Last Updated : 01 Apr, 2014 12:00 AM

 

Published : 01 Apr 2014 12:00 AM
Last Updated : 01 Apr 2014 12:00 AM

குஜராத் என்ன சொல்கிறது?

குஜராத்தின் இளைஞர்கள் மற்றைய மாநிலத்தின் இளைஞர்களைப் போல நாளைய இந்தியா பிரகாசமாக இருக்கும் என்றே நினைக்கிறார்கள். நான் சந்தித்த முஸ்லிம் இளைஞர்களும் எதிர்காலத்தைப் பற்றி நிறைய நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். பணத்தின் மீது அவர்களுக்கு இருக்கும் மரியாதை, இந்தியாவின் மற்றைய இளைஞர்களிடம் அதிகம் இல்லாத ஒன்று என்று நான் நினைக்கிறேன். துவாரகை போன்ற சிறிய இடங்களில் கூட பங்குச் சந்தையில் என்ன நடக்கிறது என்பதுபற்றிய ஆர்வம் அதிகமாக இருக்கிறது.

துவாரகை

நமது வழிபாட்டுத் தலங்களில் இருக்கும் எல்லா அழுக்குகளும் துவாரகையிலும் இருக்கிறது. கடலோரத்தில் இருக்கும் கோயில்களுக்கு இருக்க வேண்டிய அழகு துவாரகைக்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். மோடியின் புகழ் இங்கு கொடிகட்டிப் பறக்கிறது. 2009-ம் ஆண்டு காங்கிரஸ் இங்கு வெற்றி பெற்றது. நான் சந்தித்த அனைவரும் காங்கிரஸ் ஒரு பழைய கதை என்று சொன்னார்கள்.

துவாரகையிலிருந்து சிறிது தொலைவில் கடலுக்கு அப்புறம் ‘பேட் துவாரகை’ என்ற இடத்தில் கண்ணனுக்கு மற்றொரு கோயில் இருக்கிறது. படகில் செல்ல வேண்டும். நான் ஏறும்போதே படகு நிரம்பியிருந்தது. எனக்குப் பின்னால் குறைந்தது 200 பேர்களாவது ஏறியிருப்பார்கள். ஜலசமாதி நிச்சயம் என்று ஒரு 10 நிமிடங்கள் நினைக்க வைத்து, ஒருவழியாக மறு கரைக்குப் படகு போய்ச்சேர்ந்தது. இதுவும் மீனவர்களின் கிராமம். 80% முஸ்லிம்கள். ஆனால், கோயிலைச் சுற்றி இந்துக்கள்.

எங்களுக்குள் எந்தத் தகராறும் இல்லை என்று இரு மதங்களைச் சார்ந்தவர்களும் சொன்னார்கள். ஆனால், இந்துக்கள் இருக்கும் இடங்களுக்குத் தண்ணீர் அதிகம் விடப்படுகிறது என்று சிலர் குற்றம் சாட்டினர். “மோடியா? யார் அவர்?” என்று என்னிடம் ஒருவர் கேட்டார்!

சோம்நாத்

திரும்பத் திரும்பச் சூறையாடப்பட்டு திரும்பத் திரும்ப மீண்டும் எழுந்த கோயில் சோம்நாத். இந்தியாவின் மிக அழகிய கோயில்களில் இதுவும் ஒன்று என்று சொல்ல வேண்டும். சென்ற நூற்றாண்டின் 50-களில் மீண்டும் கட்டப்பட்ட இந்தக் கோயில், மிகத் தூய்மையாக இருப்பது இதமாக இருக்கிறது. சர்தார் படேல், சிலை வடிவில் கைகளைக் கட்டிக்கொண்டு கோயிலைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். இந்தக் கோயிலின் வெளிச்சுற்றில் ஓர் அதிசயமான மனிதரைச் சந்தித்தேன். மீனவக் குடும்பத்தில் பிறந்த அவர் சத ருத்ரியத்தையும் புருஷ சூக்தத்தையும் மூச்சு விடாமல் சொல்கிறார்.

வடமொழியில் அசாத்தியப் புலமை கொண்ட அவர், கடல் உணவுத் தொழிற்சாலை ஒன்றின் அதிபதி. அவருக்கு முன் உட்கார்ந்துகொண்டு வாய்பிளந்தபடி, அவர் சொல்பவற்றைக் கேட்பவர்கள், வெங்காயத்தைக்கூட உணவில் சேர்க்காதவர்கள். “மயானத்தில் உட்கார்ந்து மண்டையோடுகளை மாலையாக அணிந்திருப்பவனை வழிபடும் நான் எப்படி மாமிசம் சாப்பிடாமல் இருக்க முடியும்?” என்கிறார். இவரும் மோடியின் சீடர். “சோமநாதரின் அருள் அவருக்கு நிச்சயம் இருக்கிறது” என்று அவர் கூறியதை அவரைச் சுற்றியிருப்பவர்கள் கைகளைத் தட்டி ஆமோதித்தனர்.

சோம்நாத்திலிருந்து தென் துருவம் வரை ஒரு நேர்க்கோட்டை இழுத்தால், இடையில் நிலமே வராது என்று சொல்லப்படுகிறது. குஜராத்தில் நேர்க் கோடுகளுக்குப் பஞ்சம் என்றுதான் நினைக்கிறேன். என்னிடம் பேசியவர்களில் மிகச் சிலரைத் தவிர, மற்றைய அனைவரும் சுற்றிவளைத்துத்தான் பேசினார்கள். அறிமுகம் இல்லாதவனிடம்கூடத் தங்களின் உண்மையான அடையாளம் தெரிந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள்.

