Published : 25 Nov 2021 03:12 AM
Last Updated : 25 Nov 2021 03:12 AM

வேளாண் சட்டங்கள் ஒரு விவாதம்

வருமானத்தை இரு மடங்காக்க இதுதான் வழி

சுபி.தளபதி, தலைவர் - கொடிவேரி அணை பாசன விவசாயிகள் சங்கம்

விவசாயம் தொடர்பான விவாதங்கள் எழும்போதெல்லாம், எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையின் பரிந்துரைகளை அமல்படுத்துங்கள் என்ற கோஷம் எழுவது வழக்கம். இந்த முழக்கங்களில், ‘விவசாயிகள் உற்பத்திசெய்த பொருட்களுக்கு முதலீட்டுச் செலவிலிருந்து இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும் வகையில், விலை நிர்ணயம் செய்ய வேண்டும்’ என்ற பரிந்துரையே பிரதானமாக முன்னிறுத்தப்படுகிறது.

இந்தப் பரிந்துரையைக் குறிப்பிடும் கட்சிகள், அமைப்புகள் அதனை நிறைவேற்ற எம்.எஸ்.சுவாமிநாதன் கூறிய தீர்வுகளை மட்டும் கவனமாக மறந்துவிடுகின்றன. இடுபொருள் மற்றும் போக்குவரத்துச் செலவு குறைப்பு, நீர் மேலாண்மை, இயந்திரமயமாக்குல், சந்தை மண்டிகளைப் பரவலாக்குவது, தேவையற்ற கட்டுப்பாடுகளைத் தளர்த்துதல், ஒப்பந்த முறை சாகுபடியை ஏற்படுத்துவது உள்ளிட்ட வழிவகைகளை அவர் பட்டியலிட்டுள்ளார். சுவாமிநாதன் அறிக்கையைக் கொண்டாடுவோர், அவரது பரிந்துரைகளை உள்ளடக்கியதும், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வழிவகை செய்வதுமான மூன்று வேளாண் சட்டங்களை எதிர்ப்பது ஏன்?

அத்தியாவசியப் பொருட்கள் சட்டத் திருத்தத்தால் தனியார் பெருமுதலாளிகள் வேளாண் உற்பத்திப் பொருட்களைப் பதுக்கி, பற்றாக்குறை ஏற்படுத்தி, அதிக விலைக்கு விற்பனை செய்வார்கள் என்பது நுகர்வோரை அச்சப்படுத்தும் பொய்ப் பிரச்சாரம். அச்சட்டத்திலிருந்து வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு எதற்காகத் தற்போது விலக்கு கொடுக்கப்பட்டது என்ற கேள்வி எழலாம். விவசாய விளைபொருட்களை வாங்கி, அதனை மதிப்புக்கூட்டுப் பொருளாக மாற்றும் தொழில் நிறுவனங்களுக்கு, நேரிடையாக விவசாயிகளிடம் வாங்குவது, இருப்பு வைப்பது குறித்துப் பல கட்டுப்பாடுகள் தற்போது உள்ளன. அவற்றை நீக்கும்போது, கொள்முதல் அதிகரிக்கும். இதனால் உற்பத்தியும் விவசாயிகளுக்கான லாபமும் அதிகரிக்கும்.

கடந்த காலங்களில், விவசாயிகளை இடைத்தரகர்கள் மிரட்டி, அவர்கள் சொல்லும் விலைக்கு விளைபொருட்களை வாங்கிய நிலை இருந்தது. இந்நிலையை மாற்ற, நாடு முழுவதும் மத்திய, மாநில (ஏபிஎம்சி) மண்டிகள், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், வேளாண் கூட்டுறவுச் சங்கங்கள் அரசால் தொடங்கப்பட்டன. பல மாநிலங்களில் இந்த மண்டிகள் காலப்போக்கில் அரசியல் இடைத்தரகர்களின் கட்டுப்பாட்டில் இயங்கத் தொடங்கிவிட்டன. தலைநகரில் நடந்த தொடர் போராட்டத்தில் பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் அதிக அளவில் இருந்ததைப் பார்த்திருப்போம்.

