Published : 02 Dec 2021 03:06 AM
Last Updated : 02 Dec 2021 03:06 AM

நிலத்தடி நீர்மட்டத்தை உயரச் செய்யுமா பெருமழை?

ச.இராஜேந்திரன், பி.மணிகண்டன்

சென்னையையும், கன்னியாகுமரி, காவிரிப் படுகை மாவட்டங்களையும் வரலாறு காணாத அளவில் பெருமழையானது புரட்டிப்போட்டுள்ளது. தமிழ்நாட்டின் சராசரி பருவமழையைவிட இந்த ஆண்டு சுமார் 56% அதிகமாகப் பெய்துள்ளது. குறிப்பாக, நிலத்தடி நீர்மட்டம் அபாயகரமான அளவில் சரிந்த பகுதிகளான சேலம், நாமக்கல், தருமபுரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் முறையே 29%, 85%, 19%, 101%, 36%, 24% என்ற அளவில் சராசரியைவிடக் கூடுதலாக மழை பொழிந்துள்ளது.

இருப்பினும், இம்மாவட்டங்களின் நிலத்தடி நீர்மட்டம் கடந்த அக்டோபர் மாதவாக்கில் முறையே 24, 42, 36, 32, 42, 30 அடிக்கும் கீழாகவே இருந்தது. மாநிலத்தின் நீர்ப்பாசனத் தேவைக்காக அண்டை மாநிலங்களுடன் போராடிக்கொண்டிருக்கையில், மாநிலத்துக்குள்ளாகவே பெய்த பெருமழையை முறையாகச் சேமிக்கவில்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

பொதுவாக, தமிழ்நாட்டுக்கான நீர் ஆதாரம் மழைப் பொழிவாலும் அண்டை மாநிலங்களிலிருந்து வரும் நதிநீர்ப் பங்கீட்டின் மூலமாகவும் கிடைக்கிறது. மழையால் 4,314.9 டி.எம்.சி. அடி நன்னீரும், அண்டை மாநிலங்களிலிருந்து நதிநீர்ப் பங்கீட்டின்படி 249 டி.எம்.சி. அடி நீரும் என்று மொத்தமாக ஆண்டுக்கு 4,563.9 டி.எம்.சி. அடி தமிழ்நாட்டுக்குக் கிடைக்கிறது. இதில், 885 டி.எம்.சி. அடியானது நீர்நிலைகளிலும் 624.72 டி.எம்.சி. அடியானது நிலத்தடியிலும் சேகரமாகிறது. மீதமுள்ள மூன்றில் இரு மடங்கு நீர் (3,054.18 டி.எம்.சி. அடி) கடலுக்குச் செல்கிறது.

2020-ல் தமிழ்நாட்டில் சேகரமான 624.72 டி.எம்.சி. அடி நிலத்தடி நீரில், 41.3% மழையாலும், 58.7% நீர்நிலைகளாலும் சேகரமாகியுள்ளது. அதேபோல, மாநிலத்தின் மொத்த நிலத்தடி நீர்வளம் என்பது அனைத்துப் பகுதிகளிலும் சமமான அளவில் சேகரமாவதில்லை. உதாரணமாக, திருவள்ளுவர் மாவட்டத்தில் சராசரியாக ஒரு சதுர கிலோ மீட்டரில் 2,475 கனமீட்டர் நிலத்தடி நீர் கடந்த ஆண்டு சேகரமாகியுள்ளது.

அதே போல் காஞ்சிபுரம், விழுப்புரம், தஞ்சாவூர், கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களின் சராசரி நிலத்தடி நீர் சேகரமான அளவு 2,000-க்கும் அதிகமான கனமீட்டரைக் கொண்டுள்ளது. அதே வேளையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 400 கனமீட்டரும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 619 கனமீட்டரும், திண்டுக்கல் மாவட்டத்தில் 786 கனமீட்டரும் மட்டுமே நிலத்தடி நீர் சேகரமாகியுள்ளது. இவ்வாறு நிலத்தடி நீர் குறைவாகச் சேகரமாகும் பகுதிகளில் அதிகமாகப் பயன்படுத்தப்படும்போது நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைகிறது.

தமிழ்நாட்டில் பல நூறு ஆண்டுகளாகச் சிறிய கிணறுகளின் வாயிலாக நிலத்தடி நீரைப் பயன்படுத்தினாலும், 1970-களுக்குப் பிறகு பசுமைப் புரட்சியின் காரணமாகவும், ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்ததாலும் நிலத்தடி நீரின் பயன்பாடு வெகுவாக அதிகரித்துவருகிறது. சிறிய மூலதனத்தில் விரும்பிய நேரத்தில் நீரை எடுத்துப் பயன்படுத்தலாம் என்ற காரணத்தால், விவசாயிகள் நிலத்தடி நீரைச் சார்ந்துள்ளனர்.

