Published : 26 Nov 2021 03:06 AM
Last Updated : 26 Nov 2021 03:06 AM

தமிழில் அரசமைப்பு: வளர்ந்துவரும் தனி வரலாறு

தமிழ்நாட்டில் நாடு போற்றும் வழக்கறிஞர்கள் பலர் உண்டு என்றாலும் சட்டம் குறித்த விவாதங்களைத் தமிழிலும் நிகழ்த்துபவர்கள் மிகச் சிலரே. சட்ட அறிவும் தமிழ் உணர்வும் ஒன்றுசேர்ந்த அத்தகைய ஒருசிலரில் எழுத்தாளரும் வழக்கறிஞருமான ‘சிகரம்’ ச.செந்தில்நாதனும் ஒருவர். இந்திய அரசமைப்பு குறித்த நூலொன்றை அவர் எழுதியிருக்கிறார். சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்நூல் விளக்கங்கள், விமர்சனங்கள், தீர்ப்புகள் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.

வழிபாட்டு உரிமைகள் பற்றிய சட்ட விளக்க நூல்களை எழுதியுள்ள செந்தில்நாதன், நீதிமன்றப் பின்னணியில் ‘நீதியரசர் மா.மாணிக்கம்’ என்ற நாவல் ஒன்றையும் எழுதியவர். அரசமைப்பு குறித்து அண்மையில் வெளிவந்திருக்கும் அவரது நூலில், இந்திய அரசமைப்பின் சுருக்கமான வரலாறு, அரசமைப்பு நிர்ணய சபை, முக்கியமான தீர்ப்புகள் ஆகியவற்றுடன் ‘சில விமர்சனங்கள், சில பார்வைகள்’ என்ற தலைப்பிலான சிறப்புக் கட்டுரையும் இடம்பெற்றுள்ளது.

அரசமைப்பு குறித்த விரிவான விவாதங்கள் தமிழிலும் நடத்தப்பட வேண்டும். அதற்கான ஆதார நூல்களும் மொழிபெயர்க்கப்பட வேண்டும். இந்திய அரசமைப்பின் அதிகாரபூர்வமான தமிழாக்கத்தில் பெரும்பங்கு வகித்த தமிழறிஞர் கு.சிவமணி, 90 வயதைக் கடந்த நிலையில், கிரான்வில் ஆஸ்டின் எழுதிய ‘இந்திய அரசமைப்பு வரலாறு’ குறித்த ஆங்கில நூலைத் தமிழில் மொழிபெயர்த்துக்கொண்டிருக்கிறார். தமிழறிஞர்களின் பங்களிப்புகளைப் பாராட்டுகிற நேரத்தில், இத்துறையில் நம்முடைய போதாமைகளையும் தேக்க நிலையையும் எண்ணிப்பார்க்க வேண்டியிருக்கிறது.

இந்திய அரசமைப்பு விவாதிக்கப்பட்டபோது, அந்த அவையில் இடம்பெற்றிராத அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் அது குறித்து வெளியிட்ட கருத்துகள் என்ன என்பதும் தொகுத்து ஆராயப்பட வேண்டியது. இந்திய அளவிலேயே அதற்கான ஆய்வுத் தேவை உள்ளது என்றபோதிலும், அரசமைப்பு நிர்ணய அவையில் தென்னிந்தியாவின் மொத்தப் பிரதிநிதியாகவும் காங்கிரஸ் கட்சியே இருந்தபோது, திராவிட இயக்கம் கொண்டிருந்த பார்வையும் பின்பு அதில் ஏற்பட்ட மாற்றங்களும் தனித்துப் பார்க்கத்தக்கவை. செந்தில்நாதன் தன்னுடைய நூலில், அரசமைப்புத் திருத்தங்களுக்கும் அவற்றின் பின்னணிக்கும் சிறப்புக் கவனம் கொடுத்துள்ளார். இதுவரையிலுமான அனைத்துத் திருத்தங்களையும் உள்ளடக்கிய நூலாக அது அமைந்துள்ளது. இந்திய அரசமைப்பின் முதல் திருத்தங்களில் ஒன்றான பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டுக்குத் தமிழ்நாட்டில் நடந்த போராட்டங்களே வழிவகுத்தன.

1957-ல் நடந்த அரசமைப்புச் சட்ட எரிப்புப் போராட்டங்கள் குறித்து மட்டுமே ஏறக்குறைய 2,500 பக்க அளவில் திருச்சி என்.செல்வேந்திரன் புத்தகம் எழுதியிருக்கிறார். அரசமைப்பின் முகப்புரையில் 1976-ல் ‘சோஷலிஸம்’ என்ற வார்த்தை சேர்க்கப்பட்டபோது, அதை ஆதரித்து தஞ்சையைச் சேர்ந்த வழக்கறிஞர் அ.இராமமூர்த்தி ‘சோஷலிஸ்ட்’ என்ற பெயரில் தனி மாத இதழே நடத்தியிருக்கிறார். இந்திய அரசமைப்புத் திருத்தங்கள் குறித்து, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடத்தப்பட்ட விவாதங்களும்கூடத் தனியாகத் தொகுக்கப்பட வேண்டியவை. காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக் காலத்திலும் திராவிடக் கட்சிகளின் ஆட்சிக் காலத்திலுமாக நடந்த அத்தகைய விவாதங்கள் மத்திய-மாநில உறவுகளுக்கு இடையிலான வரலாற்று ஆதாரங்களும்கூட.

