Published : 24 Mar 2016 11:02 AM
Last Updated : 24 Mar 2016 11:02 AM

என்ன செய்ய வேண்டும் எனக்கான அரசு?- தேவை மதுவிலக்கு

மதுப் பழக்கத்தால் துவண்டு தவிக்கிறது தமிழகம். மாநிலத்தின் மனித சக்தியைக் கரையானைப் போலக் கொஞ்சம் கொஞ்சமாக அரித்து நிர்மூலமாக்கி வருகிறது மது. குடிநோயாளிகளின் எண்ணிக்கை ஒன்றரைக் கோடிக்கு மேல் என்று கிடைக்கப்பெறும் புள்ளிவிவரங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. மதுவால் கணவனை இழந்த பெண்கள் இல்லாத வீதிகளே தமிழகத்தில் இல்லை என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ் சமூகத்தின் மீது மது தொடுத்துள்ள ‘உயிரி தொழில்நுட்ப யுத்தம்’ இது. நாள்தோறும் கொத்துக்கொத்தாகச் செத்து மடிகிறார்கள் மக்கள். மதுவுக்கு எதிராக மொத்தக் கட்சிகளும் குரல் கொடுத்தும், ஆளும் அரசு சிறிதும் அசைந்து கொடுக்காததுதான் வேதனை. இதோ அடுத்து வரவிருக்கும் அரசிடம் மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்?

சாந்தி (வயது 30), சென்னை.

லவ் மேரேஜ்தாங்க பண்ணிக்கிட்டேன். அது குடிநோயாளியாகிடுச்சி. தனியா பேசும். யாரோ அதைத் துரத்துறதா சொல்லும். அதுக்குப் பைத்தியமே பிடிச்சிடுச்சு. தினமும் அடி விழும். ஒருநாள் அடி தாங்காம பிள்ளைகளோட அம்மா வீட்டுக்குப் போயிட்டேன். நைட்டு குடிச்சிட்டுவந்து தூக்கு மாட்டி செத்துருச்சி. நான் அம்மா பாசறையில தலைவியா இருந்தேன். வாழ்க்கையே போச்சு, இனி எதுக்கு அம்மா பாசறைன்னு உதறிட்டு வந்துட்டேன். கடைய மூடச்சொல்லுங்க சார்!

மகேஸ்வரி (வயது 35), சென்னை.

பொழுதன்னிக்கும் அதுக்கு குடிதாங்க. குடிபோதையிலதான் ஆட்டோவே ஓட்டும். ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய்க்கும் மேல சம்பாதிக்கும். வீட்டுக்கு வர்றப்ப பத்து காசு இருக்காது. ஆட்டோ எங்கேயோ அனாதையா நிக்கும். நாங்கதான் வேற ஆளைக் கூட்டிட்டுப் போய் ஆட்டோவை எடுத்துட்டு வருவோம். சில சமயம் குடிச்சிட்டு நாலைஞ்சு நாளு வீட்டுக்கு வராது. ஒருமுறை அப்படித் தான் எங்கேயோ போச்சு. அதுக்கப்புறம் வரவே இல்லை. அஞ்சாறு வருஷமாச்சு. இப்ப உசுரோட இருக்குதா செத்துப்போச்சான்னுகூடத் தெரியலை. மூணு பொண்ணுங்களை வெச்சிக்கிட்டு அல்லாடறேன். எல்லோரும் வீட்டு வேலைக்குப் போயிதான் வயித்தைக் கழுவுறோம். அது வரும்னுதான் இன்னும் தாலியைக் கழட்டாம காத்திருக்கேன். பிராந்தி கடையெல்லாம் மூடுனாதான் என் நிலைமை இன்னொரு பொம்பளைக்கு வராது.

இனாமுல் ஹசன், மதுபோதை ஒழிப்புக்கான மக்கள் இயக்கம், புதுச்சேரி.

ஓர் அமைதியான சமூகத்தை உருவாக்க வேண்டும். அந்தச் சமூகத்தில் பெண்கள் பயமின்றி, சுதந்திரமாக, சம உரிமையுடன் வாழ வேண்டும். பெண்கள் மீதான வன்முறைகள் அறவே இருக்கக் கூடாது. இளைஞர்கள் சமூகத் தெளிவுடனும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் இருக்க வேண்டும். இதற்கெல்லாம் ஒரே தீர்வு மதுவிலக்கு மட்டுமே!

கோமதி (வயது 25), வடசென்னை.

புருஷன் செத்துப்போய் ஒன்றரை வருஷம் ஆச்சு. வீட்ல வேற கல்யாணம் பண்ணிக்கச் சொல்றாங்க. விவரம் தெரியாம திரும்பவும் இன்னொரு குடிகாரன்கிட்ட மாட்டிக்கிட்டு சாக முடியாதுன்னு சொல்லிட்டேன். கெஞ்சிக் கேட்டுக்குறேன். என்னை மாதிரி யாரும் பாதிக்கப்படக் கூடாது. தயவு செஞ்சு டாஸ்மாக் கடைகளை எல்லாம் மூடுங்க.