அகமதாபாத்

இந்த நகரத்தில் இருக்கும் காந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்கும் கூட்டம் வருகிறது. இங்கும் இளைஞர்கள் அதிகம் இருந்தார்கள். ஆசிரமத்திலிருந்து திரும்பி வரும்போது எனது காரோட்டி அவரது வாழ்க்கையைப் பற்றிச் சொன்னார். இரண்டு குழந்தைகள். மாதம் 10,000 ரூபாய் சம்பாதிக்கிறார். 4,000 ரூபாய் மிச்சம் பிடிப்பதாகச் சொன்னார்.

“எப்படிச் சாத்தியம்?” என்று கேட்டேன்.

“கூட்டுக் குடும்பம்” என்றார். பெண் ராஜஸ்தானில் இருக்கும் அவரது சொந்தக் கிராமத்தில் படிக்கிறார்.

“சைக்கிள் கொடுக்கப்போகிறார்கள். அதற்குப் பதிவுசெய்ய ஐநூறு ரூபாய் கொடுத்திருக்கிறேன்.”

“லஞ்சமா?”

“ஆமாம். இங்கு மட்டும் என்ன குறைவாம்? எனது டாக்சி லைசென்ஸைப் புதுப்பிக்க 1,000 ரூபாய் கொடுத்தேன்.”

“மோடியால் இதை ஒழிக்க முடியவில்லையா?”

“அது எப்படி முடியும்? கையை எத்தனை தடவை சோப்புப் போட்டுத் தேய்த்தாலும் கிருமிகளை அழிக்க முடியுமா?” லஞ்சம் மரணத்தைப் போன்று தவிர்க்க முடியாதது என்ற எண்ணம் நமது மக்கள் மனங்களில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. குஜராத் மக்கள் கேஜ்ரிவாலை ஒரு பொருட்டாகவே நினைக்க வில்லை.

மசூதிகள்

அகமதாபாத் நகரத்தில் நான் மூன்று மசூதிகளுக்குச் சென்றேன். முதலாவது, சிதி சையத் மசூதி. இதன் வேலைப்பாடு அமைந்த ஜன்னல் உலகப் புகழ் பெற்றது. நகரத்தின் பரபரப்பு மிகுந்த பகுதியில் இருந்தாலும், மசூதியினுள் ஓர் அமைதி இருக்கிறது. இங்கு நான் சந்தித்தவர் 2002-ம் ஆண்டு கலவரத்தில் பாதிக்கப்பட்டவர். அவரது இந்து நண்பர்கள் காப்பாற்றினார்கள் என்று கூறினார்.

“ஆனாலும் எங்களுக்கும் அவர்களுக்கும் தவிர்க்க முடியாத இடைவெளி வந்துவிட்டது. நான் காங்கிரஸுக்குத்தான் ஓட்டுப் போடுவேன். மூழ்கினாலும் நீந்த முடிந்தாலும் அவர்களோடுதான்.”

ஜும்மா மசூதி - நான் பார்த்த மசூதிகளிலேயே மிக அழகான ஒன்று. பல தூண்களுடன் இருக்கும் அது ஜைனக் கோயில்களை நினைவுக்குக் கொண்டுவருகிறது. இங்கு நான் சந்தித்தவர், “மோடிக்கு ஓட்டுப் போடுவேன்” என்று சொன்னார்.

“வேறு வழி கிடையாது. நாங்கள் ஏழைகள். எங்களை அவர் நம்பாவிட்டால், எங்களால் எங்கும் செல்ல முடியாது. தொலைக்காட்சியில் வாய் வலிக்கப் பேசுபவர்கள், அடி விழும்போது எங்கள் பக்கத்தில் இருக்க மாட்டார்கள். நான் இதைப் பயத்தால் சொல்லவில்லை. என்னால் திரும்ப அடிக்க முடியும். ஆனால், என்ன பலன்? என் பையனை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும். அதற்காக நான் எதுவும் செய்யத் தயாராக இருக்கிறேன்.”

கடைசியாகச் சென்ற மசூதி, ஆடும் ஸ்தூபியைக் கொண்ட மசூதி. இப்போது ஸ்தூபியை அசைத்துப் பார்ப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்று மசூதியின் காவலாளர் சொன்னார். “ஸ்தூபிதான் ஆடவில்லை. எங்கள் வாழ்க்கை விடாமல் ஆட்டத்தில் இருக்கிறது.” மசூதியைச் சுற்றிலும் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள். அவர்கள் கவலையில்லாமல் ஆட்டத்தில் மும்முரமாக இருந்தார்கள்.

தொழிலதிபர்

திரும்ப டெல்லிக்கு வரும்போது என்னுடன் தொழிலதிபர் ஒருவர் பயணம் செய்தார். நன்கு படித்தவர். நுண் இயந்திரங்களைத் தயாரிப்பவர். அவர் மோடியைப் பற்றிச் சொன்னார், “எங்களுக்கு அவரை விட்டால் வேறு வழியில்லை என்பது உண்மை. ஆனால், இந்தியாவுக்கு அவரை விட்டால் வேறு வழியில்லை என்று என்னால் சொல்ல முடியாது. குஜராத்துக்குப் பொருந்துவது இந்தியாவுக்கும் பொருந்துமா? பொருந்தாது என்று சொன்னால், எனது நெருங்கிய நண்பர்கள் என்னுடன் பேசுவதை நிறுத்திவிடுவார்கள்.”

- பி. ஏ. கிருஷ்ணன், ஆங்கிலம்-தமிழ் நாவலாசிரியர்,
பொதுத்துறை நிறுவனமொன்றின் ஓய்வுபெற்ற அதிகாரி,
தொடர்புக்கு: tigerclaw@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x