ஷரத்து மாறி கூறு ஆனது

அரசமைப்பு குறித்து தமிழில் நூல்கள் நிறைய உண்டு. சட்ட மொழிபெயர்ப்புகள் தவிர, அறிமுக நூல்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் மேலிருக்கும். பெரும்பாலும் அவை போட்டித் தேர்வுக்கான பாடக்குறிப்புகளாக மட்டுமே உள்ளன. செந்தில்நாதனின் நூல் மாணவர்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் பயன்படத்தக்கது என்றாலும், இந்திய அரசமைப்பு குறித்த ஆழமான அரசியல் புரிதலை வேண்டி நிற்போருக்கும் பயன்படக்கூடியது. சட்டத் துறை சார்ந்த சொற்களால் வாசகர்களை விலகி நிற்க வைத்துவிடாமலும் எளிமை கருதி, சாரம் நீர்த்துப் போகாத வகையிலும் கவனத்தோடு இந்தப் புத்தகத்தை செந்தில்நாதன் எழுதியிருக்கிறார்.

இந்திய அரசமைப்பு இயற்றப்பட்ட காலத்திலிருந்தே அது குறித்துத் தமிழில் புத்தகங்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. ஐம்பதுகள் தொடங்கி வெளிவந்த புத்தகங்களை ஒருசேர இன்று திரும்பப் பார்க்கையில், மொழியாக்கங்களில் நிகழ்ந்துவரும் செம்மையாக்கம் வியப்பளிக்கிறது. ‘ஆர்ட்டிகிள்’ (Article) என்ற சொல்லை செந்தில்நாதன் ‘கூறு’ என்று மொழிபெயர்த்துள்ளார். வழக்கமான சட்டங்களின் ‘பிரிவு’ என்ற வார்த்தையிலிருந்து அதை வேறுபடுத்திக் காட்டுவதற்குச் சில ஆண்டுகள் முன்புவரை ‘ஷரத்து’ என்றே குறிப்பிடப்பட்டுவந்தது. கூறு என்ற சொல்லைப் பொதுப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்ததில் பத்திரிகைகளின் பங்கும்கூடக் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியது.

காலம்தோறும் முகப்புரை

அரசமைப்பின் முகப்புரை குறித்த அத்தியாயத்தில் 42-வது திருத்தத்தில் சேர்க்கப்பட்ட சமயச்சார்பின்மை, சமதர்மம் ஆகிய சொற்களுக்கு முறையே பகுத்தறிவுவாதிகளும் மார்க்ஸியவாதிகளும் கொள்ளும் பொருளிலிருந்து மாறுபட்டு, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் பொருள்கொள்வதை செந்தில்நாதன் சுட்டிக்காட்டுகிறார். ‘ப்ரியாம்பி’ளை (preamble) முகப்புரை என்று சொல்வது இன்று பொதுவழக்காகிவிட்டது. ஆனால், அரசமைப்பு இயற்றப்பட்ட காலத்தில், ‘பிரஸ்தாவனம்’ என்றுதான் அது குறிப்பிடப்பட்டது. ஆங்கிலத்தில் இயற்றப்பட்ட அரசமைப்பு முதலில் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டது. இந்தி மொழிபெயர்ப்பையொட்டியே மாநில மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது. அதன் விளைவாக, முகப்புரை ‘சம்பூர்ண பிரபுத்துவ சம்பன்ன லோக தந்தராத்மக கன ராஜ்யமாக அமைத்து’ என்று மொழிபெயர்க்கப்பட்டது.

தமிழ் மொழிபெயர்ப்பில் ஊடுருவிய இந்திமயமாக்கலை எதிர்த்து, தமிழ்ப் பத்திரிகையாளர்கள் தாங்களே ஒரு மொழிபெயர்ப்பை வெளியிட்டனர். ‘சுதேசமித்திரன்’ உதவி ஆசிரியர் எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி மொழிபெயர்ப்பில் சுதேசமித்திரன் காரியாலயம் வெளியிட்ட மொழிபெயர்ப்பில், அரசு மொழிபெயர்ப்பின் ‘பிரஸ்தாவனம்’, ‘பூர்வ பீடிகை’ என்றானது. ‘பூர்வ சுதந்திரத்தோடு கூடிய ஒரு ஜனநாயகக் குடியரசை ஸ்தாபிப்பதென்பது இந்திய ஜனங்களாகிய நமது உறுதியான தீர்மானம்’ என்று மொழிபெயர்க்கப்பட்டது.

முகப்புரை என்ற தலைப்பின் கீழ் ‘இந்திய மக்களாகிய நாம், இந்திய நாட்டின் இறையாண்மையும் சமநலச் சமுதாயமும் சமயச்சார்பின்மையும் மக்களாட்சி முறையும் அமைந்ததொரு குடியரசாக நிறுவவும்..’ என்று நற்றமிழில் இன்று நாம் படிப்பதற்கு, மேற்கண்டவாறு பல மொழியாக்கங்களைக் கடந்துவந்திருக்கிறோம் என்பதையும் நினைத்துப்பார்க்க வேண்டியிருக்கிறது. சட்டத் தமிழ் வரலாற்றில் அதுவும்கூடத் தனித்து எழுதப்பட வேண்டிய அத்தியாயம்தான். இந்திய அரசமைப்புத் தத்துவம்போலவே, அரசமைப்பின் தமிழாக்கமும் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அந்த மொழியாக்க வரலாற்றில் ‘சிகரம்’ ச.செந்தில்நாதனும் இப்போது இடம்பிடித்துவிட்டார்.

செல்வ புவியரசன், தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in

நவம்பர் 26: இந்திய அரசமைப்பு நாள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x