மற்ற மாநில விவசாயிகளைக் காட்டிலும், இவர்கள் போராட்டக்களத்தில் குதித்துத் தீவிரப்படுத்தியதற்கான பின்னணியில் மண்டிகளும் அதில் நடக்கும் முறைகேடுகளும்தான் காரணமாக இருக்கின்றன. மண்டிகளில் மட்டும் விவசாய விளைபொருட்களை விற்பனை செய்ய முடியும் என்பதை மாற்றி, நேரடியாக யாருக்கு வேண்டுமானாலும் விவசாயிகள் விற்பனை செய்ய புதிய வேளாண் சட்டம் வகைசெய்கிறது. இதுவும் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கத்தானே உதவும்? அதற்காக மண்டிகளை மூட வேண்டும் என வேளாண் சட்டம் சொல்லவில்லை. விவசாயிகள் விருப்பப்பட்டால், அரசு மண்டிகளில் கட்டணமின்றி விற்பனை செய்யலாம்.

கடைசியாக, ஒப்பந்த முறை விவசாயம் தொடர்பான சட்டம். இந்த முறையானது ஏற்கெனவே தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் நடைமுறையில் உள்ளதுதான். இந்த ஒப்பந்தத்தில் அரசும் ஒரு பிரதிநிதியாக இணையும்போது விவசாயிகளுக்குச் சட்டப் பாதுகாப்பு கிடைக்கிறது. அதே நேரத்தில், ஒரு விவசாயி விருப்பப்பட்டால்தான் ஒப்பந்த விவசாயத்தில் பங்கேற்கலாம். குறைந்தபட்ச ஆதரவு விலைக்குக் கீழ் ஒப்பந்தம் மேற்கொண்டால் செல்லாது; ஒப்பந்தம் செய்யப்பட்ட பின், சந்தை விலை அதிகமாக இருந்தால், அந்த விலையைக் கொடுக்க வேண்டும்.

தான் விளைவிக்கும் பொருளை ஒரு நிறுவனம் உறுதியாக, குறிப்பிட்ட விலைக்கு வாங்கிக்கொள்ளும் என்ற உறுதியை ஒப்பந்தம் மூலம் அரசு முன்னின்று பெற்றுத்தருமானால், அந்த விவசாயிக்கு வருமானம் அதிகரிக்க அரசு துணைநிற்கிறது என்பதுதானே பொருள்? விவசாயிகள் நலனுக்காக, அவர்கள் வருவாயை உயர்த்த புதிய வேளாண் சட்டங்கள் ஒரு சந்தையைத் திறக்கின்றன. அதில் பயணித்தால் பாதகம் ஏற்படும் என முன்கூட்டியே கதைகட்டி, விவசாயிகளைத் திசை திருப்பியதன் பின்னணியில் அரசியலே பிரதானமாக உள்ளது.

சொன்னதைச் செய்வாரா மோடி?

வெ.ஜீவகுமார், விவசாயிகள் உரிமைச் செயல்பாட்டாளர்

வேளாண் சட்டங்கள் மூன்றும் திரும்பப் பெறப்பட்டதற்கு, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்கள் மட்டும் காரணமல்ல. இவ்விஷயத்தில், உச்ச நீதிமன்றம் அவ்வப்போது ஒன்றிய அரசின் மீது காட்டிவந்த அதிருப்தியும் ஒரு காரணம். லக்கிம்பூரில் விவசாயிகள் கொலை வழக்கில் உத்தர பிரதேசத்துக்கு எந்த வகையிலும் தொடர்பு இல்லாதவராக நீதிவிசாரணை நடத்துபவர் இருக்க வேண்டும் என்ற நிலையை உச்ச நீதிமன்றம் எடுத்தது. அவ்வழக்கை விசாரித்த சிறப்புப் புலனாய்வுக் குழுவிலும் உத்தர பிரதேசத்தைச் சாராத அதிகாரிகள் கொண்ட குழுவையே அங்கீகரித்தது. இதே காலத்தில், சுற்றுச்சூழல் சீரழிவுக்குக் காரணம் வைக்கோல் போரை விவசாயிகள் எரிப்பது மட்டும்தான் என்று பொத்தாம் பொதுவில் குறை சொல்லாதீர்கள் என்றும் கருத்துத் தெரிவித்தது.

இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக உலகெங்கும் பல இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்டர்ஸ் தலையிட்டார். ஸ்வீடன் நாட்டுச் செயல்பாட்டாளர் கிரெட்டா துன்பர்க், பார்படாஸ் நாட்டைச் சார்ந்த பாப் இசைப்பாடகி ரிஹானா உள்ளிட்ட பிரபலங்கள் இந்திய உழவர்களுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். பஞ்சாப், கேரளம், தமிழ்நாடு சட்டமன்றங்கள் வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானங்கள் இயற்றின.

