Published : 24 Nov 2021 03:07 AM
Last Updated : 24 Nov 2021 03:07 AM

கூட்டாட்சிக்கு எதிரானவையா வேளாண் சட்டங்கள்?

அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம், விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாயச் சேவைகள் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களும் ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்டு, விவசாயிகளின் ஓராண்டுப் போராட்டத்துக்குப் பிறகு, திரும்பப் பெறப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது. இந்தியக் கூட்டாட்சி முறைக்கும் இந்தச் சட்டங்களுக்கும் இடையில் என்ன பிரச்சினை?

மாநிலத்தின் வேளாண் விளைபொருள் சந்தைக் குழுவுக்கு (Agricultural Produce Market Committee - APMC) அப்பாற்பட்டு, இந்தியா முழுக்க, ஏன் உலகம் முழுக்க நேரடியாக விவசாயிகளே வியாபாரம் செய்துகொள்ளும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்டம்; இடைத்தரகர்களை ஒழிக்க ‘ஏபிஎம்சி’ கொண்டுவந்தாலும் நாட்பட, அதிலும் மண்டியின் முக்கிய வியாபாரிகள் கையோங்கி, தாங்கள் வைத்த விலைதான் என விவசாயிகளுக்குக் குந்தகம் ஏற்படுத்தும்போது விரிந்த சந்தையை ஏற்படுத்தச் சட்டம் கொண்டுவந்தது சிறப்புதானே என்ற கேள்வி எழலாம்.

தனியார் நிறுவனமும் விவசாயிகளும் ஒப்பந்த முறையில் விவசாயம் செய்து, லாபம் பார்க்கக்கூடிய திட்டத்தைப் புதிய வேளாண் சட்டங்கள் கொண்டிருக்கின்றன. ஒரு தொழில் வளர வேண்டும் என்றால், அத்தொழிலில் தொழில்நுட்ப வளர்ச்சியும் போட்டியும் உலகச் சந்தைக்கு ஏற்பச் செயல்படுவதும் அவசியம். அதற்குத் தனியார் நிறுவனங்களின் வருகை மிக முக்கியமாகிறது. விவசாய உற்பத்தி அதிகரிக்கவும், மனித ஆற்றல் மேம்படவும், சந்தை விரிவாக்கத்துக்கும் தனியார் நிறுவனங்களின் பங்கீடு வருங்காலத்தில் தவிர்க்க முடியாதது என உணவு மற்றும் வேளாண் அமைப்பும் (Food and Agriculture Organization - FAO) குறிப்பிடுகிறது.

தனியார் நிறுவனங்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையிலான அப்படிப்பட்ட ஒப்பந்தத்தைச் சட்டரீதியாக அங்கீகரித்து விவசாயிகளுக்கு அனைத்துக் கட்டங்களிலும் பாதுகாப்பு அளிக்கக்கூடிய அந்தச் சட்டம் முக்கியமானதுதானே என்ற கேள்வி எழலாம். அப்படி தனியார் நிறுவனங்கள், உற்பத்தியைக் கொள்முதல் செய்கின்றன என்றால், அதனைப் பதப்படுத்தி, மதிப்புக்கூட்டி, ஏற்ற பொருளாக விற்க, இப்போது அரசு நிர்ணயம் செய்திருக்கும் சேமித்து வைத்திருப்பதற்கான கால அளவு, அந்நிறுவனங்களுக்கு ஏற்புடையதாக இல்லாத பட்சத்தில் அவர்கள் விவசாயத்தில் முதலீடு செய்யத் தயங்குவார்கள்தானே! அதற்காகத்தான் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்து, உற்பத்திப் பொருட்களைச் சேமித்து வைப்பதற்கான கால அளவை அதிகரித்தார்கள். வேளாண் உற்பத்தியாளர் சங்கங்களுக்கும் (Farmer Producing Organization-FPO) இத்திருத்தம், உற்பத்தியைச் சேமித்து வைக்கத் தேவையானதுதானே என்ற கேள்வியும் எழலாம்.

