Published : 17 Nov 2021 03:06 AM
Last Updated : 17 Nov 2021 03:06 AM

ஆளுநரின் அதிகாரம்: தொடரும் விவாதங்கள்

பிரிட்டிஷ் இந்தியாவில் மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே மாகாணங்களின் சுயாட்சி குறித்தும் ஆளுநரின் அதிகாரங்கள் குறித்தும் அன்றைய மெட்ராஸ் மாகாணத்தில் தீவிரமாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. சுதந்திர இந்தியாவில் புதிய அரசமைப்பு நடைமுறைக்கு வந்த பிறகு அதிலும் குறிப்பாக தேசியக் கட்சியான காங்கிரஸின் ஆட்சி முடிவுக்கு வந்து மாநிலக் கட்சிகளான திமுகவும் அதிமுகவும் மாறி மாறி ஆளுங்கட்சியாக இருந்துவரும் நிலையில், இந்த விவாதங்கள் கட்சி அரசியலாகவும் மாறியுள்ளன. மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் கட்சிகள் எதிரெதிர் அணிகளாக இருக்கும்போது, ஆளுநரின் ஒவ்வொரு செயல்பாடும் அச்சத்துடனும் சந்தேகத்துடனும் பார்க்கப்படுவது வழக்கமாகிவிட்டது.

மாநில அரசுடன் கலந்தாலோசிக்கப்பட்ட பிறகே ஆளுநர்களை நியமிக்க வேண்டும் என்று மத்திய-மாநில உறவுகள் குறித்த ஆணையங்கள் பரிந்துரைத்துள்ளன என்றபோதும் அது கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டும் என்பதற்கான அரசமைப்பு அழுத்தங்கள் எதுவும் இதுவரையில் இல்லை. குடியரசுத் தலைவரின் விருப்பத்தின் பெயரிலேயே ஆளுநர் நியமனம், பதவிக் காலம், இடமாற்றம், திரும்பப்பெறுதல் என அனைத்தும் வரையறுக்கப்பட்டுள்ளன. குடியரசுத் தலைவரின் தன்விருப்ப அதிகாரம் என்கிறபோது தவிர்க்கவியலாமல் அது மத்தியில் ஆளும் அரசின் விருப்பமாகவும் அமைந்துவிடுகிறது. மத்தியில் ஆளும் கட்சிக்கு தனிப் பெரும்பான்மையும் இருக்கிறது என்னும் பட்சத்தில் ஆளுநர் நியமனங்கள் கேள்விகளுக்கு அப்பாற்பட்டவையாக மாறிவிடுகின்றன.

தமிழ்நாட்டுக்குப் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டு ஒரு மாத காலம் நிறைவடைந்திருக்கிறது. காவல் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரியும் புலனாய்வுத் துறையில் பணியனுபவம் கொண்டவருமான அவர் தமிழ்நாட்டில் ஆளுநராக நியமிக்கப்படுவதே ஆளுங்கட்சிக்கு அழுத்தங்களைக் கொடுப்பதற்காகத்தான் என்ற அளவுக்கு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. கடந்த ஒரு மாத காலத்தில், அத்தகைய ஐயப்பாடுகள் குறைந்திருக்கின்றன. ஆனால், ஆளுநரின் அதிகாரங்கள் குறித்து தமிழ்நாட்டில் வழக்கமாக எழுந்துவரும் மாநில சுயாட்சிக் குரல் தொடரவே செய்கிறது.

ஆளுநரிடமிருந்து விளக்கங்கள் கேட்கப்படும்பட்சத்தில் அவற்றை அளிப்பதற்கு ஆயத்த நிலையில் இருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்குத் தலைமைச் செயலாளர் அனுப்பிய சுற்றறிக்கை விவாதப் பொருளானது. இது வழக்கமான நடைமுறைதான் என்று அவர் விளக்கம் அளித்த பிறகே அந்தப் புயல் ஓய்ந்தது. துணைவேந்தர்களுடனான ஆளுநரின் சந்திப்பும் வழக்கமான ஒன்றுதான். ஆனால், புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது பற்றி அவர் பேசியதாக வெளியான தகவல்கள் மேலும் ஒரு புயலைக் கிளப்பியது. மத்தியில் ஆளும் பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத திமுக, தமிழ்நாட்டுக்குத் தனிச்சிறப்பான கல்விக் கொள்கை ஒன்றை வடிவமைக்கவிருப்பதாக அறிவித்திருக்கையில் ஆளுநரின் பேச்சு அதற்கு எதிராகப் பார்க்கப்பட்டது.

ஆளுநர்களை மத்திய அரசின் அதிகாரப் பிரதிநிதியாக மட்டும் பார்க்கும்போது அவர் எந்த மொழியில் கையெழுத்திடுகிறார் என்பது வரையில், அவரது ஒவ்வொரு செயல்பாடும் பேசுபொருளாக மாறிவிடுகின்றன. அரசமைப்பின்படி, ஆளுநர் மத்திய - மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுப் பாலமாக இருக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசோடு அவர் இணக்கத்துடன் செயல்பட வேண்டும் என்பது இயல்பான எதிர்பார்ப்பு.

ஆடியோ வடிவில் கேட்க:

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x