Last Updated : 15 Nov, 2021 07:11 AM

 

Published : 15 Nov 2021 07:11 AM
Last Updated : 15 Nov 2021 07:11 AM

மழை வெள்ளப் பகுதிகளில் முதல்வர் நடந்தார், நிர்வாகம் நடக்கவில்லையே! - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

அதிமுக ஆட்சியில் 2014 முதல் 2021 வரை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சராகப் பணியாற்றியவர் ஆர்.பி.உதயகுமார். 2015 சென்னை பெருமழைக் காலத்தில் கோட்டைவிட்டது முதல், வர்தா(2016), ஒக்கி(2017), கஜா(2018), நிவர், புரெவி(2020) புயல் காலங்களில் எதிர்கொண்டது வரை நிறைய அனுபவங்களைப் பெற்றவர். புதிதாகப் பொறுப்பேற்ற திமுக அரசு முதல் மழை வெள்ளப் பேரிடரை எதிர்கொள்ளும் இந்தச் சூழலில், அனுபவசாலியான ஆர்.பி.உதயகுமாருடன் ஆக்கபூர்வமான ஓர் உரையாடலை முன்னெடுக்கிறது இந்து தமிழ் திசை.

சென்னை ஏன் வெள்ளத்தில் மிதக்கிறது?

சென்னை மாநகரம் கடல் மட்டத்திலிருந்து வெறும் 2 மீட்டர் உயரத்தில்தான் அமைந்திருக்கிறது. சென்னையின் சாலையோர மழைநீர் வடிகால்கள் வெறுமனே 3 முதல் 4 அடி உயரம்கொண்டவை. எனவே, 6.8 செ.மீ. மழை வரையில் பெய்தால்தான், இந்த வடிகால்களால் தண்ணீரை முழுமையாக உள்வாங்க முடியும். அதற்கு மேல் பெய்தால், தண்ணீர் வாய்க்காலுக்கு வெளியே ஓடும். வடிகால் வழியாக, பிரதான கால்வாய்களையும், ஆறுகளையும் அடைந்து வேகமாகக் கடலுக்குள் செல்லாமல் தண்ணீர் தேக்கமடையும்.

அதிகபட்சமாக 15 செ.மீட்டர் மழை வரையில் மட்டுமே சென்னை தாங்கும். அதற்கு மேல் மழை என்றால், தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கவே செய்யும். இந்த ஆண்டு, ஒரே நாளில் 20.71 செ.மீட்டர் மழை பெய்ததால்தான் இவ்வளவு பிரச்சினை. டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், சூரத், திருவனந்தபுரம், ஜெய்பூர் என்று வெள்ளத்தால் பாதிக்கப்படாத நகரங்களே இல்லை. 1918-ல் ஒரே மாதத்தில் 108.84 செ.மீட்டர் மழையையும், 2015-ல் ஒரே மாதத்தில் 111.33 செ.மீட்டர் மழையையும் பார்த்து மீண்ட ஊர் சென்னை. எனவே, பயம் தேவையில்லை.

இந்த மழைக் காலத்தைத் திமுக அரசு எதிர்கொள்ளும் விதத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ஓர் அரசின் செயல்பாட்டில் குற்றம், குறை காண்பதற்கு இந்தப் பேரிடர்க் காலம் உகந்த நேரமல்ல. அனைவரும் ஒன்றிணைந்து மக்கள் துயர் துடைக்க வேண்டிய காலமிது. இருந்தாலும், நாங்கள் ஏற்கெனவே பெற்ற அனுபவத்தில் இருந்தும் சில விஷயங்களைச் சொல்கிறேன். பொதுவாக நாங்கள், பேரிடருக்கு முன்பு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பேரிடர் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், பேரிடர் வந்துபோன பிறகு செய்ய வேண்டிய பணிகள் என்று எல்லாவற்றுக்கும் தயாராக இருப்போம். கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் 5 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கும் பகுதியை மிக மோசமாகப் பாதிக்கப்படும் பகுதி என்றும், 4 அடிக்கு மேல் தேங்கும் பகுதியை மோசமாகப் பாதிக்கப்படும் பகுதி என்றும், 3 அடிக்கு மேல் தண்ணீர் நிற்கும் பகுதியைக் குறைவாகப் பாதிக்கப்படும் பகுதி என்றும், 2 அடிக்குத் தண்ணீர் நிற்கும் பகுதியை நீர் தேங்கும் இடங்கள் என்றும் ஏற்கெனவே அடையாளம் கண்டுவைத்திருப்போம்.