குறைந்தபட்ச ஆதார விலை (MSP) கொடுப்பதை நிறுத்துவதற்கான ஆரம்பப் புள்ளி. தனியார் நிறுவனங்கள் விவசாயிகளை அடிமைப்படுத்தி, அவர்களின் லாபத்துக்கு ஏற்ப ஆட்டிவைப்பதற்கான வாய்ப்பு. பொருட்களைச் சேமித்து வைக்கும் காலத்தை நீட்டிப்பதால், உற்பத்தியைப் பதுக்கி, செயற்கையாக விலைவாசியை நிர்ணயிக்கும் வாய்ப்பு. இப்படிப் பல பிரச்சினைகளைக் காரணம் காட்டித்தான் இச்சட்டங்களை விவசாயிகள் தவிர்க்கிறார்கள். இதைவிட முக்கியமான பிரச்சினை, இச்சட்டங்களில் இருக்கிறது. அதுதான் இத்தனை நாள் இப்படிப்பட்ட போராட்டத்துக்கு வழிவகுத்திருக்கிறது.

இது உண்மையில், விவசாயிகளுக்கான பிரச்சினை மட்டும் இல்லை. ஒன்றியத்துக்கும் ஒன்றியத்தில் உள்ள மாநிலங்களுக்குமான பிரச்சினையும்கூட. கூட்டாட்சி முறையைச் சீர்குலைக்கும் வகையில் இந்தச் சட்டங்களைக் கொண்டுவந்ததே மிகப் பெரிய பிரச்சினை.

‘‘உங்களுடைய சுதந்திரத்தை வேறு யாருக்கும், அவர் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் தந்துவிடாதீர்கள். ஏனென்றால், அவர் அதைப் பயன்படுத்தி ஒட்டுமொத்த ஜனநாயக அமைப்பையும் தலைகீழாக்கிவிடுவார்’’ - அரசமைப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்தும்போது ஜான் ஸ்டூவர்ட் மில்லின் இந்த வாக்கியத்தை முக்கியமானதாக குறிப்பிட்டுத்தான் அம்பேத்கர் தொடங்கினார். அந்தச் சுதந்திரம் மாநிலங்களிடமிருந்து பறிக்கப்படுவதுதான் இச்சட்டங்களின் தலையாய பிரச்சினை.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் ஒன்றியப் பட்டியல், மாநிலப் பட்டியல், பொதுப் பட்டியல் என மூன்றாக அதிகாரங்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் ‘வேளாண்மை’ மாநிலப் பட்டியலில் வருகிறது. அதனால் ஒன்றிய அரசு தலையிடுவது சாத்தியமில்லை. பின் எந்த அதிகாரத்தைக் கொண்டு ஒன்றிய அரசு இந்த மூன்று சட்டங்களை வகுத்துள்ளது என்றால், பொதுப் பட்டியலில் உள்ள பதிவு 33 மற்றும் 34 அடிப்படையில்தான்.

பொதுப் பட்டியலில் உள்ள பதிவு 33, உணவு மற்றும் வேளாண் உற்பத்தியை விநியோகம் மற்றும் வர்த்தகம் செய்வதற்கான அதிகாரத்தை மாநிலம், ஒன்றியம் என இரு தரப்புகளுக்கும் அளித்துள்ளது. இதன் அடிப்படையில்தான் 1955-ல் அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தை ஒன்றியம் அமல்படுத்தியது. இதன் மூலம் ஒன்றிய அரசின் அதிகாரம் வேளாண்மையின் மீது அதிகரிப்பதாக 1988-ல் சர்க்காரியா குழு வெளியிட்ட அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுப் பட்டியலின் பதிவு 34, விலை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை பகிர்ந்தளிக்கிறது. எனவே, பதிவு 33 மற்றும் 34 மாநில சுயாட்சிக்குக் குந்தகம் ஏற்படுத்துவதாகவும், அவற்றைப் பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றவும் தமிழ்நாடு அரசு சர்க்காரியா குழுவுக்கு அப்போதே பரிந்துரை செய்தது. மேற்கு வங்கத்தின் அப்போதைய முதல்வர் ஜோதி பாசுவின் அரசும் வேளாண்மை அதிகாரம் முழுக்கவே மாநிலக் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என வலியுறுத்திவந்தது.

