Published : 04 Mar 2016 09:46 AM
Last Updated : 04 Mar 2016 09:46 AM

தேர்தல்.. கொள்கை.. கூட்டணி!- ஆட்சியமைத்தார் ராஜாஜி!

கலைஞர்கள் பலரும் காங்கிரஸுக்கு ஆதரவாக இருந்த காலகட்டம் அது. முன்னணி நட்சத்திரமான கே.பி.சுந்தராம்பாள் போன்றோர் காங்கிரஸுக்காகத் தேர்தல் பிரச்சாரம் செய்தால் வெற்றிவாய்ப்பு பிரகாசமடையும் என்பது சத்தியமூர்த்தியின் கணிப்பு. தமிழகத்துக்கு வந்திருந்த காந்தியிடம் அதைச் சொன்னார். அதன் பிறகு காந்தி - கே.பி.எஸ். சந்திப்பு நடந்தது. தீவிர காங்கிரஸ் பணிகளில் இறங்கினார் கே.பி.எஸ்.

தேர்தல் பிரச்சார மேடைகளில் சத்தியமூர்த்தியின் வசீகரிக்கும் பேச்சும் கே.பி.எஸ்ஸின் உணர்வூட்டும் தேர்தல் பாடல்களும் களைகட்டின. ‘ஓட்டுடையோரெல்லாம் கேட்டிடுவீரே…’ என்ற பிரச்சாரப் பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. போதாக்குறைக்கு, வல்லபபாய் பட்டேல் போன்றோர் காங்கிரஸ் கட்சிக்காகத் தமிழகம் வந்து பிரச்சாரம் செய்தனர்.

நடப்பதெல்லாம் நீதிக் கட்சிக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. மெய்யான எதிரியை நேரடியாக எதிர்கொண்ட தேர்தல் அது. போதாக்குறைக்கு, நீதிக் கட்சியின் முன்னணித் தலைவரான பெத்தாபுரம் மன்னர் மக்கள் கட்சி என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கி, வேட்பாளர்களை நிறுத்தியிருந்தார். ஆனாலும் ஏழாண்டுச் சாதனைகளை எடுத்துச்சொல்லி வெற்றிபெறலாம் என்ற நம்பிக்கை நீதிக் கட்சியினருக்கு இருந்தது. பெரியாரின் பேச்சுகளும் எழுத்துகளும் நீதிக் கட்சியின் பக்கம் இருந்தன.

மெட்ராஸ் மாகாணச் சட்டமன்றத்தில் மொத்தம் 215 தொகுதிகள். அவற்றில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 30, இஸ்லாமியர்களுக்கு 28, கிறித்தவர்கள், பெண்களுக்குத் தலா 8 என்ற அளவில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. மேலும், ஐரோப்பியர், மலைச் சாதியினர், தோட்டக்காரர் உள்ளிட்டோருக்கும் இடஒதுக்கீடுகள் இருந்தன.

1937 பிப்ரவரியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் தேர்தல்கள் நடந்தன. முடிவுகள் வெளியானபோது ஆளுங்கட்சியான நீதிக் கட்சி படுதோல்வியைச் சந்தித்திருந்தது. முதல்வர் பொப்பிலி அரசரே தோற்றுப்போயிருந்தார். மாறாக, முதன்முறையாகவும் நேரடியாகவும் தேர்தல் களம் கண்ட காங்கிரஸ் 159 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் சார்பில் வென்றவர்களில் ராஜாஜி, டி.பிரகாசம், காமராஜர் உள்ளிட்டோர் முக்கியமானவர்கள்.

ஆட்சியமைக்க வேண்டிய தருணத்தில் காந்தியிடமிருந்து தாக்கீது வந்தது. ஆட்சி அதிகாரத்தில் ஆளுநரின் தலையீடு இருக்காது என்று உறுதியளித்தால் மட்டுமே ஆட்சியமைப்போம் என்றார் காந்தி. அதில் ஆங்கிலேய அரசுக்கு உடன்பாடில்லை. விளைவு, ஆட்சி அமைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இடைக்கால ஏற்பாடாக மீண்டும் நீதிக் கட்சியே ஆட்சி அமைத்தது. வேங்கட்ட ரெட்டி நாயுடு சென்னை மாகாணப் பிரிமியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் (1935 சட்டத்தின்படி மாகாண முதல்வருக்குப் பிரிமியர் என்று பெயர். பிரதமர் என்றும் சொல்வார்கள்).

நீதிக் கட்சி ஆட்சி அமைத்தது இடைக்கால ஏற்பாடுதான். நிரந்தர ஏற்பாடு செய்ய வேண்டும். ஆனால், காங்கிரஸ் முரண்டுபிடித்தது. அவசியம் ஏற்பட்டாலொழிய ஆளுநர் தலையிட மாட்டார் என்று வாக்குறுதி கொடுத்தார் ஆங்கிலேய அரசரின் பிரதிநிதி லின்லித்கோ. மூன்று மாத இழுபறிக்குப் பிறகு ஆட்சி அமைக்கத் தயாரானது காங்கிரஸ். 15 ஜூலை 1937 அன்று ராஜாஜி பிரிமியரானார். ஆனால், அவருடைய ஆட்சிக் காலம் இரண்டே ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. உபயம்: இரண்டாம் உலகப் போர்!

- ஆர். முத்துக்குமார், எழுத்தாளர். ‘மதுவிலக்கு’, ‘கச்சத்தீவு’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: writermuthukumar@gmail.com

(கோஷம் போடுவோம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x