Published : 24 Nov 2021 03:07 AM
Last Updated : 24 Nov 2021 03:07 AM

மழை நிவாரண அறிவிப்பு: விவசாயிகளின் அதிருப்தி கவனத்தில் கொள்ளப்படுமா?

வடகிழக்குப் பருவமழையின் தொடக்கத்திலேயே பெரும்பாலான மாவட்டங்களில் சாகுபடி நிலங்கள் நீரில் மூழ்கி, பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்தியக் குழுவும் பார்வையிட்டுள்ளது. கனமழைக்கான வாய்ப்புகள் இன்னும் தொடர்கின்றன. சென்னையில் மழைநீர் தேங்கிய பகுதிகளை நேரில் பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களின் தோளோடு தோள் நின்று அவர்களின் துயரங்களில் பங்கெடுத்துக்கொண்டிருக்கிறார். சென்னையைப் போல வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் முதல்வர் பயணிப்பதும் பார்வையிடுவதும் இயலக்கூடியதல்ல.

எனினும், கடலூர் தொடங்கி தஞ்சை மாவட்டம் வரைக்கும் அவர் மேற்கொண்ட மின்னல் வேகச் சுற்றுப்பயணம் மழைப் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்வதற்குப் போதுமானதல்ல என்பது விவசாயிகளின் பொது அபிப்பிராயமாக உள்ளது. அதிலும் குறிப்பாக, அவரது பயணத்தின்போது இரவு நேரத்தில் வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிட்டது விவசாயிகளிடத்தில் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. பகலிலேயே தொலைவிலிருந்து பார்க்கையில் நெல்வயல்களின் பாதிப்புகளை உத்தேசமாகத்தான் மதிப்பிட முடியும் என்ற நிலையில், இருட்டிய பிறகும் ஆய்வுப் பயணம் மேற்கொள்வது செய்தி அறிவிக்கைக்கான வருகைப் பதிவு என்றே விவசாயிகள் கருதுகின்றனர்.

காவிரிப் படுகையில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பீடு செய்ய வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்களை நியமித்ததும், முதல்வரின் பயணத்தின்போது அவருடன் படுகை மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர் என்று ஒருவர்கூட இல்லாத நிலையும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

புதிதாகப் பிரிக்கப்பட்ட மயிலாடுதுறையையும் சேர்த்து தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களைச் சேர்ந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் அமைச்சராக நியமிக்கப்படவில்லை. முதல்வர் தம்மை காவிரிக் கரையைச் சேர்ந்தவராக அடையாளப்படுத்திக்கொண்டாலும் மாவட்டங்களில் உள்ள மக்கள் பிரச்சினைகளை உடனுக்குடன் அரசின் கவனத்துக்குக் கொண்டுசெல்லும் வகையில் நான்கு மாவட்டங்களுக்கும் சேர்த்து ஏன் ஒரு அமைச்சர்கூட நியமிக்கப்படவில்லை என்ற கேள்வி முன்பைக் காட்டிலும் மழைப் பாதிப்புக் காலத்தில் தீவிரமடைந்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரில் நெல்வயல்கள் பெருமழையால் பாதிக்கப்பட்டபோது, ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30,000 நிவாரணத் தொகையாக வழங்க வேண்டும் என்று அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக கோரியது; ஆனால், இன்று ஆட்சிப் பொறுப்பை வகிக்கும்போது, குறுவைக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.8,000 மட்டுமே நிவாரணமாக அறிவித்திருப்பது அதிருப்தியின் உச்சம். தாளடிக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.2,400 அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத்தை இடுபொருள் மானியத்தின் கீழ் உரங்களாக மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும்.

மழைநீர் வடியாததால் அடுத்த சாகுபடியை உடனே தொடங்க முடியாத நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள தொகையும் செலவில் பாதியைக்கூட ஈடுகட்டவில்லை. அனைத்துக்கும் மேலாக, மு.க.ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் நீர்த்தேக்கங்கள் நிரம்பியுள்ளதை நல்ல அறிகுறியாகக் கருதும் விவசாயிகள் தங்களது நீண்ட காலத் துயரங்களுக்கும் அவரது காலத்திலாவது தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறார்கள். அவர்களது நம்பிக்கையும் அரசியல் அதிருப்திகளும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

ஆடியோ வடிவில் கேட்க:

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x