அங்கெல்லாம் மழைக்கு முன்பே போதிய மின்மோட்டார்கள், மர அறுப்பான்கள், ஜே.சி.பி. போன்றவற்றைத் தயாராக வைத்திருப்போம். மண்டல வாரியாகக் குழுக்களும் தயாராக இருக்கும். தாழ்வான பகுதிகளில் எல்லாம் உணவு, மருத்துவம், கழிப்பறை வசதியுடன் கூடிய நிவாரண முகாம்களும் தயார் நிலையில் இருக்கும். பெருமழை எச்சரிக்கை வந்தவுடனேயே, தாழ்வான பகுதியில் குடியிருப்போரை எல்லாம் இந்த முகாம்களுக்கு மாற்றிவிடுவோம். ஆனால், திமுக அரசு போதிய முன்னெச்சரிக்கையுடன் இந்த மழைக் காலத்தை எதிர்கொள்ளவில்லை. கரோனா தடுப்பு, தடுப்பூசிப் பணிகளில் அரசின் கவனம் இருந்ததால், இந்த விஷயத்தில் கோட்டை விட்டுவிட்டார்கள் என்றே எல்லோரும் சொல்கிறார்கள். நாங்கள் 5 மணி நேரத்தில் வெள்ள நீரை வெளியேற்றினோம்... இவர்களால் 5 நாட்களாகியும் முழுமையாக வெளியேற்ற முடியவில்லை என்றால் காரணம் இதுதான்.

எந்தெந்த விஷயங்களில் திமுக அரசு கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என்கிறீர்கள்?

பருவமழைக்கு முன்பே மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, பேரிடர் மேலாண்மைக் குழுக்கள், முதல் நடவடிக்கைக் குழு, சமூகப் பங்களிப்பு செய்யும் குழு என்று எல்லாவற்றையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இன்றைய முதல்வர் காணொளி வழியாக ஆய்வுக் கூட்டம் நடத்தினார் என்பதை மறுக்கவில்லை. ஆனால், குழுக்கள் அமைப்பதில் காலதாமதப்படுத்திவிட்டார்கள்.

சென்னையைப் பொறுத்தவரை 15 மண்டலங்களுக்கும் நாங்கள் முன்கூட்டியே மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து, அதற்குட்பட்ட பகுதியில் வரும் அனைத்துத் துறை அலுவலர்களுடன் கூட்டம் நடத்தி, ஒவ்வொருவரும் தங்கள் மண்டலத்தில் உள்ள தாழ்வான பகுதிகள் எவை, செய்ய வேண்டிய நடவடிக்கை என்ன என்பது குறித்தெல்லாம் விவாதித்துத் தயாராக இருப்பார்கள். ஆனால், திமுக அரசோ வெள்ளம் வந்தபிறகுதான், ஜோனல் அதிகாரிகளையே நியமித்தது. இந்த மழைக்குள் போய் தன்னுடைய மண்டலம் எங்கே இருக்கிறது, அதில் பாதிக்கப்பட்ட பகுதி எது, தண்ணீர் வடிந்துசெல்ல வேண்டிய திசை எது என்று கண்டுபிடிப்பது லேசான காரியமா? ஏற்கெனவே, பல வெள்ளங்களைப் பார்த்த மாநகராட்சிப் பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளை இந்த அரசு இடமாற்றம் செய்துவிட்டது. புதிதாக வந்தவர்களுக்கு அனுபவம் இல்லாததும் பிரச்சினையாகிவிட்டது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போலின்றி, முதல்வர் ஸ்டாலின் உடனடியாகக் களத்துக்கு வந்து பணிகளையெல்லாம் முன்னின்று துரிதப்படுத்தினாரே?

