Published : 17 Nov 2021 03:06 AM
Last Updated : 17 Nov 2021 03:06 AM

நம் குழந்தைகளின் பாதுகாப்பை நாம் எப்படி உறுதிசெய்வது?

சிவபாலன் இளங்கோவன்

குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் பொது கவனத்துக்கு வரும்போது நமது சிந்தனைகளும் கோபங்களும் அந்த குறிப்பிட்ட சம்பவத்தை மட்டுமே மையப்படுத்தி அமைந்துவிடுகின்றன. நடந்த சம்பவத்துக்கு நீதி வேண்டும் என்று ஒட்டுமொத்த சமூகமும் இணைந்து குரல்கொடுப்பது சரியே. ஆனால், இது போன்ற சம்பவங்கள் இனியும் நடக்காமல் தடுப்பதற்கு நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் சிந்திக்க வேண்டும்.

சமூக வலைதளங்களால் உருவாக்கப்படும் உணர்ச்சிவசப்பட்ட நமது மனநிலைக்கு ஆயுள் அதிகபட்சமாக இரண்டு நாட்கள் மட்டுமே, அதற்குப் பிறகு இப்படிப்பட்ட சம்பவங்களே நடப்பதில்லை என்று தீர்க்கமாக நம்பிக்கொண்டு அடுத்த பிரச்சினைக்குக் குரல்கொடுக்கக் கிளம்பிவிடுவோம். ஆனால், குழந்தைகளின் மீதான பாலியல் குற்றங்கள் அரிதானவை அல்ல, எங்கேயோ ஒரு பள்ளியில் மட்டுமே நடப்பதில்லை.

பெருவாரியான குழந்தைகள் இப்படிப்பட்ட சம்பவங்களைக் கடந்துதான் வருகிறார்கள். 50%-க்கும் அதிகமான குழந்தைகள் ஏதேனும் ஒரு பாலியல் அத்துமீறலையாவது எதிர்கொள்கிறார்கள் என்கின்றன ஆய்வுகள். அதுவும் இந்த ஊரடங்குக் காலத்தில் இந்தச் சம்பவங்கள் இன்னும் கணிசமாக அதிகரித்திருக்கின்றன என்கிறது உலக சுகாதார நிறுவனம். இதனால், பாதிப்புக்கு உள்ளாகும் குழந்தைகள் உடல்ரீதியாகவும், உளவியல்ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். இவற்றிலிருந்து நாம் குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி என்பதைத்தான் இந்தச் சம்பவங்களை ஒட்டி நாம் விவாதிக்க வேண்டும்.

தனிநபரின் குற்றங்கள் பெருகிவிட்ட இந்தக் காலகட்டத்தில், தனிப்பட்ட அற விழுமியங்கள் எல்லாம் சரிந்துவிட்ட சூழலில், பாதுகாப்பில்லாத சமூகத்தின் வாசலில்தான் நம் குழந்தைகளைத் தினம் தினம் விடுகிறோம். முன்பைவிட மிகவும் நிதானமாக, உணர்ச்சிவசப்படாமல், எச்சரிக்கையாக இந்தச் சமூகத்தை அணுக நாம் குழந்தைகளைப் பழக்க வேண்டும்.

‘பாதுகாப்பான தொடுதல், பாதுகாப்பற்ற தொடுதல்’ என்றெல்லாம் இல்லை, குழந்தை அசெளகரியமாக உணரும் அனைத்துத் தொடுதலும் தவறானதே எனச் சொல்ல வேண்டும். தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்ற வேறுபாடெல்லாம் இல்லை; யாரெல்லாம் கண்ணியக் குறைவாக நடந்துகொள்கிறார்களோ, பேசுகிறார்களோ அவர்கள் அனைவரிடமிருந்தும் விலகியே இருக்க வேண்டும் என்பதை உணர்த்த வேண்டும். ‘உன்னையும் மீறி பலவந்தமாக உன் மீது நிகழ்த்தப்படும் அத்துமீறல்களுக்கு நீ எந்த வகையிலும் பொறுப்பல்ல’ என்பதைக் குழந்தைகளின் மனதில் பதிய வைக்க வேண்டும்.

