Published : 15 Nov 2021 07:11 AM
Last Updated : 15 Nov 2021 07:11 AM

காவிரிப் படுகையின் வடிகால் அமைப்புகளை விரைந்து சரிசெய்க!

தமிழ்நாட்டில் கடந்த ஒரு வார காலமாகத் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் சென்னைப் பெருநகரத்தின் குடியிருப்புப் பகுதிகளை மட்டுமில்லாது காவிரிப் படுகையின் நெல்வயல்களையும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, நீர்வழித் தடங்கள் அழிப்பு என்று சென்னையில் தண்ணீர் தேங்கி நிற்பதற்கான அதே காரணங்கள் காவிரிப் படுகைக்கும் பொருந்தும். சென்னையில் பாதிக்கப்பட்டிருப்பது குடியிருப்புப் பகுதிகள் என்பதால் பெருங்கவனத்தைப் பெற்றுள்ளது. காவிரிப் படுகையில் தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள குடியிருப்புகள் பாதிப்பைச் சந்தித்துள்ளன என்றாலும் பெருமளவில் விவசாய நிலங்களே பாதிக்கப்பட்டிருப்பதால் அதன் தீவிரம் உணரப்படவில்லை.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த தஞ்சையில் நீர்ப் பாசன வாய்க்கால்கள் நரம்பு மண்டலத்தைப் போல பின்னிப்பிணைந்துள்ளன. பாசன வாய்க்கால்களின் அமைப்பு எப்படி வலுவாக அமைந்துள்ளதோ, அதுபோல மழைக்காலங்களில் வயல்களில் தேங்கி நிற்கும் நீரை வெளியேற்றுவதற்கான வடிகால் அமைப்புகளும் வலுவாகவே இருந்தன. அருகிலுள்ள ஏரி, குளங்கள், காட்டாறுகள் ஆகியவற்றோடு அவை இணைக்கப்பட்டிருந்தன. மிகவும் தாழ்வான பகுதிகளில் மழைக்காலங்களின்போது தண்ணீர் தேங்குவதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதால் அங்கு உயரமான நெற்பயிர் வகைகளைச் சாகுபடி செய்வதும் சற்று தாமதமாக நடுவதும் வழக்கமாக இருந்துவருகிறது. பாரம்பரியமாகப் பின்பற்றப்பட்டு வந்த இந்தப் பெருமழை பாதுகாப்பு நடவடிக்கைகள் கடந்த சில பத்தாண்டுகளில் தலைகீழாக மாறிப்போயுள்ளன.

காவிரியில் உரிய காலத்தில் தண்ணீர் கிடைக்காத ஆண்டுகளில் குறுவை, தாளடி பட்டங்கள் மாறிப்போயின. ஆழ்துளைக் கிணறுகளை நம்பி விவசாயம் செய்யப்படும் பகுதிகளில் மழை, வெள்ளம் குறித்த முன்யோசனைகளும் இல்லாமல் போயின. அனைத்துக்கும் மேலாக, சாகுபடி நிலங்களுக்கும் கட்டுமனைகளுக்கும் இருந்துவந்த வேறுபாடுகள் குறைந்துகொண்டே வருகின்றன. கிராமங்களின் மேட்டுநிலப் பகுதிகளில் குடியிருப்புகளும் தாழ்வான பகுதிகளில் சாகுபடி நிலங்களும் இருந்துவந்த நிலை மாறி, சாலைகளை முன்வைத்தே இன்று கட்டுமனைகள் முடிவுசெய்யப்படுகின்றன. மாவட்டத் தலைநகரங்கள் மட்டுமின்றி நகராட்சி, பேரூராட்சிகளைச் சுற்றியும்கூட புறவழிச் சாலைகள் போடப்பட்டுவருகின்றன. புறவழிச் சாலைகளைத் திட்டமிடும்போது நீர்நிலைகளின் ஆக்கிரமிப்பின் பின்விளைவுகள் குறித்து உரிய கவனம் செலுத்தப்படுவதில்லை. சாலைகளையொட்டி வேகவேகமாக உருவாகிவரும் புதிய குடியிருப்புகளால் பாசன வாய்க்கால்கள், வடிகால் வாய்க்கால்கள் என எல்லோமே தடைப்படுகின்றன.

காவிரிப் படுகையில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுவதால் வடிகால்களின் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள இந்தத் தவறுகளின் பாதிப்புகளைத் தெளிவாக உணர முடிகிறது. காவிரிப் படுகை மட்டுமின்றி தமிழ்நாட்டில் வளர்ந்துவரும் அனைத்து நகரங்களின் புறநகர்ப் பகுதிகளுமே இந்தப் பிரச்சினையை வெவ்வேறு அளவில் சந்தித்துவருகின்றன. குடியிருப்புக்கான அனுமதியை வழங்கும்போது நகர் ஊரமைப்பு இயக்ககமும் (டிடிசிபி) உள்ளாட்சி அமைப்புகளும் நீர்வழிப்பாதைகள் பாதுகாப்பில் இன்னும் கூடுதல் கவனத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளே மனைவணிகத் தொழிலிலும் ஈடுபடுகையில் அது எந்த அளவுக்கு சாத்தியமாகும் என்பதே நம் முன்னிற்கும் கேள்வி.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x