Published : 15 Mar 2016 08:43 AM
Last Updated : 15 Mar 2016 08:43 AM

கலவரமும் மலிவான அரசியலும்

மதக் கலவரங்களைக் கையாள்வதில், சமீப காலமாகவே இந்தியாவின் நிலை படுமோசமாகிக்கொண்டிருக்கிறது.

2013-ல் உத்தரப் பிரதேச மாநிலம் முஸாஃபர்நகரில் நடந்த கலவரம் தொடர்பாக நீதிபதி விஷ்ணு சகாய் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணைக் கமிஷன் வெளியிட்டிருக்கும் தகவல்கள் இதை உறுதிப்படுத்துகின்றன. இக்கலவரத்தில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 60,000 பேர் வீடிழந்து நிற்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள். உத்தரப் பிரதேச சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் இந்த அறிக்கையில், உள்ளூர் நிர்வாகத்தின் அலட்சியம், உளவு அமைப்புகளின் தோல்வி, கலவரங்கள் தொடர்பாக ஊதிப் பெருக்கப்பட்ட ஊடகச் செய்திகள் என்று பல விஷயங்கள் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன.

பொதுவாகவே, சம்பந்தப்பட்ட அரசுக்குப் பாதிப்பில்லாத வகையிலான முடிவுக்கு வரும் வகையிலேயே விசாரணை கமிஷன்கள் அமைக்கப்படுகின்றன. எந்தக் காரணத்தினாலோ, முஸாஃபர்நகர் கலவரம் தொடர்பாக எந்த அரசியல் தலைவரும் விஷ்ணு சகாய் கமிஷனால் குற்றம்சாட்டப்படவில்லை. உள்ளூர் நிர்வாகத்தின் தோல்விகளை மட்டும் சுட்டிக்காட்டியிருக்கும் இந்த அறிக்கை, இவ்விஷயத்தில் உத்தரப் பிரதேச மாநில தலைமைச் செயலகத்தின் பொறுப்புகளைப் பற்றிக் குறிப்பிடவில்லை. உண்மையில், 2013 செப்டம்பர் 7-ல் நடத்தப்பட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு, முஸாஃபர்நகர் மற்றும் பக்கத்து மாவட்டங்களில் கலவரத்தைத் தூண்டும் வகையில் அமைந்திருந்தது. ஆனால், இதைக் கட்டுப்படுத்துவதில் அம்மாநில உளவுத் துறையும் அரசு இயந்திரமும் தவறிவிட்டன. கலவரத்தைக் கட்டுப்படுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டிய அகிலேஷ் யாதவ் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு தனது பொறுப்புகளிலிருந்து விலகிக்கொண்டது.

இவ்விஷயத்தில் அகிலேஷ் யாதவ் அரசு குற்றமற்றது என்றே காட்டும் இந்த அறிக்கை, வன்முறைச் சம்பவங்களில் சங்கப் பரிவாரங்களின் பங்கையும் பூசிமெழுகியிருக்கிறது. முஸாஃபர்நகர் கலவரங்களை வைத்தே பாஜக அரசியல் பலம் பெறும் வாய்ப்பைத் தடுக்க அகிலேஷ் யாதவ் அரசு தன்னாலான முயற்சிகளை எடுத்துவருகிறது. முஸாஃபர்நகரில் நடந்த இடைத்தேர்தலில், பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றது குறிப்பிடத் தக்கது. இக்கலவரத்தில் பாஜக மேற்கொண்ட பிரிவினைவாத அரசியலின் காரணமாக, பாஜகவுக்கு எதிரான வாக்குகள் தமக்குக் கிடைக்கும் என்று சமாஜ்வாதி கட்சி கருதியிருக்கலாம். உண்மையில். கலவரத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தாலே அக்கட்சியால் நன்மதிப்பைப் பெற்றிருக்க முடியும்.

இப்போதேனும் முஸாஃபர்நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது; தவறிழைத்தவர்களுக்குத் தண்டனையளிப்பது ஆகிய நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படுவது அவசியம். ஆனால், அம்மாநில அரசியல் சூழலே மழுப்பலான ஒன்றாக இருக்கும் நிலையில் இவற்றை நிறைவேற்ற முடியாது என்றே தோன்றுகிறது. தனது இந்துத்வ வியூகங்களின் மூலம் வாக்குகளைக் கவருவதில் பாஜகவும், அப்படி நிகழாமல் தடுக்க வேண்டும் என்ற பதற்றத்துடன் சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளும் முனைப்பு காட்டும் நிலைதான் தற்போது இருக்கிறது. முஸாஃபர்நகர் கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சஞ்சீவ் பால்யானை மத்திய அமைச்சராக்கியதன் மூலம், இவ்விஷயத்தில் தனது நிலைப்பாடு என்னவென்பதை நரேந்திர மோடி அரசு தெளிவுபடுத்திவிட்டது. மொத்தத்தில், மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த அந்தக் கலவரம் தொடர்பான பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வை எட்டுவதற்கு அம்மாநில ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சிகளும் தயாராக இல்லை என்றே தெரிகிறது. மலிவான அரசியல் தேசத்துக்கு சத்ரு!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x