Published : 21 Nov 2021 03:06 AM
Last Updated : 21 Nov 2021 03:06 AM

ஆய்வுகள் தந்த புரிதல்

எம்.விஜயபாஸ்கர்,பேராசிரியர்,எம்ஐடிஎஸ்

நாட்டின் சமூக, பொருளாதார வளர்ச்சி குறித்த புரிதல்களை ஆராய்ச்சிவழியில் மேம்படுத்துவதில் எம்ஐடிஎஸ் மிகப் பெரிய பங்கை அளித்துள்ளது. குறிப்பாகத் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் போக்குகள் குறித்த எம்ஐடிஎஸ்ஸின் ஆய்வுகளும் குறிப்பிடத்தக்கவை.

கிராமப்புற வளர்ச்சி குறித்த அதன் ஆய்வுகள் முதன்மையானவை. குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த ஆய்வுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே கிராமங்களில் திரும்பத் திரும்ப மேற்கொள்ளப்பட்டு, சமூக, பொருளாதார அம்சங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகள் மூலம் கிராமப்புற உற்பத்தி உறவுகள், சமூக உறவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம், நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம், சாதியச் சிக்கல்கள் ஆகியவற்றைப் பற்றி காலத்துக்கேற்ற புரிதல்கள் கிடைத்துள்ளன. விவசாயத்தில் பசுமைப் புரட்சி, தொழில்நுட்ப அறிமுகம் போன்றவை எப்படிப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தின என்பதும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த வகையில் எஸ்.குகன், ஜெ.ஜெயரஞ்சன் உள்ளிட்டோரின் பங்களிப்பு அதிகமிருந்தது.

இன்றைக்குச் சுற்றுச்சூழல் சார்ந்த பார்வையின் மையமாக உள்ள நீர் மேலாண்மை சார்ந்தும் ஆராயப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆராய்ந்த முதல் நிறுவனங்களில் ஒன்று எம்ஐடிஎஸ். ஆறு, ஏரி, கால்வாய் என விவசாயத்துக்கான பாசனம் தொடங்கி நகர்ப்புற நீர் மேலாண்மை வரை விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் அ.வைத்தியநாதன், எஸ்.ஜனகராஜன் உள்ளிட்டோரின் பங்கு குறிப்பிடத்தக்கது. ஏழ்மை குறித்து எஸ்.சுப்பிரமணியனின் ஆய்வுகள் பல கற்பிதங்களை உடைத்தவை. வருமானத்தை மட்டும் கணக்கில் கொண்டு ஏழ்மையை அளவிடுவது எப்படித் தவறு, எந்தெந்த மற்ற அம்சங்களைக் கணக்கில்கொள்ள வேண்டும் என்று அமர்த்தியா சென் உள்ளிட்டோர் சுட்டிக்காட்டிய வகையில் சுப்பிரமணியனின் ஆய்வுகள் அமைந்திருந்தன.

பொருளாதாரத் துறைக்கு வெளியே என்று பார்த்தால், விளிம்புநிலை மக்களின் வரலாறு எப்படிக் கட்டமைக்கப்படுகிறது, இயங்குகிறது என்பதை அய்யா வைகுண்டர் வழிபாடு, சந்தனக் கடத்தல் வீரப்பன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு எம்.எஸ்.எஸ்.பாண்டியன் தனித்தனியாக ஆராய்ந்திருக்கிறார். அடித்தட்டு மக்களின் வரலாற்றை அவர்களின் வாழ்க்கை, நம்பிக்கைகள், அரசியல் வழியாக எப்படிப் புரிந்துகொள்வது என்கிற கோணத்தில் அவர் அணுகினார். பெரியாரின் தேசியம் குறித்த பார்வை, வர்க்க அடிப்படையிலான வரலாறு போன்ற அம்சங்கள் சார்ந்தும் அவர் கவனம் செலுத்தினார். தேவதாசிகள் குறித்து எஸ்.ஆனந்தியும் சூழலியல், வாழிட உரிமைகள் குறித்து அஜித் மேனன், கேரன் கெய்லோ உள்ளிட்டோரும் கவனம் செலுத்திவருகின்றனர்.

தமிழ்நாட்டில் சாதிக்கும் சாதி அதிகாரத்துக்கும் எதிரான அணிதிரட்டல் என்பது அரசியல் இயக்கங்கள், பொதுத் தளங்கள், நகர்ப்புற அதிகார வர்க்கம் ஆகியவற்றின் மூலமாக எப்படி இயங்கியது, மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி இங்கு எப்படிக் கூடுதலாகச் சாத்தியப்பட்டது என்பதை விளக்கும் ஆய்வுகள் வெளியாகியுள்ளன. இந்த வளர்ச்சி மாதிரியின் தனித்தன்மைகளை விளக்கும் வகையில் ஆ. கலையரசனும் நானும் எழுதிய ‘தி திராவிடியன் மாடல்’ நூல், அதன் தொடர்ச்சியே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x