Published : 06 Dec 2021 03:07 AM
Last Updated : 06 Dec 2021 03:07 AM

திராவிடமும் தமிழும்: அம்பேத்கரின் ஆராய்ச்சி

இந்திய சமூகத்தைக் குறித்த அம்பேத்கரின் ஆய்வுகளில் ‘தீண்டப்படாதார் என்பவர்கள் யார்? அவர்கள் எவ்வாறு தீண்டப்படாதார் ஆயினர்?’ என்ற நூல் தீண்டாமைக் கொடுமையின் மூல வேர்களைத் தேடும் முன்னோடி முயற்சி. இந்தியாவில் தீண்டாமை எவ்வாறு உருவாகியது என்பதற்கு உறுதியான வரலாற்றுச் சான்றுகள் எதுவும் இல்லாத நிலையில், அதற்கான காரணங்கள் என்னவாக இருக்கக்கூடும் என்ற கேள்விக்கு, விடை காணும் ஆய்வு அது. வரலாற்றுச் சான்றாதாரங்களின் இடைவெளிகளைத் தனது அறிவுபூர்வமான அனுமானங்களால் சரிசெய்து அவர் கண்டடைந்த முடிவு, தூய்மைவாதத்துக்கும் தீண்டாமைக்கும் தொடர்பு இல்லை என்பது.

இந்துக்களுக்கு இடையிலும் இந்து அல்லாதவர்களுக்கு இடையிலும் நிலவும் தீண்டாமையின் ஒப்பீட்டு ஆய்வு, தீண்டாதாரின் வாழ்விடம் குறித்த ஆய்வுகள், தீண்டாமையின் தோற்றம் குறித்த கோட்பாடுகள் என்று விரியும் இந்நூலில் சமூக ஒதுக்கத்தின் பின்னால் இருக்கும் அதிகாரங்களை, அது இன்னும் தொடர்வதில் உள்ள சுயநலங்களை அவர் கடுமையாகச் சாடியிருப்பார். (அம்பேத்கர் பேச்சும் தொகுப்பும், ஆங்கிலத்தில் 7-வது தொகுதி, தமிழில் 14-வது தொகுதி).

சீர்மரபினர்கள் சூத்திரரா?

சூத்திரர்கள் யார், அவர்கள் எப்படி நான்காவது வருணத்தினராக ஆனார்கள் என்பது குறித்த அம்பேத்கர் ஆய்வின் தொடர்ச்சி இது. பட்டியல் சாதிகளை மட்டுமல்ல, பிற்பட்ட சாதிகளையும் அதற்கான காரணங்களையும்கூட அவர் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘தீண்டப்படாதார் என்பவர்கள் யார்?’ நூலுக்கான முன்னுரையில், சூத்திரர்கள் தவிர குற்றப் பரம்பரையினர், பழங்குடியினர், தீண்டப்படாதார் ஆகிய மூன்று சமூகப் பிரிவினரைப் பற்றி உரிய அக்கறை காட்டப்படவில்லை என்று அம்பேத்கர் கருதுகிறார்.

பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட வகுப்பினராக இன்று வகைப்படுத்தப்பட்டிருக்கும் குற்றப் பரம்பரையினர் தம்மைச் சூத்திரர்கள் என்றே அடையாளம் காண்கின்றனர். இந்நிலையில், சூத்திரர்களையும் குற்றப் பரம்பரையினரையும் வெவ்வேறாகக் காணும் அம்பேத்கரின் பார்வை விரிவாக விவாதத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. தீண்டப்படாதாரோடும் பழங்குடியினரோடும் சேர்த்துப் பார்க்கப்பட்ட சீர்மரபினர்கள் இன்று ஒற்றை அடையாளத்தின் கீழ் நிற்கும்போது, தங்களுக்கு இழைக்கப்பட்ட வரலாற்று அநீதிகளுக்கு எப்படி நியாயம் கேட்க முடியும் என்ற கேள்வியும் எழுகிறது.

கற்றறிவாளரும் ஆய்வறிவாளரும்

தீண்டாமையின் தோற்றத்தை ஆய்வுசெய்யும் அம்பேத்கரின் நூல், அது குறித்து இன்னும் ஏன் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை என்ற கேள்வியையும் எழுப்புகிறது. தீண்டாமை குறித்து இங்கு குற்றவுணர்வே எழாததே அதற்குக் காரணம் என்கிறார் அவர். அதன் தொடர்ச்சியாக, கற்றறிந்தவர்(learned) என்பதற்கும் ஆய்வறிவாளர் (intellectual) என்பதற்கும் இடையிலான வேறுபாட்டையும் அவர் விளக்குகிறார்: “கற்றறிந்தவருக்கும் ஆய்வறிவாளருக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு இருக்கிறது. முந்தியவர் வர்க்க உணர்வு கொண்டவர், தமது வர்க்க நலன்களில் கண்ணும் கருத்தும் கொண்டவர்; பிந்தியவரோ கட்டறுந்தவர்; வர்க்க நோக்கங்களுக்கு அடிமையாகாமல், ஊசலாடாமல் சுதந்திரமாகச் செயல்படக் கூடியவர்”.

