Published : 30 Nov 2021 03:06 AM
Last Updated : 30 Nov 2021 03:06 AM

தமிழகம் இந்தப் பிரச்சினையை உணர்ந்திருக்கிறதா?

சா.கவியரசன், மு.செய்யது இப்ராகிம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 1, குரூப் 2 போன்ற தேர்வுகளுக்குத் தயாராகி வரும் சில மாணவர்களைச் சந்தித்து, ‘‘நீங்கள் ‘ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம்’ (யூபிஎஸ்சி), ‘பணியாளர் தேர்வு ஆணையம்’ (எஸ்எஸ்சி) நடத்தும் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கிறீர்களா?’’ என்று கேட்டபோது “இல்லை” என்றார்கள். ‘‘ஏன்?’’ என்றதும் அவர்கள் கூறிய காரணங்கள் இவை: 1. அதைப் பற்றிப் பெரிதாகத் தெரியாது. 2. யூபிஎஸ்சி பாடத்திட்டம் வேறு, டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பாடத்திட்டம் வேறு ஆச்சே! 3. அதற்கு என்சிஈஆர்டி போன்ற தேசிய அளவிலான பாடப் புத்தகங்களைப் படிக்க வேண்டுமே! 4. முதன்மைத் தேர்வுக்கெல்லாம் படிக்க வேண்டும் என்றால் டெல்லி, சென்னை போன்ற பெருநகரங்களுக்குப் போய் ஏதாவது பயிற்சி மையத்தில் சேர வேண்டுமே! 5. கேள்வி தமிழில் இல்லை. மாற்றச் சொல்லி நாம் கேட்டால் மாற்றவா போகிறார்கள்?

இதில் ஐந்தாவது காரணத்தைக் கவனிக்க வேண்டும்: கேள்விகள் தமிழில் இல்லை. டிஎன்பிஎஸ்சி வெறும் 5 காலி இடங்களுக்கு நடத்தும் ஒரு ‘மொழிபெயர்ப்பாளர்’ தேர்வைப் பற்றிய விழிப்புணர்வுகூட டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்குத் தயாராவோருக்கு இருக்கும்போது, ஏன் யூபிஎஸ்சி, எஸ்எஸ்சி தேர்வுகள் பற்றிய விழிப்புணர்வு இல்லை என்றால், கேள்விகள் தமிழில் இல்லாததுதான். அதுவே, அத்தேர்வுகளை நமக்கு அந்நியமாக்குகிறது. போட்டியிலிருந்து நம்மை ஒரு மொழிப் பிரச்சினை ஒதுங்க வைக்கிறது. ஆங்கிலமோ இந்தியோ தெரிந்துகொள்ளாமல் இருப்பது நம்முடைய தவறு என நமக்கு நாமே காரணம் சொல்லிக்கொள்ள வைக்கிறது.

உண்மையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2 மற்றும் யூபிஎஸ்சி நடத்தும் இந்தியக் குடிமையியல் பணி ஆகியவற்றின் பாடத்திட்டம் ஏறத்தாழ ஒன்றுதான். கேள்விகள் கேட்கப்படும் கோணத்தில்தான் மாறுதல்கள் இருக்கும். அந்தக் கேள்விகளை உணர்வதற்கே ஆங்கிலமும் இந்தியும் தடையாக இருக்கின்றன என்பதுதான் சிக்கல்.

அடுத்து, என்சிஈஆர்டி பாடப் புத்தகத்துக்கு ஈடாக நமது தமிழ்நாடு அரசின் புதிய பாடப் புத்தகம் அமைந்திருக்கிறது. டிஎன்பிஎஸ்சிக்கு படிப்பதில் இருப்பது போன்றுதான் யூபிஎஸ்சி நடத்தும் தேர்வுகளிலும் கேள்விகள் இருக்கின்றனவென்று உணர்வதற்கு, டிஎன்பிஎஸ்சி மாணவர்களுக்கு ஆங்கிலத்திலும் இந்தியிலும் உள்ள கேள்விகள் முட்டுக்கட்டை போடுகின்றன.

இன்னொரு உண்மை, யூபிஎஸ்சி முதல்கட்டத் தேர்வு, முதன்மைத் தேர்வுகளுக்கு ஏற்பப் படிப்பதற்குப் பொதுஅறிவுத் தகவல்கள் தமிழில் பெரிய அளவில் கிடைப்பதில்லை. காரணம், இதைத் தமிழ் வழியில் அணுகுவோர் எண்ணிக்கை குறைவு. கேள்விகள் தமிழில் இருந்தால், தமிழிலிருந்து போட்டியிடுவோர் எண்ணிக்கை அதிகமாகும், போட்டியிடுவோர் எண்ணிக்கை அதிகமானால், அவர்களுக்குத் தேவையான பொதுஅறிவுத் தொகுதிகளும், இப்போது டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு ‘யூடியூப்’ போன்ற தளங்களில் இலவசமாகப் பயிற்சி அளிப்பவர்கள் பலர் இருப்பதுபோல் இத்தேர்வுகளுக்கும் பலர் பயிற்சி அளிக்க முன்வருவார்கள்.