வேளாண்மையைப் போன்று ஒவ்வொரு மாநிலங்களிலும் தனித்துவமாக இருக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண நினைத்து, ஒன்றிய அரசு ஒட்டுமொத்தமாக ‘ஒரே நாடு... ஒரே திட்டம்’ என வகுப்பதுதான் தவறான அணுகுமுறை. e-NAM போன்று வேளாண்மையை இணையவழி சந்தைப்படுத்துவதற்கான தளம், வேளாண் உற்பத்திக்கென சிறப்பு ரயில் போன்ற திட்டங்கள், மாநில அரசின் வேளாண்மைக்கான அதிகாரத்தில் துணைநின்று மேம்படுத்த உதவுவதாக இருக்கின்றனவே தவிர, தலையிடுவதாக அமையவில்லை. இது போன்ற திட்டங்களில் ஒன்றிய அரசு கவனம் செலுத்தலாம். e-NAM தளமானது, இன்னும் பல விவசாயிகள் எளிமையாக இயக்க முடியாத நிலையிலும், அனைத்துத் தரப்பினருக்குமான தொடர்பை ஏற்படுத்தாத நிலையிலும் இருக்கிறது.

அதனை இன்னும் எவ்வாறு மேம்படுத்துவது என்பதற்கு ஒன்றிய அரசு முக்கியத்துவம் தருவது மாநில அரசுக்கும் உகந்ததாக அமையும். வேளாண்மையில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் அதற்கான தனிப் பிரச்சினைகள் இருக்கின்றன, அவற்றை அந்தந்த மாநில அரசுகள்தான் உணர்ந்து செயல்பட முடியும். தற்போது கேரளத்தில் காய்கறிகளுக்கும் பழங்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை கோரிக்கையை நிறைவேற்றி, கேரள அரசு அவற்றையும் கொள்முதல் செய்துவருகிறது. இது போன்று செயல்பட அந்தந்த மாநில அரசுகளுக்குத் தனிச் சுதந்திரமும், அதற்கான நிதியமும் அவசியம். அதில் தலையிடுவதாக ஒன்றிய அரசின் திட்டங்கள் அமைந்துவிடக் கூடாது. உதாரணமாக, ‘ஏபிஎம்சி’ மண்டிகள் மூலம் பஞ்சாப் மாநில அரசுக்கு வரியாக வரும் வருவாய் பெருமளவில் பாதிக்கப்படும் ஆபத்தை இந்த மூன்று சட்டங்களும் ஏற்படுத்துகின்றன என்று கருதப்படுகிறது.

இந்திய ஒன்றியத்தில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் சுயாட்சியுடன் செயல்பட வேண்டும். தனிப்பட்ட சுதந்திரத்தில்தான் ஜனநாயகத்தின் சாரம் அமைந்திருக்கிறது என்று அண்ணா வலியுறுத்தியதுதான் இதற்கான தீர்வு. வேண்டுமென்றால், ஒன்றிய அரசு இது போன்ற வேளாண் சட்டங்களை, விவசாயிகள், மாநிலங்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருடன் தகுந்த ஆலோசனை நடத்தி, வெளிப்படைத்தன்மை வாய்ந்தவையாகக் கொண்டுவரலாம். இவற்றைப் பின்பற்ற விரும்பும் மாநிலங்கள் அந்தந்த மாநிலங்களின் சூழலுக்கு ஏற்பத் தகவமைத்துப் பின்பற்றிக்கொள்ள பரிந்துரைக்கலாம்.

- சா.கவியரசன், சுயாதீனப் பத்திரிகையாளர்.

தொடர்புக்கு: kaviyarasan411@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x