2020-ல் 518.05 டி.எம்.சி. அடி நிலத்தடி நீர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில், 92.16% விவசாயத்துக்கும், 1.16% தொழில்துறைக்கும், 6.75% வீட்டுத் தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டது. அதேபோல, பல நகரங்களுக்கு ஏரிகள், நீர்த்தேக்கங்கள் மூலம் நன்னீர் வழங்கப்பட்டாலும் பெரும்பாலான குடியிருப்புவாசிகள் தனியே ஆழ்துளைக் கிணறுகளை அமைத்துப் பயன்படுத்திவருகின்றனர். கிராமங்களில் 90%-க்கும் அதிகமான பஞ்சாயத்துகள் நிலத்தடி நீரையே வழங்கிவருகின்றன.

சேலம், திருப்பத்தூர், நாமக்கல், வேலூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நிலத்தடி நீர் பயன்பாடு என்பது 153, 136, 135, 131, 125 என்ற சதவீதத்தில் கூடுதலாக உள்ளது. இதனால், விவசாயத் துறையில் பெரும்பாலான கிணறுகளும் ஆழ்துளைக் கிணறுகளும் வற்றிவிடுகின்றன. அவற்றை ஆழப்படுத்த வேண்டிய செலவினமும் ஏற்படுகிறது. மேலும், காவிரிப் படுகை மாவட்டங்களில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களால் நிறுவப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகளிலிருந்து கச்சா எண்ணெயைக் கசியச் செய்வதற்காகச் செலுத்தப்படும் அழுத்தமும், அதீதமாக நிலத்தடி நீரை உறிஞ்சுவதும் கடலோரப் பகுதிகளில் கடல்நீர் உட்புகுவதற்குக் காரணமாகிவிடுகின்றன.

அதீத நிலத்தடி நீர்ப் பயன்பாட்டால் ஏற்படும் பற்றாக்குறையைப் போக்குவதற்காகவே, மத்திய நிலத்தடி நீர் ஆணையத்தின் வழிகாட்டுதலால் மத்திய-மாநில அரசுகள் இணைந்து பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திவருகின்றன. செயற்கைவழியில் நிலத்தடி நீரைச் சேமிக்கும் திட்டங்களான தடுப்பணைகள், உறிஞ்சு குளங்கள், பண்ணைக் குட்டைகள், செயலற்ற ஆழ்துளைக் கிணற்றுடன் இணைக்கப்பட்ட உறிஞ்சு குழிகள் போன்றவை தொலை உணர்வு செயற்கைக்கோள் உதவியுடன் புவித் தகவல் அமைப்புத் (ஜிஐஎஸ்) தொழில்நுட்பத்தால் உகந்த இடங்களில் அமைக்கப்பட்டுவருகின்றன. இவ்வாறான திட்டங்கள் முறையாகச் செயல்படுத்தப்பட்டிருக்குமேயானால், அதீதப் பயன்பாட்டால் ஏற்பட்ட நிலத்தடி நீர்ப் பற்றாக்குறையை தற்போதைய கனமழையின் மூலம் போக்கியிருக்க முடியும்.

தமிழ்நாட்டின் ஏழு வேளாண் பருவ மண்டலங்களில் மேற்கு, வடமேற்கு மண்டலத்தைச் சேர்ந்த மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைவாக உள்ளது. இம்மாவட்டங்கள் சராசரியாகக் கடல் மட்டத்திலிருந்து 400 அடிக்கும் அதிகமான உயரத்தில் உள்ளன. அத்துடன், இங்கு காணப்படும் சமதளமற்ற நிலப்பரப்பினால், அருகிலேயே பெரிய ஆறுகள் பாய்ந்தாலும் அதிலுள்ள உபரி நீரை அனைத்துப் பகுதிகளிலும் பயன்படுத்துவது கடினமான காரியம். எனவே, மழை நீர் சேகரிப்புத் திட்டங்களில் இம்மாவட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டும்.

பருவநிலை மாற்றத்தால், மழை பொழியும் நாட்கள் குறைந்து சீரற்ற முறையில் அதிக கனமழை பொழிவது வழக்கமான நிகழ்வாக மாறிவருகிறது. இம்மழை நீரை அதிக அளவில் சேகரித்து வைத்தால் மட்டுமே கோடைக் கால நீர்த் தேவையை ஈடுசெய்ய முடியும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இனி புதிதாக அணைகள் கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது உள்ள அணைகளிலும் ஏரிகளிலும் மழைநீரைச் சேகரித்தாலும் நீண்ட காலத்துக்கு வைத்திருக்க முடியாது. ஆனால், நிலத்தடியில் சேகரிக்கப்படும் நீரைப் பல ஆண்டுகளுக்குப் பின்னர்கூட பயன்படுத்த முடியும். மேலும், நீரைத் தேக்கி வைக்கும் கொள்ளளவும் நிலத்தடியில் அதிகம். எனவே, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், ஊராட்சி அமைப்புகள், அரசுத் துறைகள் அனைத்தும் விவசாயிகளுடன் இணைந்து செயல்பட்டால் மழைநீர் சேகரிப்புத் திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்த முடியும்.

- ச.இராஜேந்திரன், பேராசிரியர்,

தொடர்புக்கு: myrajendran@gmail.com;

பி.மணிகண்டன், ஆராய்ச்சியாளர்,

காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம், தொடர்புக்கு: ecomani2018@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x