தமிழ்நாட்டில் ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகக் கற்றவர்கள், யூபிஎஸ்சி தேர்வுகளில் ஆங்கிலத்தில் உள்ள கேள்வியைப் படித்துத் தாய்மொழியான தமிழில் கிரகித்துக்கொண்டு அதன் பதிலை ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்ட விடையிலிருந்து தேர்வுசெய்ய வேண்டும். இதுவே, இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவருக்கு அக்கேள்வியைக் கிரகித்துப் புரிந்துகொள்ளும் நேரம் குறைகிறதே. ஆகவே, இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டிராதது எப்படித் தமிழ்நாட்டிலிருந்து எழுதும் போட்டியாளர்களின் குற்றம் ஆகும்?

ஆட்சி மொழிச் சட்டம்-1963-ன்படி, ஒன்றிய ஆட்சி/அதிகார மொழியாக இந்தியும் ஆங்கிலமும் இருக்கின்றன. அதற்காக அந்தச் சட்டத்தில் போட்டித் தேர்வுகளில் அவ்விரு மொழிகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. ஆகவே, போட்டித் தேர்வுக் கேள்விகள் அவ்விரு மொழிகளில் மட்டும் இருந்தால், ஆட்சி மொழிச் சட்டம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகவே அர்த்தம். அப்படி இருக்கும்பட்சத்தில், அட்டவணை மொழிகள் என்பவை எதற்கு? கூடுதலாக, ஒன்றிய அரசு நடத்தும் நீட் தேர்வுகள், ரயில்வே பணியிடங்கள் ஆகியவற்றுக்கான தேர்வுகள் பிராந்திய மொழிகளில் நடத்தப்படும்போது, ஏனைய ஒன்றிய அரசுத் தேர்வுகளையும் அட்டவணை மொழிகளில் நடத்துவதில் என்ன சிரமம்?

பின்வரும் புள்ளிவிவரங்களைக் கவனியுங்கள்,

1. கடந்த பத்து ஆண்டுகளில், டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2 தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்ட காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 11,676. அதே நேரத்தில், எஸ்எஸ்சி நடத்தும் சிஜிஎல் தேர்வை மட்டும் எடுத்துக்கொள்வோம், கடந்த பத்து ஆண்டுகளில் காலிப் பணியிடங்களில் நிரப்பப்பட்டவற்றின் எண்ணிக்கை மட்டும் ஒரு லட்சத்தைத் தாண்டுகிறது. இன்னும் யூபிஎஸ்சி, ஆர்ஆர்பி, ஐபிபிஎஸ் நடத்தும் வங்கிகளுக்கான தேர்வுகளையெல்லாம் கணக்கில்கொண்டால் எத்தனை மடங்கான காலிப் பணியிடங்களுக்கு மொழியால் நாம் புறக்கணிக்கப்படுகிறோம் என்பது அதிர்ச்சியூட்டும்.

2. கடந்த குரூப் 1 தேர்வை 5 லட்சம் பேர் எழுதியிருக்கிறார்கள். ஒரு அனுமானமாக வைத்துக்கொள்ளுங்கள், யூபிஎஸ்சி கேள்விகள் தமிழில் இருக்கும்பட்சத்தில், அந்த ஐந்தில் பாதியாக 2.5 லட்சம் பேர் விண்ணப்பிப்பார்கள், அதில் வெறும் 10% பேரான 25,000 பேர் முதன்மைத் தேர்வுக்குத் தேர்ச்சி பெறும் தகுதி உடையவர்களாக இருக்க மாட்டார்களா? அந்த 25,000-ல் 1% ஆன 250 பேருக்கு இறுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் தகுதி இருக்காதா?

3. இந்திய மக்கள் தொகையில் 26% பேர் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், யூபிஎஸ்சி நடத்தும் இந்தியக் குடிமையியல் பணித் தேர்வில் மட்டும் 59% இடத்தில் அவர்கள் பணியில் அமர்கிறார்கள்.

இந்தப் பிரச்சினை பற்றிய புரிதல் டிஎன்பிஎஸ்சி படிக்கும் போட்டித் தேர்வர்கள் அறிந்துகொள்ள வேண்டும். அதற்கான தீர்வை அடைய யூபிஎஸ்சி, எஸ்எஸ்சி தேர்வுகளைத் தமிழிலும் நடத்த வேண்டும் என்று அரசிடம் வலுவாகக் கோரிக்கையை முன்வைக்க வேண்டும். தமிழ்நாடு அரசும் இதன் விளைவை உணர்ந்து நடவடிக்கைகள் எடுத்தால் தமிழ்நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டத்துக்கு முக்கியத் தீர்வு கிடைக்கும்.

- சா.கவியரசன், ‘கழனிப்பூ’ மின்னிதழின் ஆசிரியர். தொடர்புக்கு: kaviyarasan411@gmail.com.

- மு.செய்யது இப்ராகிம், போட்டித் தேர்வர். தொடர்புக்கு: syedtnautarcc@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x