முதல்வர் தெருத்தெருவாக நடந்தார். மறுக்கவில்லை. ஆனால், நிர்வாகம் நடக்கவில்லையே? இதுபோன்ற பேரிடர்க் காலங்களில் அதிகாரிகளைச் சுதந்திரமாகச் செயல்பட விடவேண்டும். அப்போதுதான் அவர்களால் நிலைமையை உடனுக்குடன் அறிந்து, சூழலுக்கேற்பக் கீழ்நிலை அலுவலர்களுக்கு உத்தரவிட முடியும். முதல்வர் தன்னுடனேயே அதிகாரிகளைக் கூட்டிக்கொண்டு போனால், அவர்கள் எப்படி இந்த வேலையில் கவனம் செலுத்த முடியும்? சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன் தீப் சிங் மிகமிகத் திறமையான அதிகாரி.

ஆனால், அவரை எங்கே சுதந்திரமாக விட்டார்கள்? முதல்வர் வெள்ளப் பகுதிகளை நேரடியாகப் பார்வையிடுவது, மக்களுக்கு நம்பிக்கையூட்டுகிற நடவடிக்கைதான். ஆனால், 24 மணி நேரமும் தலைமைச் செயலாளர், டிஜிபி, மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை எல்லாம் உடனழைத்துச் சென்றால், அவர்கள் மற்ற அவசரப் பணிகளுக்கு எப்படி நேரம் ஒதுக்க முடியும்? எடப்பாடியார் இப்படியெல்லாம் உடனே களத்துக்கு வர மாட்டார். ஆய்வுக் கூட்டங்கள் மூலம் களநிலவரம் குறித்து முழுமையாகக் கிரகித்துக்கொண்ட பிறகே, உத்தரவு பிறப்பிப்பார்.

மழைநீர் வடிகால் வசதிகளுக்காகப் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டதாகச் சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி. பிறகேன் தண்ணீர் தேங்கியது?

புத்தம் புதிதாகக் கட்டமைப்புகளை ஏற்படுத்துவது வேறு, ஏற்கெனவே இருக்கிற கட்டமைப்புடன் வடிகால்களை இணைப்பது வேறு. புது வீட்டுக்கும், பழைய வீட்டில் கூடுதல் வசதியை ஏற்படுத்துவதற்குமான வித்தியாசம். மேடு பள்ளம் பார்த்துத் தண்ணீர் ஓடும் திசையைத் தீர்மானித்துக் கால்வாய் கட்டக்கூட முடியாத சூழல். இருக்கிற நெருக்கடிக்குள் சிறப்பாகவே பணிகளைச் செய்து முடித்திருக்கிறோம். மெட்ரோ ரயில் உள்ளிட்ட பணிகளால் சில இடங்களில் நீரோட்டக் கால்வாய் தடைபட்டிருப்பதாக முதல்வரே சொல்லியிருக்கிறார்.

அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மோசமான முறைகேடு நடந்திருக்கிறது என்கிறாரே முதல்வர்…

அரசியல் காழ்ப்புணர்ச்சியோ, பழிவாங்கும் எண்ணமோ இல்லாமல் அடிப்படை ஆதாரத்துடன் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தால் சம்பந்தப்பட்டவர்கள் உரிய பதில் அளிப்பார்கள். அதை விட்டுவிட்டு, தங்களின் பின்னடைவிலிருந்து தற்காத்துக்கொள்வதற்காக முந்தைய ஆட்சி மீது பழி சுமத்துவதை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.

- கே.கே.மகேஷ், தொடர்புக்கு: magesh.kk@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x