படங்களும் இந்தத் தனித்தன்மையைக் கொண்டவை.

பல கலைகளின் தொகுப்பை வெகுஜன மக்களுக்கு எளிமையாகக் கொண்டுசேர்க்கும் மிகப் பெரிய தளம், திரைப்படம். இந்தியத் திரைப்படங்களுக்கே உண்டான சிறப்பு, பாடல்கள். அன்னக்கிளியின் ‘மச்சான பாத்தீங்களா’விலிருந்து கர்ணனின் ‘கண்டா வரச் சொல்லுங்க’ வரையில், மண் சார்ந்த பாடல்கள் திரைப்பட ரசிகர்களால் வெகுவாகவே கொண்டாடப்பட்டிருக்கின்றன. திரைப்படத்தின் பிரபலத்துக்கும், அதன் வெற்றிக்கும் அந்த மண் சார்ந்த இசை மிகவும் முக்கியமானதாகவே இருக்கிறது. பறையாட்டம், காவடியாட்டம், கரகாட்டம், கானா, கும்மி, ஒப்பாரி, தாலாட்டு என நம் பாடல்களைத் திரைப்பட ரசிகர்கள் கொண்டாடத் தவறவில்லை. இருந்தும் இன்னும் நம் மண்ணின் ஒப்பற்ற இசை, நடனக் கலைகள் பலவும் பயன்படுத்தப்படாமலேயே இருக்கின்றன. அவற்றுள் ஒன்றுதான் ஒயில் கும்மியாட்டம்.

ஒயிலாட்டம் தென்தமிழகத்தின் பிரபலமான நடனமும் கும்மியும் தமிழகம் முழுக்கவே பிரபலம். இந்த இரண்டும் சேர்ந்ததுபோல் பாடிக்கொண்டே ஆடும் நடனம்தான் ஒயில் கும்மி. இது கொங்கு மண்டலத்தில் வேளாண் மக்கள் ஆடும் நடனம். இந்தக் கலை அழிந்துவரும் நிலையில்தான், 15 ஆண்டுகளாக இதிலேயே தன் முழு அர்ப்பணிப்பையும் செலுத்தி, இதனைப் பிரபலப்படுத்திவருகிறார், ஆடை தொழில்நுட்பம், யோகா, உளவியலில் முதுகலைப் பட்டம் பெற்ற நவக்கரை நவீன் பிரபஞ்சம். இக்கலையைப் பள்ளி, கல்லூரிகளில் சென்று பயிற்றுவித்தும் வருகிறார். இணையம் வழியாகவும் வெளிநாடுகளில் உள்ளவர்களுக்குப் பயிற்றுவித்துவருகிறார். யார் அழைத்தாலும் அவர்கள் இடத்துக்கே சென்று பயிற்றுவித்துவருகிறார். 1,500 பேர் கொண்ட இசை, நடனக் குழுவையும் தொடங்கி நடத்திவருகிறார்.

கொங்கு வட்டாரத்தில் நிகழ்வதாகக் கதை அமைந்திருக்கும் ‘பேச்சுலர்’ திரைப்படத்தில் ஒயில் கும்மி சார்ந்து மூன்று பாடல்களைப் பாடியிருக்கிறார் நவீன் பிரபஞ்சம். படத்துக்கே புதிய பரிமாணத்தை அந்தப் பாடல்கள் அளிக்கின்றன. இது குறித்து அவரிடம் பேசியபோது நிறைய விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். ‘‘என் தாத்தா மூலம்தான் எனக்கு ஒயில் கும்மி அறிமுகம். பொதுவாக, விழா நேரங்களிலும் திருமணத்தின்போதும் ஒயில் கும்மி ஆடுவது வழக்கம். இதில் எனக்கு வெகுவாக ஆர்வம் வந்த பிறகு, அப்போது எங்கள் ஊரில் இக்கலையில் தேர்ச்சி பெற்றிருந்த பலரிடம் கற்றுக்கொண்டேன்” என்றார்.

கும்மிக்கும் ஒயில் கும்மிக்கும் உள்ள வேறுபாடு?

