Published : 01 Dec 2021 06:38 AM
Last Updated : 01 Dec 2021 06:38 AM

தொடரும் போலீஸ் கொலைகள்: கள நிலவரம்

பெ.கண்ணப்பன்

நள்ளிரவில் ஆடு திருடிச் சென்ற கும்பலைத் துரத்திப் பிடிக்கும் முயற்சியில் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் திருடர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார் என்ற துயரச் செய்தியை இதர கொலை நிகழ்வுகளில் ஒன்று எனக் கருதி எளிமையாகக் கடந்துசெல்ல முடியாது.

கையும்களவுமாக போலீஸிடம் பிடிபடும் திருடர்கள் தப்பியோட முயற்சி செய்வதும், தப்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டால் போலீஸிடம் சரண்டர் ஆவதும் குற்றவாளிகளின் மனநிலை. ஆனால், போலீஸ் பிடியிலிருந்து தப்பிக்க போலீஸ் அதிகாரியைக் கொல்லத் துணிந்த சம்பவத்தை ஓர் அரிய நிகழ்வாகக் கருதிப் புறந்தள்ளிவிட முடியாது.

குற்றம்செய்வது இழிவான செயல் என்ற உணர்வைக் கடந்து, குற்றம்செய்வதைத் தடுப்பவர்களைக் கொலையும் செய்யலாம் என்ற மனநிலை சமுதாயத்தில் துளிர்விடத் தொடங்கிவிட்டதை இச்சம்பவம் உணர்த்துகிறது. ‘திருட்டு உள்ளிட்ட சமூகக் குற்றங்களைச் செய்யத் தடையாக இருந்தால் கொல்லப்படுவீர்கள்’ என்ற அச்ச உணர்வை இச்சம்பவம் போலீஸாரிடம் விதைக்கிறது.

காவல் பயிற்சிப் பள்ளியில் முறையான பயிற்சியும் காவல் துறையில் 25 ஆண்டுகளுக்குக் குறையாத அனுபவமும் பெற்ற சிறப்பு உதவியாளரைக் கொன்ற, ஆடு திருடிய குற்றவாளிகளில் இருவர் 9 மற்றும் 14 வயதுடைய இளம் சிறார்கள் எனவும், மற்றொரு குற்றவாளி 19 வயதுடைய வாலிபர் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இளைஞர்கள் திருட்டு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தாண்டி, சிறார்களையும் குற்றச் செயலில் ஈடுபடுத்தும் செயல், இன்றைய இளம் தலைமுறையினர் தடம்புரண்டு செல்கிறார்களோ என்ற அச்ச உணர்வை ஏற்படுத்துகிறது.

பள்ளியில் கல்வி கற்கும் வயதில் உள்ள இளம் சிறார்கள் குடும்ப வறுமையின் காரணமாகத் திருட்டுக் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் அல்ல. பள்ளிப் பருவத்திலேயே மது, கஞ்சா போன்ற போதைப்பொருட்களை மாணவர்கள் பயன்படுத்துவது அதிகரித்துவருவதாகத் தெரியவந்துள்ளது. போதையூட்டும் பழக்கங்கள் சிறார்களைத் திருடும் சூழலுக்குத் தள்ளிவிடுகிறது என்பதுதான் கள நிலவரம். கொலை, திருட்டு உள்ளிட்ட கொடுங்குற்றங்களில் ஈடுபடும் அளவுக்கு இளம் சிறார்கள் திசைமாறிவிட்டார்களா என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்படுகிறது.

நம் நாட்டில் அதிக எண்ணிக்கையிலான இளம் சிறார்கள் குற்றச் செயல்களில் ஈடுபடும் மாநிலங்களின் பட்டியலில் முதல், இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ள மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரத்துக்கு அடுத்து மூன்றாவது இடத்தைத் தமிழ்நாடு பிடித்துள்ளது. முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ள மாநிலங்களில் 2018, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் குற்றச் செயல்களில் ஈடுபடும் இளம் சிறார்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துவருவதாகத் தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கை கூறுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் குற்றச் செயல்களில் ஈடுபடும் இளம் சிறார்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் தொடர்ந்து அதிகரித்துவருவதாக அவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

தமிழ்நாட்டில் 2018, 2019, 2020-ம் ஆண்டுகளில் முறையே 2,304, 2,686 மற்றும் 3,394 குற்றங்களில் இளம் சிறார்கள் ஈடுபட்டுள்ளதாகத் தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் 2020-ல் இளம் சிறார்கள் 104 கொலைகள், 392 திருட்டுகள், 174 களவுகள், 128 வழிப்பறிகள், 16 கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரத்தை எளிமையாகக் கடந்துசென்றுவிடக் கூடாது. இளம் சிறார்களைக் குற்றவாளிகளாக உருமாற்றும் காரணிகளைக் கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை பூமிநாதன் கொலை நிகழ்வு உணர்த்துகிறது.

பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுபவர்களைப் பிடிக்கும் முயற்சியில் உயிர்த் தியாகம் செய்து, வீர மரணம் அடைவது போலீஸ் பணியில் தவிர்க்க முடியாதது. ஆனால், ஆடு திருட்டு, மணல் திருட்டு, குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், சாலை மறியலில் ஈடுபடுதல் போன்ற குற்றங்களைத் தடுக்கும் பணியில் ஈடுபடும் போலீஸாரைக் கொல்லும் நிலை நம் மாநிலத்தில் தொடர்கதையாக இருந்துவருகிறது.

குற்றச் செயலில் ஈடுபடுவதால் கிடைக்கும் தண்டனையிலிருந்து ஏதேனும் ஒரு வழியில் தப்பிவிடலாம் என்ற நம்பிக்கை, குற்றம் செய்பவர்கள் பலரிடம் தென்படுகிறது. அதன் நீட்சியாக, குற்றத் தடுப்புப் பணியில் ஈடுபடும் போலீஸாரின் உயிருக்கு ஆபத்து விளைக்கும் விதத்தில் குற்றவாளிகள் செயல்படும் கலாச்சாரம் தற்போது நிலவுகிறது.

குற்ற நிகழ்வுகளையும் குற்றவாளிகளின் தினசரிச் செயல்பாடுகளையும் கண்காணிப்பதில் போலீஸின் அணுகுமுறை மாறத் தொடங்கியுள்ளது. சட்டம் ஒழுங்கு பணிச்சுமை காரணமாகக் குற்றத் தடுப்பு, குற்றவாளிகளின் செயல்களைக் கண்காணித்தல் போன்றவற்றில் போதிய கவனம் செலுத்தாத நிலையில், காவல் துறை இயங்கிவருகிறது. நெருக்கடி வரும்போது முன்னெச்சரிக்கை என்ற பெயரில் நூற்றுக்கணக்கான பழங்குற்றவாளிகளையும் ரெளடிகளையும் கைதுசெய்வதில் காட்டும் ஆர்வம், அவர்களின் தினசரிச் செயல்பாடுகளைக் கண்காணிப்பதில் இல்லை.

போலீஸின் ஓர் அங்கமாக இருந்த ‘லத்தி’ தற்போது மறைந்துவிட்டது. பூமிநாதன் கொலையைத் தொடர்ந்து, ரோந்துப் பணியின்போது போலீஸார் துப்பாக்கி எடுத்துச்செல்ல அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும் முறையாகத் துப்பாக்கியைப் பயன்படுத்தத் தெரியாது என்பதற்குக் குற்றவாளிகளைப் பிடிக்க ராஜஸ்தான் சென்ற ஆய்வாளர் பெரியபாண்டியனின் மரணம் சான்று.

குற்றத் தடுப்புப் பணியில் கடந்த காலங்களில் கற்றுக்கொண்ட பாடம், நிகழ்காலக் குற்றங்களின் தன்மை, எதிர்காலத்தில் குற்றங்கள் எவ்விதத்தில் உருமாறும் என்ற கணிப்பு ஆகியவற்றை ஆய்வுசெய்து, காவல் துறையின் செயல்பாடுகளில் சீர்திருத்தங்கள் கொண்டுவர வேண்டும். மாறாக, அன்றாடப் பிரச்சினையைச் சமாளிப்பதற்காகக் கொண்டுவரப்படும் சீர்திருத்தங்கள் முழுமையான பலனளிக்காது.

- பெ.கண்ணப்பன், இந்திய காவல் பணித் துறை அதிகாரி (ஓய்வு),

‘புரட்டிப்போடும் புலன் விசாரணை’ என்ற நூலின் ஆசிரியர்.

தொடர்புக்கு: pkannappan29755@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x