Published : 14 Nov 2021 03:06 AM
Last Updated : 14 Nov 2021 03:06 AM

ஃப்யோதர் தஸ்தயேவ்ஸ்கி: மன நிழல்களின் புதிர் நடனம்

ஒரு எழுத்தாளரால் இலக்கியத்துக்கு வெளியே பிற அறிவுத் துறைகளின் போக்கையும் மாற்ற முடியும் எனில், அவர் ஒரு மேதையாக இருந்தால் மட்டுமே சாத்தியம். அதற்கு, அந்த எழுத்தாளர் குறைந்தபட்சம் ஏதாவது ஒரு துறையிலேனும் நிபுணத்துவம் கொண்டவராக இருப்பது அவசியம். ஃப்யோதர் தஸ்தயேவ்ஸ்கி இலக்கியத்தின் திசைவழிகளைத் திருத்தியமைத்தவர், காலம்காலமாகச் செல்வாக்கு செலுத்திவரும் இதிகாச மரபுக்கு இணையாகத் துன்பியல் எழுத்து மரபை எதிர்நிறுத்திய முன்னோடி. உளவியல் பகுப்பாய்வுத் துறைக்கும் அவர் தூண்டுகோலாக அமைந்தார். மருத்துவத்திலும் நரம்பியலிலும் அவருக்கு இருந்த விரிவான அறிவுக்கு உதாரணம் அவரது ‘ஓர் எழுத்தாளரின் நாட்குறிப்பு’.

அரசாங்கப் பொறியாளர் பணியிலிருந்து விலகி, முழு நேர எழுத்தாளரானவர் தஸ்தயேவ்ஸ்கி. சோஷலிஸக் குழுக்களுடன் கொண்டிருந்த தொடர்பால் சைபீரியாவுக்கு நாடுகடத்தப்பட்டவர். பரம்பரைப் பரிசாக வாழ்நாள் முழுவதும் வலிப்புநோயால் பாதிக்கப்பட்டிருந்தவர். சில காலம் அவரைச் சூதாட்டப் பித்து பிடித்தாட்டியது. சில சமயங்களில் தன்னை மனதளவில் வதைத்துக்கொள்பவராகவும் இருந்துள்ளார். தற்செயலாகவும் வலிந்தும் அவர் அனுபவித்த அத்தனை துயரங்களும் அவரது எழுத்துக்கு ஒளிசேர்த்தன. ஒரு எழுத்தாளராகப் புகழின் உச்சத்தில்தான் அவர் மரணத்தைத் தழுவினார். டால்ஸ்டாயின் மரணத் தறுவாயில் அவர் கையில் இருந்த இரண்டு புத்தகங்களில் ஒன்று, தஸ்தயேவ்ஸ்கி எழுதிய ‘கரமசோவ் சகோதரர்கள்’.

தமிழில் பெரிதும் புனைவிலக்கியங்களின் வழியாகவே தஸ்தயேவ்ஸ்கியைப் பின்தொடர்கிறோம். இப்போது, அவரது பல்துறை மேதைமையைப் புலப்படுத்தும் கட்டுரைகளைத் தமிழிலேயே வாசிக்கும் வாய்ப்பை வழங்கியிருக்கிறார் சா.தேவதாஸ். ‘ஓர் எழுத்தாளரின் நாட்குறிப்பு’ கட்டுரைத் தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுத்த சிலவற்றை அவர் மொழிபெயர்த்துள்ளார். தஸ்தயேவ்ஸ்கியை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு ஜே.எம்.கூட்ஸி எழுதிய ‘பீட்டர்ஸ்பெர்க் நாயகன்’ நாவலை ஏற்கெனவே தமிழில் மொழிபெயர்த்துள்ளார் சா.தேவதாஸ். அவருக்கு தஸ்தயேவ்ஸ்கியின் தமிழ் வாசகர்கள் நன்றிக்கடன்பட்டிருக்கிறார்கள்.

‘கரமசோவ் சகோதரர்கள்’ எழுதப்பட்ட அதே காலகட்டத்தில் எழுதப்பட்டவை இந்தக் கட்டுரைகள். ‘ஓர் எழுத்தாளரின் நாட்குறிப்பு’ என்ற தலைப்பில் ‘தி சிட்டிஸன்’ இதழிலும் பின்பு அதே தலைப்பில் தனி இதழாகவும் 1873-ல் தொடங்கி 1881 வரையில் மாதம்தோறும் வெளிவந்தவை. 6,000 வாசகர்கள் மாத இதழின் சந்தாதாரர்களாக இருந்தார்கள். வார இதழாகக் கொண்டுவர வேண்டும் என்ற தஸ்தயேவ்ஸ்கியின் விருப்பம் நிறைவேறாமலே போய்விட்டது.