முளைப்பாரியின்போது, பெண்கள் வட்டமாகக் கைதட்டிக்கொண்டு சுற்றி வந்து ஆடும் நடனம் கும்மி. ஒயில் கும்மி ஆண்கள், பெண்கள் என இருவரும் ஆடலாம். நளினமான நடன அசைவுகள் இதன் தனித்தன்மை. வட்டமாகவும் ஆடலாம், வரிசையாக நின்றும் ஆடலாம். ஒருவரில் ஆரம்பித்து எத்தனை பேர் வேண்டுமானாலும் ஆடலாம். மேலும், ஒயில் கும்மியில் உள்ள சிறப்புகளைப் பற்றிக் கேட்டபோது, “பக்கவாத்தியமே இல்லாமல் பாட்டைப் பாடி, கைத்தட்டு ஓசை மட்டுமே கொண்டு அமைந்த கலை இது. பக்கவாத்தியங்களும், துவரைமணிச் சலங்கைகளும் இருந்தால் கூடுதல் சிறப்புதான்.

எந்த வயதினரும் இதை ஆடலாம். நானே மூன்று வயதுக் குழந்தையிலிருந்து, எழுபத்தெட்டு வயதுள்ள பாட்டி வரைக்கும் நடனம் பயிற்றுவித்துவருகிறேன். சமீபத்தில் வந்த ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் காட்டியதுபோல இதிலும் பல பிரிவுகள் கொண்டு இக்கலையில் இயங்கிவந்தார்கள். இப்போது அவை இல்லை. குமிட்டிபதி குகை ஓவியத்தில் நடனமாடுவதுபோல் இருப்பது இந்த நடனம்தான் என்று இங்கு நம்பப்படுகிறது.

வெளிநாட்டிலிருந்து இங்கு வந்த ஜும்பா நடனத்தைப்போல இதுவும் பிரபலமாக வேண்டும். அதுதான் என் விருப்பம். மன அமைதி, உடலைச் சீராக வைப்பது என இரண்டையும் இந்த நடனம் கட்டுப்படுத்துகிறது. ஜும்பா நடனத்தைக் காட்டிலும் ஒயில் கும்மி போன்ற நம் மண்ணின் கலைகள் நமக்கு நெருக்கமானதாக அமையும். அதனால், நம்மை எளிதாகவும் முழுமையாகவும் இதில் ஈடுபடுத்திக்கொள்ள முடியும். பெரியவர்களும் தயக்கமில்லாமல் இதில் ஆடலாம் என்பதால், அவர்களும் இதனால் உற்சாகமடைகிறார்கள்” என்றார்.

மேலும், “இதற்காக 120 மணி நேரம் பயிற்சி கொண்ட பாடத்திட்டத்தை உருவாக்கியுள்ளோம். பிளாஸ்டிக் ஒழிப்பு, மரம் வளர்க்கும் விழிப்புணர்வு போன்று தற்காலத்துக்கு ஏற்பவும் கலையைத் தகவமைத்துள்ளோம். இந்தப் பக்கத்தில் திருமணங்களின்போது பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டார் என குடும்பத்துடன் ஆடப் பயிற்சி கொடுத்துத் திருமணத்தின் சிறப்புப் பகுதியாக இதனைப் பிரபலப்படுத்திவருகிறோம். திருமணத்தில் இது புதுமையாக இருப்பதாகப் பலரும் பாராட்டியுள்ளனர்’’ என்றார்.

ஒயில் கும்மி போன்று தமிழ்நாடு எங்கும் பல கலைகள் இருக்கின்றன. இவற்றைத் திரைப்படங்கள் பயன்படுத்திக்கொள்ளும்போது, அவற்றுக்கு இந்தக் கலைகள் புதுமையைச் சேர்க்கின்றன. இதனால், மறக்கப்பட்டுவரும் கலைகளுக்கும், அவை சார்ந்த கலைஞர்களுக்கும் பெரும் உந்துசக்தி கிடைக்கிறது.

ஆகவே, கரோனா காலகட்டத்தில் முற்றிலும் வாழ்வாதாரங்களை இழந்த கிராமியக் கலைஞர்களுக்குத் திரையுலகம் கைகொடுக்க வேண்டும். அவர்களின் கலை திரைப்படங்களுக்கு எந்த அளவுக்குப் பயன்படுகிறது என்பதற்கு ‘பேச்சுலர்’ படப் பாடல்களின் வெற்றியே சான்று எனும்போது, இந்தப் போக்கு தொடர வேண்டும் என்பது அந்தக் கலைஞர்களின் எதிர்பார்ப்பு.

- சா.கவியரசன், ‘கழனிப்பூ' மின்னிதழ் ஆசிரியர்.

தொடர்புக்கு: kaviyarasan411@gmail.com

OyilKummiஒயில்கும்மிஜி.வி.பிரகாஷ்பேச்சுலர்கவன்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x