Last Updated : 29 Nov, 2021 03:06 AM

 

Published : 29 Nov 2021 03:06 AM
Last Updated : 29 Nov 2021 03:06 AM

மீண்டும் உருமாறும் கரோனா, உஷார்!

இந்தியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கரோனா பரவல் குறைந்துகொண்டிருக்கும் வேளையில், தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கரோனா வேற்றுருவம் (Variant) மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. முதன்முதலில் இங்கிலாந்தில் ஆல்பா எனும் வேற்றுருவமும், அதைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவில் பீட்டா, பிரேசிலில் காமா, இந்தியாவில் டெல்டா வேற்றுருவங்களும் கரோனா வைரஸில் அறியப்பட்டன. இவற்றைவிட இப்போதைய புதிய வைரஸ் அதிவீரியமானது எனும் எச்சரிக்கை வந்துள்ளதால் ‘உலகம் முழுவதும் புதிய கரோனா அலை உருவாகிவிடுமா?’ எனும் கேள்வி மக்கள் மனத்தில் எழுந்துள்ளது.

‘ஒமைக்ரான்’ (Omicron) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸின் மரபணு வரிசையில் ‘B.1.1.529’ எனும் புதிய பிறழ்வு (Mutation) ஏற்பட்டுள்ளது. பூட்டுக்குள் சாவி நுழைவதுபோல இது நம் உடல் செல்களுக்குள் ‘ஏசிஇ2’ புரத ஏற்பிகளுடன் இணைந்து நுழையும் கூர்ப்புரதங்களில் (Spike proteins) 50க்கும் மேற்பட்ட பிறழ்வுகள் உள்ளன. ‘வைரஸ் பிறழ்வு’ என்பது வைரஸ்களின் இனப்பெருக்க வளர்ச்சியில் ஏற்படும் இயல்பான நிகழ்வுதான். சில பிறழ்வுகள் மட்டுமே வைரஸ் பரவும் வேகத்தைக் கூட்டும். இந்தியாவில் இரண்டாம் அலையில் படுமோசமான உயிர்ச் சேதங்களை உண்டாக்கியதும், 120-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியதுமான டெல்டா வைரஸ் இதற்குச் சரியான உதாரணம். இப்போது உருமாறியுள்ள கரோனா வைரஸும் இந்த வகையைச் சேர்ந்தது என்பதுதான் மக்கள் கவலைப்படக் காரணம்.

கரோனாவின் கோர முகம்

ஒமைக்ரான் வைரஸ் எப்போதுமில்லாமல் பல வழிகளில் உருமாறியுள்ளதாக அறியப்பட்டுள்ளது. இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால், இதுவரை அறியப்பட்ட வேற்றுருவக் கூர்ப்புரதங்களில் அதிகபட்சமாக இரண்டு வகை மரபணுப் பிறழ்வுகள் மட்டுமே காணப்பட்டன. மாறாக, ஒமைக்ரான் கூர்ப்புரதத்தில் 50 வகை மரபணுப் பிறழ்வுகள் ஏற்பட்டுள்ளன. அதிலும் செல்களில் நுழையும் கூர்ப்புரதப் பகுதியில் (RBD) மட்டும் 10 பிறழ்வுகள் காணப்படுகின்றன. டெல்டா வைரஸில் இந்த இடத்தில் 2 பிறழ்வுகள் மட்டுமே காணப்பட்டன.

இப்படி மேம்பட்ட பிறழ்வுகள் மூலம் மனித செல்களில் கூர்ப்புரதப் பிணைப்புகள் கடுமையாக வலுவடைந்து, டெல்டா வைரஸைவிடப் பல மடங்கு வேகமாகப் பரவும் தன்மையை இது பெற்றுள்ளது. இது தென்னாப்பிரிக்காவில் அறியப்பட்ட சில வாரங்களில் இதன் பரவும் வேகம் (R value) 1.47-லிருந்து 1.93ஆக அதிகரித்ததும், நமீபியா, போட்ஸ்வானா, பெல்ஜியம், மலாவி, இஸ்ரேல், ஹாங்காங் ஆகிய நாடுகளிலும் இது பரவியுள்ளதும் இதை உறுதிப்படுத்துகின்றன.

மேலும், கரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் பலவும் இந்த வைரஸின் கூர்ப்புரத மரபணு அமைப்பைக் குறிவைத்துத் தயாரிக்கப்பட்டவை. ஒமைக்ரான் கூர்ப்புரதத்தில் 50 வகை மரபணுப் பிறழ்வுகள் புதிதாக ஏற்பட்டுள்ளதால், இதன் மரபணு முகம் ரொம்பவே மாறியுள்ளது. தடுப்பூசிகளின் பார்வையிலிருந்து 40% வரை இது தப்பித்துவிடும் அளவுக்கு வீரியமிக்கதாகக் கருதப்படுகிறது. இதனால், புதியவர்களுக்குத் தொற்றுவதோடு, ஏற்கெனவே தொற்று ஏற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கும் கரோனா மறுதொற்று ஏற்படலாம் என்கின்றனர் வல்லுநர்கள்.