உலக இலக்கியத்தின் உச்சங்களில் ஒன்றான ‘கரமசோவ் சகோதரர்கள்’ கற்பனையின் வளமையால் மட்டுமல்ல, அதே அளவுக்கு அறிவின் வலுவோடும் எழுதப்பட்டிருக்கிறது என்பதை இந்தக் கட்டுரைகள் எடுத்துக்காட்டுகின்றன. தஸ்தயேவ்ஸ்கியும் தனது இலக்கியப் படைப்புகளுக்கு இணையாக இந்தக் கட்டுரைகளையும் கருதிவந்துள்ளது அதை உறுதிப்படுத்துகிறது. அவரது காலத்தில் நடந்த கொலைகள், தற்கொலைகள், ரஷ்ய அரசியல் நிலவரங்கள், குடியானவர்களின் பிரச்சினைகள், சமய நம்பிக்கைகள், அன்றைய நீதித் துறை மீதான விமர்சனங்கள், ஐரோப்பியப் பண்பாட்டின் மீதான ரஷ்யர்களின் அதீத ஆர்வம், தாய்மொழிக் கல்வியின் அவசியம், பெண்களுக்கு உயர் கல்வியின் தேவை, பிச்சையெடுக்கும் சிறார்களின் இருள் உலகம், சமகால இலக்கியவாதிகள் பற்றிய மதிப்பீடுகள், அவர்களுடனான கருத்து வேறுபாடுகள் என்று பல்வகைப்பட்டவையாக இக்கட்டுரைகள் அமைந்துள்ளன.

சமகால ரஷ்ய எழுத்தாளுமைகள் குறித்த அவரது அபிப்பிராயங்கள் புஷ்கின், கோகோல் உள்ளிட்ட ஒரு சிலரைக் கண்டிப்பாக வாசித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தைத் தீவிர வாசகர்களிடத்தில் நிச்சயம் உருவாக்கிவிடும். தனிப்பட்ட அனுபவங்களின் மனப்பதிவுகள், கனவுகள், சில வாக்கியங்கள் மட்டுமேயான சின்னஞ்சிறு குறிப்புகள், தன்னிலை விளக்கங்களாய் அமைந்த ஒற்றை மேற்கோள்கள் ஆகியவையும் ஆங்காங்கே எதிர்ப்படுகின்றன. தேர்ந்த அங்கதத்தின் மெல்லிழையொன்றும் இவற்றினூடே இழையோடிக் கிடக்கிறது. அதை உள்ளுணர்வுடன் எழுதியிருக்கிறார் என்பதை அங்கதம் குறித்த அவரது கட்டுரையிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது.

கர்ப்பிணிகளின் மனோநிலை குறித்து அவர் எழுதிய உளவியல் பகுப்பாய்வுக் கட்டுரையொன்றை ஆதாரமாகக் கொண்டு, வளர்ப்புக் குழந்தையை மாடிச் சன்னலிலிருந்து வீசிக் கொல்ல முயன்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட ஒரு பெண்ணை, மேல்முறையீட்டு நீதிமன்றம் விடுவித்தும் இருக்கிறது. எத்தனையோ எழுத்தாளர்களின் வாக்கியங்கள் தீர்ப்புகளை அலங்கரிக்கும் மேற்கோள்களாகியிருக்கின்றன. தஸ்தயேவ்ஸ்கியின் எழுத்து, அவர் வாழும் காலத்திலேயே, நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையாக மாறியிருக்கிறது. குற்றமற்றவர்கள் தண்டிக்கப்படக் கூடாது என்ற அவரது நோக்கத்தின் பின்னால், செய்யாத குற்றத்துக்காகக் கடுங்குளிரில் அவர் அனுபவித்த சிறைவாசம் இருந்தது.

தஸ்தயேவ்ஸ்கியிடமிருந்து உளவியல் துறை நிறையவே பயன்பெற்றுக்கொண்டு, தன்னை முன்னகர்த்திக்கொண்டுள்ளது. நீதித் துறைக்கும்கூட அத்தகைய சாத்தியங்கள் நிறையவே உள்ளன. விசாரணைகளிலும் தீர்ப்புகளிலும் இயங்கும் சமயக் கூறுகளை அவர் விரிவாக விவாதித்துள்ளார். கருணை காட்டச்சொல்லி வாதாடும் பிரதிவாதி வழக்கறிஞர்களின் மன்றாடல்களையும் அவர் கேள்விக்குட்படுத்தியுள்ளார். உளவியலையும் ஒழுங்கியலையும் விலக்கிவிட்டு, தண்டனை விதிப்பதும் தவிர்ப்பதும் பொருந்திப்போகுமா? மனநிழல்களின் புதிர்நடனங்களைப் புரிந்துகொள்ளாமல் குற்றங்களை எப்படி வரையறுக்க முடியும்? தஸ்தயேவ்ஸ்கி நமக்கு வழிகாட்டுகிறார்.

- செல்வ புவியரசன், puviyarasan.s@hindutamil.co.in

****

ஓர் எழுத்தாளரின் நாட்குறிப்பு

தாஸ்தோயெவ்ஸ்கி

தமிழில்: சா.தேவதாஸ்

நூல்வனம் வெளியீடு,

ராமாபுரம், சென்னை-89

விலை: ரூ.700

தொடர்புக்கு: 91765 49991

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x