Published : 19 Nov 2021 03:08 AM
Last Updated : 19 Nov 2021 03:08 AM

சில்லு சிறியது பாதிப்பு பெரியது

இ.முத்துக்குமார்

ஆட்டோமொபைல், மின்னியல், மின்னணுவியல் உட்பட அனைத்துத் தொழில்களிலும் நிச்சயமற்ற நிலையை உருவாக்கியுள்ள ஒரு பொருள் ‘சிப்பு’ (chip) என்ற சில்லு. சிலிக்கான் மூலப் பொருளைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் குறைக்கடத்தி (செமிகண்டக்டர்) தட்டுக்களிலிருந்துதான் தேவைக்கு ஏற்பச் சிறிய அளவிலான சிப்புகள் வடிவமைக்கப்படுகின்றன. திறன்பேசி (ஸ்மார்ட்ஃபோன்), தொலைக்காட்சி, மடிக்கணினி முதல் மிகப் பெரிய இயந்திரங்கள் வரை சிறிய அளவிலான இந்தச் சில்லுகள்தான் அவற்றை இயக்குவதற்கான கட்டளைகளை இடுகின்றன. கார், ஸ்கூட்டர் உள்ளிட்ட அனைத்து வகை வாகனங்களும் முழுமையாக வடிவமைக்கப்பட்டாலும் அவை இயங்குவதற்கான நிரல்கள் (புரோகிராம்) இந்தச் சில்லுகளில்தான் அடங்கியுள்ளன. இந்தச் சில்லுகள் தேவைக்கும் குறைவாகத்தான் தற்போது உற்பத்தியாகின்றன.

கடந்த ஆண்டு உருவான கரோனா முதல் அலை உலகத்தின் எல்லாத் தொழில்களையும் முடக்கிப்போட்டது. அதன் ஒரு பகுதியாகச் சில்லுகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் முடங்கிப்போயின. தொழிலாளர்கள் வேலைக்கு வராததால் சில்லுகள் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதே காலத்தில் ‘வீட்டிலிருந்து பணியாற்றும்’ பணிக் கலாச்சாரம் உருவானது. அதன் காரணமாக மடிக்கணினிகள், திறன்பேசிகள், மருத்துவ மின்னணுப் பொருட்கள், வீட்டுக்குள்ளேயே இருந்த குழந்தைகளுக்காக மின்னணு விளையாட்டுப் பொருட்கள்… இப்படி மக்கள் பயன்படுத்தும் மின்னணுப் பொருட்களின் தேவை அதிகரித்தது.

இதன் காரணமாகச் சில்லுகளின் தேவை வழக்கத்தைவிடக் கூடுதலானது ஒரு பக்கம், உற்பத்தியின்மை இன்னொரு பக்கம். இப்படிச் சில்லுகளின் பற்றாக்குறையால் மோட்டார் வாகன உற்பத்தித் தொழில்தான் உலக அளவில் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. சில்லுகளின் பற்றாக்குறையால் தொழிலாளர்களின் மாதச் சம்பளமும், அவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை பெறும் போனஸ் தொகையும் குறைக்கப்படவிருக்கும் துயர நிலை ஏற்பட்டிருக்கிறது. சில்லுக்கும் தொழிலாளியின் போனஸ், சம்பளம் ஆகியவற்றுக்கும் என்ன தொடர்பு என்று பலருக்கும் கேட்கத் தோன்றும்.

கரோனா, முதலாளித்துவம், உலகமயம் இந்த மூன்றும் இணைந்து உழைப்பாளிகளின் மீது பெரும் தாக்குதல்களை நிகழ்த்திவருகின்றன. உற்பத்தி, வர்த்தகம், மூலதனம் இவை முழுவதும் உலகமயமான பிறகு ஒரு காரோ, மின்னணுப் பொருளோ, மருந்தோ எதுவாக இருந்தாலும் இதற்கான உற்பத்தி நிறுவனங்கள் இங்கே இருக்கலாம். தொழிலாளர்கள், நிலம், நீர் எல்லாம் சென்னையை மையமாக வைத்து இருந்தாலும் இதற்கான மூலதனமும் கண்ணுக்குத் தெரியாத முதலாளியும் உலகின் வேறு ஏதோ மூலையில் இருக்கலாம். அனைத்துக் கொள்கை முடிவுகளும் வெளிநாடுகளிலிருந்துதான் பிறப்பிக்கப்படுகின்றன.

உலகில் எங்கோ ஒரு பகுதியில் உருவான வைரஸ் உலகின் அனைத்து மக்களின் வாழ்க்கையையும் தலைகுப்புற மாற்றிவிட்டது. தொழில் முடக்கம், வாழ்க்கைமுறையில் மாற்றம் இதில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது உழைக்கும் மக்கள்தான். விரல் விட்டு எண்ணக்கூடிய பெருநிறுவன முதலாளிகள், இக்காலத்தில் தங்கள் வருவாயைப் பல மடங்கு பெருக்கி சொத்துகளைக் குவித்துக்கொண்டனர். கரோனாவின் முதல் அலையின்போது ஆலைகள் மூடப்பட்டதால் சில்லுகளின் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இந்தச் சில்லுகளின் உற்பத்தியில் ஆசிய நாடுகளின் பங்கு அதிகம். டி.எஸ்.எம்.சி. என்ற தைவான் நாட்டு நிறுவனம்தான் சில்லுகளின் மொத்த உற்பத்தியில் 56% பங்குவகிக்கிறது. ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் இதனிடமிருந்துதான் தங்களுக்கான சில்லுகளைப் பெறுகின்றன. இன்டெல், சாம்சங் போன்ற நிறுவனங்கள் சொந்தமாகவே தங்களுக்கான சில்லுகளை உற்பத்திசெய்துகொள்கின்றன.