எனவேதான், கவலைக்குரிய பிரிவில் (Variant of concern) உலக சுகாதார நிறுவனம் இதைச் சேர்த்துள்ளது. இது மக்களின் அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் இது முதலில் அறியப்பட்ட 100 பேரும் கரோனா தடுப்பூசி இரண்டு தவணைகள் செலுத்திக்கொண்டவர்கள் என்பது இந்த அச்சத்துக்கு வலு சேர்க்கிறது. இந்தியாவில் கரோனா மூன்றாம் அலைக்கு வாய்ப்பில்லை என்று கருதிவந்த நிலையில், தற்போதைய ஒமைக்ரான் பரவலால் அந்தக் கருத்து வலுவிழக்கிறது. ஆகவே, ஒமைக்ரான் குறித்த கவலை தரும் கணிப்புகளுக்கும் நாம் தயாராக வேண்டியதுள்ளது.

இந்தியா என்ன செய்ய வேண்டும்?

இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் தொற்று இல்லை என்றே தரவுகள் கூறுகின்றன. இனிமேலும் இது பரவாமல் இருக்க ஒன்றிய அரசு அவசரகால நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பது நம்பிக்கை அளிக்கிறது. இந்தியா வரும் வெளிநாட்டுப் பயணிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது. இது போதாது. பிரிட்டன், பிரான்ஸ், சிங்கப்பூர், இஸ்ரேல், இத்தாலி, ஜெர்மனி போன்ற நாடுகள் தென்னாப்பிரிக்கா உடனான விமான சேவைகளை முழுமையாக நீக்கியுள்ளதுபோல் இந்தியாவும் தென்னாப்பிரிக்கா மற்றும் ஒமைக்ரான் தொற்றுள்ள மற்ற நாடுகள் உடனான விமான சேவைகளை முழுமையாக நீக்க வேண்டும். டிசம்பர் 15-ம் தேதி முதல் சர்வதேச விமானச் சேவையை இந்தியா தொடங்கவுள்ள நிலையில், இந்தப் பரிசீலனை முக்கியத்துவம் பெறுகிறது.

அடுத்து, வழக்கமான ‘ஆர்.டி.பி.சி.ஆர்’ பரிசோதனையில் ஒமைக்ரான் வைரஸ் தப்பித்துவிடுவதாகத் தெரிய வந்துள்ளது. ஆகவே, வெளிநாட்டுப் பயணிகள் அனைவருக்கும் ‘மரபணு பகுப்பாய்’வை (Gene sequencing) கட்டாயமாக்க வேண்டும். அப்போதுதான் இந்தத் தொற்று இந்தியாவுக்கு இறக்குமதி ஆவதை ஆரம்பத்திலேயே கணித்துத் தடுக்க முடியும். இந்தச் செயல்பாட்டில் முதலில் விழித்துக்கொண்ட நாடு இங்கிலாந்துதான்.

தற்போது இந்தியாவில் கரோனா வைரஸ் ஓய்ந்துவிட்டது என்று மக்கள் எண்ணத் தொடங்கிவிட்டனர். முகக்கவசம் அணிவதும் தனிமனித இடைவெளியும் காணாமல் போய்விட்டன. பொது இடங்களில் கைகழுவும் கைச்சுத்திகரிப்பான்களைக் காண்பது அரிதாகிவிட்டது. தட்டுப்பாடின்றி தடுப்பூசிகள் கிடைக்கத் தொடங்கிய பிறகு, கரோனா அச்சம் ரொம்பவே குறைந்துவிட்டது. ஒமைக்ரான் தொற்றால் இந்திய மக்களின் விழிப்புணர்வும் எச்சரிக்கை உணர்வும் மீண்டும் முக்கியத்துவம் பெறுகின்றன. குறிப்பாக, வெளிநாட்டுப் பயணிகள் தொடர்பில் எச்சரிக்கை தேவை.

இறுதியாக, கரோனா தடுப்பூசிகளுக்கு இது கட்டுப்படுமா என்பது இனிவரும் களஆய்வுகளில்தான் தெரியவரும் என்கிறது உலக சுகாதார நிறுவனம். அறிவியல் அடிப்படையில் தற்போதுள்ள தடுப்பூசிகளுக்குப் பலன் குறைவதற்கே அதிக வாய்ப்பு என்றாலும், அவை இறப்புகளைத் தவிர்ப்பது உறுதி எனவும், தடுப்பூசிகளை மேம்படுத்திப் பயன்படுத்தினால் இன்னும் பாதுகாப்பு அதிகரிக்கும் எனவும் வல்லுநர்கள் கருதுகின்றனர். அண்மையில் அறிமுகமான மோல்னுபிரவிர், பேக்ஸ்லோவிட் ஆகிய கரோனா மாத்திரைகள் வைரஸ் நகலெடுப்பதைத் தடுத்து, அதன் பரவலைத் தடுப்பதால், ஒமைக்ரான் வகை வைரஸ்களையும் கட்டுப்படுத்தும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆகவே, தகுதியுடையவர்கள் அனைவரும் தடுப்பூசிகளைச் செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும். அப்போதுதான் கரோனா அச்சம் முற்றிலுமாக விலகும்.

- கு. கணேசன், பொதுநல மருத்துவர், தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x