கடந்து வந்த கசப்பான காலத்தை நினைவில் கொண்டு இந்தப் போராட்டத்தை விவசாயிகள் இன்னும் திரும்பப் பெறவில்லை. அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை உத்தரவாதப்படுத்தும் சட்டத்தை அவர்கள் ஒன்றிய அரசிடம் எதிர்பார்க்கிறார்கள். நரேந்திர மோடி 2011-ல் குஜராத்தின் முதலமைச்சராக இருந்தபோது, அவரின் தலைமையில் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிப்பது குறித்து மாநில முதலமைச்சர்கள் அடங்கிய ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு முக்கியமான பரிந்துரைகளை அளித்தது.

அவரே இப்போது பிரதமராக இருக்கும் நிலையிலும் அந்தப் பரிந்துரைகள் அவரது அலுவலகத்திலேயே முடக்கப்பட்டுள்ளதைப் போராட்டக் குழுவினர் சுட்டிக்காட்டுகின்றனர். ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட ‘சாந்தகுமார் குழு’ விவசாயிகளுக்கு 6%-க்கு மட்டும் குறைந்தபட்ச ஆதரவு விலை தரப்படும் என்று கூறிய பரிந்துரை, இப்போதும் உழவர்களின் கழுத்தில் வைக்கப்பட்ட கத்தியாக உள்ளது. பாஜக தனது தேர்தல் அறிக்கையில், வேளாண் விளைபொருட்களுக்கான கொள்முதல் விலை நிர்ணயிப்பதில் எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான குழுவின் பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதாகக் கூறியிருந்தது. அப்பரிந்துரையின்படி, வளர்ச்சி என்பது விவசாய உற்பத்தியில் மட்டுமல்ல, விவசாயிகளின் வருமானத்திலும் இருக்க வேண்டும். ஒன்றிய அரசு அந்தப் பரிந்துரைகளை இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை.

ஒன்றிய அரசின் மின்சாரத் திருத்த மசோதா-2020 திரும்பப் பெறப்பட வேண்டும் என்றும் உழவர்கள் வலியுறுத்துகின்றனர். காற்று மாசுக் கட்டுப்பாட்டு மசோதாவில் உழவர்களுக்கு எதிராக உள்ள ஷரத்துக்கள் நீக்கப்பட வேண்டும். டெல்லி போராட்டத்தில் பங்கேற்று உயிர்நீத்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரணமும் வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும் என்றும் கோருகின்றனர்.

லக்கிம்பூர் உள்ளிட்ட வழக்குகளில் நீதி விரைவாகக் கிடைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பு. 1981 ஜூலை முதல் 1991 ஜூலை வரை உரங்கள் விலை உயர்த்தப்படாமல் இருந்ததை விவசாயிகள் சுட்டிக்காட்டி, உரங்களுக்கு நியாயமான விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் எனக் கோருகின்றனர். விவசாய இடுபொருள்களின் விலை உயர்வு கட்டுப்படுத்தப்பட வேண்டும், தரமான விதைகள் வழங்கப்பட வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை.

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த கோரக்பூர் மாவட்டத்தில் சவுரிசவுரா நூற்றாண்டு விழாவில் பேசிய பிரதமர், “நாட்டின் வளர்ச்சியின் பின்னணியில் விவசாயிகள் உள்ளனர். சவுரிசவுரா போராட்டத்தில் அவர்கள் பங்கேற்றனர்… இந்தச் சம்பவம் காவல் நிலையத்தின் மீது தீ வைத்ததுடன் நின்றுவிடவில்லை... இந்த நெருப்பு பொதுமக்கள் இதயங்களிலும் மூண்ட தீ ஆகும்” என்றார். பிரதமர் மோடி இந்திய விவசாயிகளின் வீரஞ்செறிந்த போராட்டங்களை வரலாற்றுபூர்வமாக நினைவில் வைத்திருப்பவர். விவசாயிகளின் இதர கோரிக்கைகளையும் அவர் ஏற்றுப் போராட்டத்தை நிறைவுக்குக் கொண்டுவர வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x