வர்தினி (வயது 19), சென்னை

கண்ண மூடிக் கண்ணத் தொறக்குறதுக்குள்ள எல்லாமே பூடுச்சிண்ணா. 18 வயசுல கண்ணாலம் பண்ணேன். ஒரு வருசம்கூட ஆகல, இப்ப தாலியத்துட்டு நிக்கறேன். எங்கப்பா ஒரு குடிகாரர். அவர்கிட்டருந்து தப்பிக்க இதைக் கண்ணாலம் கட்டிக்கிட்டேன். மொத நாளே குடிச்சிட்டுதான் பக்கத்துல வந்துது.

குழந்தைகூட இல்ல. டெஸ்ட் பண்ணதுல குடியால ஆண்மை போயிடுச் சின்னாங்க. தினமும் அடி, உதைதான். கல்லீரல் நோயால, ரோட்டுல சுருண்டு விழுந்து செத்துப்போச்சு. இப்ப சொல்லுங்க குடிப்பழக்கத்துக்குத் துணை போகணுமா?

ஆனந்தியம்மாள், மது ஒழிப்புப் போராளி, சென்னை.

முன்பெல்லாம் மகளிர் உரிமை மாநாடுதான் நடத்துவோம். இப்போது விதவைகள் மாநாடு நடத்திவருகிறோம். ஒவ்வொரு மாநாட்டுக்கும் குறைந்தது 5,000 பெண்கள் வருகிறார்கள்.

தமிழகத்தில் மதுவினால் மட்டுமே சுமார் 20 லட்சம் பெண்கள் கணவனை இழந்திருக்கிறார்கள். இந்தப் பாவத்தை எல்லாம் எப்படிக் கழிப்பது? அதற்காகவாவது மதுக் கடைகளை மூடச் சொல்லுங்கள்.

எஸ்.மோகன வெங்கடாஜலபதி, மனநல மருத்துவர், சேலம்.

முன்பெல்லாம் வேறு ஏதாவது ஒரு காரணத்தால் மனநலம் பாதிக்கப்பட்டு எங்களிடம் வருவார்கள். இன்று மதுப் பழக்கத்தால் மனநோயாளியானவர்களே அதிகம் வருகிறார்கள். முன்பை விட மனநோய்களின் தன்மையும், வீரியமும் பல மடங்கு கூடிவிட்டது. தவிர, இன்றைய மண முறிவுகளுக்கு மதுவே 50% காரணமாக இருக்கிறது. எனவே, மதுவிலக்குதான் இன்றைய அவசரத் தேவை.

தனசேகரன், தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கப் பொதுச் செயலாளர் (ஏ.ஐ.டி.யூ.சி), சென்னை:

மது விற்பனையால் ரூ. 29,000 கோடி வருமானம் கிடைக்கிறது என்கிறார்கள். ஆனால், தமிழகத்தின் விலை மதிப்பில்லாத மனித சக்தி ஆண்டுதோறும் அழிந்துவருகிறது. மதுப் பழக்கத்தால் இன்று தமிழகத்தில் லட்சக்கணக்கானோர் உடல்நலம் குன்றியவர்களாக, மனநோயாளிகளாக இருக்கிறார்கள். டாஸ்மாக் நிறுவனத்தில் மட்டும் கடந்த 10 ஆண்டுகளில் தீவிர மதுப்பழக்கம் காரணமாக சுமார் 4,000 ஊழியர்கள் இறந்துவிட்டார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் 40 வயதுக்கு உட்பட்டவர்கள். ஆகவே, தமிழகத்துக்கு இன்றைய அவசரத் தேவை மதுவிலக்கு.

பாடம் நாராயணன், சமூக ஆர்வலர், சென்னை.

இன்றைய காலகட்டத்தில் நாம் சந்தித்துக்கொண்டிருக்கும் மதுச் சந்தையின் பின்விளைவுகளும் பாதிப்புகளும் அதிதீவிரமானவை. தவிர, 20-ம் நூற்றாண்டில் நாம் சந்தித்தவற்றில் இருந்து பெரிதும் மாறுபட்டவை.

வீரியமெடுத்துவிட்ட மதுச் சந்தையைக் கட்டுப்படுத்த இப்போதுகூட அவசரமாக எதுவும் செய்யாவிட்டால், அது நம் தலைமுறையினருக்குச் செய்யும் துரோகம். வாக்களித்த மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்ட ஒரு அரசு, மதுச் சந்தையைக் கட்டுக்குள் கொண்டுவந்தால் மட்டுமே பொருளாதார, சமூக, தனிமனித வளர்ச்சியை மீட்க முடியும்.

தங்கவேலு, வழக்கறிஞர், குமாரபாளையம்.

ஈரோடு அருகே குமாரபாளையத்தில் வினோபாஜி நகரில் ஒரு தெரு இருக்கிறது. அங்கு மொத்தம் 27 குடும்பங்கள் வசிக்கின்றன. அவற்றில் பாதிக்கும் மேற்பட்ட குடும்பங்களில் குடிப்பழக்கத்தால் தினசரி பெண்கள் மீதான வன்முறை நடக்கிறது. தெருக்களில் ஆண்கள் போதையில் உடைகள் களைந்து மயங்கிக்கிடக்கிறார்கள்.

இப்போது தமிழகமே இப்படி மாறிவருகிறது. சுமார் 60 லட்சம் பெண்கள் தினசரி தங்கள் கணவரால், தந்தையால், சகோதரர்களால் வன்முறைக்கு ஆளாகிறார்கள். பெண்கள் மீதான வன்முறைகளைத் தடுக்க மதுவிலக்கு மிகவும் அவசியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x