தீண்டாமையின் தோற்றத்தை நோக்கியே அம்பேத்கரின் ஆய்வு பயணிக்கிறது. எனினும் இந்தியச் சமூகத்தைப் பற்றிய வெவ்வேறு விவாதங்களையும் அது உள்ளடக்கிக்கொண்டுள்ளது. திராவிடம் தமிழுக்கு எதிரானது என்ற எதிர்க் கதையாடல்கள் தீவிரமாக முன்வைக்கப்படும் இக்காலத்தில், இரண்டும் வேறுவேறல்ல என்ற அம்பேத்கரின் பார்வை முக்கியத்துவம் பெறுகிறது. ‘தீண்டாமையின் தோற்றுவாயாக இன வேறுபாடு’ என்ற தலைப்பிலான இந்நூலின் ஏழாவது இயல், திராவிடர்கள் என்பவர்கள் யார் என்ற வரலாற்று விளக்கத்தை அளிக்கிறது.

தென்னிந்திய நாகர்கள்

திராவிடர்கள், நாகர்கள் என்பவை ஒரே மக்களின் வெவ்வேறு பெயர்களே. நாகர்களாகிய திராவிடர்கள் இந்தியா முழுவதுமே பரவியிருந்தனர். வடஇந்தியாவில் நாகர்கள் என்றும் தென்னிந்தியாவில் திராவிடர்கள் என்றும் வெவ்வேறு பெயர்களில் அவர்கள் அழைக்கப்படுவதற்கான காரணம் என்னவென்பதையும் அம்பேத்கர் ஆராய்ந்துள்ளார். “திராவிடர் என்ற சொல், மூலச் சொல் அல்ல. தமிழ் என்ற சொல்லின் சம்ஸ்கிருத வடிவமே இந்தச் சொல். தமிழ் என்னும் மூலச் சொல் முதன்முதலில் சம்ஸ்கிருதத்தில் இடம்பெற்றபோது ‘தமிதா’ என்று உச்சரிக்கப்பட்டது. பின்னர், ‘தமில்லா’ ஆகி முடிவில் ‘திராவிடா’ என உருத்திரிந்தது. ‘திராவிடா’ என்ற சொல், ஒரு இன மக்களின் மொழியின் பெயரே அன்றி, அந்த மக்களது இனத்தைக் குறிக்கவில்லை” என்று பண்டர்கரின் ஆய்வுகளை மேற்கோள்காட்டி முடிவுக்கு வருகிறார் அம்பேத்கர்.

வடஇந்திய நாகர்கள் திராவிட மொழி என்று அழைக்கப்பட்ட தமிழைப் பேசுவதைக் காலப்போக்கில் விட்டுவிட்டதால் அவர்கள் நாகர்கள் என்று மட்டுமே அழைக்கப்பட்டனர்; தென்னிந்திய நாகர்கள் தங்களது தாய்மொழியைத் தொடர்ந்து ஏற்றுக்கொண்டிருந்ததால், அவர்கள் தங்களது மொழியின் பெயராலேயே திராவிடர்கள் என்று இன்றும் அழைக்கப்படுகின்றனர் என்பது அம்பேத்கரின் முடிவு. திராவிடர்கள் என்றும் தாசர்கள் என்றும் அழைக்கப்பட்ட அனைவருமே நாகர் வழித்தோன்றல்கள்தான் என்பதும் இந்தியா முழுவதும் இன்று பரவிக் கிடக்கும் நாக வழிபாடு அதன் தொடர்ச்சிதான் என்றும் தனது முடிவை நிறுவுகிறார் அம்பேத்கர். நாகர்கள் தங்களது தாய்மொழியைக் கைவிட்டதைப் போல பின்பு தக்காணப் பீடபூமியிலும் சேர நாட்டிலும் வாழ்ந்த நாகர்கள், மொழிக் கலப்புக்கு ஆளாகிவிட்டனர் என்று அந்த ஆய்வு முடிவை நாம் நீட்டித்துக்கொள்ளலாம்.

ஆய்வறிவாளருக்கான காத்திருப்பு

அம்பேத்கரின் முதன்மை நோக்கம் திராவிடம், தமிழ் இரண்டுக்கும் இடையிலான தொடர்பை விளக்குவதல்ல. இந்தியச் சமூகத்தில் தீண்டாமையின் தோற்றமானது இனக் குழு அடிப்படையிலோ உடற்கூறு அடிப்படையிலோ உருவானதல்ல என்று எடுத்துக்காட்டுவதே ஆகும். தீண்டாமைக்கான காரணங்கள் குறித்து நிலவும் கருத்துகளை ஒவ்வொன்றாய்ப் பரிசீலித்து, அவற்றை மறுத்து இறுதியாக கி.பி. 400 வாக்கில் வெற்றிகொள்ளப்பட்ட பெளத்தர்கள் தீண்டாதாராக நடத்தப்பட்டனர் என்று தனது கண்டறிதலைச் சொல்கிறார்.

இதுவே முடிவான முடிவு என்றும் அவர் சொல்லவில்லை. தற்போதுள்ள சான்றுகளின் அடிப்படையிலான அனுமானத்தில் அவர் வந்துசேர்ந்த முடிவு அது. வரலாற்றின் போக்கையே மாற்றியமைத்த ஒரு நிகழ்வைக் குறித்து வரலாற்று ஆய்வாளர்கள் அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை என்பது அவரது வருத்தம். 1948-ல் வெளிவந்த புத்தகம் இது. அம்பேத்கர் இப்போது இருந்திருந்தாலும் அவரது வருத்தம் நீங்கியிருக்கப் போவதில்லை. கற்றறிவாளர்களிடமிருந்து ஆய்வறிவாளர்களின் வருகைக்காக இன்னும் நாம் காத்திருக்க வேண்டியிருக்கிறது.

- செல்வ புவியரசன். தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in

டிசம்பர்-6: அம்பேத்கர் நினைவு நாள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x