தென்கொரியாவிலும் சீனாவிலும் இதற்கான உற்பத்தி நிறுவனங்கள் இருக்கின்றன. பி.எஸ் 6-விதிகள் நடைமுறைக்கு வந்த பிறகு, சில்லுகளின் தேவை முன்பைவிட அவசியமானதாக மாறியுள்ளதாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் அமைப்பு ‘எஸ்.ஐ.ஏ.எம்.’ கூறுகிறது.

கார், அதன் இயந்திரம், முகப்பு விளக்கு, ஓட்டுவதற்குத் துணைபுரியும் சாதனங்கள் போன்றவற்றைக் கட்டுப்படுத்துபவை சில்லுகளே. காற்றுப்பை (ஏர்பேக்), ஏபிஎஸ் போன்ற காரின் உள்ளும் வெளியுமான பாதுகாப்பு வசதிகளையும் உறுதிப்படுத்துபவை சில்லுகள்தான். மின் வாகனங்கள் தயாரிப்பு நோக்கி ஆட்டோமொபைல் உலகம் செல்லத் தொடங்கியுள்ள சூழ்நிலையில், தற்போது உள்ளதைவிட மூன்று மடங்கு சில்லுகள் தேவைப்படுகின்றன. அமெரிக்கா, சீனா, கொரியா ஆகிய நாடுகள் இதற்கான உற்பத்தியில் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன. டி.எஸ்.எம்.சி. நிறுவனம் 100 பில்லியன் டாலரும் சாம்சங் நிறுவனம் 116 பில்லியன் டாலரும் இதில் முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளன.

சில்லுகளின் பற்றாக்குறை 2023 வரை நீடிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பற்றாக்குறை காரணமாக மோட்டார் வாகன உற்பத்தியும் விற்பனையும் 41% குறைந்துவிட்டதாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் அமைப்பு தனது அறிக்கையில் கூறுகிறது.

இந்திய கார்கள் சந்தையில் 47% இடம்பிடித்துள்ள மாருதி சுஸுகி தனது கார் உற்பத்தியைச் சரிபாதியாகக் குறைத்துவிட்டது. எடுத்துக்காட்டாக, 2020 செப்டம்பரில் ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 86 கார்களை அந்நிறுவனம் உற்பத்திசெய்த நிலையில், 2011-ல் 81 ஆயிரத்து 278 கார்களை உற்பத்திசெய்துள்ளது. ஹோண்டா, பி.எம்.டபிள்யூ., ஃபோர்டு உள்ளிட்ட வாகன நிறுவனங்களும் தங்கள் உற்பத்தியைக் குறைக்கத் தொடங்கியுள்ளன.

வாகன உற்பத்தியைக் குறைப்பதும் விற்பனை குறைவதும் வெறும் வர்த்தகப் பிரச்சினை மட்டுமல்ல; தொழிலாளர்களின் வாழ்க்கையோடு தொடர்புடையது. பொருள் உற்பத்திக்கான மூலப்பொருட்களின் பற்றாக்குறை ஏற்படும்போதெல்லாம் தங்கள் வர்த்தக நட்டத்தைக் காப்பாற்றிக்கொள்ள முதலாளித்துவம் எடுக்கும் இந்த முடிவுகள் தொழிலாளர்களைக் கடுமையாகப் பாதிக்கின்றன.

மாருதி 47% கார் உற்பத்திக் குறைப்பு என்பது தொழிலாளர்களின் 47% வேலையின்மையை ஏற்படுத்துகிறது. இது சம்பளக் குறைப்பு, போனஸ் குறைப்பு என்று அடுத்தடுத்த விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இதனால் சந்தையில் பணப் புழக்கமும் பெரிதும் குறைகிறது. ஊதிய உயர்வை வழங்க முடியாதது மட்டுமல்ல, ஒப்புக்கொண்ட சமூகப் பாதுகாப்பு நலத் திட்டங்களைக்கூட தொழிலாளர்களுக்கு வழங்குவதற்குப் பல நிறுவனங்கள் மறுக்கின்றன. அதே நேரத்தில் நிறுவனங்கள் உற்பத்தியைக் குறைத்துத் தங்கள் மூலதனத்தைத் தற்காத்துக்கொள்கின்றன.

இந்தப் புதிய சூழல், சென்னையில் அனைத்து மோட்டார் வாகன நிறுவனங்களிலும் கடுமையாகப் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளது. மாதத்தில் குறைந்தது 5 நாட்கள் உற்பத்தியற்ற நாட்களாக அறிவிக்கப்படுகின்றன. இந்த நாட்களுக்கு இனிமேல் சம்பளம் பாதியாகக் குறைக்கப்படும் என்று நிறுவனங்கள் அச்சுறுத்துகின்றன. கரோனாவின் தாக்குதல் தீவிரம் குறைந்தாலும் வேலையின்மை, சம்பளம் குறைப்பு, போனஸ் குறைப்பு, ஆலை மூடல் என்கிற அதன் அடுத்தடுத்த தாக்குதல்கள் தீவிரமாகியுள்ளன. இந்தப் பொருளாதார நெருக்கடிகள் தீவிரமானால் தொழிலாளர்களுக்கான நிவாரணங்களைப் பெறவும் வேலைவாய்ப்பைத் தற்காத்துக்கொள்ளவும் போராடும் சூழல் ஏற்படுவது தவிர்க்க இயலாததாகும்.

சில்லுகள் சிறியவைதான் அவற்றின் பற்றாக்குறை உருவாக்கும் பாதிப்பு பெரியது.

- இ.முத்துக்குமார், மாநிலச் செயலாளர், சிஐடியு.

தொடர்புக்கு: emkanchicitu@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x