பெரும்பாலான நேரங்களில் குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் அந்தரங்கமான பிரச்சினைகளைப் பெற்றோர்களிடம் சொல்வதைத் தவிர்க்கின்றனர் என்பது எப்போதும் எனக்கு அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. நான் பார்க்க நேர்ந்த சில மாணவிகளிடம் இதைப் பற்றிக் கேட்டபோது, “அதுக்கு என்னையே குறைசொல்வாங்க சார், நீ ஏன் அவர்கிட்ட இப்படி நடந்துக்கிட்டனு கேட்பாங்க. இல்லைன்னா, நான் சொல்றதையே நம்பாம, நானா அப்படிக் கற்பனை பண்ணிக்கிட்டேன்னு சொல்வாங்க சார்” என்றார்கள். குடும்ப அமைப்பு என்பது இன்னும் குழந்தைகளுக்கு, குறிப்பாகப் பெண் குழந்தைகளுக்கு இணக்கமானதாக இல்லை என்பது வேதனையான ஒன்று. எந்த நிபந்தனையும் இல்லாத புரிதலையும் நம்பிக்கையையும் இன்னும் நாம் குழந்தைகள் மீது வைக்கவில்லை என்றே நினைக்கிறேன்.

குழந்தைகள் சந்திக்கும் எந்த ஒரு பிரச்சினையும் தீவிரமடைவதற்குக் குடும்பத்தின் இந்தப் போக்கும்கூட முக்கியமான காரணம். ஏனென்றால், ஒரு தவறு நடக்கும்போது அதைப் பற்றி வெளிப்படுத்துவதற்கு ஏதுவான சூழலை இன்னும் குழந்தைகளுக்கு உருவாக்கிக் கொடுக்கவில்லை. பெற்றோர்களால் மட்டுமே குழந்தைகள் சந்திக்கும் பிரச்சினைகளை முதிர்ச்சியுடனும் நிதானத்துடனும் உண்மையான அக்கறையுடனும் கையாள முடியும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். அதனால் குழந்தைகள் சந்திக்கும் எந்த ஒரு சிக்கலும் பெற்றோர்களின் கவனத்துக்கு முதலில் வரும்போதுதான் அது இன்னும் மோசமடையாமல் இருக்கும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்தச் சிக்கல்கள் கடைசியாகவே பெற்றோர்களிடம் வந்து சேர்கின்றன.

குழந்தைகள் எப்படி அணுக வேண்டும்?

நம் விருப்பம் இல்லாமல் நம் உடல் மேல் செய்யப்படும் அத்துமீறல்களை நாம் உறுதியுடன் எதிர்க்க வேண்டும், அதை அனைவருக்கும் கவனப்படுத்த வேண்டும். மனிதத்தன்மையே இல்லாமல் நடந்துகொள்ளும் ஒருவரின் குற்ற மனப்பான்மையைக் கவனப்படுத்தி, அதிலிருந்து நம்மையும் மற்றவர்களையும் பாதுகாக்க வேண்டும் என்று நினைக்க வேண்டும். கூடவே, இதில் நம்முடைய தவறு என்று ஒன்றும் இல்லை என்பதை உணர வேண்டும். நம்மை யாராவது அவர்களது பேச்சினாலோ அல்லது நடவடிக்கைகளினாலோ காயப்படுத்தினால், அதை உடனே நமக்கு நெருங்கியவர்களின் கவனத்துக்கு, குறிப்பாக பெற்றோர்களின் கவனத்துக்கு எடுத்துச்செல்ல வேண்டும்.

