Published : 30 Nov 2021 03:06 AM
Last Updated : 30 Nov 2021 03:06 AM

தொழில் துறையினரின் புரிந்துணர்வு உடன்பாடுகள் முதலீடுகளாக மாறுமா?

தமிழ்நாட்டில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காகத் தொழில் துறையை வளர்த்தெடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். கோவையில், சமீபத்தில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.35,208 கோடி மதிப்பிலான 59 திட்டங்களுக்குப் புரிந்துணர்வு உடன்பாடுகள் கையெழுத்தாகியுள்ளன. இந்தத் திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டால் 76,795 பேருக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு, சென்னையில் கடந்த ஜூலை, செப்டம்பர் மாதங்களில் முதலீட்டாளர் மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. ‘ஒரு ட்ரில்லியன் முதலீடு’ என்ற இலக்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிதித் துறைத் தொழில்நுட்பங்களை வளர்ந்துவரும் புதிய தொழில்துறையாக அடையாளம் கண்டுள்ள தமிழ்நாடு அரசு, அத்துறையை வளர்த்தெடுப்பதற்கான தொழிற்கொள்கை ஒன்றையும் வகுத்துள்ளது பாராட்டத்தக்கது. இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் இத்தொழிலைத் தொடங்குவோருக்கு ஊக்கத்தொகைகள் அளிக்கப்படும் என்ற அறிவிப்பு, தமிழ்நாட்டின் மாவட்டங்களுக்கு இடையிலான சமச்சீர் வளர்ச்சிக்கும் உதவக்கூடும்.

பெருமளவில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்குத் தொழில் துறையில் முதலீடுகளை ஈர்ப்பதே முதன்மையான வழிமுறையாக இருந்துவருகிறது. அதற்கான முயற்சிகள் அரசால் எவ்வளவு தீவிரமாக எடுக்கப்பட்டாலும் அவை அனைத்துமே திட்டமிட்ட கால அளவுக்குள் செயல்வடிவம் பெறுவதில்லை என்பதையும் கணக்கில்கொள்ள வேண்டும். முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, பழனிசாமி காலங்களில் முதலீட்டாளர் மாநாடுகளில் எட்டப்பட்ட உடன்பாடுகளில் கணிசமானவை இன்னமும்கூட நடைமுறைக்கு வரவில்லை.

2015-ல் நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில், பல்வேறு தொழிற்துறைகளில் 98 புரிந்துணர்வு உடன்பாடுகள் கையெழுத்தாகின. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையில் 10,073 புரிந்துணர்வு உடன்பாடுகள் கையெழுத்தாகின. இவற்றின் மூலமாக, ரூ. 2,42,160 கோடி முதலீடு செய்யப்படும் என்றும் 4.70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2021 ஜூலை நிலவரப்படி பெறப்பட்ட முதலீடு ரூ.73,711 கோடி மட்டுமே.

2019-ல் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.3,00,501 கோடி மதிப்பிலான 304 உடன்பாடுகள் எட்டப்பட்டாலும் 2021 ஜூலை நிலவரப்படி ரூ.24,492 கோடி மதிப்பிலான 81 திட்டங்களே செயல்பாட்டுக்கு வந்துள்ளன. முதலாண்டிலேயே, உற்பத்தியைத் தொடங்கிய திட்டங்கள் 27% மட்டுமே என்று பழனிசாமியே தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். ரூ.2.20 லட்சம் கோடி முதலீட்டில் 5.33 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதியளித்த சுமார் 191 திட்டங்கள் முன்னேற்ற நிலையிலேயே உள்ளன.

முதலீட்டாளர் மாநாடுகளில் எட்டப்பட்ட முந்தைய உடன்பாடுகள் செயல்வடிவம் பெறுவதற்கான தாமதங்கள் அடையாளம் காணப்பட்டுச் சரிசெய்யப்பட வேண்டிய தேவையும் உள்ளது. திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவும் மின்னுற்பத்தி, பாசனம் தொடர்பிலான பெருந்திட்டங்களைத் தொடர்வதில் கட்சிபேதம் பாராட்டுவதில்லை. முதலீட்டாளர்களை ஈர்ப்பதிலும், கையெழுத்தான உடன்பாடுகளைச் செயல்படுத்துவதிலும்கூட கட்சிபேதம் பாராத அந்த அணுகுமுறை தொடர வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x