அது அவர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தாலும், அவர்களைத் தவிர, வேறு யாராலும் எந்த உள்நோக்கமும் இல்லாமல் நம்மைப் புரிந்துகொள்ள முடியாது. மேலும், வேறு யாராலும் இதை முழுமையாகத் தீர்க்க முடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்; தனியாகப் போராடியும் நம்மால் இதற்கான தீர்வைப் பெற முடியாது என்பதையும் உணர வேண்டும். நம் மீது நிகழ்த்தப்படும் அத்துமீறல்களைக் களங்கமாகவோ அவமானமாகவோ எண்ணாமல், இதை எதிர்த்துத் தீவிரமாகப் போராடுவதன் வழியாகத் தன்னை ஒரு உறுதியான குழந்தையாக உணரலாம்; மற்றவர்களையும் அப்படி உணரச் செய்யலாம்.

பள்ளி நிர்வாகம் என்ன செய்ய வேண்டும்?

ஒரு பள்ளியின் மேன்மை என்பது இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்கின்றனவா இல்லையா என்பதைப் பொறுத்தது அல்ல, குழந்தைகளின் மீதான அத்துமீறல்கள் நடக்கும்போது, பள்ளி நிர்வாகம் யார் பக்கம் நிற்கிறது என்பதுதான் அதன் மேன்மையை வெளிப்படுத்துகிறது. குழந்தைகள் விழித்திருக்கும் போது தங்களின் பெரும்பாலான நேரத்தைப் பள்ளியில்தான் செலவிடுகின்றனர். தங்களது அடையாளத்தை, சுதந்திரத்தை அவர்கள் பள்ளி வழியாகவே அடைகிறார்கள். அந்தப் பள்ளி அவர்களுக்குப் பாதுகாப்பானதாக இருப்பது அத்தனை முக்கியமானது.

வேறு எதையும்விட குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குத்தான் பள்ளி அதிக கவனத்தைக் கொடுக்க வேண்டும். இப்படிப்பட்ட குற்றங்கள் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும்போது, குழந்தைகள் நலனை மட்டுமே பிரதானமாகக் கொண்டு காத்திரமான நடவடிக்கைகளைப் பள்ளி எடுக்கும்போதுதான், அந்தப் பாதுகாப்பு உணர்வைக் குழந்தைகளிடம் ஏற்படுத்த முடியும். எந்தச் சமரசமும் செய்துகொள்ளாமல் இந்தப் பிரச்சினைகளை அணுகுவதன் வழியாகவே மேற்கொண்டு இப்படிப்பட்ட சம்பவங்கள் நடப்பதைப் பள்ளிகள் தடுக்க முடியும்.

ஒரு சமூகமாக இன்னமும் நாம் பெண்களுக்கு எதிரான கற்பிதங்களையும் கோட்பாடுகளையும் மூர்க்கமாகப் பிடித்துக்கொண்டிருக்கிறோம். பெண்ணுடல் மீது வலிந்து திணிக்கும் புனித பிம்பங்களும் போலி கெளரவங்களும்தான் இப்படிப்பட்ட சம்பவங்களை வெளிப்படையாகப் பேசுவதிலிருந்து குழந்தைகளைத் தடுக்கின்றன. இறுக்கமானதும் வெளிப்படைத்தன்மை அற்றதும் பெண்களுக்கு எதிரானதுமான நமது கலாச்சார விழுமியங்களுமேகூடப் பெருகிவரும் பாலியல் குற்றங்களுக்கு ஒரு வகையில் காரணம் என்று சொல்லலாம்.

குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் இந்தப் பாலியல் குற்றங்களை முழுமையாகத் தடுத்து, அவர்களுக்கு ஆரோக்கியமான, பாதுகாப்பான சூழலைக் கொடுக்க வேண்டுமென்றால், பெண் தொடர்பாகவும் பெண்ணுடல் தொடர்பாகவும் நாம் கொண்டிருக்கும் இந்தக் கற்பிதங்களையெல்லாம் உதறிவிட்டு வர வேண்டும். அதற்கெல்லாம் ஒரு சமூகமாக நாம் தயாரா என்பதுதான் இப்போது நம் முன் உள்ள கேள்வி.

- சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர், எழுத்தாளர். தொடர்புக்கு: sivabalanela@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x